பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் தனிவரைவா? இனவரைவா?

July 28, 2009 at 1:42 pm Leave a comment

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

ghadar

கருத்துவைப்பு முறையாகவே இன்றுவரை விமர்சிக்கப்பட்டு வருகின்ற போதிலும் மேற்படி எஸ்.எல்.எம். ஹனிபாவின் பட்டியலின் தொடக்கமாக வ.இ.இராசரத்தினத்தின் ‘கொழு கொம்பு’ வையும், சண்முகம் சிவலிங்கத்தின் ‘நாலாண்டுகளை’யும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் திடமான  கருத்தாகும்.

மேற்படி பட்டியலில் சொல்லப்பட்ட புனை  பிரதிகளை நுணுக்கமாக வாசிப்புச் செய்யும் வாசகன் ஒருவன், பலவிதமான இலக்கிய அனுபவங்களையும்,  கலாசாரத் தன்மைகளையும் நிச்சயமாகப் பெற்றுக் கொள்ளலாம். கடலும் கடல் சார்ந்த களப்பும் நதியும் நதி சார்ந்த களிமுகமுமான ஒரு நீர்க்கரை  நாகரீகத்தை அணுக்கமாகக் கெண்ட ஒரு மக்கள் கூட்ட மொன்று இயற்கையைக் கையகப்படுத்தி, அதனை மாற்றியமைத்து, அபிவிருத்தி செய்து ஆதிபத்தியம் செய்து கொண்ட ஒரு நிலஉருவாக்கத்தினை இப்புனைவுகளிலிருந்து கண்டு கொள்ளலாம். சிறப்பாகக் கிழக்கிலங்கையினை நிலக் குறியாகக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் பல நூற்றாண்டுகால வாழ்க்கை வரலாற்றினை இப்புனைவுகளில் தோண்டி எடுக்கலாம். கிழக்கிலங்கையின் நிலக் குறிக்குள் வேறுபடும் வெவ்வேறு புனைகளங்களை தரிசித்தனுபவிக்கலாம்.

இரண்டாயிரத்து எட்டாமாண்டு நவம்பர் மாதம் 8ம், 9ம் திகதிகளில் கிழக்கு மாகாண சபையின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  கல்முனையில் நடாத்தி முடிக்கப்பட்ட  இலக்கியப் பெரு விழாவின் ஆய்வரங்கில், கிழக்கு மாகாணத்தின் நாவல் இலக்கியம் பற்றி ஆய்வுரை  செய்வாரென்று அழைப்பிதழின் நிகழ்ச்சி நிரலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களை 07.11.2008ம் திகதி இரவு நான்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய போது பின் வருமாறு அவர் கூறினார்.

“ஜோன் ராஜனின் ‘போடியார் மாப்பிள்ளை’, வை. அஹ்மதின் ‘புதிய தலைமுறைகள்’, விமல்  குழந்தைவேலின் ‘வெள்ளாவி’ என்பவைகளைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்கள் எதுவும் கிழக்கிலங்கையில் எழுதப்படவில்லை. வேண்டுமானால் ஜுனைதா சரீபின் ‘பெரிய ‘மரைக்கார் சின்னமரைக்கார்’ ரையும் சேர்த்துக் கொள்ளலாம்’’ என்றார்.

பட்டியலிடுவதற்கான இலக்கிய நியாயங்களை முன்வைக்கத் தவறிவிடுகின்றன என்ற காரணத்துக்காக, பெயர்களைப் பட்டியலிடுவதுடன் மட்டுப்பட்டுவிடும் கருத்துரையை, குறைபாடான ஒரு கொட்டியராக் கடலோரமும், மகாவலி ஆற்றுப்படுக்கையின் விவசாய வாழ்வும்  வ.அ.இராசரத்தினத்தின் ‘கொழுகொம்பில்’ காணக் கிடைக்கின்றது என்றால் கல்லோயா ஆற்றுப் படுக்கையின் விஸ்தரிப்பு விவசாய வாழ்வை விமல் குழந்தைவேலின் ‘வெள்ளாவி’ சொல்ல முனைந்துள்ளது என்று கொள்ளலாம்.

கடலேரியை நிலக்குறியாகக் கொண்ட மட்டக்களப்பு தமிழகத்தின் விவசாய வாழ்வை ஜோன்ராஜனின் ‘போடியார் மாப்பிள்ளை’ சொல்ல விளைகின்றது என்று சொன்னால், தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தினரில், ஒரு பகுதியினரான முஸ்லிம்களின் வாழ்வை வை. அஹ்மதின் ‘புதிய தலைமுறைகள்’  எடுத்துச் சொல்கிறது எனலாம். பொதுச் சராசரி எழுத்துப் பொறிமுறையின் வாசிப்பனுபவத்தைக் கடந்து, பேச்சு மொழியிலான வாசிப்பனுபவத்தை  இலக்கிய அழகியலாக்கிய பிரதி என்று வெள்ளாவியைச் சொன்னால், ஈழத்து தமிழிலக்கியத்தின் நவீனகால இலக்கிய அழகியலுக்கு மிகச்சிறந்த  உதாரணமாக சண்முகம்  சிவலிங்கத்தின் ‘நாலாண்டு’களைச் சொல்லலாம்.

மட்டக்களப்பு கடலேரி வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள முக்குலத்தவர்களின் மானத்தை கடற் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றி மானங் காத்தவர்களின் பூர்வீகத்தை ஜுனைதா செரீபின் ‘பெரிய மரைக்கார் சின்னமரைக்கார்’- ல் நாம் தேடிக் கண்டு கொள்ள முயற்சிக்கலாம். கூட்டு  மொத்தத்தில் கிழக்கின் பண்பாட்டு வாழ்க்கையை வெட்டுமுகம் செய்து பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கின்ற, ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு நிறையவே இலக்கிய அழகியல் பங்களிப்புச் செய்கின்ற பிரதிகள் உண்டென்று இப்பட்டியலைச் சொல்லலாமா? சொல்லலாம்.

எனவே இப்பட்டியலில் கூறப்பட்ட புனை பிரதிகளை தனித்தும், ஒருமித்தும் வாசிப்பதன் ஊடாக அளவுகளில் வித்தியாசப்படுகின்ற பிரதிக்குள் வேறுபடும்  குரல்களையும், பிரதிகளுக்கிடையில் வேறுபடும் குரல்களையும் ஒரு வாசகனால் கண்டுகொள்ள முடியும். விமல் குழந்தைவேலின் வெள்ளாவியைப் பற்றிய எனது மதிப்பீடு மூன்றாவது மனிதன் இதழில் வெளியான பிற்பாடு நேரடியாகவும், தொலைபேசியிலும் இலக்கிய ஆர்வலர்கள் தந்த உற்சாகம் ஜுனைதா செரீபின் பெரிய மரைக்கார் சின்ன மரைக்காரைப் பற்றி எழுதும்படி என்னைத் தூண்டியிருந்த போதிலும் அப்போது அது சாத்தியப்படவில்லை.

ஆனால் இலங்கையின் இன முரண்பாடு முக்கோணவரைநிலையை அடைந்துள்ள இன்றைய சமகாலத்தில், ஈழத்து தமிழ் இலக்கிய பரப்புக்குள் முஸ்லிம் தேச இலக்கியம் என்றொரு கதையாடல் பேசுபொருளாக வந்துவிட்ட இந்த நேரத்தில், அழகியல் ஆய்வுக்கு அப்பால் இலக்கியத்தில்  காலாச்சார ஆய்வினை நிகழ்த்த வேண்டியது மிக மிக அவசியமானதாகும். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தினைப் பொறுத்த மட்டில் கலாச்சார  ஆய்வுக்குட்படுத்த வேண்டிய எழுத்துக்களும், எழுத்தாளர்களும் நிறையவே இருக்கிறார்கள் எனலாம். குறிப்பாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு அக்கோட்பாட்டுக்கான அர்ப்பண எழுத்துக்களை எழுதியவர்களின் எழுத்துக்கள் கலாச்சார ஆய்வின் பாற்பட்டவைகள்  என்பது என் கருத்தாகும்.

எனவே இனிமேலாவது அ.ஸ. அப்துல் ஸமது, எஸ். முத்துமீரான், ஜுனைதா செரீப் போன்றவர்களின் எழுத்துக்களைப் பற்றிப் பேசாமல் விடுவது பல இலக்கிய விபத்துக்களுக்கு இடமளித்து விடலாம். ஜுனைதா செரீப் அவர்கள் சொல்லுவது போன்று எமது பல்கலைக்கழகங்களில் எழுத்துக்களைப் பற்றிய கற்கைச் செயற்பாடுகள் எல்லாம் இலக்கிய விபத்துக்களே தான். பல்கலைக்கழகங்களில் ஆய்வு மாணவர்களை வழி நடாத்தும், மேற்பார்வை செய்யும் முறைமையியல்களின் காலங்கடந்த தன்மை, எம் சூழலுக்குப் பொருந்திவராத ஒவ்வாத்தன்மை என்பன இத்தகைய இலக்கிய விபத்துக்களை
உருவாக்கக் காரணமாக அமைந்துவிடுகின்றன எனலாம்.

எண்ணிக்கையில் அதிகமான எழுத்துப் பிரதிகளை எழுதியவர்களான, இஸ்லாமியர்களின் வாழ்க்கையினை எழுதியவர்களான அ.ஸ. ஜுனைதா செரீப் போன்றவர்களின் எழுத்துக்களை நிராகரிக்கப்பட்ட எழுத்துக்களாகவே ஈழத்து நவீன இலக்கிய மனோபாவம் இன்று வரை கருதிவருகின்றது. இந்த  நிராகரிப்பினை நியாயப்படுத்துவதற்குத் தோதான அளவுகோல்களாக நவீன காலத்தின் இலக்கிய அழகியலையும், நுணுக்கமான வாசிப்பையும்  இம்மனோபாவம் கொண்டிருந்தது. மரபான கதை சொல்லும் முறையினை மீறிய, கதை சொல்லியின் மொழிதலில் விரியும் கதை அலகுகளும், உருவத்தைத் திரித்த புனைநுட்பமும் இம்மனோபாவத்திற்குத் துணைநின்றன.

அத்தகைய கதைக் கணங்கள், புனை தருணங்கள் ஜுனைதா செரீபின் பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் புனைபிரதியில் இல்லைதான் என்றபோதும்,  நிராகரிக்கப்பட்ட எழுத்து வகைக்குள் இப்பிரதியை அடக்க முடியாது என்பது எனது கருத்தாகும். இதுவரை எழுபது நாவல்கள், எண்பதுக்கு
மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்றிஐம்பது வானொலி நாடகங்கள் என நிறைய எழுதியவரும் தனது இலக்கியச் செயற்பாடுகளுக்காக பல சாகித்திய விருதுகளையும், பரிசில்களையும்,  பட்டங்களையும் பெற்றவரான ஜுனைதா செரீப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் வாழ்ந்த கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள தனது சாணைக்கூறை நாவலைப் படிக்கலாம் என்றும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள தனது பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் நாவலைப்
படிக்கலாம் என்றும் கூறுகிறார்.

மேலும், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நூறு வருடங்களுக்கு முந்திய வாழ்க்கையை நாவலாக எழுதுவதற்கு அவர்களின் அப்போதைய கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், பேச்சு முறை, ஈடுபட்ட வர்த்தகம், விவசாயம், போக்குவரத்து, கல்வி, விழா நிகழ்ச்சிகள், அணிந்த உடுப்புகள்,  ஆபரணங்கள் எனப் பலதையும் தான் ஆய்வு செய்ததாகவும், அவ்வாய்வின் போது கிழக்கிலங்கையின் பல கிராமங்களிலும் வாழ்ந்து கொண்டிருந்த பல
வயதான பெரியோர்களைச் சந்தித்ததாகவும், அவர்களோடு உரையாடி, அளவளாவி தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டதாகவும், கதைக்கான கருவுக்காகவும், நிகழ்வுகளைக் கோர்வைப் படுத்துவதற்காகவும் தனக்கு மிக நீண்ட காலம் தேவைப்பட்டதாகவும் ஜுனைதா செரீப் அவர்கள்  தன்னுரையில் கூறுகின்றார்.

இக்கூற்றுக்கள் ஈழத்தில் தமிழ் பேசும் மக்கள் பெருந்திரளின் மறு பகுதியினரான கிழக்கிலங்கை மக்களினது பண்பாட்டினை, அப்பாண்பாட்டின் முக்கிய  அம்சங்களை எழுத்து வடிவில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இன வரைவியல் போன்று தன் எழுத்துக்கள் இருப்பதாக ஜுனைதா செரீப் அவர்கள்  அறிக்கையிடுவது போன்று தோன்றுகின்றது. உண்மையில் ஜுனைதா செரீபின் இவ்வெழுத்துப் பிரதியானது இனவரைவியல் எழுத்து வகையினைச் சேர்ந்ததுவா? களப்பணி அனுபவங்களையும், பண்பாட்டு அம்சங்களையும் ஒன்றிணைக்கக் கூடிய எழுத்து வல்லமை ஜுனைதா செரீபிடம் கைவரப் பெற்றுள்ளதா? இப்பிரதியில் கிழக்கு முஸ்லிம்களின் பண்பாட்டுத் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளனவா? தகவல்களின் தொகுப்பு, தரவு நிலைப்படுத்தப்பட்ட வாதமுறையாக எழுதப்பட்டிருக்கின்றனவா? களப்பணியாளனின் காலத்தின் மீதான அக்கறை, ஈடுபாடு, தரவுகளைத் தகவல்களை
வைத்துக்கொண்டு நிகழ்வுகளை உற்றுநோக்கும் கூர்மை, ஆய்வறிக்கை தயாரிக்கும் வினைத்திறன் என்பவைகள் ஜுனைதா செரீபின் எழுத்தில் கூடி வந்துள்ளனவா?

இக்கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதிலாக இல்லை என்று கூறிவிடலாம். இவரிடம் மட்டுமல்ல இவரைப்போன்று, முஸ்லிம்களின் வாழ்க்கையை  எழுதுகிறோம் எனச் சொல்லிக் கொண்டு இலக்கியம் படைக்கும் கிழக்கின் ஒரு பெருந்தொகை இலக்கியச் செயற்பாட்டாளர்களின் எழுத்துக்களிலும்,  முஸ்லிம் தேச இலக்கியம் எனச் சொல்லிக்கொண்டு அவ்விலக்கியத்திற்கு உதாரணங்களாக புனைவுகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்பவர்களது
எழுத்துக்களிலும் மேற்படி கேள்விகளுக்கான பதிலாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

ஜுனைதா செரீப் அவர்கள் தான் பெற்ற தகவல்களை ஆய்வலசலின்றி இரண்டாம் நிலைத் தரவுகளாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதாக  நினைத்துக்கொண்டு பெரிய மரைக்கார் சின்ன மரைக்காரை எழுதியிருக்கின்றார். எவ் விதமான இலக்கிய அழகியலுமற்ற, கோட்பாட்டுத் திறனாய்வு  றை  சாராத, களப்பணி அனுபவங்களை அல்லது தனது வாழ்பனுபவங்களை வெளிப்படுத்தும் புலப்பாட்டு முறையிலல்லாத சாய்வு நாற்காலி எழுத்து  வடிவமாக இப்பிரதியினை எழுதியிருக்கின்றார். இவரிடம் மட்டுமல்ல இவரைப்போன்று பெரும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் என மற்றவர்களால்  கணிக்கப்பட்டிருப்பவர்கள் தொடங்கி, இன்றைய பயில்நிலை இலக்கியச் செயற்பாட்டாளர்களிடமும் சாள்வு நாற்காலி எழுத்து முறையே காணப்படுகின்றது.

சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் சாய்மணை இருப்பு உதவக்கூடியதுதான், அதற்காகத் தன்னை ஒரு வரகவியாக நினைத்துக்கொண்டு, தான் கருவிலேயே  திருவுற்றவன் எனச் சொல்லிக்கொண்டு, உண்மை இலக்கியகாரன் என உன்னதம் பேசிக்கொண்டு, உண்மை இலக்கியகாரன் வாழும் உலகம்  சுவையானது, மணம் வீசுவது என இலக்கியப் பிரகடனங்கள் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் கூட சாய்மணைப் பேச்சுக்கள்தான்.

மனித நாகரீகத்தினது மக்கள் பண்பாட்டினது சமூக அசைவியக்கத்தை எழுதப்புகும் எழுத்தாளன் ஒருவன் நிச்சயமாக சாய்மணை எழுத்து முறையினைப் பின்பற்றி அதனை எழுத முடியாது என்பது என் திடமான கருத்தாகும். விடயப் பொருத்தம் கருதி இந்த இடத்தில் கிழக்கிலங்கையினை பிறப்பிடமாகவும், வாழிட மாகவும் கொண்டிருக்கும் கிழக்கின் முஸ்லிம் இலக்கியவாதிகளான ஜுனைதா செரீபையும், சோலைக்கிளி அவர்களையும் ஒப்பிட்டுப் பேசுவது உசிதமாக இருக்குமென நினைக்கின்றேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல ஈழத்து  நவீன காலத்து இலக்கிய மனோபாவத்தினால் நிராகரிக்கப்பட்ட எழுத்துக்கு உதாரணமாக ஜுனைதா செரீபின் எழுத்தையும், அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்கு உதாரணமாக கவிஞர் சோலைக்கிளியினது எழுத்துக்களையும் சொல்லலாம். மரபை நிராகரித்த நவீன  புனைநுட்பம், வன்முறை எதிர்ப்பம்சம் கொண்ட பாடுபொருள், இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதியில் ஈழத்தில் காணப்பட்ட ஆயுதக்  கலாச்சாரம் என்பனவெல்லாம் சோலைக்கிளியை ஒரு பெருங்கவிஞனாக அங்கீகரித்தன. மரபான கதை சொல்லும் புனைநுட்பம், இஸ்லாமிய இலக்கியச் சாயல் கொண்ட எழுதுபொருள், அதிகளவிலான சராசரி எழுத்துமுறை என்பனவெல்லாம் ஜுனைதா செரீபை நிராகரித்தன. கிழக்கிலங்கை
முஸ்லிம்களின் வாழ்க்கையை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் ஜுனைதா செரீபும், கிழக்கின் பெருங்கவிஞரென மற்றவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் சோலைக் கிளியும் உண்மையில் கிழக்கு மக்களின் வாழ்க்கையை இன்னும் இலக்கியத்தில் எழுதவில்லை என்பதே என் கணிப்பாகும்.

சோலைக்கிளியிடம் கவிதை படைப்பதில் கூடிவந்திருக்கும் புனைநுட்பம், கிழக்கு முஸ்லிம்களது வாழ்க்கையைக் கவியாக்குவதில்  பிரயோகிக்கப்படவில்லை என்பதனை ஒரு பெருங் குறையாகவே சொல்ல வேண்டும். சோலைக்கிளிக்கு கிழக்கு முஸ்லிம்களது வாழ்க்கைக் கோலம்  மிக நன்றாகவே தெரியும். அதை அவர் இன்னும் தன் கவிதைகளில் எழுதிக்காட்டவில்லை. ஆனால் அவர் அறிந்த வாழ்க்கையை வீரகேசரியில்  வெளியான உயிரெழுத்துப் பகுதியில் “பத்திக்கை” எழுத்தாக எழுதிக் காட்டினார். சோலைக்கிளியின் கவிதைப் புனைநுட்பத்தினால் அவரறிந்த கிழக்கு முஸ்லிம் களின் வாழ்க்கையை கவிதையாகப் பாடமுடியாது போயிற்று என்பதே வரலாறு.

ஜுனைதா செரீப் அவர்கள் முஸ்லிம் அடையாளத்துடனான வாழ்க்கை நிகழ்வுகளை தன் புனைவுகளில் அதிகமாகவே எழுதியுள்ளார் தான். ஆனால் ஒரு புனைவினை நுண்வாசிப்புக்குட்பட வைக்கும் புனைநுட்பங்கள், இலக்கிய அழகியல்கள் எதையும் புத்திபூர்வமான முறையில் எழுதப்படவில்லை. எனவே ஈழத்தின் நவீன காலத்து இலக்கிய மனோபாவத்தால் அங்கீகரிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட எழுத்துக்கள் இரண்டினாலும் கிழக்கு முஸ்லிம்களின் பண்பாட்டுக் கோலத்தை இலக்கியமாக்க முடியவில்லை என்பதனைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல வரலாற்றுப் புத்தகம் ஒன்றினால் தந்துவிட முடியாத வாழ்க்கை அனுபவத்தை, தந்துவிட முடிகின்ற ஒரு புனைவின்  ஆசிரியன் ஒரு சாய்மணை எழுத்தாளனாக இருந்த வரலாறு எதிலும் இல்லை. தமிழின் நவீன இலக்கியகாரர்களான பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர  ராமசாமி, இன்றைய ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ்-பிரேம் என்பவர்களெல்லாம் சாய்மணை எழுத்தாளர்கள் அல்ல. இவர்களது எழுத்துப் பிரதிகளைப் படிக்கும் போது எண்ணற்றவர்களின் மூச்சுக்காற்றின் உஷ்ணத்தை உணர்ந்துகொள்ள முடியும். இவர்கள் அனைவரும்  அடுத்தவர்களின் எழுத்துக்களைப் படித்தவர்கள், ஆய்வறிந்து கொண்டவர்கள் என்பது மிக முக்கியமான விடயமாகும்.

மேற்படி விளக்கங்களின் பின்னணியோடு பெரிய மரைக்கார் சின்ன மரைக்காரைப் படித்த பின்னர் எனக்குள் நிகழ்ந்த இலக்கிய உரையாடல்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்வது இப்பிரதியின் எண்ணமாகும். ஊரவர்களால் பெரிய மரைக்கார் என அழைக்கப்படும் முகம்மது இப்றாகிம்  (மம்முறாயிம்) காத்தவர்கள் குடியில் வாழும் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவருக்கு புன்னங்குடாவிலும், கிரான் குளத்திலும் பெருந் தென்னந்தோட்டங் கள். கரைவாகு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, படுவாங்கரை ஆகிய இடங்களில் பெருந் தொகையில் நிலபுலன்கள். இவருக்கு சபியா என்கின்ற மனைவி. இவர்கள் இருவருக்கும் மூன்று பெண் பிள்ளைகள். செல்லப் பிள்ளையாக ஆண் மகன் முகம்மதுக் காசிம். அவன்தான் சின்ன  மரைக்கார். செல்லப்பிள்ளையான முகம்மதுக் காசிமுக்கு மம்மலி என்கின்ற இணைபிரியாத கூட்டாளி. அவக்கன், உதுமான் என்பவர்கள் பெரிய
மரைக்காரின் மருமக்கள். மம்முக்காசிமின் ராத்தாமார்களின் புருஷன்மார்கள். குணத்தில் இருவரும் நேரெதிர் புத்திகொண்டவர்கள். அவக்கன் மாமனாருக்கு ஒத்துப் போகக் கூடியவன். மச்சினன் மம்முக்காசிமின் கல்யாண விருப்பத்தை நுணுக்கமாகச் செளிணிது முடித்தவன்.

உதுமான் அப்படிப்பட்டவன் அல்ல. மாமனார், மாமியாவின் மரணத்துக்குப் பின்னர் மம்முக் காசிமோடு சிவில் வழக்குப் பேசி கோட்டு மூலமாக  ஆதனங்களை அபகரித்துக் கொண்டவன். கலந்தன் கங்காணி கரைவாகுப்பற்றைச் சேர்ந்தவன். பெரிய மரைக்காரின் கரைவாகுப் பற்றுக் காணிகளுக்கு கங்காணி, முல்லைக்காரன், செய்கைக்காரன், எல்லாமே அவன்தான். தந்திரவாதி, காரியவாதி, அதற்காக எதையும் செய்யத் துணிந்தவன். பெரிய மரைக்காரின் சொத்துக்களை அபகரிக்க பெரிய மரைக்காரின் செல்ல மகனுக்கு தன் மகள் செல்லக்கிளியை கட்டி வைப்பதன் மூலமாக காரியமாற்றப்
பெருந்திட்டம் போட்டவன். அதற்காக கோளாவில் பரியாரி மந்திரவாதியின் வீட்டுக்கு அலையாய் அலைந்தவன். மம்மதுக்காசிமின்  துப்பலை எடுத்து செய்வினை செய்தவன். ஆனால் அவனது எண்ணங்கள் எதுவுமிமே சித்திக்க வில்லை. பிரயாசைகள் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் அவனுக்கேற்பட்ட பாம்புக் கடியின் போது தன் தவறை உணர்ந்து பிராயச்சித்தம் தேட முயற்சிக்கிறவன்.

மூத்த தம்பிப் போடியார் பெரிய மரைக்காருக்கு நிகரான பணக்காரன். தன் மகளை மனப்பூர்வமாக மம்முக்காசிமுக்குக் கொடுக்க விரும்பியிருந்தார்.
ஆனால் மம்முக்காசிமோ மைமூனாச்சியை விரும்பி விட்டான். மம்மலியோடு சேர்ந்து கொண்டு முசுப்பாத்தித் தனமாக ஊரழுந்து கொண்டிருந்த மம்முக்காசிம், மம்மலியின் தங்கச்சியின் கலியாண மதிரோண்டி நிகழ்வின் போது தலைமை தாங்கிவந்த மைமூனாச்சியின் அழகில் மையல் கொண்டு விட்டான். மைமுனாச்சியின் தகப்பன் ஆலிம் தம்பி லெவ்வை சாந்தமானவர். நடந்த இடத்துப் புல்லுஞ்சாகாத மனிதர். ஏழை எளியவர். பொன்வைக்க வேண்டிய இடத்தில் பூவையாவது வைக்கவேண்டும் என்ற நினைப்பில், புன்னங்குடாவில் இருக்கும் தனக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் வயற்காணியை, அக்காணியை காலாகால மாகக் குத்தகை செய்துவரும் நாகமுத்துப் போடிக்கே விற்றுவிட முடிவெடுத்தவர்.

மூத்த தம்பிப் போடியாரின் வாப்பா. சீனித் தம்பிப் போடியார், குஞ்சித்தம்பி மரைக்கார் என்பவர்கள் தங்கள் பேச்சுக்களால் மற்றவர்களைக் கவரக்கூடியவர்கள். தங்களது முன்னோர்கள் செய்த வீரதீர சாகசங்களை சுவைபடச் சொல்லிக் காட்டத் தெரிந்தவர்கள். குஞ்சுத்தம்பி மரைக்காரின்  வாப்பா சீனடி மரைக்கார் மறியலிலிருந்து தப்பியோடிய குற்றத்தைப் போக்க, வெள்ளைக் காரத் துரைக்கு சீனடியடித்துக் காட்டி மன்னிப்புப்
பெற்றுக்கொண்டவர். சீனித்தம்பிப் போடியார் மத யானையைச் சுட்ட கதையும், ஒற்றைத் தனியாளாக நின்று கிணறு வெட்டி, மரக் கொட்டுப் பதித்து,  கொப்புத்திலா போட்ட கதையும் மிக சுவாரஸ்யமானவைகள்.

மம்முக்காசிமின் மூத்த மகன் சுல்தான், மம்மலியின் மகன் மஜீது என்பவர்கள் இருவரும் தங்களது தகப்பன்மாரின் நட்புக்கு அடையாளமாக தங்களது பதுளைக் கடையில் கூட்டாக வியாபாரம் செய்பவர்கள். ஆனால் நாளடைவில் சுல்தான் ஏமாற்றுக்காரனாகி விடுகின்றான். மஜீதை கடையினின்றும் தந்திரமாக விரட்டி விடுகின்றான். அதனால் மஜீதின் வாப்பா மம்மலி மரணமாகக் காரணமாகியும் விடுகின்றான். ஈற்றில் தாளிணி தகப்பனுக்குத் தெரியாமலேயே பதுளையில் பெண்ணெடுத்தும் கொள்கிறான்.

கரைவாகுக் கண்காணி கலந்தனின் இளைய மகன் ஓர் ஆசிரியர். உத்தியோகம் பார்க்கவந்த இடத்திலேயே மம்முக்காசிமின் மகள் இளையவளைக்  கல்யாணம் முடித்துக் கொள்கிறான். மம்முக்காசிமின் இளைய மகன் அப்துல் சலாம் ஒரு அப்புக்காத்து. தகப்பன் சொல் கேளாமல் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனவன். சொத்துக்கள் பலதை இழந்து தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற எண்ணத்தில் கொழும்பில்  வாழ்பவன். தாயின் மௌத்துக்கு வந்த அவனால் பிறந்த வீட்டில் தங்க விரும்பவில்லை. மட்டக்களப்பு வாடி வீட்டில் றூம் எடுத்து பிள்ளை குட்டிகளுடன் தங்கினான்.

தனது மூத்த மகன் சுல்தான், தன் உயிர்த் தோழன் மம்மலியின் மகனுக்குத் துரோகம் இழைத்ததை மம்முக்காசிமால் தாங்கமுடியவில்லை.  சொந்தமாகத் தொழில் செய்ய மஜீதுக்கு உதவி செள்கிறார். எப்போதும் மம்முக்காசிமுக்கு உறுதுணையாக மஜீதே இருக்கின்றான். தன் மனைவி மைமூனாச்சிக்கு வாங்கிக் கொடுத்த சிவப்பு நிற கல்யாணக் கூரைச்சேலையை எடுத்துக்காட்டி தனது மையத்தை போர்த்திவிடும் படி ஒசியத்துச்  சொன்னான் மம்முக்காசிம். மம்முக்காசிம் மரணத்தின் போது அவனது மையத்தினை மூட கூரைப் புடவையை மஜீது எடுத்துக் கொடுத்த போதும்  யாரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சிவத்தப் புடவையால் பொம்பள மையத்தைத்தான் மூடுற இல்லை என்று தட்டிக்கழித்துவிட்டார்கள்.

இப்படியாக சராசரி மனிச விருப்பு வெறுப்புக்களினால் நிர்ணயமாகும் மனிதர்கள்தான் ஜுனைதா செரீபின் கதை மாந்தர்கள். ஆனால் பெரிய மரைக்கார் முகம்மது இப்றாகிமும் சின்ன மரைக்கார் முகம்மதுக் காசிமுமேதான் புனைவின் நாயகர்கள். முகம்மது இப்றாகிமுக்கும் முரண்பாத்திரமாக  கரைவாகுக் கலந்தன் கங்காணி வந்து போனாலும் நிறைவானதாக அவன் சித்தரிக்கப்படவில்லை. மற்றப்படி புனைவில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பெருமரத்தைச் சுற்றிய கொடிகளாக பெரிய மரைக்கார் சின்ன மரைக்காரைச் சுற்றியவர்கள்தான். இவைகளினால் கதம்ப குணங்கொண்ட  நாவல் தன்மை இப் பிரதியில் இல்லை. சிறு நாவலுக்குரிய பண்பே மிகைத்துக் காணப்படுகிறது. இத்தகைய பண்பினைக் கொண்ட இப்பிரதியை ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டைக் கூறும் இனவரை வென்று சொல்ல முடியாது.

எனினும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்று வரை நீண்ட நிலக்குறியினை ஜுனைதா செரீப் அவர்கள் வரைவு செய்து காட்டியிருக்கிறார். அந்நிலக் குறியுடன் உறவு கொண்ட பாத்திரங்களையும் உருவாக்கிக் காட்டியிருக்கிறார். கிழக்கிலங்கை வாழ் முஸ்லிம்களின்  பண்பாட்டை, பூர்வீகத்தை தொல்லாய்வு செய்ய விரும்பும் அல்லது புனைவு செய்ய விரும்பும் ஒரு இலக்கியச் செயற்பாட்டாளனுக்கு உதவக்கூடிய வகையில் முதல்தரவாக பல விடயங்களை ஜுனைதா செரீப் பிரதியில் எடுத்துக் கூறியிருக்கின்றார். அந்த வகையில் நிராகரிக்கப்பட முடியாத ஒரு பிரதியாக இது காணப்படுகிறது எனலாம்.

தமிழ் முஸ்லிம் மக்கள் உடன்பிறவாச் சகோதரர்கள் போன்று வாழ்ந்து வந்ததைஇப்பிரதியில் ஜுனைதா செரீப் அவர்கள் வெறும் குறிப்பாக மட்டுமே கூறுகின்றார். இவர்களது உறவு முறை பெரிதும் வியக்கத்தக்கதாக இருந்தது என்பதனைக் காட்டுவதற்கான கதை நிகழ்வுகள்  எவையும் விரிவானதாக இல்லை. மலை நாட்டைநோக்கிச் சென்ற தாவள வியாபாரப் பயணங்களில் தமிழ் வியாபாரிகள் கலந்து கொண்டார்கள் என்ற தகவலும், தாவளப்  பயணத்தின் வழிகாட்டியான செல்லன், அவனது உதவியாளன் கோவிந்தன் சிறுத்தைப் புலியைச் சுட்டுக்கொன்றான் என்பவைகளும், புன்னங்குடாத் தோட்டத்தின் காவல்காரனான மணியன் வரும்  இடங்களும் தமிழ் முஸ்லிம் உறவை விளக்கிக் காட்டப் போதுமானவைகளல்ல.

இருப்பினும் பெரிய மரைக்காரின் சம்பந்தியான ஆலிம்லெவ்வைத் தம்பியின் படுவான்கரைப் பூமியை குத்தகைக்குச் செய்துவரும் கன்னங்குடா நாகமுத்துப் போடியின் இரக்க செயல் ஜுனைதா செரீப் சொல்வது போன்று மனிசனை மனிசன் அறிந்து கொள்ளும் வியத்தகு தருணங்களுக்குரியவைதான். என்றாலும் அதன் விபரணம் போதாது என்றே சொல்ல வேண்டும்.

கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவை உடன் பிறவாச் சகோதரர்கள் எனக் கட்டமைத்துப் பேசுவதை இனியாவது நாங்கள் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது எனது வினயமான வேண்டுகோளாகும். இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் பூர்வீகம் ஒரே  நேரத்தில், ஒத்த தன்மையாக இல்லை என்பதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களின் பூர்வீகம்  வேறுபட்டதாகும்.

மானத்தைக் காத்தவர்கள் குடியிருக்கும் இடமே காத்தவர்கள் குடி………… காத்தான் குடியான வரலாற்று நிகழ்வுகளை நாங்கள் மீட்டெடுக்க வேண்டும். அத்தகைய மீட்டெடுப் பின் போது முக்குலத்தவர்களின் புதல்வியர்களே காத்தவர்களின் தாய் வழியினர் என்பதனைக் கண்டுகொள்ள முடியும். தாய் வழி சமூகமும், தந்தை வழி சமூகமும் ஈழத்தின் சரித்திரத்தில் இணைந்து கொண்ட தனால் உருவான ஒரு புதிய கலாச்சார மக்கள் தொகுதியினரே கிழக்கிலங்கை முஸ்லிம்கள் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. இக் காரணங்களினால்தான் சொல்கிறேன் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவென்பது உடன் பிறவாச் சகோதர உறவன்று. உடன் பிறந்த சகோதர உறவேதான். இத்தொன்மத்தை இனிமேலாவது, இலக்கியத்திலாவது நாங்கள் கண்டடைந்து
பேசுதல் வேண்டும்.

கிழக்கிலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வினை எழுத்தில் காட்ட முனைகின்ற ஒரு பொதுவான பிரதியா? அல்லது பெரிய மரைக்காரிலிருந்து சின்ன மரைக்கார் வரை, சின்ன மரைக்காரிலிருந்து அவர்களது புதல்வர் களாக பதுளைக் கடை வியாபாரி சுல்தான், அப்புக்காத்தர் அப்துல் சலாம் வரையிலான இரண்டு தலைமுறைகளின் வாழ்க்கையை பிரதிநிதித்துவப்படுத்த முனைகின்ற ஒரு பிரதியா? என்கின்ற இரண்டு கேள்விகளுக்கும் இரண்டுமேதான் என்பது என் பதிலாகும். ஆனால், பெரிய மரைக்கார், சின்ன மரைக்கார் ஆகிய நிலச்சுவாந்தர்கள் பள்ளிவாசல் மரைக்கார்ளகளாக, தலைவர்களாக, இணக்க சபையின் முக்கியஸ்தர்களாக இருந்த விடயங்கள் விளக்க மாக எடுத்துச் சொல்லப்பட்ட அளவுக்கு, நிலச்சுவாந்தர்களின்  விவசாய வாழ்வு துலக்க மாகப் பிரதியாக்கப்படவில்லை. விதைப்புக் காலங்களில், அறுவடைக் காலங்களில் வயலிலும் வரப்பிலும் நின்றுகொண்டு மேற்பார்வை செய்யும் போடிகளின், முல்லைக்காரர்களின் வாழ்க்கை பூரணமாகத் தொகுக்கப்படவில்லை.

அக்காலத்து முஸ்லிம் பெண்கள் அணியும் வண்ண வண்ணச் சோமன்கள், தோப்புளாச் சாரிகள், பட்டுப் பிடவைகள் என்பனவும்,  ஆண்கள் அணியும் சாரன், சால்வை, பெனியன், வார், மிருவடிக் கட்டை என்பனவும், தொழில் கள், வாகனங்கள், வைபவங்கள், நோய் நொடிகள் எனப் பலதும் திரட்டித் தொகுக்கப்பட்டுள்ள போதிலும் வாழ்க்கை நிகழ்வுகளுடன் பொருந்தக் கூடிய வகையில் பொருத்தமாகப் பிரயோகித்து எழுதப்படவில்லை.

‘அக்காலத்தில் பருவமடையாத பெண்களைத் திருமணம் செய்யும் இளைஞர்கள் தங்களது மனைவிமார்களுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கை அறியுந்தோறும் இனிக்க வைப்பவை’ எனச் சொல்லும் ஜுனைதா செரீப் அவர்கள் தனது இப்பிரதியில் அத்தகைய காதல் கணங்களை எழுதத் தவறிவிட்டார். சின்ன மரைக்காரான மம்முக்காசிமின் மனைவி பருவ வயதை அடையும் முன்னமே திருமணமானவள். திருமணமாகி இரண்டு வருடங்களின் பின்பே வயதுக்கு வருபவள். தாய் தகப்பன் பேசிய பெண்ணை அல்லாமல் வசதியில் குறைந்தவரான ஆலிம் தம்பிலெவ்வையின் மகளான மைமுனாச் சியை மம்முக்காசிம் திருமணம் செய்து கொண்டது பெரும் காவிய ரசனைக்குரிய ஒன்றுதான். ஜப்பானிய எழுத்தாளரான கவத்த பாயாவின் (House of the Sleeping Beauties) தூங்கும் அழகிகளின் இல்லத்தில் வரும் எடுத்துரைப்புக்கள் போன்று எழுதப்பட்டிருக்க வேண்டியவைகள் தான். ஆனால் அவைகளை ஜுனைதா செரீபால், அவர் சொல்வது போல கதைக்கருவுடன் இணைந்த வகையில் நிகழ்வுகளைத் தொகுக்க பெரும் கால அவகாசம்  எடுத்துக்கொண்ட போதும், மம்முக்காசிம் மைமுனாச்சி என்பவர் கள் காதலித்துக் கட்டுண்டு, காமுறும் கணங்களை அவர் புனைந்துகாட்டவில்லை.

களப்போரம் சடைத்துப் பெருத்திருக்கும் கண்ணாப்பத்தைகளையோ, கிண்ணங்காடு களையோ, திப்பிலிப் பத்தைகளையோ, தாளஞ் செடிகளையோ, மேட்டு நிலத்தில் பூத்துக் குலுங்கும் புனைமுருக்கு மரத்தினையோ, முள்முருக்கு மரத்தினையோ, மரமுந்திரிகைத் தோப்பினையோ ஜுனைதா செரீப் நிலக்குறியுடன் இணைந்த வகையில் புனைவு செய்துகாட்ட வில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல, தகவல்கள், தரவுகளைத் திட்டிய இவரால் அதனைச் சொல்லோவியமாக்க முடியவில்லை.

மொழியின் அதிகபட்சமான தேவையை கோருகின்ற இடங்கள், சாத்தியப்பாடுகள் இப்பிரதியில் கவனத்திற் கொள்ளப்படவில்லை. உலகில் முஸ்லிம்கள் வாழும் இடங்களை, பிரதேசங்களை எடுத்துக் கொண்டால், முஸ்லிம் தேசம், முஸ்லிம் தேச இலக்கியம் என்கின்ற கதையாடல்கள் அனைத்தும்  இலங்கையின் வடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தி வரக்கூடியது என்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் தேசிய இலக்கியத்திற்கு உதாரணமான இலக்கியப் பிரதிகளைச் செய்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டு பின்நவீனச் சிந்தனை முறைமையின் கூறுகளில் ஒன்றான வித்தியாசப்படுதலை பிழையாகப் பிரயோகம் செய்துகொண்டு மத அடையாளத்தை முதன்மைப்படுத்திய  வித்தியாசத்தைக் கொண்டா டும் பிரதிகளை எழுதிக்கொண்டு எங்கள் பூர்வீகத்தை மதத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

வடகிழக்கில் எழுச்சி கொண்டிருக்கும் முஸ்லிம் தேசத்தின் பூர்வீகத்தை மதத்தில் தேடிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, உலகப் பொது ஆட்சியில் பங்குகோரும் மதங்களில் ஒன்றான அரசியல் இஸ்லாதத்துடன் இணைவதனையும் விட்டுவிட்டு முஸ்லிம் பூர்வீகத்தை நாங்கள் வாழுகின்ற நிலத்தில், பேசுகின்ற மொழியில் தேடுதல் செய்ய வேண்டும். இந்த வகையில் முஸ்லிம் தேச இலக்கியம் என்ற கதையாடலுக்குப் போதுமான நாட்டுக்கவி,  நாட்டார் பாடல் கள், தொல்கதைகள், சிந்துகள், மழைப் பாட்டுக்கள், மரபுச் சொற்கள், பழமொழிகள் என ஒரு பெருந்தொகை இலக்கியத்திரட்டு கிழக்கு
முஸ்லிம்களின் பண்பாட்டு வாழ்க்கையுடன் கலந்திருப்பதனை நாங்கள் மறந்துவிடுதல் கூடாது.

எனவே, இதனூடு பயணிக்கும் ஓர் இலக்கியச் செயற்பாட்டாளன் நான் எங்கோ ஓரிடத்தில் சொன்னது போல முக்குலத்தோரின் வாழ்வுடன் மட்டுமல்ல,  போருக்குப் போனவர்களின் இன் பட்டியலிலும் பங்காளிகளாக கிழக்கு முஸ்லிம் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்ற உண்மையை கண்டடைய முடியும். கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் களைப் பற்றிய ஒரு பண்பாட்டுப் புனைவினை அ.ஸ. அப்துஸ் ஸமது, பித்தன், மருதூர்க் கொத்தன்,  யுவன் கபூர், அண்ணல், புரட்சிக் கமால் போன்றவாகளாலேயே எழுதி முடிக்கப் பட்டிருக்க வேண்டும். அவர்களில் எவரும்  அதனைச் செய்யவில்லை. ஆனால் அவர்களின் கடைக்குட்டியான எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள் இன்று உயிரோடு இருக்கின்றார். வியத்தகு மொழியாளுகை கொண்ட இவர் இனியாவது சின்னப்பணிக்கர் என்கின்றபுனைவினை எழுதி முடிப்பாராக.

Entry filed under: திறனாய்வு.

கனவைப் பெய்த மழை முத்தமிடக் காத்திருந்த நாள்

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


July 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts