Archive for March, 2010

ஆசிரிய தலையங்கம்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010

இலங்கையின் பெருமளவிலான மக்கள் மோசமான உளவியல் நெருக்கடிக்குள்ளாகி தவிக்கின்றனர்.” என்று சொல்கிறது அண்மையில் வெளிவந்த ஆய்வறிக்கையொன்று. இதன் அர்த்த அடியாழத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பதே பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் நமக்கு தருவதாக உள்ளது. இந்த உண்மைச் சித்தரிப்புக்கு மத்தியில் தான், இந்நிலையை மாற்றுவதற்கான சிந்தனை, செயன்முறைகளையிட்டு பேசவும் உரையாடவுமான வெளிகளை உருவாக்க வேண்டியுள்ளது.

இந்த இயங்கியல் விதி வரலாற்றில் நமக்கு மட்டுமான புதியதொரு போக்கல்ல என்பதும் வெளிப்படையானது. கடந்த முப்பது வருட காலத்திற்குள் இலங்கையில் உருவான பல் மொழிகளில் எழுதக்கூடிய எழுத்தாளர்கள், அரசினாலும் ஆயுத இயக்கங்களினாலும் தனிமனித அதிகாரங்களினாலும் உயிர்கள் பறிக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், தாய் நாடு இழந்தவர்களாக துரத்தப்பட்டும் நெருக்கடிகளை எதிர்கொண்டபோதும் எழுத்தியக்கம் ஓயவில்லை.

இந்த உண்மைக்கு இலங்கையின் தமிழ் மொழிக் களன் விதிவிலக்கானதல்ல. மூத்த எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், புதிய தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரும் நெருக்கடிக் காலகட்ட எழுத்தாளர்களாகவே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நமது இலங்கை தமிழ் மொழிச் சூழல் மூன்று தலைமுறை எழுத்தாளர்களால் இலங்கை, புலம்பெயர் நாடுகளென பரந்தும் விரிந்தும் கிடக்கிறது. படைப்பூக்கமும் சிந்தனைத் திறனும் துணிச்சலும் வாய்க்கப்பெற்ற புதிய தலைமுறை தமது அனுபவங்களையும் பார்வைகளையும் இணையவழி எழுத்தினூடாக பதிவு செய்து வருகிறது. எழுத்திற்கான களத்தை அகலிக்கவும் மானிட அனுபவத்தை தரிசிக்கவுமான வல்லமை நமது எழுத்தாளர்களிடமுள்ளது. அதன் உச்ச விளைச்சலை இனிநாம் பெறத்தான் போகிறோம்.

இதனை சாத்தியப்படுத்தும் செயற்பாடுகளில் ஒன்றாகவே ‘எதுவரை” இதழ் வெளிவரவேண்டும் என்பதே எமது நோக்கும் இலக்கும். இந்தச் சிறுமுயற்சி தேக்கமுறாது முன்செல்ல உங்கள் அனைவரதும் பங்களிப்புத் தேவை! தோழமையுடன் ஆசிரியர்

Advertisements

March 15, 2010 at 3:58 pm Leave a comment

வாசகர் கடிதங்கள்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010

எதுவரை முதல் இதழ் சிறப்பான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. புலம்பெயர்நாடுகளிலிருந்து வெளிவந்த சஞ்சிகைகளுள் இச்சஞ்சிகை வித்தியாசமான தோற்றப்பாட்டையும் வடிவ அழகியலையும் கொண்டுள்ளது. சஞ்சிகைக்கான ஆக்கங்களைப் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினை, இதழை நடத்துவதில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகும். புலம்பெயர்நாடுகளின் படைப்புச் சூழல் என்பது அண்மைக்காலத்தில் பெரும் தேக்க நிலையையே எட்டியுள்ளது. உங்கள் இதழில் அ.மார்க்ஸ், ஜமாலன், போன்றவர்களுடன், நிர்மலா, பி.ஏ.காதர், கலையரசன், சோபாசக்தி, ஆகியோருடன் இலங்கையிலிருந்தும் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் எழுதியுள்ளது மிகப் பரந்த வாசிப்புத்தளத்தைத் தருகிறது.

சோபாசக்தியின் சிறுகதை அவரின் சிறந்த ஆற்றலை, புனைவு மனத்தை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜமாலனின் கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டுகின்ற பல்வேறு வியடங்களில் நாம் உடன்பட்டாலும் இலங்கை அரசியல், அதன் உள்விடயங்கள் தொடர்பான அவரது பார்வை குறைபாட்டுடன் உள்ளது. இது ஜமாலனுக்கு மட்டுமல்ல பல வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கும் பொதுவானதே. இலங்கைப் பிரச்சினையில் சிங்கள அரசியல் தலைமைகள் மட்டுமின்றி தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இழைத்த, இழைத்து வருகின்ற தவறுகள் நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது.

இரண்டாவது இதழில் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள ஒரு மைய உலகமும் தேசிய இன விடுதலையும் என்ற கட்டுரை மிகவும் முக்கியத்து வமானது. தமிழ்த் தேசியவாதிகள் தங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமானால் இக்கட்டுரையை வாசித்து புரிந்து கொள்வது அவசியம். எஸ்.வி.ஆர்.,திருநாவுக்கரசு எழுதிய நூல் தொடர்பாக அவரது முன்னு ரையை பிரசுரிக்க மறுத்தமையையும், அதனை இருட்டடிப்புச் செய்ததும் தனிமனித முடிவு என்பதற்கு அப்பால், தீவிர தமிழ் தேசியத்தின் அடிப்படை பண்புகளின் பாற்பட்டதே அது. இதனை எஸ்.வி.ஆர். நன்கு புரிந்து கொண்டிருப்பார். தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசத் தலையீட்டை புரிந்து கொள்ளாமல் முன்னே செல்வதற்கு இலங்கை மக்களுக்கு எந்த வழியுமில்லை என்பதே நடைமுறை யதார்த்தமாகும். பாஸ்கரனின் கட்டுரையும் இதனுடன் சேர்த்து வாசிக்கப்படல் வேண்டும்.

கிருபாகரன் வசந்தன், இலண்டன் (more…)

March 15, 2010 at 3:58 pm Leave a comment

மகிந்தராஜபக்சவை சுற்றியுள்ள நெருக்கடிகள் அல்லது ராஜபக்ச குடும்பத்தின் எதிர்காலம்? நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் -கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
இலங்கைத் தீவில் இப்பொழுது மகிந்த ராஜபக்ஸ அல்லது ராஜபக்ஸ குடும்பம் இரண்டாவது வெற்றியை பெற்றிருக்கிறது. ஒன்று புலிகளுடனான போரின் போது கிடைத்த வெற்றி. அடுத்தது ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி. இந்த இரண்டு வெற்றிகளும் அநேகமாக யாருமே எதிர்பார்த்திருக்காதவை. ஏன் வெற்றி வெற்றவர்களே எதிர்பார்த்திராத வெற்றிகள் இவை. அதிலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்த லின் வெற்றி பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. அதேவேளை இந்த வெற்றி இலங்கையின் அரசி யல், சமூக, பொருளாதார நிலைமைகளிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவுள்ளன. உண்மையில் இந்த விளைவுகள் சாதகமாவதும் பாதகமாவதும் வெற்றி பெற்ற ராஜபக்ஸ குடும்பத்தின் கைகளில் இல்லை. பதிலாக எதிர்த்தரப்புகளின் கைகளிலேயே அது தங்கியுள்ளது.
இப்பொழுது வெற்றி பெற்றிருப்பவர் மகிந்த ராஜபக்ஸ அல்ல. அவர் இப்போது நெருக்கடி என்ற பெருங்குழியின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இனிவரும் நாட்கள் அநேகமாக மகிந்த ராஜபக்ஸவுக்கான நெருக்கடியாகவும் ராஜபக்ஸ குடும்பத்தின் நெருக்கடியாகவும் இருக்கப் போகின்றன. அதே வேளை இதனை மக்களும் ஏனைய அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சரியாகக் கையாளாதுவிட்டால், அது மக்களின் மீதான நெருக்கடியாகவும் மாறக்கூடிய அபாயமுண்டு. எதிர்க்கட்சிகள், எதிரணிகள், ஊடகங்கள் மீது ஏற்படக்கூடிய பெரும் அபாயநிலையாகவும் மாறக்கூடும். எது நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை நாடு பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படவேபோகிறது.

March 8, 2010 at 10:04 am Leave a comment

ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் உறுதிப்படுத்த ஓர் அரசியல் வலுமிக்க கூட்டணி தேவை.- ஒமர்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றிக்கு பகாரமாக சிங்கள மக்களின் பெரும்பான்மையினர் மகிந்த ராஜபக்சவின் மறுபடியும் ஜனாபதியாக்கியுள்ளனர். தற்போதுள்ள ஜனாதிபதி முறையினை இல்லாம லாக்கப் போவதாக 2005 இல் ஜே.வி.பி இன் ஒத் துழைப்புடன், வெற்றி பெற்ற மகிந்த தரப்பு அந்த வாக்குறுதியினை பாதுகாக்கத் தவறியது மாத்திரமல்ல, இதற்கு மேல் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப் பது என்ற பேச்சுக்கு இடமேயில்லை என பிரகடனம் செய்து விட்டது. மறுபுறம் தமிழ், முஸ்லிம், மலையத் தமிழ் மக்கள் செறிவாகவுள்ள ஆறு மாவட்டங்களிலும் மகிந்த தோல்வி யைத் தழுவியுள்ளார். சிரித்துச் சிரித்தும், தமிழில்  பேசிய வாறும் அடுத்த கட்டப்பழிவாங்குதல் அடுத்தடுத்து நடை பெறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கிண்ணியா, மூதூர் போன்ற பிரதேங்களில் இரவு நேர மீன்பிடி தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆறு வருடங்கள் அல்ல எட்டு வருடங்கள் ஆதிக்கத்; தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றினை நாடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டு இப்போது கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஏகபோக அதிகாரத்தில் வீற்றிருப்பது உறுதி யாகிவிட்டது. லங்கா பத்திரிகை சீல் வைக்கப்பட்டது. நல்ல வேளை நீதித்துறைக்கு இன்னமும் சற்று உயிர் இருப்பதனால் தடை நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் வெற் றியைத் தொடந்து அரசியல் எதிர்ப்பாளர்களின் மீதான பழிவாங்குதல் ஆரம்பமாகிவிட்டது. அரசியல் விமர் சனங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சிகள் தீவிரமயப் படு;த்தப்பட்டுள்ளது. பொன்சேகா பாதுகாப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு தனியாளாக்கப்பட்டுவிட் டார். அவர் எதிர்நீச்சல் போட்டுத் தப்பிப்பிழைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாராக்கப்பட் டுக் கொண்டிருக்கும். இதனால்தான் அவர் நாடுகடந்து செயற்படாதவாறு தடுக்கப்பட்டுள்ளார். அவருடன் தோளுடன் தோள் நின்று போரிட்ட இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தம்முடன் இருப்பவர்கள் யாவரும் தேசாபிமானிகள் மற்றவர் கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்ற மகிந்த ஆளுங்குழுமத்தின் கூராயுதம் தேர்தலுக்கு முன்பும் பின்பும் மிகவும் இயல்பாக அரசியல் எதிரிகளை குறிவைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது.

March 8, 2010 at 9:31 am Leave a comment

இந்து சமுத்திரத்தில் வல்லரசுப் பலப்பரீட்சை, இலங்கை உள் நாட்டுப் போரின் பூகோள அரசியல்- -மஹ்டி டாரியஸ் நஸெம்றோயா

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிரைக் காவுகொண்ட, தமிழ்ப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமான, கொடூர யுத்தத்தின் பால் வௌ;வேறு வெளிநாட்டு அரசுகள் காட்டிய ஆதரவும் நிலைப்பாடுகளும், இந்த அந் நிய அரசுகளின் பூகோள – போர்த் தந்திரோபாய அக்கறை கள் பற்றிப் பெருமளவில் கூறுகின்றன. இந்திய அரசினதும் மற்றும் சுற்றயல் (periphery) என்று குறிப்பிடக்கூடிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற ஒரு குழுவைச் சேர்ந்த நாடுகளின் அரசுகளினதும் நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாக இருந்தது. யுத்தம் முடி வுக்கு வந்தபின் இலங்கையின் உறவுக்கான ஏதாவது எதிர்கால சாத்தியம் கருதி இந்த அரசுகளிற் பெரும் பாலானவை இந்த ஆதரவை மௌனமாகவும் வழங் கின.
இதற்கு மாறாக, யுரேஷியா எனக் கூட்டாகக் குறிப்பிடப்படக் கூடிய, ஈரான், ரஷ்யா போன்ற ஒரு தொகுதி நாடுகளின் அரசுகள் இலங்கை அரசை ஆதரித்தன. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் போரிடும் இரு பகுதிகளுக்குமான இந்த யுரெஷியா மற்றும் சுற்றயல் இவற்றின் ஆதரவுகளின் துருவத்தன்மையானது, உண் மையிலேயே இன்னமும் பரந்துபட்டதான ஒரு போராட்டத்தின் வாசனையை முகர்ந்தறிவதைத் தடுத்து விடுகிறது. இலங்கைத்தீவின் எல்லைகளுக்கும் இப் பிராந்தியத்தின் எல்லைகளுக்கும் மிகவும் அப்பால் பரந்தகன்ற ஒரு போராட்டமது.
இது ஏன் அவ்வாறுள்ளது? இப்படியான ஒரு கேள்விக்கான விடையிற் பெரும்பகுதி, அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதுமான சர்வதேச மேலாதிக்கத் திற்கெதிராக யுரேஷிய பெரு நிலப்பரப்பில் வளர்ந்து வரும் ஒரு கூட்டின் உருவாக்கத்துடன் தொடர்புபட்டது. பிறிமாக்கோவ் கோட்பாடு கொடுத்த உற்சாகத் தினால் மொஸ்கோ, தெஹ்ரான், பீஜிங் மற்றும் அவர்களின் கூட்டாளிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த யுரேஷியன் கூட்டு. ‘கிழக்கின் நேட்டோ’ என சில வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களிடையே குறிப்பிடப்படும், உண்மையான இராணுவப் பரிமாணங்களைக்கொண்ட ஒரு பாதுகாப்புக்கூட்டான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), இந்தப் பூகோள- அரசியல் செயலூக்கத்தின் ஒரு மெய்யான குறியீடா கும். இச் செயற்பாட்டின் ஒரு களமாகத்தான்  2009ல் இலங்கை உள் நாட்டுப் போரின் கடைசி அத்தியாய மானது அனேகமாக அமைந்தது.
சீனப்பூதத்தின் நுழைவு: அமெரிக்கா மற்றும் இந்தியாவிடமிருந்து இலங்கை விலகுவதன் ஆரம்பம்.

March 8, 2010 at 6:34 am Leave a comment

ஈழச் சிக்கலும் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவும் – பாஸ்கர்(தமிழ்நாடு)

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
ஈழச் சிக்கல் இத்தனை ஆண்டுகள் ஆனபின்னரும் தீர்ந்தபாடில்லை, 30 ஆண்டுகால ஆயுதப் போராட் டத்திற்கு பிறகும் தீரவில்லை, தீராததோடு மிகவும் சிக்கலான நிலையில் இருக்கவும் செய்கிறது, அனுபவமும் படிப்பினைகளும் இருப்பதுதான் கிடைத்த ஒரே பலன். எது சரி, எது தவறு என்பது தெளிவாகிவிட்டது. தவறு என்று சொல்லப்பட்ட விசயங்கள் தடுக்கப்பட முடியாமல் போய் சரியான மாற்று எதையும் மேற் கொண்டு நடை முறைக்கு கொண்டு போக முடியாமல் போயிற்று.
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான விமர்சனங்கள் மார்க்சிய அமைப்புகள், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோரால் வைக்கப்பட்டு அவை சரியென்றே நிருபணமாயின. இதற்கு இவ்வளவு பெரிய இழப்பை, பாதிப்பை, பின்னடைவை விலையாக கட்டாயமாக கொடுக்க வேண்டியதாயிற்று.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் வழியில் வெளிப்பட்ட இராணுவவாதம் இத்தகைய விலைக்கு காரணமாக இருந்தாலும் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவு கருந்தாக்கமும் இந்த இராணுவ வாதத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
பேரினவாத, ஏகாதிபத்திய சுரண்டல் அரசியல் நலனுக்காக விளைந்த இச்சிக்கலை எதிர்கொண்ட தமிழ் மக்கள் ஃ அமைப்புகளின் போராட்டங்கள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஒடுக்கப்பட்டன.  இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், அரசியல் வழியின் அங்கமாக இராணுவ நடவடிக்கைகளைப் பார்க் காமல் இராணுவ நடவடிக்கைகளே அரசியல் நடவடிக்கை என்பதாக வெளிப்பட்ட அரசியல் வழியே இன்றைக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு பிரதான காரணியாகும்.
விடுதலைப் புலிகளுக்கு அரசியல் இல்லையா என அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் கோபப்படலாம்.  புலிகள் பல பத்திரிகைகளை நடத்தினர் செய்தித் தொடர்பாளர்களை வைத்திருந்தனர்  பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று போர் நிறுத்தங்களைச் செய்திருக்கின் றனர் அனைத்திற்கும் மேலாக தனியரசை அமைத்து பல துறைகளை திறம்பட நடத்தினர் என அவர்கள் வாதிடலாம். இவையெல்லாம் விவரம் என்ற வகையில் உண்மைதான்.

March 7, 2010 at 11:15 pm 1 comment

சித்தாந்தன் கவிதைகள்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
புறக்கணிக்கப்பட்டவர்களின் முறைப்பாடு
ஒரு குழலின் ஆழத்துள் இறங்கும் குருதி
இசையை மூழ்கடிக்கிறது
அதன் கதவுகளை மூடி
சுரங்களை இருளடையச் செய்கிறது.
பூர்வதத்தின் அதிபுனைவுக் கதைகளை
இசையாக வாசிப்பவர்கள்
பிணங்கiளைப் புணருகிறார்கள்
நிணத்தைப் பருகுகிறார்கள்
மலத்தைச் சுற்றும் ஈக்களாய் இரைகிறார்கள்
உண்மையிலவர்கள்
காற்றின் நறுமணத்தை முகர்வதில்லை,
நண்பனே
இலைகளாயும் கனிகளாயும்
உதிர்ந்துள்ள
உன்னையும் என்னையும் பற்றி
இசையின் துளியாக யாரும் பேசவில்லை
மலைகளில் உறைந்திருக்கிறது சரித்திரம்
சூரியனோ
பல நூறு பிணங்களாய்ச் சிதறிக்கிடக்கிறது.
நம்மில் யார்
காலப் பிரக்ஞை ஊறிய முதிர்சுவடுகளின்
ஆழ்வேர்ச் சுனையைத் திறப்பது,
ஒரு சொட்டுக் கண்ணீரை வியர்வையை
ஒரு வேளை உணவை பாதைகளை
குழந்தைகளுக்கான தாலாட்டை
நிலாவெழும் வானத்தை
விதியென முள்வலைக்கு இரையாக்கிவிட்டு
மறுக்கப்பட்ட சொற்களின் வலியறியாது
மனிதர்கள் அலைகிறார்கள்.
நண்பனே
கடவுளின் பானத்தில் சிதறிய துளியை
அவரின் உணவின் பருக்கையை
நீயோ நானோ உண்ணவில்லையாயினும்
சரித்திரம் உண்மையைத் தின்றுவிட்டது.
வானம் விரியும் மையத்தில்
அலகு குத்தும் பறவை
சரித்திரத்தைக் குருதியென உறிஞ்சுகிறது
தாழாத சிறகுகளினால் தன் ஒலியை எழுப்புகிறது.
22.05.2007
தூர்ந்துபோன சுனையூற்றின் அடியில் உக்கியிருக்கும் புன்னகை
திறந்து வைத்திருக்கிறேன் என் தெருவை
நீயோ புறக்கணித்துத் திரும்புகின்றாய்,
நண்பா
யன்னல் கண்ணாடிகள் உடைந்து
சில்லுகளாய்ச் சிதறியிருக்கும் வீட்டின்
உட்புறமாய்
இன்னும் மீதமாயிருக்கிறது அந்திமப் புன்னகை!
எதற்காக
என் கைகளை விடுவித்தாய்
புழுக்களாய் நெளிகின்றன உன் சொற்கள்
தேகத்தில்,
மனந்திறக்காத வீட்டின் வரைபடத்தில்
தொங்கும் தூக்குக் கயிற்றில்
சருக்கிடப்பட்டிருப்பது
நீயுமல்ல நானுமல்ல நம் நினைவுகள்
பருதி தாண்டாத சில பொழுதுகளை
சுமந்திருந்தோம் தோள்களில்,
முடிவற்ற பேருந்துப் பிரயாணத்தில்
யன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த
என்முகத்தில் அறைந்த காற்று
பரிசுத்தமற்ற மனத்தின் இழைகள்
அறுந்து போனதாய்ச் சொல்லிச் சென்றது.
நீ போய் யாரிடமாவது சொல்லப்போவதில்லை
கருணையின் கடலளவு வலியை
நான் காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்த்துப்
புன்னகை செய்கிறேன்.
என் தெருவில் நடந்து செல்கிறது
யாரோ வளர்க்கும் நாய்.

March 7, 2010 at 7:58 pm 1 comment

Older Posts


March 2010
M T W T F S S
« Dec   May »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts