Posts filed under ‘கவிதை’

அன்ரன் அன்பழகன் – கவிதை

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

சிதைந்து போயிற்று
கூடு.
களவாடப்பட்டன
கூரைகள்.
ஒன்றின் மேல் ஒன்று
இராதபடி
இடிந்து போயிற்று
கற்கள் –
விதைக்கப்படாமுட்கள் வளர்ந்து
செடியாகி மூடிக்கொண்டது.
சிதைந்து போன கற்குவியல்
மேலிருக்கும்
பைத்தியக்காரனின்
வார்த்தைகள்
கற்றில் கரைகிறது
கடந்து போகும்
மனிதக் காதுகள்
திறக்கவேயில்லை.
வணிக தொலைக்காட்சி
நெடுந்தொடர்களின்
கதாநாயகத் துயரங்களுக்காக
அவர்கள் மனம்
பிழியப்பிழிய அழுகிறது தினமும்
வீதியில் தனக்குத் தானே
பேசியபடி கடந்து போகும்
மனிதனைக் கவனித்ததுண்டா?
கலைந்த கேசம்
மழிக்க வேண்டும் (more…)

Advertisements

June 2, 2010 at 3:24 pm Leave a comment

திருகோணமலை சந்திரன் – மஞ்சுள வெடிவர்த்தன , தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

சதுர்ஷன்
ராஜனின் இளைய மகன்
தினந்தோறும் மாலையில்
விழிகளால் வானைத் தொட்டு
நிலவையழைப்பான்
சின்னஞ்சிறு கரங்களை அசைத்தவாறு
..நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா..
அதோ அவ்வேளைதான்
கோணேஸ்வரன் தேவாலய உச்சி நோக்கிக்
கைகூப்பியவாறு
திருகோணமலை வானத்துக்கு
நிலவு எழுந்து வரும்
மார்கழி மாதக் குளிர் நாளன்றில்
இரவு மறந்து போய்
நிலவை கைவிட்டுச் சென்றிருந்தது வானில்
பனிப்புகாரில் சூரியன் மூடுண்ட  வேளையில்
மல்லிகைகள் கண்கலங்கி
மகரந்தங்களை வழியவிட்டு அழுதன
போகுமிடம் தெரியாமல்
சீனக் குடாவின் உள்ளே
நங்கூரமிட்ட நிலவு
வெண்பனித் துகள்களை ஒவ்வொன்றாய்ச் சேகரித்தது
திருகோணமலையின் சந்தியன்றில்
இரத்தத் துளிகளில் தோய்ந்த
மல்லிகையன்றிலிருந்து சுகந்தம் வீசியது
பட்சிகளின் பூபாளம் கேளாத
திருகோணமலையின்
காலைப் பொழுதொன்றில்
முற்றத்தில் இறங்கிய புதல்வனுக்கு
நிலவின் தனித்துப் போன இரு விழிகள் தெரிந்தது
இளஞ்சூரியனின் கிரணங்களுக்குப் புலப்படாத
மிருதுவான விரல்நுனிகளால் அது
புதல்வனின் தலைமீது சாமரம் வீசியது
அந்த மார்கழி முதல்
பணி முடித்துச் சூரியன் போகும் அந்தியானால்
சின்ன விழியன்று வானைத் தொட்டு
நிலவையழைக்கும்
பிஞ்சுக் கரங்களை அசைத்தவாறு

June 2, 2010 at 2:13 pm Leave a comment

திருமாவளவன் ஏழு கவிதைகள்

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

1. முள்ளிவாய்க்கால்

சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்
அல்லது
தற்கொலை செய்தவனின் மீது சுடப்பட்டிருக்கலாம்
தப்பியோடும் போது பின்னாலிருந்து கொன்றிருக்கலாம்
அன்றேல்
கூட இருந்தவன் சாகடிப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு
சரணடைந்தவன் மீது வன்மம் வெறியாய்க் கொன்டவனொருவன்
கண்ணிமைக்கும் பொழுதுக்குள்
தன் துவக்கின் வில்லை இழுத்திருக்கலாம்
கைதின் பின் முரண்டுபிடித்திருக்கவும்
அவனைச் சித்திரவதை செய்திருக்கவும்
பின் அடித்துத் கொல்லவும் வாய்ப்புண்டு
துப்பாக்கிக்குப் பதிலாக கோடரி அல்லது வேறு கூரிய கருவியால்
கபாலத்தைப் பிளந்திருக்கும் அநாகரிகம் எதிரியிடமும் உண்டு
தப்பியோட
அவன் சாயல் கொண்ட வேறொருவனின் பிணம் கூட
இவனாகச் சித்தரிக்கபட்டிருக்கலாம்
எல்லாவித சாத்தியப்பாடுகளோடும்
திரை விழுகிறது
மேடையில் கட்டியக்காரன் கும்மாளமிடுகிறான்
‘கூத்து முடிந்தது’
இரத்த வெடிலில் கிடந்து தகிக்கிறது கூத்துக்களரி
மகிழ்வா? துயரா? யாருக்கும் தெரியவில்லை
எல்லோர் விழிகளும் நீரால் வழிகிறது
இருள்;
இன்னும் கலையவில்லை

(more…)

June 2, 2010 at 1:27 pm Leave a comment

யாரோ போட்டு முடித்த தானாகக் கிடைத்த இரவுச்சட்டை – துவாரகன்

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

ஒரு நாள்
என் வீடு இருந்தது.
வயல்வெளிக்கு நடுவே
ஆலமர விருட்சம் போல்
அரைக்காற்சட்டையோடு
அண்ணா
டிரக்டர் எடுத்து வயல் உழச்செல்வான்
அப்பா
விதைநெல் விசிற சின்னமாமாவைக் கூட்டிப் போவார்
மாலை பட்டி திரும்பும் மாடுகளை அடைக்கவும்
குளத்தில் வரால் மீன் பிடிக்கவும்
சின்னத்தம்பி என்னுடன் வருவான்.
தங்கையும் நானும் கதை பயில
தேக்கமரமும் மலைவேம்பும்
எம்மை ஊஞ்சலில் தாங்கிய நாட்கள்.
மாலையானதும்
மாடுகள் அசைபோடுவது போல்
உறவுகள் சுற்றியிருந்து
அன்பை அசைபோடுவோம்.
அம்மாவும் பெரியக்காவும்
சுவையாகச் செய்த சாப்பாடு.
செய்திக்குப் பின்
அப்பா என்னிடம் தரும் றேடியாவில்
வழிந்து வரும் பாட்டு.
காதில் கேட்கும் எருமைகளின் மேய்ச்சல்த்தூரம்
எல்லாவற்றோடும் நானும் தூங்கிப் போவேன்.
இப்போ
இரண்டு காவலரனுக்கு நடுவில்
மழை வெள்ளம் தரைதட்ட
தொண்டு நிறுவனம் தந்த
படங்கு காற்றில் அடிக்க
எங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட புது நிலத்தில்
அம்மாவின் காய்ந்த விழிகளோடு
நானும் காத்திருக்கிறேன்.
யாரோ போட்டு முடித்து
முகாமொன்றில்
தானமாகக் கிடைத்த
ஒரு இரவுச் சட்டை
என்னை மூடிக்கிடக்கிறது.

24.12.2009, 11:22  *கவிதைத் தலைப்பு அ. முத்துலிங்கத்தினுடையது.

June 2, 2010 at 12:27 pm Leave a comment

பெண்ணியா – கவிதை

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

1.தம்பியைப் பற்றி

நீராலானது
தன் கிளைகளை பரப்பிக் கொண்டுள்ள திசையெங்கிலும்
மேகத்திரைகளில்
நம் கதைகள்
எழுதித் தொங்க விடப்பட்டுள்ளதைக் காண்கிறேன்
ஆதவனின் ஒளிக்கீற்றுகள் நிறையும்
எல்லா இடங்களிலும்
நானும் தம்பியும் ஒளிந்திருக்கிறோம்
பனி தொடர்கின்ற
ஏதோ ஒரு மலையினுள்
தம்பி ஒளிந்திருக்கின்றான்
எனக்கு மேலிருக்கும்
இதே வானின் கீழ்தான்
உன்னை அதிகமாய்
மிஸ் பண்ணிக் கொண்டிருக்கும்
ஒரு பொழுதில்
எனது அறையில்
பனிப் பெய்கிறது.
கடுமையாய் இருட்டுகிறது
புகை மூட்டத்தின் நடுவில்
விளையாடிக் கொண்டிருக்கிறேன் தம்பியோடு
நினைக்க முடியாதிருக்கும் (more…)

June 2, 2010 at 10:06 am Leave a comment

சித்தாந்தன் கவிதைகள்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
புறக்கணிக்கப்பட்டவர்களின் முறைப்பாடு
ஒரு குழலின் ஆழத்துள் இறங்கும் குருதி
இசையை மூழ்கடிக்கிறது
அதன் கதவுகளை மூடி
சுரங்களை இருளடையச் செய்கிறது.
பூர்வதத்தின் அதிபுனைவுக் கதைகளை
இசையாக வாசிப்பவர்கள்
பிணங்கiளைப் புணருகிறார்கள்
நிணத்தைப் பருகுகிறார்கள்
மலத்தைச் சுற்றும் ஈக்களாய் இரைகிறார்கள்
உண்மையிலவர்கள்
காற்றின் நறுமணத்தை முகர்வதில்லை,
நண்பனே
இலைகளாயும் கனிகளாயும்
உதிர்ந்துள்ள
உன்னையும் என்னையும் பற்றி
இசையின் துளியாக யாரும் பேசவில்லை
மலைகளில் உறைந்திருக்கிறது சரித்திரம்
சூரியனோ
பல நூறு பிணங்களாய்ச் சிதறிக்கிடக்கிறது.
நம்மில் யார்
காலப் பிரக்ஞை ஊறிய முதிர்சுவடுகளின்
ஆழ்வேர்ச் சுனையைத் திறப்பது,
ஒரு சொட்டுக் கண்ணீரை வியர்வையை
ஒரு வேளை உணவை பாதைகளை
குழந்தைகளுக்கான தாலாட்டை
நிலாவெழும் வானத்தை
விதியென முள்வலைக்கு இரையாக்கிவிட்டு
மறுக்கப்பட்ட சொற்களின் வலியறியாது
மனிதர்கள் அலைகிறார்கள்.
நண்பனே
கடவுளின் பானத்தில் சிதறிய துளியை
அவரின் உணவின் பருக்கையை
நீயோ நானோ உண்ணவில்லையாயினும்
சரித்திரம் உண்மையைத் தின்றுவிட்டது.
வானம் விரியும் மையத்தில்
அலகு குத்தும் பறவை
சரித்திரத்தைக் குருதியென உறிஞ்சுகிறது
தாழாத சிறகுகளினால் தன் ஒலியை எழுப்புகிறது.
22.05.2007
தூர்ந்துபோன சுனையூற்றின் அடியில் உக்கியிருக்கும் புன்னகை
திறந்து வைத்திருக்கிறேன் என் தெருவை
நீயோ புறக்கணித்துத் திரும்புகின்றாய்,
நண்பா
யன்னல் கண்ணாடிகள் உடைந்து
சில்லுகளாய்ச் சிதறியிருக்கும் வீட்டின்
உட்புறமாய்
இன்னும் மீதமாயிருக்கிறது அந்திமப் புன்னகை!
எதற்காக
என் கைகளை விடுவித்தாய்
புழுக்களாய் நெளிகின்றன உன் சொற்கள்
தேகத்தில்,
மனந்திறக்காத வீட்டின் வரைபடத்தில்
தொங்கும் தூக்குக் கயிற்றில்
சருக்கிடப்பட்டிருப்பது
நீயுமல்ல நானுமல்ல நம் நினைவுகள்
பருதி தாண்டாத சில பொழுதுகளை
சுமந்திருந்தோம் தோள்களில்,
முடிவற்ற பேருந்துப் பிரயாணத்தில்
யன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த
என்முகத்தில் அறைந்த காற்று
பரிசுத்தமற்ற மனத்தின் இழைகள்
அறுந்து போனதாய்ச் சொல்லிச் சென்றது.
நீ போய் யாரிடமாவது சொல்லப்போவதில்லை
கருணையின் கடலளவு வலியை
நான் காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்த்துப்
புன்னகை செய்கிறேன்.
என் தெருவில் நடந்து செல்கிறது
யாரோ வளர்க்கும் நாய்.

March 7, 2010 at 7:58 pm 1 comment

தர்மினி கவிதைகள்.

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
வெறும்வானம்
கொப்புகளிற் பனி படர்த்தி
வெறுங்குச்சிகளை மரங்கள்
கிளை விரித்து நிற்க,
மூடிய சன்னல்கள், கதவுகள்
உறைந்த பனித்துகள்களாகிக் கூரைகள்.
விறைத்து
இறுகி
நிலமெல்லாம் வெறுமை.
கண்கள் உயர்த்த
மாவு பூசிய வானம்
நிறங்களை விழுங்கித் தொங்கியது.
ஒற்றைப் பறவையில்லை
காற்றிற் கிளம்பியலையும்
கடதாசி, சருகில்லை
வீதி ஒன்றைக் கீறிச் செல்லும்
விமானங் கூட வானிலில்லை.
பாதி திறந்த
ஒற்றைச் சன்னலினூடே
விரக்தியில் வரைந்த ஓவியனின் காட்சியொன்றாய்
அப்பனியுறைவு கொழுவப்பட்டிருந்தது.
வெறுமை படர்ந்து வந்து
என் தோள் போர்த்தி(த்)
தனித்திருக்கும் குளிர் பொழுதை
பாலைவனமொன்றில் பயணிப்பதாய்ச் சொல்லி
என் சன்னலின் ஓவியத்தை
மறுவளமாய்த் திருப்பியது.
நானொரு நாள்
உப்பளத்தில் நின்றதையது
நினைவுறுத்துவதையும் சொல்லி(ச்)
சன்னலை மூடினேன்.

March 7, 2010 at 3:48 pm 1 comment

Older Posts


June 2019
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Categories

Feeds

Flickr Photos

Recent Posts