பகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்

June 3, 2010 at 12:49 am Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

  • [‘உரையாடல்கள் மற்றும் ஆய்வுக்கான மையம்’ (Centre for Dialogues and Research) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சென்ற மார்ச் 9, 2010 அன்று நடைபெற்ற கருத்தாடல்களின் தொகுப்பு.]

நிகழ்வினைத் தொடங்கி வைத்து சிராஜ் பேசுகையில்:

மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் அவர்கள் சொல்வதை உண்மையாகப் புரிந்து கொள்ளுதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நம்மைப் புரிய வைத்து, மற்றவர்களையும் புரிந்து கொள்ளுதல், ஒன்றிணைந்து சிந்தித்தல் என்கிற வகையான பண்பு இன்றைய, குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்துச் சமூக அரசியல் சூழலில் மிகவும் அவசியப்படுகிறது என்கிற அடிப்படையிலேயே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

உரையாடல் மட்டுமின்றி கூடவே ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமாகிறது. உரையாடலும் பகுப்பாய்வு மனோபாவமும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

“The Magic of Dialogue: Transforming Conflict into Co-operation” என்கிற டானியல் என்புளோவிக்கினுடைய நூற் தலைப்பு நினைவுக்கு வருகிறது. உரையாடலின் அற்புதம் இதுதான். உரையாடல் மூலம் மோதலை ஒத்துழைப்பாகவும் புரிந்துணர்வாகவும் மாற்றிவிட முடியும். டயலாக், டிஸ்கசன், டிபெற் (dialogue, discussion, debate) என்கிற விடயங்கள் முக்கிய மானவை. உரையாடலில் பேசுவது மட்டுமல்ல, பேசுவதைப் போலவே மௌனமாக இருப்பதும் முக்கியம். குறிப்பாக மற்றவர்களின் கருத்துக்களை மதித்தல், கேட்டல் என்கிற வகையில் இத்தகைய மௌனமும் முக்கியமாகிறது. விவாதம் என்பது ஒருவரை ஒருவர் எதிர்த்து நமது கருத்துக்களை முன்வைப்பது. ஆனால், கலந்துரையாடல் என்பது வேறுபட்ட சிந்தனைப் போக்குகள் உள்ள பல்வேறு குழுக்களிடையே நடைபெறும் உரையாடல்.

இன்று இலங்கையில் முக்கியமாகத் தேவைப் படுவது ‘Transitional Justice’  (நிலைமாறுகிற காலத்திற் கான நீதி). மனித உரிமைகள் மிகத் திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மீறப்படுகிற சூழலில் அதற்கு அப்பால், அதைத் தாண்டிச் செல்லக்கூடிய அவசியம் இருக்கிறது. இலங்கையைப் பொருத்தமட்டில் நாம் எப்போதுமே இனங்களைப் பற்றி மட்டுமே (சிங்களவர், தமிழர், முஸ்லிம்) பேசுகிறோம். Cultural minorities என்கிற கலாச்சாரச் சிறுபான்மையினர்கள் பற்றியெல்லாம் பேசுவது கிடையாது.

இந்த நாட்டிலேயே தேசியவாதம், அடையாள அரசியல், அரசியல்  தீர்வு பற்றியெல்லாம் நிறையப் பேசப்பட்டுள்ளது. ஆனால், Reconciliation எனச் சொல்லப்படுகிற ‘பகைமறப்பு’ அல்லது ‘மீளிணக்கம்’ என்பது இன்றும் பேசுபொருளாக்கப் படவில்லை. அந்த அடிப்படையிலேதான் பேராசிரியர் மார்க்சின் இலங்கை வருகையைப் பயன்படுத்தி இதைப் பேசுபொருளாக ஆக்க முயற்சிக்கிறோம். நாம் உரைப் பாரம்பரியத்திலே வந்தவர்கள். சொற்பொழிவுகளை ஆற்றுதல், அவற்றைக் கேட்டல் என்பனவே இங்கு பழக்கமாக இருந்துள்ளது. அதை மாற்றி ஒரு interactive forum  ஆக இதை உருவாக்கியுள்ளோம். அவையிலிருந்து வேறுபட்ட அபிப்பிராயங்கள், தெளிவுகள், மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதை வரவேற்கிறோம்.

பேராசிரியர் மார்க்ஸ் குறித்து இங்கே ஒரு விரிவான அறிமுகம் தேவையில்லை. அவரது எழுத்துக்களினூடாக அவரை நாம் முழுமையாக அறிந்துள்ளோம். இலங்கைச் சூழலுக்கு அவர் முதன் முதலாக வந்துள்ளார். தற்கால அரசியலை முன்னிறுத்தி ‘பகைமறப்பு – பன்னாட்டு அனுபவங்கள்’ என்ற தலைப்பில் இந்த உரையாடலைத் தொடங்கி வைக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

பேராசிரியர் அ.மார்க்ஸ்

உரையாடல்தான் மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. உரையாடலின் மூலமாகவே நாம் நமது மனிதத் தன்மையை மிகைப்படுத்திக் கொள்ள முடியும். ‘dialogic method’ என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுத் துறையாக ஏற்கப்பட்டுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

பன்மைச் சமூகங்களின் உரையாடல் ரொம்பவும் அத்தியாவசியம் ஆகிறது. கிட்டத்தட்ட இன்று எல்லாச் சமூகங்களுமே பன்மைச் சமூகங்களாகத்தான் இருக்கின்றன. ஒற்றைச் சமூகம் என நாம் நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் பன்மைத் தன்மைகளை உள்ளடக்கிய சமூகங்களாகத்தான் உள்ளன. குறிப்பாக 80களுக்குப்பின் இந்தப் பன்மை அடையாளங்கள் கூடுதலாக தம்மை வெளிப்படுத்தத் தொடங்கி யுள்ளன. இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள தெலுங்கானா போராட்டத்தை அறிந்திருப்பீர்கள். தெலுங்கு மொழி பேசக்கூடிய தெலுங்கானா மக்கள் அதே தெலுங்கு பேசுகிற ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர மக்களிடமிருந்து இன்று பிரிவினை கோரிப் போராடுகின்றனர்.

எனவே இயல்பான அடையாளங்கள் – natural identies எனச் சொல்லக்கூடிய மொழி, இனம் அல்லது மதம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் நாம் எந்தச் சமூகத்தையும் ஒற்றையாகப் பார்த்துவிட முடியாது என்ற சூழல் இன்று உருவாகியுள்ளது. தெலுங்கு பேசும் மக்களுக்குள் குறைந்தபட்சம் இன்று மூன்று பிராந்திய ரீதியான வேறுபாடுகள் (regional variations) செயல்படுகின்றன.

இந்த அடிப்படையில் இன்று ‘regions’  என்ற கருத்தாக்கம் கல்வித்துறையில் முக்கியமாகி வருகிறது. region studies (ரீஜன் ஸ்டடீஸ்) என்பது புதிய பல்கலைக்கழகங்களில் முக்கிய துறையாக உருப்பெறுகிறது. சமீபத்தில் டெல்லி பல்கலைக் கழகத்தில் இது தொடர்பான ஒரு பன்னாட்டு கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெற்றது. நான் சற்றுமுன் குறிப்பிட்டது போல ஒரு மிகப்பெரிய ஒற்றைச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளவை உள்ளுக்குள் பல்வேறு “ரீஜன்”களாக இருப்பதும், பல்வேறு தனித்தனிச் சமூகங்களாக அரசியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டவை ஒன்றாகக் கூடி வாழ்கிற ஒரே அரசியல் சமூகமாக விழைவதும் இன்று நடைமுறைகளாக உள்ளன. இந்த நோக்கிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நான் சற்றுமுன் குறிப்பிட்ட  கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. ஆக இந்த இரண்டு வகைகளிலும் regional formationsகளை நாம் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

ஒரு ‘இயல்பான அடையாளம்’ என்கிற கருத்தாக்கத்திற்கு அப்பால் உள்ளுக்குள் இருக்கக் கூடிய வேறுபாடுகள், அந்த வேறுபாடுகளின் அடிப்படையிலான ‘பிற சமூகங்கள்’ ஆகியவற்றுடன் எந்த அளவு நாம் உரையாடலை மேற் கொண்டுள் ளோம், அவற்றைப் புரிந்து வைத்துள்ளோம் என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. உண்மையைச் சொல்வதானால் அருகிலுள்ள மற்ற சமூகங்கள் (others) குறித்த நமது புரிதல் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆளுநர் இருந்தார். ஆந்திர மாநிலத்தில் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவரை ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள். அந்த மசூதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு பேச வந்த அவர், “எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் எங்காவது ஓரிடத்தில் நபிகள் நாயகத்தின் திருஉருவப் படம் ஒன்றை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார். ஒரு மாநில ஆளுநர், ஐ.பி.எஸ். அதிகாரி, நீண்ட நாட்கள் பெரும் பதவியில் இருந்தவர், இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சிறுபான்மைச் சமூகத்தின் ஒரு அடிப்படையான நம்பிக்கையைக் கூடச் சரிவரப் புரிந்து வைத்திருக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த மாதிரி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். மிக அருகில் வாழ்கிற மற்றவர்களின் மொழி, கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளா திருத்தல் அல்லது அவற்றைக் கீழானதாக, கேலிக்குரியவையாகப் புரிந்து கொள்ளுதல் என்பதே இன்றைய நடைமுறையாக உள்ளது. உரையாடல்களின் மூலமாகவே மற்றமை குறித்த சரியான புரிதல் அடைவதும், மற்றவர்களின் அரசியல் அபிலாஷைகளின் நியாயங்களை உணர்வதும் சாத்தியம். உள்ளூர் மொழி ஊடகங்கள், Vernacular Media – மற்ற சமூகங்களின் பிரச்சினைகளை, அவர்களின் நியாயங்களை எழுதுவதில்லை. இங்கும் அப்படித் தான் பார்க்கிறோம்.

எண்பதுகளின் பின் நிறைய மாற்றங்கள் உலகில் ஏற்பட்டுள்ளன. மற்றவர்களுடனான நமது அருகாமைகள், கூடிவாழ்தல்கள், அதிகரித்துள்ளன. புலப்பெயர்வு, immigration முதலியவை அதிகமாகி யுள்ளன. போக்குவரத்துகள், தகவல் தொடர்புகள், நிதிப் பரிமாற்றங்கள் எல்லாம் பெருகியுள்ளன. இவை தவிர, ஏற்கனவே வரலாற்றில் இருந்துவந்த சமூகங்களும், மற்றவர்களுடன் வாழ்கிற சமூகங் களாகவே இருந்து வந்துள்ளன என்பதும் இன்று வேறெப்போதையும் விட அதிகமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. மற்றவர்களுடன் வாழ்வது என்கிற கலையின் முக்கியத்துவம் இன்று மிகுதியாகியுள்ளது. சொல்லப்போனால் அரசியல் என்பதே மற்றவர் களுடன் கூடிய வாழும் கலைதான். Politics is the art of living with others.

மற்றமையுடன், ‘other’ உடன் வாழ இயலாது என்கிற அடிப்படையில்தான் பன்மை சமூகங்களில் பிரச்சனைகள் எழுகின்றன. லட்சக்கணக்கான மக்களை ரத்தபலி வாங்கும் நடைமுறைகளாகவும் அவை ஆகிவிடுகின்றன. மற்றமையை புரிந்து கொள்ளுதல் என்பது அதன் வித்தியாசங்களுடன் அங்கீகரித்தல், வித்தியாசங்களை மறுத்ததல்ல, வித்தியாசங்களை ஏற்று அதனுடன் வாழ்தல் என்பதே. இதற்கொரு மிகச்சிறந்த உதாரணமாக காந்தி அடிகளைச் சொல்வேன்.

தேசியம் என்பது எப்போதும் ஏதாவது பெரும்பான்மை – majority  அடிப்படையிலேயே கட்டமைக்கப்படும் – இனம், மொழி, மதம்… இப்படி. இந்தியாவில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வடிவம் பெற்ற இந்திய தேசியமும் அப்படித்தான் இருந்தது. ‘இந்து நேஷனலிசம்’ என்பதாகவே இந்திய தேசியம் கற்பிதம் செய்யப் பட்டது. இதன் முன்னோடிகளாக பங்கிம் சந்திரர், பால கங்காதர திலகர் முதலானோர் இருந்தனர்.

காந்தி இந்திய தேசியத்தின் போக்கையே மாற்றியமைத்தார். அதன் கட்டமைப்பிலேயே மாற்றம் கொண்டு வந்தார். இந்திய தேசியத்தை அவர் பல்வேறு சிறுபான்மைச் சமூகங்களின் தொகுப்பாகப் பார்த்தார். 1947-48 பிரிவினைக் கலவரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது, இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளிலு மிருந்த சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டுமென இரு தரப்புகளி லிருந்தும் அவருக்கு வேண்டுகோள் விடப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் சுஹ்ராவந்தியின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் பாகிஸ்தான் செல்ல இருந்த போதுதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய அரசியலமைப்பு (constitution)  ஒரு மதச்சார்பற்ற – secular constitutionஆக ஆக்கப்பட்டதில் காந்திக்கு முக்கிய பங்குண்டு. secular என்கிற ஒரு தத்துவார்த்த வகையினத்தை, அரசியல் வகையினமாக (political category)  ஆக்கியது காந்திதான். இந்தியா இப்போது எந்த அளவுக்கு secularஆக உள்ளது என்பது வேறு விடயம். ஆனால் ‘இந்து ராஷ்டிரமாக’ இந்தியா அமையாமல் தடுத்தது காந்திதான். அதற்காகவே அவர் கொல்லப்பட்டார்.

எனினும் காந்தி அம்பேத்கர் முன்வைத்த தலித் மக்களின் தனித்துவத்தை ஏற்காதவராய் இருந்ததும், அதனால் விளைந்த தவறுகளுக்குக் காரணமாக இருந்ததும் வேறு கதை. எனினும், தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மைச் சமூகங்களின் தொகுதியாகவே அவர் இந்தியாவைக் கண்டார்.

மற்றவர்களுடன் உரையாடுதல், இணைந்து வாழ்தல் என்பது குறித்த அவர் கருத்தொன்றை இங்கு சொல்ல விரும்புகிறேன். ‘tolerence’  அதாவது ‘சகிப்புத்தன்மை’, ‘சமரசம்’ என்கிற ‘compromise’ ஆகிய இரு சொற்களையும் அவர் ஏற்கவில்லை, கண்டித்தார். ‘சகிப்புத் தன்மை’ என்றால் மற்றது ஏதோ சகிக்க இயலாதது, அதை சகித்துக் கொள்வதே சகிப்புத்தன்மை என்கிற பொருள் வந்துவிடுகிறது. ‘சமரசம்’ செய்து கொள்வது என்றால் நாம் ஏதோ உயர்ந்த இடத்தில் இருப்பதாகவும் மற்றவர்கள் கீழே இருப்பதாகவும், நாம் விட்டுக் கொடுப்பதாகவும் பொருள் வந்துவிடுகிறது. “மற்றவர்களை அவர்களின் வித்தியாசங்களுடன் ஏற்பதே” இன்றைய தேவை என்றார் காந்தியடிகள். மற்றமையின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல் என்கிற அடிப்படையில்தான் காந்தியடிகள் மற்றவர்களுடன் வாழ்வதை வரையறுத்தார்.

இன்னும் கொஞ்சம் தத்துவார்த்த ரீதியாக இதைச் சொல்வதென்றால் மற்றதைப் புரிந்து கொள்வதைப் பார்க்கிலும், மற்றதைப் புரிந்து கொள்வதிலுள்ள நமது இயலாமையை நாம் புரிந்துகொள்வதுதான் அவசியம், அல்லது சாத்தியம். மற்றவர்களின் தனித்துவங் களுக்கும் நமக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள், பொருத்தமின்மைகள் இருக்கும். அவற்றோடுதான் நாம் வாழவேண்டும். மாறாக, உமது தனித்துவத்தை நீங்கள் விட்டுவிட்டு வந்தால்தான் உங்களை ஏற்கமுடியும் என்றோ, இந்தத் தேசத்தின் குடி மக்களாகக் கருதமுடியும் என்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வதன் மூலம் எந்த ஒற்றுமையும் உருவாக இயலாது.

அந்த வகையில்தான் இந்த differenceஐ வித்தியாசத்தை அங்கீகரிப்பது முக்கியமாகிறது. இந்த வித்தியாசம் பாலியல் அடிப்படையில், மதம், சாதி, இனம், மொழி எனப் பல அடிப்படைகளில் அமையலாம். இந்த வித்தியாசங்களோடு வாழ்தல் என்கிற கலையைக் கற்றுக் கொள்வதில் உரை யாடலின் பங்கு மிக முக்கியமாகிறது. ‘உரையாடல்’ மற்றும் மீளிணக்கம் குறித்துப் பேசுகிற வாய்ப்பை எனக்களித்த இந்த அமைப்பினருக்கு என் நன்றியை இன்னொரு முறை கூறிக் கொள்கிறேன்.

Reconciliation அல்லது ‘பகைமறப்பு’ என்கிற இக் கருத்தாக்கம் 95க்குப் பிறகு உலகில் அதிகம் பேசப் படக்கூடிய ஒன்றாக உருவாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ‘அபார்தெய்ட்’ என்கிற இன ஒதுக்கல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு தென் ஆப்பிரிக்கர்கள் தலைமையில் புதிய ஆட்சி ஒன்று அமைந்த பொழுது ‘National Unity and Reconciliation Law’ என்கிற சட்டம் ஒன்றை இயற்றி, அந்த அடிப்படை யில் ‘ட்ரூத் அண்ட் ரிகன்சிலியேஷன் கமிஷன்’ (Truth and Reconciliation Commission)  ஒன்றை அமைத்தார்கள். ஆர்ச் பிசப் டெஸ்மான்ட் டுடூ தலைமையில் அமைக்கப்பட்ட அந்த ‘உண்மை மற்றும் பகை மறப்பு ஆணையம்’ சுமார் 3 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் 5 தொகுதிகளாகத் தனது அறிக்கையை அளித்தது. அதை ஒட்டி அடுத்தடுத்து உலகெங்கிலும் சுமார் 25 ஆண்டுகளில் இத்தகைய ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.

அர்ஜென்டினா, சிலி, கனடா, எல்சால்வடார், பிஜி, கானா, கதேமாலா, லைபீரியா, மொராக்கோ, பனாமா, பெரு, சியரோ லியோன், தென் கொரியா, கிழக்குத் தீமோர், லைபீரியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்படப் பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இத்தகைய ஆணையங்கள் அமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக அர்ஜென்ட்ரீனாவில் ‘National Commission for Disapperance’ (காணாமலடிக்கப் பட்டவர்கள் குறித்த தேசிய ஆணையம்), கனடாவில் ‘Indian Residencial School Truth and Reconciliation Commission’, எல்சல்வடாரில் Commission for the Truth’  என்றும் சியோரோலியோன், பெரு, பனாமா, லைபீரியா போன்ற நாடுகளில் தென்னாப்பிரிக்கா போலவே ‘Truth and Reconciliation Commission’ என்ற பெயரிலும் இந்த ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.

இந்தப் பல்வேறு நாடுகளிலும் இந்த ஆணையங்கள் செயற்பட்ட விதம், சந்தித்த சிக்கல்கள், விளைந்த பயன்கள் ஆகியவற்றை நாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தோமானால், இன்றைய சூழலில் இத்தகைய முயற்சி எந்த அளவிற்குப் பயன்படும் அல்லது பயன்படாது என்பது குறித்து நாம் யோசிக்க முடியும்.
இந்தப் பகைமறப்பு குறித்துப் பேசுவதில் நமக்கு ஒரு சிக்கலும் தயக்கமும் உள்ளது.

பகைமறத்தல் குறித்து பெரிய அளவில் உள்நாட்டு/வெளிநாட்டு மோதல்களினூடாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று முதலில் நாம் பேச வேண்டியிருப்பது உண்மைதான். இன்னொரு பக்கம் அவர்களிடம் சென்று இது குறித்துப் பேசுவது என்ன நியாயம் என்கிற கேள்வியும் எழுகிறது. தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இதுகாறும் பாதிக்கப்பட்ட மக்கள் மோதலினூடாக வென்று அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு இது பேசப் பட்டது. இதுகாறும் இன ஒதுக்கல்கள் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் மோதலில் எல்லா வற்றையும் இழந்து நிற்கும்போது அதனிடம் பகைமறப்பு குறித்துப் பேசுதல் எந்த அளவிற்கு நியாயம், எந்த அளவிற்குப் பயன்தரும்? எனினும் ஏதோ ஒரு வகையில் நாம் வாழ்வைத் தொடர வேண்டியுள்ளது. நாம் இப்படியே இருந்துவிட முடியாது. வரலாற்று இயக்கத்திலிருந்து ஒதுங்கி நின்றுவிட முடியாது. இப்படிப் பிரச்சினைகளின் பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்கித்தான் நாம் இது குறித்து சிந்தித்தாக வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று பகைமறத்தல் பற்றிப் பேசுவதிலுள்ள சிக்கல்களை இத்தகைய ஆணையங்களைத் தலைமையேற்று நடத்திய பலரும் சந்தித்துள்ளனர். இவர்களது அனுபவங்களை யெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது நமக்கு அது விளங்குகிறது. தென்கொரியா, லைபீரியா மற்றும் சில நாடுகளில் இந்த ஆணையத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் தங்களின் அனுபவத்தைச் சொல்லும் போது பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னிப்பதற்குத் தயாராக இல்லாத நிலையைக் குறிப்பிட்டுள்ளனர்.

அது இயல்புதான். நம்மால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மிகப்பெரிய அளவில் கடும் இழப்புகளுக்கும், கிட்டத்தட்ட இருபது அல்லது முப்பது அல்லது அந்தந்த நாட்டின் தனித் துவங்களுக்கு ஏற்ப பல ஆண்டுகளாகக் கடுமையான ஒதுக்கப்படல்களுக்கும், இழிவுகளுக்கும் ஆட் பட்டவர்கள் அவர்கள். கண்முன் தன் பிள்ளைகளை, பெற்றோரை, சகோதரியரை, கணவரை, மனைவி யைக் கொடூரமான அனுபவங்களின் பின்னணியில் பறிகொடுத்தவர்கள் அவர்கள். இந்தப் பகையை மறந்துவிடுதல் எளிதான விடயமன்று. இந்த ஆணையங்களில் பணி செய்தவர்கள் இந்த உண்மைகளைக் கணக்கில் கொண்டுதான் செயல் பட்டுள்ளனர்.

இந்தப் பகைமறப்பு ஆணையங்களின் செயற் பாடுகள், சந்தித்த சிக்கல்கள் ஆகியன குறித்துப் பேசுவதற்கு முன்னதாக, இவை எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக இருந்த தென் ஆப்பிரிக்கப் பகை மறப்பு ஆணையத்தின் செயற்பாடுகள் குறித்து முதலில் பார்ப்போம்.

ஐந்து தொகுதிகளாக ஆணையத்தின் அறிக்கை அமைந்திருந்தது. முதல் தொகுதி அறிமுகம். கமிஷனுக்குள்ளும் சமூகத்திலும் இது தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள், கமிஷனின் அடிப்படை மற்றும் பணிகள், எத்தகைய ஆய்வு முறை பயன் படுத்துவது என்பன.

மோதலின்போது எல்லாத் தரப்புகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் இரண்டாம் தொகுதியில் அடக்கப் பட்டன. இதன் முதல் பகுதி 1960-1990 காலகட்டத்தை உள்ளடக்கியது. 1990களின் தனித்துவமான அரசியல் சூழல், அரசின் பங்கு ஆகியன தனி அத்தியாயமாக எழுதப்பட்டது. தென்ஆப்ரிக்காவின் உள்ளே, வெளியே நிகழ்ந்தவை தனித்தனியாகப் பட்டியலிடப் பட்டன.

பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து மனித உரிமை மீறல்கள் இதில் தொகுக்கப்பட்டன. வெவ்வேறு பகுதிகளில் மீறல்கள் எவ்வாறு இருந்தன என பிராந்திய ரீதியாக மீறல்கள் ஆய்வு செய்யப் பட்டன. குறிப்பான பகுதிகளின் மீது கவனம் குவிக்கப்பட்டது.

நான்காம் தொகுதியில் பாதிப்புகள் நிகழ்ந்த சமூகக் களம் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிறுவனங்களைச் செவிமடுத்தல் அல்லது institutional hearings என்கிற வகையில் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் கருத்துக்களைச் சொல்வதற்கு சுயபரிசீலனை செய்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கட்டாய இராணுவ சேவை, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், இறுதியாகப் பெண்கள் என மூன்று சிறப்புச் செவிமடுத்தல்களும் தொகுக்கப்பட்டன.

ஐந்தாம் தொகுதியில் பகுப்பாய்வு, கண்டு பிடிப்புகள், பரிந்துரைகள் ஆகியன அமைந்தன. கமிஷனின் சிறுபான்மைக் கருத்தும் இதில் தெரிவிக்கப்பட்டது.

இவைதவிர மன்னிப்பு வழங்குவதற்கான கமிற்றி தனது பணி முடிந்தவுடன் கூடுதல் அறிக்கை ஒன்று அது தொடர்பாக அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.

பகைமறப்பு ஆணையங்களுக்கான விசாரணை எல்லைகள், அதிகாரங்கள் ஆகியன (mandate)  அவ்வச் சூழல்களுக்குத் தக வேறுபட்டு அமைந்துள்ளன. ஒரு சில நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அமைத்தல் (rehabilation)  இழப்பீடு அளித்தல் (compensation)  ஆகியவை ஆணையங்களின் அதிகாரத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தன. வேறு சில நாடுகளில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளித்தல், பாதிப்புகளுக்குக் காரணமான வர்களுக்கு தண்டனையைப் பரிந்துரைப்பது அல்லது வழங்குவது ஆகியன ஆணையத்தின் அதிகார எல்லைக்குள் கொண்டு வரப்படவில்லை. உண்மை மற்றும் பகைமறப்பு ஆகியன குறித்து அமைக்கப் படுகிற ஆணையத்தின் நோக்கம் அதுவாக இராது என்கிற கருத்தைச் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பொதுப் புலத்திற்கு (Public Domain)  கொண்டு வருவது ஒன்றே இத்தகைய ஆணையங்களின் நோக்கமாக இருக்க முடியும். இழப்பீடு மற்றும் தண்டனை வழஙகுதல் ஆகியன இந்த நோக்கங்களுக்கு எதிராக அமைந்து விடும் என்கிற கருத்தைத் தென் கொரிய ஆணையத் தின் தலைவர் கிம் டோங் சூன் கூறியுள்ளனார்.

யாருக்கு, எவ்வளவு இழப்பீடு அளிப்பது, என்ன தண்டனை அளிப்பது முதலான விவாதங்கள் பொதுப்புலத்திற்கு உண்மைகளைக் கொண்டு வரும் பிரதான பணியைப் பின்னுக்குத் தள்ளிவிடும். தவிரவும், இந்த அடிப்படையில் ஏற்படும் முரண்பாடுகள் பாதிப்பிற்குள்ளான சமூகத்தின் ஒற்றுமையைப் பாதிக்கவும் கூடும் என்று இவர் கூறுகின்றார்.

பகைமறப்புச் செயற்பாடுகள் என்பதைப் பொருத்தமட்டில் அதில் முக்கியமாக நான்கு அம்சங்கள் உள்ளன. அவை:

1. முதலில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அரசு மற்றும் ஊடக வலு ஆகியவற்றினூடாக பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட தீங்குகள் மறைக்கப்பட்டு வந்துள்ளன. இந்த உண்மைகள் சில நேரங்களில் பாதிக்கப்பட்ட அந்தச் சமூகத்திற்குள்ளேயே முடங்கி விடு கின்றன. பாதிப்பிற்குக் காரணமான சமூகத் திலுள்ள சாதாரண மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும்கூட அவை தெரிவதில்லை. மாற்றுச் சமூகங்களுக்குத் தெரியாதுள்ள இந்நிலை தகர்க்கப்பட வேண்டும். ஆக, மறைந்து போன கடந்த காலத்தின் உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றைப் பொதுப்புலத்தில் வைப்பது Truth and Reconciliation Commission-ன் முதற்பணியாகிறது.

2. உண்மைகளைப் பதிவு செய்தல் என்பதற்கு அடுத்தபடியாக, பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை அரசும், ஒட்டுமொத்த சமூகமும் அங்கீகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் களுக்கு சமூகத்தில் அவர்களுக்குரிய இடத்தை யும், கண்ணியத்தையும் (dignity) திருப்பி அளிக்கக்கூடிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்தவர்களுக்கு சிலை உட்பட்ட நினைவுச் சின்னங்களை அமைத்தல், இத்தகைய நிகழ்ச்சிகளில் அரசுப் பிரதிநிதிகள், மாற்றுச் சமூகத்தினர் உட்பட எல்லோரும் பங்கு பெறுதல், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங் களிடம் அரசாங்கம் வெளிப்படையாக மன்னிப்புக் கோருதல், பாதிக்கப்பட்டவர்களில் எஞ்சியோருக்கு வேலை வாய்ப்பு, உதவித் தொகை உட்பட்ட இழப்பீடுகள் வழங்குதல் என்கிற பல வடிவங்களில் இது அமையலாம்.

3.அடுத்து வருவது பகை மறப்பும் மன்னிப்பும். மன்னிப்பதில் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான சிக்கல் என்னவெனில் மன்னிப்பது என்பதில் இரண்டு கட்டங்கள் (phases) உண்டு. முதலில் யாரை மன்னிப்பது என்கிற கேள்விக்குப் பதில் தெரிந்தாக வேண்டும். பாதிக்கப்பட்டவர் பெயர் தெரியாத, அடையாளம் தெரியாத ஒருவரை மன்னித்துவிட முடியாது. எனவே குற்றவாளி யார் என அவருக்குத் தெரிய வேண்டும். இனவெறியர் கள், உளவுத்துறையினர், காவல்துறையினர் இப்படி யார் பாதிப்புக்குக் காரணமானவர்கள் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்படுகிற, எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக வேண்டும். அப்படி இல்லாமல் யாரோ ஒரு ‘எக்சையோ’, ‘ஒய்யையோ’ மன்னிப்பது சாத்தியமில்லை. இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பாத்திரமானவர் கள் நேரடியாக உணர்ந்து ஏற்பது, மன்னிப்புக் கோருவது என்பன இந்த அடிப்படையில் மன்னிப்பது இரண்டாவது கட்டமாகிறது. குற்றவாளிகள் தம் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிலையிலும், தட்டிக் கழிக்கும் நிலையிலும் மன்னிப்பு சாத்திய மில்லை.

4 .உண்மைகளை வெளிக்கொணர்வது, பாதிக்கப் பட்டவர்களின் கண்ணியத்தை நிலைநாட்டுவது, மன்னிப்பது என்பதற்கு அடுத்தபடியாக வருவது நீதி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த நீதி என்பது legal justice – சட்டப்பூர்வமான நீதியாக இருக்கலாம். சட்டபூர்வ மான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிற சாத்தியக் கூறுகள் இல்லாத சூழலில் அது ஒரு Social Justice – சமூக நீதி, Historical Justice – வரலாற்று நீதியாக இருத்தல் அவசியம். குற்றவாளிகளின் பெயர்களைச் சொல்லி வெளிப்படுத்துவது நீங்கள் இந்தப் பாலியல் வன்முறையை அல்லது படுகொலையைச் செய்துள்ளீர்கள் எனக் குறிப்பிட்டு அவர்கள் மீது வழக்கைத் தொடர்ந்து, அதனுடைய ‘லாஜிகல் எண்டு’க்குக் கொண்டு சென்று தண்டனை வாங்கிக் கொடுக்கிற Legal Justice-ஐ நோக்கிக் கொண்டு செல்கிற பணி சில வேளைகளில் பகை மறப்பு ஆணையத்தின் எல்லைக்குள் வராமல் இருக்கலாம். எடுத்துக் காட்டாக இந்தியாவில் நியமிக்கப்பட்ட லிபரான் கமிஷன் பாபர் மசூதியை இடித்த 68 பேரை அது அடையாளம் காட்டியது. நடவடிக்கை எடுக்க அது பரிந்துரைக்க வில்லை. (இந்த கமிஷன் ஒரு பெரிய கேலிக்கூத்து என்பது வேறு விடயம்.) இப்படியான legal justice-ஐ நிலைநாட்டுவது Political set up-ன் பணி. குற்றத்தின் குரூரத் தன்மையை சமூகத்தின் கண்களுக்குக் கொண்டுவருவது முதலானவை இந்த Social Justice-ல் அடங்கும். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் என்பது மட்டுமின்றி இப்படியான நடவடிக்கை கள் யார் கண்ணிலும் படாமல் போய்விடாது என்று வருங்காலம் குறித்த அச்சமும் உருவாகும். இது legal justiceஆக உருப்பெறுவது என்பது எந்த அளவிற்குச் சமூகம் விழிப்பாக உள்ளது என்பதைப் பொறுத்தது. Historical Justice என்பதைப் பொருத்தமட்டில் இந்த உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிய வகையில் வரலாறு திருத்தப்படுவதில் அடங்கியுள்ளது.

இரண்டு அம்சங்கள் இங்கே வலியுறுத்தப்பட வேண்டியவையாக உள்ளன. அவை (i)  அத்துமீறல்கள் என்பன பொதுவாக அரசு மற்றும் அதன் இராணுவம் ஆகியவற்றின் மூலமாகவே பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றன என்ற போதிலும் பல சந்தர்ப்பங்களில் ‘Non-State Actors’ எனச் சொல்லப்படும் அரசல்லாத இராணுவ அமைப்புக்கள், ஆயுதப் போராட்டங்கள் ஆகியவற்றாலும் மேற்கொள்ளப் படுவதுண்டு. பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள அப்பாவி மக்கள் பலரும் இதன் மூலம் பாதிக்கப் படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் பாதிக்கப் பட்டவர்களாகவும், இந்த அத்துமீறல்களுக்குக் காரணமானவர்கள் பாதிப்புக்குக் காரணமானவர்கள் (perpetrators) என்பதாகவும் அணுகப்படுதல் பகை மறப்புச் செயற்பாடுகளில் அவசியம். (ii) Legal justice, Social Justice, Historical Justice ஆகியன பற்றிச் சொன்னேன். இதுகாறும் பாதிக்கப்பட்ட சமூகங்களே மோதலில் (conflicts)  தோல்வியடைந்த சமூகங் களாகவும் கருதப்படக் கூடிய நிலையில் இவை எல்லாவற்றிற்கும் மேலாக Political Justice – அரசியல் நீதி – அதாவது அரசியல் தீர்வு பகை மறப்பின் முதல் நிபந்தனையாகிறது. மோதலுக்குக் காரணமான அரசியல் காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு முழுமையான அரசியல் நீதி வழங்கும் போதே மன்னிப்புக்குரிய சூழல் உருவாகும். எதிர்கால அமைதிக்கும் அதுவே உத்தரவாதமாகும். இத்தகைய நிலை உருவாகும்போதுதான் பகைமறப்பு ஆணையத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். இல்லாது போனால் இதை எதற்காகச் செய்கிறார்கள் என்கிற அவநம்பிக்கை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உருவாகும். அது இந்த ஆணையத்தின் நோக்கத்தை சிதறடித்துவிடும். இனி இந்தப் பகை மறப்புச் செயற்பாடுகள் எதிர்கொண்ட சிக்கல்களைப் பார்ப்போம். ஒன்றிரண்டை மட்டும் பார்ப்போம்.

பகைமறப்பு ஆணையத்திற்கும் மனித உரிமைகள் தொடர்பான ஆணையங்களுக்கும் சில வித்தியாசங் கள் உண்டு. பகைமறப்பு ஆணையங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை வரையறுத்துக் கொண்டு அதில் நடைபெற்ற அத்துமீறல்களை ஆய்வு செய்யும். எடுத்துக்காட்டாகத் தென் ஆப்ரிக்காவில் 1960 முதல் 1994 வரை எனக் காலவரையறை செய்திருந்தார்கள். அந்தக் காலகட்டத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட Gross Human Rights Violations – பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தக் காலகட்டம் வேறுபடும். ஆனால், Human Rights Commission-ன் செயல்பாடு ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு தொடர்பானதாகவும், அதிலுள்ள மனித உரிமை மீறலை ஆய்வதாகவும் உள்ளது.

அடுத்து எப்போதும் பகை மறப்பு ஆணையம் என்பது அரசாங்க அங்கீகாரத்துடன் செயல்படுவதாக இருக்கும். ஆனால் மனித உரிமைச் செயற்பாடுகள் என்பன பொதுவாக அரசாங்கத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராகவே அமையும். எனவே இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருக்காது. உண்மையை அறிவதற்குத் தேவையான ‘ரெக்கார்ட்ஸ்’ (ஆவணங்கள்) முதலியன கிடைக்காமலிருக்க வாய்ப்பு அதிகம்.

ஆக Truth and Reconciliation Commissionகளின் வெற்றியில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அப்படி இல்லாதபோது அது வெற்றியடைவதில்லை. ஆனால் நடைமுறை என்னவாக இருந்துள்ளது என்றால் அரசாங்க ஒத்துழைப்பு – தென்னாப்பிரிக்கா போன்ற பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த நாடுகளிலும் கூட முழுமையாகக் கிட்டியதில்லை. பாதிப்புக்குக் காரணமானவர்களே வெற்றி பெற்று அமர்ந்துள்ள சமூகங்களில் சொல்ல வேண்டிய தில்லை. பெரிய அளவில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக இருக்கும் அரசு நிறுவனங்கள் எனில் அவை போலீஸ், மிலிரறி, இன்ரலிஜன்ஸ் ஆகியவைதான். எனவே உண்மைகளை வெளிக் கொணர்வதில் இந்த மூன்று நிறுவனங்களில் ஒத்துழைப்பு அவசியமாகிறது. ஆனால் கடந்த காலங்களில், தென் ஆப்ரிகா உட்பட, குறிப்பாக தென் கொரியாவில் இந்த ஒத்துழைப்பு பூரணமாகக் கிட்டியதில்லை.

தென் கொரியாவில் 1945 தொடங்கி மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை ஆய்வதற்காக ஆணையம் நியமிக்கப்பட்டது. அதனுடைய ‘செயர்மன்’ ஆக நியமிக்கப்பட்ட கிம் டோங் சூன் ஒரு சோஷியாலஜி பேராசிரியர் உலகறிந்த ஒரு மனித உரிமைப் போராளி. மூன்றாண்டு கால கெடு ஆணையத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்கிடையில் அரசாங்கம் மாறிவிடுகிறது. புதிதாக வந்த அரசிற்கு இந்த பகை மறப்பு ஆணையத்தில் அக்கறையில்லை. 1945 முதல் நடைபெற்றுள்ள உரிமை மீறல்க¬ளை விசாரிக்க 3 ஆண்டுகள் போதாது, மேலும் 2 ஆண்டுகள் தேவை என ஆணையம் கேட்டிருந்ததும் புதிய அரசோ காலகெடு முடிந்துவிட்டு எனச் சொல்லி ‘செயர்மனை’ நீக்கிவிட்டு அவர்களுக்குத் தலையாட்டக்கூடிய புதிய நபர் ஒருவரை நியமித்து இரண்டு மாத காலகெடு மட்டும் நீடிக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. பல முக்கிய மனித உரிமை மீறல்களையும் உண்மை களையும் மூடி மறைக்கக்கூடிய கமிஷனாக அது மாற்றப்பட்டது.

இது குறித்து அப்பேராசிரியர் விரிவாக எழுதியுள்ளார். உண்மைகளை மறைப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது இந்த அனுபவத்திலிருந்து நமக்கு விளங்குகிறது. அரசு, போலீஸ், மிலிறரி, இன்ரலிஜன்ஸ் முதலியன உண்மைகளை மறைக்க முயலும்போது, உள் நாட்டிலுள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இது போன்ற உரையாடலுக்கான அமைப்புகள், பீஸ் இனிஷியேற்றிவ்ஸ் (Peace initiatives) முதலானவற்றின் பங்கு முக்கியமாகிறது. அவை வெளியிலிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். தென் ஆப்ரிக்காவில் புதிய ஆட்சி அமைந்தபோதும் பழைய அதிகாரிகள் தொடர்ந்ததனால் கொமிசனுக்குப் போதிய ஒத்துழைப்பு கிட்டவில்லை. பகை மறப்பு ஆணைய விசாரணை, வாக்குமூலம் பதிவு செய்தல் எல்லாம் மூடிய அறைக்குள்ளேயே நடைபெற்றன. பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வெளியார்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இச்சமயத்தில் 23 மனித உரிமை அமைப்புகள் ஒன்றாக இணைந்து நீதிமன்றத்தை அணுகிய பின்னரே திறந்த விசாரணை தொடங்கியது.

திறந்த விசாரணையிலும் சில சிக்கல்கள் வரலாம். ஒரு சிலர் தமது வாக்குமூலங்களை வெளிப்படை யாகப் பதிவு செய்யத் தயங்கலாம். அவர்களுக்குத் தேவையானால் விலக்கு அளிக்கலாம். பிற விசாரணைகள் அனைத்தும் வெளிப்படையாக நடந்து அவை அங்குள்ள நேஷனல் புராக்காஸ்ரிங் கார்ப்பரேஷனால் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பவும் பட்டன. நோர்வேயின் நிதி உதவியுடன் கிட்டத்தட்ட முழு விசாரணையுமே வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. ஆக, பகைமறப்பு ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டபோதும் வெளியிலிருந்து அதைக் கண்காணித்து அரசுத் தடைகளை எதிர்த்து நிற்கும் மனித உரிமை மற்றும் ஜனநாயக அமைப்புகளின் பணி இன்றியமையாததாகிறது. அத்தகைய வாய்ப்பில்லாத சூழல்களில் பகைமறப்புச் செயற்பாடுகள் கேலிக்குரியதாகிவிடும் வாய்ப்பை மறுக்க இயலாது.

தென் கொரிய பகை மறப்பு ஆணையத் தலைவர் உண்மையை வெளிக் கொணர்வது, ஏற்கனவே நிலவும் கதையாடலுக்கு மாற்றான ஒரு எதிர்க் கதையாடல் – Counter Narrative  ஒன்றை பொதுப் புலத்தில் மிதக்க விடுவது மட்டுமே பகை மறப்புச் செயலில் பிரதானமானது எனக் கூறியதை முன்பே குறிப்பிட்டேன். இழப்பீடு கொடுப்பது முக்கிய மில்லை என அவர் கருதினார்.

ஆனால், வேறு பலர் எப்படிக் கருதுகிறார்கள் என்றால் இழப்பீடு கொடுப்பது என்பது வெறுமனே இழப்பீடு கொடுப்பதற்கான விடயம் மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெரிய அளவில் இழப்பீடு அளிக்கப்பட்டு விடுவதுமில்லை. தென் ஆப்ரிக்காவில் இன ஒதுக்கலால் பாதிக்கப் பட்டவர்களில் உயிரோடு இருந்தவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வெறும் 23 ஆயிரம் பேருக்கு மட்டுமே, ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ராண்ட் (அந்த நாட்டு நாணயம்) அளிக்கப்பட்டது. டொலரில் பார்த்தீர்களானால் வெறும் 4000 டொலர்.

அதுதான் சாத்தியமானது என்றாலும் இந்த இழப்பீட்டை வெறும் நிதி உதவி என்பதாக அல்லாமல், அவர்களுக்கு இழைக்கப்பட்ட துன்பத்தை அங்கீகரிப்பதாகவும், அவர்களுடைய கண்ணியத்தை மீட்டுத்தரும் நடவடிக்கையாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் செயல்பாடாகவும் இதைக் கருத வேண்டும்.

தென் ஆப்ரிக்க கொமிசனில் மூன்று கமிற்றிகள் அமைக்கப்பட்டன. ஒன்று உண்மைகளை வெளிக் கொணர்வதற்கான கமிற்றி. பாதிக்கப்பட்டவர்கள் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று, அவர்களை அடையாளம் கண்டும், அல்லது பாதிக்கப் பட்டவர்கள் என அறிவித்துக் கொண்டவர்களை அழைத்தும் அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது அதன் பணி. அதேபோல யார் பாதிப்பிற்குக் காரணமாக உள்ளவர்களோ அவர்கள் தாமே முன்வந்து தமது ‘நியாயங்களை’ச் சொல்லலாம். மன்னிப்புக் கோரலாம். அல்லது கொமிசனே அவர்களை அழைத்தும் கருத்துக் கேட்கலாம். இரண்டாவது கமிற்றி இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக் கமிற்றி. மூன்றாவது ஆம்னஸ்ரி கமிற்றி. மன்னிப்பு வழங்குவது. மன்னிப்பு வழங்க நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டது. அதாவது குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக (political motive) மேற்கொள்ளப் பட்டவை, சாதாரண கிரிமினல் குற்றங்கள் எனப் பிரிக்கப்பட்டு அரசியல் காரணங்களுக்காக மேற் கொள்ளப்பட்டவைக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. எனவே தான் செய்தது அரசியல் காரணங்களுக் காகத்தான் என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிறுவ வேண்டும். 5392 பேர்களுக்கு மன்னிப்பு மறுக்கப்பட்டது. மன்னிப்பு கோரி வந்த வேண்டு கோள்களில் 849 பேர்களுக்கு மட்டுமே மன்னிப்பு வழங்கப்பட்டது.

இந்தப் பிரச்சினையை நீண்டகாலம் இழுத்துச் செல்ல வேண்டாம் எனக் கருதிய முந்தைய குடியரசுத் தலைவர் தாகோ எம்பெகி 2009ல் ஆம்னஸ்ரி கொடுக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு எவ்வளவு பேருக்கு ஆம்னஸ்ரி வழங்குவது எனத் திட்டமிட்டபோது மீண்டும் மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகின. உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. மன்னிப்பு வழங்க குடியரசுத் தலைவருக்கு  அதிகாரமுண்டு. ஆனால், அரசியல் குற்றங்கள் என நிரூபிக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்த்து வாதிட அனுமதிக்கப்பட வேண்டும் எனச் சென்ற பிப்ரவரியில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு வழங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தென்னாப்ரிகா மட்டுமின்றி, இழப்பீடு கொடுக்க ஒத்துக்கொண்ட பிற நாடுகளிலும் வழங்கும்போது அது வழங்கப் படுவதற்கு ஏகப்பட்ட காலதாமதமாகியது. ஆனால் மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த இராணுவ அதிகாரிகள், போலீஸ்காரர்கள், அரசியல் வாதிகள் எந்தப் பிரச்சினையும் இன்றி உடனடியாக மன்னிப்பு அளிக்கப்பட்டு வெளியே செல்லும் நிலை இந்த ஆணையங்களின் நோக்கத்தைக் கேலிக்குரிய தாக்கியது.

பகை மறப்புச் செயல்பாடுகள் தொடர்பாக மேலும் பல கேள்விகளும் உண்டு. ஆணையத்தின் முன்பாக மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்கள் தமது கொடுமையான அனுபவங்களை நினைவு கூர்வது அவர்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடியதாக இருக்குமா, இல்லை மீண்டும் ஒரு முறை அந்தத் துன்ப நிகழ்வை மறுமுறை வாழ்கிற கொடுமையாக அமையுமா? பகையை மறந்து மன்னிக்க அது உதவுமா, இல்லை மீண்டும் ஒருமுறை பகையை உறுதி செய்வதற்கு இட்டுச் செல்லுமா? இதற்கு ஒரு பொதுவான பதிலைச் சொல்லிவிட இயலாது. அது பாதிக்கப்பட்டவர்களின் உளநிலையைப் பொருத்தது. தென் ஆப்ரிக்க ஆணையம் முன் வந்த வழக்குகளில் ஒன்றைச் சொல்கிறேன். டீ கொக் என்றொரு வெள்ளை அதிகாரி. மூன்று கறுப்பின காவலர்களை ஒரு வானில் ஏற்றி ஏதோ ஒரு நடவடிக்கைகக்காக அனுப்புகிறான். அந்த வானில் குண்டுகள் ஏற்கனவே வைக்கப்பட்டு போகிற வழியில் வெடித்து அம் மூவரும் கொல்லப்படுகின்றனர். திட்டமிட்ட கொலை. ‘மதர்வெல் வெடிகுண்டு’ வழக்கு என்று இதற்கு பெயர். ரூத் அன்ட் ரிகன்சிலியேஷன் கமிஷன் முன் அந்த அதிகாரி தன் குற்றத்தை ஏற்றுக் கொள்கிறான். அந்த மூன்று விதவைகளுக்கும் அவனுக்கும் இடையே நீண்ட உரையாடல் நடக்கிறது. இறுதியில் அந்தப் பெண்கள் அவனை மன்னித்துச் செல்கின்றனர்.

ஆனால் இன்னொரு எடுத்துக்காட்டு வேறு விதமாக அமைகிறது. தாண்டிசேஷி என்கிற பெண்மணி கொடுமையான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவள். குற்றத்தைப் புரிந்தவன் அதை ஒத்துக்கொள்ளத் தயாராயில்லை. அவன் எந்தத் தண்டனையும் இல்லாமல் தப்பிச் செல்கிறான். பிளா£ட்ஜீ என்ற பெண்மணியின் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். அதை அவள் விவரித்து வரும்போதே தேம்பி அழுகிறான். உடைந்து வீழ்கிறான். மீண்டும் ஒருமுறை அந்த அனுபவத்தை வாழ்ந்த கொடுமையை அவள் உணர்கிறாள். இவை எல்லாம் பல அறம் சார்ந்த கேள்விகளை இம் முயற்சிகளின்பால் எழுப்புகின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் ரொம்பவும் சிக்கலானது. மிக நெருக்கமானவர்களை மிகக் குரூரமாக இழந்த அனுபவங்களைப் பெற்றவர்கள் அவர்கள். பலருக்கு வாழ்க்கை அந்த நிகழ்வோடு உறைந்துவிடுகிறது. 1984ல் டெல்லியில் நிகழ்த்தப் பட்ட சீக்கியப் படுகொலை, 2002ல் குஜராத்தில் செய்யப்பட்ட முஸ்லிம் இன அழிப்பு ஆகியவை குறித்த மிக அற்புதமான ஆய்வுகள் வந்துள்ளன. வீணாதாஸ், தானிகா சர்கார், டாக்டர் பாலகோபால் போன்றோர் நிறைய எழுதியுள்ளனர். செல்வி திருச்சந்திரன் போன்றோர் இங்கே நடந்த இனப் படுகொலை குறித்தும் இத்தகைய ஆய்வுகளைச் செய்துள்ளனர்.

அந்தச் சோக நிகழ்வுடன் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ரொம்பப் பரிதாபமானவர்கள். மீண்டும் வாழ்வியக்கத்தில் இணைந்து கொள்ள இயலாமல் அவர்கள் தற்கொலை செய்கின்றனர் அல்லது மன பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

வீணாதாஸ் குறிப்பிடும் சீக்கிய மூதாட்டி ஒருவரின் கதை என்னை ரொம்பவும் பாதித்த ஒன்று.  கண்முன் கணவரையும் இரண்டு மகன்களையும் கொலைவெறிக்குப் பறிகொடுத்தவர் அவர். அவரையும் கடைசி மகளையும் மட்டும் விட்டுவிட்டுச் செல்கிறார்கள் கொலையாளிகள். என்.ஜி.ஓ.க்கள் அல்லது பெரிய மனிதர்கள், கட்சிகள் அளிக்கும் இலவச உதவிகள் எதையும் பெறுவதில் அந்த மூதாட்டி ஆர்வம் காட்டுவதில்லை. எப்போதும் தன் மகளை திட்டிக்கொண்டே இருப்பார் அவர். எந்தக் காரணமும் இல்லாமல்  திட்டுவார். ஏதோ அவளது சகோதரர் இருவர் கொல்லப் பட்டதற்கும் அவளே காரணம் என்பது போலக் கரித்துக் கொட்டுவார். இறுதியாக அரசு இழப்பீடு சில லட்ச ரூபாய்கள் அளிக்கப்படுகிறது. அடுத்த நாள் வீணா தாசைச் சந்தித்த அப் பெண்மணி தனது உறவினர்கள் யாரையும் நம்பவில்லை எனவும், தனது மகளை வீணாதாஸ்தான் காப்பாற்ற வேண்டும், இந்த இழப்பீட்டுத் தொகையை அதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகிறார். கவலைப்படாதீர்கள் என வீணா  அவருக்கு ஆறுதல் சொல்வார். அடுத்த நாள் அந்தப் பெண்மணி தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொள்கிறாள்.

பாதிக்கப்பட்டவர்களின் மன நிலையும் பிரச்சினைகளும் ரொம்பச் சிக்கலானவை. நீண்ட நாள் அகதி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் திரும்பிப் போகும் வாய்ப்புக் கிடைத்தால் சந்திக்கும் பிரச்சினைகளும் சிக்கலானவை. ஒரு குடும்பம் இந்தப் பதினைந்து அல்லது இருபதாண்டுகளில் மூன்று அல்லது ஐந்து குடும்பங்கள் ஆகியிருக்கும். திரும்பிப் போனால் அவர்களுக்கு இருப்பதோ ஒரு வீடு மட்டும்.

இவை எல்லாம் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டிய விசயங்கள். பாதிக்கப்பட்டவர்களை வரையறுப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது சந்ததி களையும் மட்டும் நாம் அப்படிப் பார்க்க முடியாது. ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் விளைவாக அந்தச் சமூகமே அஞ்சி இடம் பெயர்ந்திருக்கலாம். அந்தச் சமூகமே சந்தேகத்திற்குரியதாகக் கட்டமைக்கப்பட்டதால் அவர்கள் சந்தித்த துன்பங்கள், ஒதுக்கல்கள் ஆகியவற்றால் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டிருக்கலாம். இப்படி  எத்தனையோ. எனவே அந்தச் சமூகமே பாதிக்கப்பட்ட சமூகமாகக் கருதப்பட வேண்டிய அவசியமுள்ளது.

இறுதியாக நான் சொல்ல விரும்புவது: Truth and Reconciliation  என்பது ஒவ்வொரு நாட்டின் தனித்துவங்களுக்கு ஏற்ப செய்யப்படுவது அவசியம். பிரச்சினையின் தன்மைகள், அதன் அடிப்படையில் எத்தகைய தீர்வுகள் அங்கே சாத்தியம், எவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது, வேர்களை எங்கே தேடுவது, எந்தக் காலக்கட்டத்திலிருந்து தொடங்குவது, எத்தகைய அரசியல் தீர்வுகள் அமைய வேண்டும் என்றெல்லாம் ஒவ்வோர் நாட்டுக்கும் உரிய வகையில் இது மேற்கொள்ளப்பட வேண்டும். வெறும் பகை மறப்பு ஆணையத்துடன் பகைகள் முற்றாகத் தீர்ந்து விடுவதில்லை. எல்லாவற்றிற்குமான தீர்வாகவும் இதை நாம் சொல்லவில்லை. சமூகங்களுக்கிடையே ஒரு பகையைத் தக்க வைப்பதன் மூலமே தன் இருப்பைச் சாத்தியப் படுத்திக் கொள்ளும் அரசு ஒன்றின் முன் எதுவும் சாத்தியமுமில்லை.

நான் திரும்பத் திரும்பச் சொல்வது இதுதான். அரசும் ஊடகங்களும் ஒரு கதையாடலை (Narrative) முன் வைக்கும்போது ஒரு எதிர்க் கதையாடலை (Counter Narrative) பொதுப்புலத்தில் மிதக்கவிடுதல் நமக்கு அவசியமாகிறது. அதன்மூலம் ஒரு சிறிய அசைவை ஏற்படுத்தவும் சமூகங்களுக்கிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்தவும் சாத்தியமாகலாம். சமூகங்கள் மொழியால் பிரிக்கப்பட்டுள்ள சூழல்களில், ஒவ்வொரு மொழி ஊடகங்களும் Vernacular Media – அவர்கள் தரப்புச் செய்திகளை மட்டுமே வெளியிட்டு தத்தம் தரப்பில் மாற்று உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டுள்ள சூழலில் இது மேலதிக அவசியமாகிறது. அடுத்து குற்றம் செய்தவர்கள் அதை ஏற்றுச் கொள்ளும் மனநிலை கொண்டிருப்பது அவசியம். இரு தரப்பிலும் உள்ள ஜனநாயகவாதிகள், Secularists, இடதுசாரிகள் ஆகியோரின் பங்கு இத்தகைய முயற்சிகளில் முக்கியமாகிறது. இறுதியாக இப்பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வு குறித்த ஒரு விரிவான விவாதமும், பன்னாட்டு அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கண்ணியம்மிக்க அரசியல் தீர்வுக்கு இணையான முக்கியத்துவமும் அளிக்கப்படுதல் அவசியம்.

பெரிய அளவில் மனித உரிமை மீறல்களுக்குரிய குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை என்பதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. இவை எல்லாம் இணைந்ததுதான் பகை மறப்பு. இது எந்த அளவிற்கு இங்கே சாத்தியம், எந்த அளவிற்கு இங்கே தேவை என்பதை எல்லாம் நாம் யோசிப்பதற்கான ஒரு முன் குறிப்பாகவே என் உரையை நான் இங்கே முன்வைத்துள்ளேன். நன்றி.

சிராஜ்

இங்கே பகைமறப்பு குறித்துப் பேசப்பட்டபோது எனக்கு ராஜனி திரணகமவின் எழுத்துக்கள்தான் ஞாபகம் வந்தன. இனி வரப்போகிற நிலைமை யினுடைய ஒரு ஆழமான பார்வையை அவர் கொண்டிருந்தார். பின் வந்த நாட்கள் அதனைத்தான் அறுவடை செய்தன. ராஜனியின் 20ஆம் நினைவு தினம் அண்மையில் நடத்தப்பட்டது. அதன் ஒகனைசர் சுமதி கூட இங்கே வந்துள்ளார். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற அனைவரும் ஒருங்கிணைந்து அங்கு வந்திருந்தனர். கருத்துக்களைப் பரிமாறவும் உரையாடவுமான ஒரு தளமாகவும் அது அமைந்தது.

பேராசிரியர் மார்க்ஸ் குறிப்பிட்டது போல மற்றமைகளை அவற்றின் வித்தியாசங்களுடன் புரிந்து கொள்வது முக்கியம். இந்தத் தளத்திலிருந்து நமது உரையாடலை நகர்த்தலாம்.

மு. பொன்னம்பலம்

பேராசிரியர் மார்க்ஸ் கூறியதைச் செவிமடுத்தேன். அவர் மார்க்சிய வழியில் வந்துபின்னர் பின் நவீனத்துவம், தலித்தியம் என்று போனவர் எனவும் அறிந்துள்ளேன். அப்படியானவர் ஏன் இதைப் பேசுகிறார் என்கிற கேள்வி எழுகிறது.

நான் மார்க்சிய கருத்துக்களில் ஈடுபாடு உடையவன். மார்க்சியம் இன்று வரை எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்து. கருத்தியல் ரீதியான துறை போகிற போராளிகள் இருக்கிற வரைக்கும் இந்தப் பகை மறத்தல் என்பதெல்லாம் தேவையில்லை. இனங்களுக்கான உரிமையைக் கொடுக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அமெரிக்கக் காட்டிக் கொடுப்பாளர்களால் இறந்துபோன சே ஒரு சிறிய தவறிழைத்தான். இல்லாவிட்டால் இன்று லத்தீன் அமெரிக்காவே அவன் கையிலிருக்கும். இந்தப் பகை மறத்தல், தலித்தியம் என்பதெல்லாம் சிரிப்புக்குரியவை. இதற்கெல்லாம் மார்க்சே போதுமானவர். மார்க்சிய ரீதியாகவே தலித்தியம் பேசலாம். துப்பாக்கிச் சன்னத்திலிருந்து பிறப்பதுதான் அதிகாரம். மற்றபடி பகை மறத்தல் என்பதெல்லாம் ஒரு பூசிமெழுகல்.

என்னுடைய நாவல் பற்றி இவர் விமர்சனம் என்கிற பெயரில் ஏகப்பட்ட குழறுபடிகள் செய்தவர். நான் அது பற்றி அளித்த பதில்களை எல்லாம் கணக்கில் எடுக்காமல் உங்கள் புத்தகத்திலும் அதை வெளியிட்டீர்கள். ஆகவே உங்களுடைய மார்க்சியத் திலும் எனக்குச் சந்தேகம். இயங்கியலிலும் எனக்குச் சந்தேகம்.
சிவகுருநாதன்

பேராசிரியர் அவர்கள் ‘ரீகன்சிலியேஷன்’ என்ற பதத்திற்கு ‘பகை மறப்பு’ என்று பாவித்தார். நாங்கள் இங்கு ‘மீளிணக்கம்’ என்ற பதத்தைத்தான் பாவிக்கின்றோம். நீங்கள் தென்னாப்பிரிக்காவின் பல உதாரணங்களை எடுத்துக் கூறினீர்கள். தென்னாப் பிரிக்காவில் நான் அறிந்தவகையில் ஒரு பெரும் பான்மை சமூகம் ஒரு வெள்ளையச் சிறுபான்மைச் சமூகத்தால் நீண்டகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட பின்பு அந்தப் பெரும்பான்மை கறுப்பர் இனம் ஆட்சிக்கு வந்தது. அதன்பின்புதான் இந்த மீளிணக்க ஆணையம் உருவாக்கப்பட்டது.

ஆனால், இலங்கையை நாங்கள் எடுத்துப் பார்த்தால் துரதிஸ்ரவிதமான விசயம் எனனென்றால் இலங்கையின் சனத்தொகை வீதத்தில் காணப் படுகின்ற முரண்நிலை உங்கள் எல்லோருக்கும் தெரியும். பெரும்பான்மை இனம் 74 பேர் இருக்கக் கூடிய சூழலில் வடக்குக்கிழக்கு தமிழர்கள் 13 பேர் மலையகம் 5 பேர், முஸ்லிம் மக்கள் 7 பேர் ஏனைய மக்கள் ஒரு வீதம். இப்படித்தான் எங்களுடைய சனத்தொகை விகிதாசாரம் அமைகிறது. இப்படியான ஒரு சூழ்நிலையில் சிறுபான்மை இனத்தினுடைய உரிமைகளுக்காகப் போராடிய போராளிகள், தங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப் பவர்களை எட்டப்பர்களாக துரோகிகளாக அடையாளம் காண முற்பட்டனர்.

அதேநேரத்தில் ஒரு சிறுபான்மை இனத்தை அடக்கி ஒடுக்கி நசுக்கிய பின்பு ஆட்சியாளர்கள் தேச கோசத்தைத்தான் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பற்றிப் பேசுகின்ற பொழுது, மனித உரிமைகளைப் பற்றிப் பேசுகின்ற போது, மனித நேயங்களைப் பற்றிப் பேசுகின்ற போது அவர்கள் தேசத் துரோகி களாகத்தான் கருதப்படுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல பெரும்பான்மை இனத் தினுடைய பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகை களும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இப்படியான ஒரு நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதனை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கேட்கப்படும் போது நாங்கள் சர்வதேசத்தின் கருத்துருக்களை உதாசீனம் செய்யவே இருக்கிறோம் என்று எங்களுடைய ஆட்சித் தலைவரும் அவருடைய சகபாடிகளும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் இங்கு இந்த மீளிணக்கச் செயற்பாட்டினை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதுதான் என்னுடைய கேள்வி. தென்னாப்பிரிக்காவில் உங்களுக்குத் தெரியும் ‘அரசியல்’ குற்றங்களைச் செய்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் பேசியதை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன என்றீர்கள். அவ்வாறான ஒரு நிலை இலங்கையில் சாத்தியமாகுமா, முடியுமா, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆய்வாளர் ஆகிய நீங்கள் உங்களுடைய ஆற்றல் திறமைகளுக்கமைவாக எப்படியான ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குவீர்கள்?

சுமதி சிவமோகன்

இன்றைக்கு எங்கட சமூகங்கள் எதிர் நோக்கி யிருக்கிற சவால்களின் பேரில் ஒரு சிறு குறிப்பைக் கூறலாம் என்று நினைக்கிறேன். தென்னாப்பிரிக்கா வில் ரூத் அன் ரி கென்சிலியேசன் கொமிசன் வைத்த பொழுது ஏற்பட்ட நிலை பற்றி, இங்கு குறிப்பிடப் பட்டதற்கு மாறாக ஒரு கருத்தைச் சொல்கிறேன். நெல்சன் மண்டேலா வெள்ளையர்களுக்குக் கொடுத்த சலுகை அது என்றும் ஒரு கருத்துள்ளது. அதாவது வெள்ளையர்களுக்கிருந்த சொத்துக்களை தென்னாப் பிரிக்காவில் நிலைநிறுத்தி வைத்திருப்பதற்காக, தந்திரோபாயகமாக இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதாக கொள்ளப்பட்டது. அந்த வகையில் முழுக்க நீதி கிடைத்த நாடு என்று அதைச் சொல்ல முடியாது.

எங்களது நாட்டை எடுத்துப் பார்த்தால் போரை விடவும், எப்படி அது முடிந்தது என்பதையும் விட, சிறுபான்மையினர் என்ற வகையில் உரிமைகள் குறைவு என்று சொல்லலாம். முழுமையாக இல்லை என்று சொல்ல இயலாது. சிறுபான்மையினருக் குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. சிறுபான்மை யினர்களில் கூட சலுகைகள் கூடிய, குறைந்த அளவுகளில் பெறுகிறவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு அந்தக் கப்பிரல் மொடல் ஒப் ரீ கொன்சிலியேசன், தென்ஆப்பிரிக்கா, சிலி, அர்ஜென்டினா, அந்த மாதிரி இல்லாமல், ஒரு புரிந்துணர்வின் மூலமான உணர்வைக் கட்டி யெழுப்பி, இந்த மாதிரியான இடைவெளிகளைப் பாவித்து, பிறகு நாங்கள் எப்படி வித்தியாசமான அதிகாரங்களைக் கேள்வி கேட்கலாம் என்று பார்க்கலாமேயழிய அரசாங்கம் எங்களைக் கொல்லப் போகிறது என்று மேசைக்குக் கீழ் ஒழிந்து கொண்டு இருக்க முடியாது. அப்படிப் பார்க்கையில் சமூகங்களுக்கிடையில் என்ன பிரச்சினை இருக்கு என்பது முக்கியமான விசயம். இன்றைக்கு தமிழ் மக்களுக்கெதிராக பாரிய குற்றங்களை இழைத்த எல்ரிரீஈ இல்லை. ஆக கேள்விகள் கேட்பதற்கு அந்த ஓகனைசேசன் இல்லை. அந்தத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த என்று கூண்டில் போடுகிற ஓகனைசேசன் இன்று இல்லை. முஸ்லிம்களுக்கு பெரிய தீவிர குற்றங்களை இழைத்த எல்ரிரிஈ இல்லை. தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிராக இழைக்கிற அந்தத் தீங்குகள், நாங்கள் அரசாங்கம் என்று சொல்லாமல் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என்றுதான் அதை எடுத்துக் கொள்கிறோம். அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான அரசியல் உரையாடல் நடக்கலாம், சக்தியைக் கட்டியெழுப்பலாம் என்று பார்க்க வேண்டும். திரும்பத் திரும்ப இதனை கதைத்துக் கொண்டிருந்தோமென்றால் சிங்கள, தமிழ், முஸ்லிம் அடையாளத்துக்குள் அம்புட்டுப் போய் விடுவோம் என்று தான் நான் நினைக்கிறேன்.

அத்துல் வகாப்

இந்த உரையாடலை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. பேராசிரியர் மார்க்ஸ், சிவகுருநாதன், சுமதி போன்றோர் கூறியது போன்று, இங்கு தமிழ் முஸ்லிம் உறவு எப்படி யிருந்தது. எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி ஆகப்போகிறது என்பதெல்லாவற்றையும் நாம் உரையாடியாக வேண்டும். தமிழ் முஸ்லிம் முரண்பாடு இருக்கவேயில்லை என்றுதான் நான் சொல்லுவேன். இது கிழக்கு வாழ்நிலையைப் பொறுத்து நான் சொல்வது, யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களால் சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தப் பிளவுகள் இயக்கங்களால் ஏற்படுத்தப்பட்டது. அது பாரியளவில் இல்லை என்று சொல்லலாம். சிலரது நோக்கங்களுக்காக தமது பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டது என்று சொல்லலாம். அதனைத் திரும்பத்திரும்பப் பேசி அல்லது அதனை உரையாடப் போனால் பெரியளவானதாக அமையும். ஆனால் இந்த உரையாடலில் பேராசிரியர் மார்க்ஸ் சொன்னதைப் போல இங்குள்ள தனித்துவங்களின் அடிப்படையில் நாம் அணுகவேண்டும். இந்த நிலையில் இலங்கை யின் விடயம் முக்கியமானதாகும். விடுதலைப்புலிகள் இந்தப் போராட்டத்தை என்ன நோக்கத்தில் ஆரம்பித்தார்களோ அந்தப் போராட்டத்தையே கொச்சைப்படுத்தியதாக முடிந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ரீ கொன்சிலியேசன், பகை மறப்பு அல்லது பகை மறுப்பு என்ற வகையில் அதனைச் சரியாக இனங்கண்டு கலந்துரையாடலைக் கொண்டு செல்வது சிறப்பானதாக அமையும் என நான் நினைக்கிறேன்.

மகாதேவா

மார்க்ஸ் அவர்கள் பல்வேறு விடயங்கள் குறித்து உரையாற்றியிருக்கிறார். அதில் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தேசியம் என்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன. சுமதி பேசும் போது குறிப்பிட்ட விடயம், ஒரு இயக்கம் மீது அது செய்த பிழைகளை மட்டும் கூறினார். ஏன் அது ஏற்படுத்தப்பட்டது. எல்லோரும் சேர்ந்து பிழை விட்டமைகள் குறித்து குறிப்பிடவில்லை. இது இயக்கத்திற்காகப் பேசவில்லை. இந்த இயக்கம் இல்லாமல் போனது ஒரு வகையில் தமிழ் மக்களுக்கு நல்லது. கடந்த 60 வருடங்களாக இருக்கிற தமிழ் தேசியத்தில் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டனர். பின்னர் அவர்களுடைய தேசியத் தைப் பார்த்துச் சென்றுவிட்டார்கள். ஒவ்வொருவரும் தமிழ் தேசியம் பேசும்போது தங்களுக்கான நலன்களைப் பேண பாராளுமன்றம் செல்கையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து சென்றுவிட்டார்கள். முஸ்லிம் தமிழ் உறவு களில் பிரச்சினைகள் இல்லை என்று சொல்வது உண்மையில்லை.

சிங்கள மக்களுடனும் அன்னியோன்னியமாக இருக்கிறோம் ஆனால் அரசியல் என்று வரும்பொழுது முரண்பாடு ஏற்படுகிறது. அந்தவகையில் தமிழர்கள் தமிழ் தேசியம் என்ற விடயத்தினை அகற்ற முடியாது. சிங்களவர்கள் விசாலமான அவர்களுடைய தேசியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் நாம் அதனை விட்டுவிட முடியாது. அது இருந்துகொண்டே இருக்கும்.

அந்தவகையில் மார்க்ஸ் சொன்னது போல நாம் ஒரு பொதுவான சிந்தனைக்குச் செல்ல வேண்டும். அதற்கு சிங்களவர்கள் தயாராக இல்லை. சுமதி சொன்னது போன்று தமிழர்கள் சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து கொண்டு செயற்படுவதில் பிரயோசனம் இல்லை. ரஜனி திராணகம பல்வேறு வகையிலும் பாடுபட்ட ஒருவர். அவர் ஒரு சிறந்த புத்திஜீவி. ஆனால் அவர் கூட ஒரு கட்சி சார்ந்து இருந்ததால் தான் கொல்லப்பட்டார். அப்படித்தான் அவருடைய புத்தகத்திலிருந்து நான் அறிந்து வைத்திருக்கிறேன்.
மார்க்ஸ் சொல்வதில் தவறில்லை. இப்போது நாம் எல்லா விடயங்களில் எல்லோராலும் கைவிடப் பட்ட நிலையில் இருக்கிறோம். நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வென்றெடுக்க வேண்டும். ஆனாலும், எங்களுடைய தமிழ் தேசியத்தை விட்டுக் கொடுக்க முடியாது.

பாலச்சந்திரன்

மார்க்ஸ் சொன்னது சரி என்று சொல்லலாம். ஆனால் யாழ்ப்பாணத்தினுடைய நிலை எப்படி யிருந்ததென்றால் தமக்கெதிராகக் கருத்துச் சொல் பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது. அதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும் அவர் கொல்லப் பட்டதற்கான காரணம் அவர் குறை சொன்னதுதான். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தனையோ கொமிசன்கள் எத்தனையோ விசாரணைகள் நடந்திருக்கிறது. ஆனால் புரிந்துணர்வு என்று வரும் பொழுது, எத்தனை பாதிக்கப்பட்டவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் கேள்வி.

பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது நிலைமை வேறு மாதிரி இருக்கும். ஆனால் ஆண்ட பரம்பரையே ஆளும்பொழுது, அவர்கள் போடும் கொமிசன்களது செயற்பாடு எப்படியிருக்கும் என்பதற்கு பல சந்தேகங்கள் உள்ளன. அதிகார வர்க்கம் இருக்கும் வரை ஒரு நீதியான அறிக்கையை வெளியே வர விடமாட்டார்கள். தமிழ் மக்கள் தங்களை ஆள புறப்பட்டவர்கள். அதற்குப் பின்னர் ஏற்பட்ட நிலைமைதான் இது. ஒரு பொறுப்பற்ற அரசாங்கம் ஆட்சியில் இருக்கையில் பகை மறப்பு என்பதனால் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

ஆகவே பெரும்பான்மை மக்களே சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் பிழைகள் விட்டோம் என்று ஏற்றுக்கொள்ளும் மன நிலை வரும் வரை இந்தக் கமிசனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

பாபு- வன்னி

மார்க்ஸினுடைய வருகை சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்று இலங்கை மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன். ஒரு உதாரணத்தை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன். நந்திக்கடல் தாண்டி வருவதற்காக மக்கள் முயன்ற வேளை எல்லையில் நிற்பது இராணுவம் தானா என்று பார்ப்பதற்கு சிங்களம் தெரிந்த ஒருவரை அனுப்பினார்கள். அவர் பார்த்துவிட்டு வந்து இராணுவம் தான் இருப்பதாகச் சொன்னார். அதன் பிறகு மீண்டும் ஒருவரை அனுப்பி அவரும் அதே பதிலை வந்து சொன்னார். அப்போது முதலாவதாக சென்று பார்த்து வந்தவர் என்னை நம்பவில்லையா எனக்கேட்டபோது இது உங்களில் பிழையில்லை. நாங்கள் வளர்ந்த சூழல் அப்படி என சொல்லப்பட்டது. ஏனென்றால் சந்தேகம் என்பது எமது சூழலோடு ஒட்டிப்பிறந்தது. இது கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட அனுபவங்களின் வெளிப் பாடு. நான் என்னுடைய சொந்த அக்காவின் பிள்ளைகளுடன் பேசுவதில்லை. ஆனால், நண்பர் களுடன் பேசுவேன். இதற்குக் காரணம் நம்பிக்கை யின்மைதான்.

அதனால்தான் மு.பொ. அப்படிப் பேசிவிட்டார். அதனை மார்க்ஸ் அவர்கள் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம். இப்போது பகைமை மறப்பு என்பதில் சில விடயங்கள் உள்ளன. இந்த பகைமை மறத்தல் என்பது ஒரு சமூகத் தினுடைய அடிப்படை உரிமைகளை மறத்தல் என்பதற்குச் சமமானதா என்றதொரு கேள்வி இருக்கிறது.

இந்த சீர்திருத்தங்கள், நிவாரண உதவிகள் அல்லது அவர்களுடைய மனோநிலையில் இருக்கிற துன்ப துயரங்களை மறத்தல் என்பது ஒரு சமூகத்தினுடைய அடிப்படையான பிரச்சினைகளை தணித்தல் என்று கருத்தாகும். ஆகவே எங்கே நமக்கு பகைமையை மறத்தல் எங்கே பகைமையை கூர்மைப்படுத்தல் என்பதில் எமக்குத் தெளிவு வேண்டும்.

அடுத்ததாக பன்முகச் சமூகங்களைக் கொண்ட தேசத்தில் இவ்வாறான பிரச்சினைகளை அரசியல் ரீதியான பிரச்சினைகளாகக் காண வேண்டும். வெறும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நிலை காணப்படுகிறது. அதன்மூலம் ஒரு சமூக அசைவை உண்டுபண்ணலாம் என்ற கருத்து இருக்கிறது. மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்து இங்கு மேலோங்கியிருப்பதைக் காணலாம். இவ்வாறான விசயங்கள் ஒரு தனி மனித பிரச்சினைகளைத் தீர்க்கலாமே தவிர சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது எனது கேள்வி.

எனவே அரசியல் ரீதியான பிரச்சினைகளை ஆழமாகப் பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

அ.மார்க்ஸ்

கருத்துக்கள் வழங்கியவர்களுக்கு நன்றி. இங்கு பேசும்போது நான் இரண்டு விடயங்களை முக்கியப்படுத்தி தெரிவித்திருந்தேன். அதை எல்லோரும் கவனித்தாக வேண்டும். தென்னாப் பிரிக்காவையோ வேறு எந்த நாட்டின் உதாரணங் களையும் அப்படியே பயன்படுத்த முடியாது என்பதுதான். ஒவ்வொரு சமூகத்துக்கும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. பிரச்சினையின் வேர்களில் வேறுபாடுகள் இருக்கின்றன. அரசியல் தீர்வுகள் வேறுபடுகிறது. அந்த வகையில் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான கமிசனோ ‘மன்டேட்டா’ முன்வைத்துவிட முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். என்னுடைய நோக்கம் என்ன வென்றால் பல்வேறு அனுபவங்களின் சாதக பாதகங்கள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் சொல்வதுதான்.

சிராஜ்

தலைப்பைக் கொடுத்தது நாங்கள்தான். இலங்கைச் சூழலில் இவ்வாறான உரையாடல் ஒன்றின் தேவை இருப்பதாக உணர்த்தவே இந்தத் தலைப்பு கொடுக்கப்பட்டது.

அ.மார்க்ஸ்

ஆனால் இந்தத் தலைப்புக் கொடுக்கும்போது எனக்குத் தயக்கம் இருந்தது. பெரும்பான்மை மக்களிடம் போய் பேசுவது வேறு விடயம். பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படிப் பேசுவது என்ற தயக்கத்துடன் தான் இதனை எடுத்துக் கொண்டேன்.

அந்தக் ‘கான்சப்றில்’ பேசவேண்டிய தேவை இருப்பதாக இந்த அமைப்பினர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பல்வேறு நாட்டு அனுபவங்களை தொகுத்துச் சொல்லும் வகையில் தான் இதனை மேற்கொண்டேன்.

சுமதி சொன்னதுபோல், தென்னாப்பிரிக்காவில் கமிசன் அமைக்கப்பட்டபோது இரண்டு விதமான விமர்சனங்கள் இருந்தன. ஒன்று வெள்ளையர்களுக்குச் சலுகைகள் வழங்குவது என்ற விமர்சனமும், ஆனால் வெள்ளையர்கள் என்ன நினைத்தார்கள் என்றால் தொடர்ச்சியாகத் தங்களை இனங்கண்டு பழிவாங்கக் கூடிய திட்டம் என்று. இத்தகைய கமிஷன்களை வெவ்வேறு பிரிவினரும் வெவ்வேறு விதமாகத்தான் அணுகியுள்ளனர்.

வெள்ளையர்கள் அணுகுவதுபோல் கறுப்பர்கள் அணுகுவதில்லை. அதுபோல் கறுப்பர்கள் அணுகியது போல் வெள்ளையர்கள் அணுகுவதில்லை. அந்தச் சந்தேகத்திற்கு தூபம் போடுவது போல் அரசியலும் நடந்து கொண்டிருந்தது. இன்னொன்று மிக முக்கியமான வேறுபாடு. அதை முன்பும் சொன் னேன். தென்னாப்பிரிக்காவுக்கும், இலங்கைக்கும் என்ன வித்தியாசம் என்றால் பாதிக்கப்பட்ட சமூகம் அனைத்தையும் இழந்திருக்கின்ற நிலையில், இது குறித்து ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் சர்வதேச அழுத்தத்திற்கு கவலைப்படாத ஒரு அரசாங்கம் இருக்கையில் எந்தளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வி அடிப்படையான கேள்விதான். இந்தப் பகை மறப்பு ரூத் அன் ரிகொன்சிலியேசன் கொமிசன் என்று அரசாங்கமே அமைப்பதாக சாத்தியம் இல்லா விட்டாலும் இந்த சமூகங்களுக்கிடையில் ஒரு உரையாடலும் அது ஒரு பகைமறப்பை நோக்கிய ஓர் செயல்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்து மாறுபாடும் இருக்க முடியாது. அந்த வகையில் சிவில் சொசைட்டியினுடைய பங்கு இங்கு மிக முக்கியமானது. மூன்று சமூகங்களில் உள்ள ஜனநாயக, அறிவுஜீவிகளின் பங்கு முக்கியம்.

இந்த வகையில்தான் இதைப்பற்றி பேசவேண்டிய சூழலில் இருக்கிறோம். மற்றபடி தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட எல்லாவிதமான கொடுமைகளுக்கும் விடுதலைப்புலிகள்தான் முழுப் பொறுப்பென்று சுமதி கூறிய கருத்தில் எனக்கு சற்று மாறுபாடுண்டு. அரசாங்கம் கூடுதலான பங்கு இதில் வகிக்கக்கூடிய நிலை இருக்கிறது. எனவே அரசாங்கத்திற்குப் பங்கில்லை என்ற வகையில் பார்த்துவிடாமல், அரசாங்கம் மற்றும் பெருந் தேசிய இனவெறி ஆகிய வற்றை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

சுமதி

நான் என்ன சொன்னேனென்றால் அரசாங்கம் இப்போது ஒரு வெற்றிக் களிப்பில் மூழ்கியிருக்கிறது. சிறுபான்மையினருக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது. நாம் ஒரு குறுகிய தேசிய வாதத் துக்குள் அம்புடாமல் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் புலிகளுக்குப் பயந்து தமிழ் மக்கள் எதனையும் செய்யவில்லை. எல்லாத்துக்கும் எல்ரீரீயிடம் போய் கேட்டுக் கொண்டு, இனியாவது அதனைச் செய்யாது அதிலிருந்து மீண்டு வித்தியாச மான அரசியல் பார்வையுடன் அரசாங்கத்தை நம்பிக் கொண்டிராமல், செயற்பட்டாக வேண்டும்.

அ.மார்க்ஸ்

நான் என்ன சொல்ல வந்தேனென்றால், அரசாங்கத்திற்கும் பெரும்பான்மைச் சமூகத்திற்கும் இதில் பெரும்பான்மைப் பங்கிருக்கிறது என்பதைத் தான்.
இரண்டாவது மனித உரிமைப் பிரச்சினைகளாக மாற்றி, அரசியல் தீர்வு என்பதற்கான முக்கியத் துவத்தினைக் குறைப்பதன் மூலம் சமூகத்தினுடைய பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று பாபு சொன்னார். அது மிகச் சரி.

நான் என்னுடைய பேச்சில் ஒரு அரசியல் தீர்வுடன் இணையும் போதுதான் ரூத் அன் ரிகொன்சிலியேசன் என்பது முழுமையாகச் சாத்தியமாகும் என்று தெரிவித்திருந்தேன். அது மிக அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. அரசியல் தீர்வைப் பொறுத்த மட்டில் அது இன்று முடக்கப்பட்டிருப்பதானது மிக ஆபத்தான விசயமாக கருதுகிறேன். உங்கள் ஜனாதிபதி ஒரு அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்கள் எங்களுடன் வந்து பேசலாம் என்று தெரிவித்திருந்தபோதிலும், தொடர்ச்சியாக தேர்தலையும், மற்ற  விடயங் களையும் காரணங்காட்டி தள்ளிப் போட்டுக் கொண்டு அதுகுறித்து விவாதங்கள் நடத்தப் படாமலே இருக்கிறது.

திஸ்ஸ விதாரண குழு அறிக்கை உட்பட எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. அதில் சில விடயங்கள், பொசிட்டிவான விசயங்கள் இருப்பதாக தெரிகின்றது. 13ஆம் திருத்தச் சட்டம் குறித்து சென்னையில் நல்லதொரு கருத்தரங்கு நடத்தினோம். அதில் டாக்டர் பாலகோபால் சிறப்பான ஆய்வொன்றினை முன்வைத்தார். 13வது திருத்தம் அடிப்படையான எல்லாவிதமான உரிமைகளையும் மறுக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. 13வது திருத்தம் என்பது இந்தியாவின் அரசியலமைப்பைப் பார்த்து அடிக்கப்பட்ட ஒரு மோசமான கொப்பி. இது ஒரு Bad copy. குட் கோப்பியாக இருந்தாலும் கூட அதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்தியாவின் அரசியலமைப்பு எந்த நாட்டுக்கும் ஒரு மாடலாக இருக்கும் தகுதியற்றது. தவிரவும் எந்த நாடுமே இன்னொரு நாட்டுக்கு மொடலாக இருக்கவும் முடியாது. அரசியல் தீர்வு குறித்து மௌனம் இருப்பதென்பது ரொம்பவும் கவலைக்குரியதாகத்தான் தெரிகிறது.

து.அ. ஜெகநாதன்- கொழும்பு

என்னுடைய ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங் கள். இந்தியா ஏன் எங்களுக்குத் துரோகம் செய்தது? ஏன் எங்களைக் காப்பாற்றவில்லை? பங்களா தேசத்தை விடுவித்தது போல ஏன் செய்யவில்லை?

அ.மார்க்ஸ்

இந்தியா துரோகம்தான் செய்யும். இந்தியா வந்து உங்களுக்குத் தமிழ் ஈழம் வாங்கித்தரும் என நீங்கள் நம்பியதுதான் நீங்கள் விட்ட பெரிய பிழை. இதை எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருந்தோம். ஆனாலும் நீங்கள் நம்பினீர்கள். இன்றும் சிலர் நம்புகிறார்கள். எங்களில் சிலரும் கடைசி வரை இந்த நம்பிக்கையை ஊட்டினார்கள். பேரழிவு ஒன்றிற்கே அது காரணமானது.

வங்கதேசம் பற்றிச் சொல்கிறீர்கள். அது நடந்தது 70களில். நாம் வாழ்வது 2010. இடையில் உலகம் பெரிய அளவில் மாறிவிட்டது. எல்லாவற்றையும் ‘நாஷனல் செய்யூரிறி’ என்பதற்குக் கீழ் வைத்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பயங்கரவாத முத்திரை குத்தினால் யாரும் எதுவும் செய்ய முடியாது. எந்த நாடும் உதவிக்கு வராது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.

விடுதலைப்புலிகள் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் 36 நாடுகள் அந்த இயக்கத்தைத் தடை செய்தது

செப். 11, 2001க்குப் பிறகுதானே. தேசியம், அடையாளம் என்பதெல்லாம் இரண்டு பக்கமும் கூரான கத்திகள். ஒரு பக்கம் அது நம்மை உறுதி செய்துகொள்ளும் வடிவமாக இருக்கும். இன்னொரு பக்கம் அது மற்றவர்களின் மீதான வன்முறையாக அமையும். மற்றவர்களின் அடையாளத்தை மறுப்பதாக அமையும். உங்கள் ஜனாதிபதி இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருந்தாரே – இந்த நாட்டில் சிறுபான்மையினரே இல்லை – என்று. இது ரொம்பவும் ஆபத்தானது. இது சிறுபான்மை மக்களின் அடையாளத்தையே மறுப்பது, இல்லை என்பது. இந்த நேரத்தில் நாம் இந்த அடையாளத்தை வலியுறுத்தித்தான் ஆக வேண்டும். இன்னொன்றை யும் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். நேபாள உதாரணம். அவர்களும் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். ஆயுதங்களை ஐ.நா. அவையின் மேற்பார்வையில் விட்டுவிட்டு தேர்தலில் பங்கேற்றார்கள்.

80களுக்குப் பின் பல்வேறு உள் அடையாளங்கள் தம்மை உறுதி செய்து கொள்வதை உலகளவில் பார்க்கிறோம். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம். இது நல்லதா, கெட்டதா என்பது வேறு விடயம். நேபாளத்திலும் வேறு எப்போதும் இல்லாத வகையில் ஜனசாதி, தலித்கள், மாதேசிகள் எனப் பல உள் அடையாளங்கள் உருவாயின. இந்த அடையாள விகசிப்புகளை மாவோயிஸ்டுகள் ஏற்றுக் கொண்டார் கள். அதற்குரிய வகையில் தமது திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள். தேர்தல் நடைமுறையில் இந்தப் பல்வேறு அடையாளங்களுக்கு உரிய பிரதிநிதித் துவம் அளிக்கப்பட்டது. ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரும் பிழை இந்த உள் அடையாள விகசிப்புகளை ஏற்க மறுத்தது. முஸ்லிம் மற்றும் கிழக்கு மாகாணத்தவரின் அடையாள உறுதியாக்கங்களைப் பகையாகப் பார்த்தது.

‘மேக்சிமலிஸ்ட்’ – உச்சபட்சக் கோரிக்கை களிலிருந்து நாம் சற்றே இறங்கி வரவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இருதரப்புகளும் இறங்கி வரவேண்டும். ஏற்கனவே தமிழர்கள் தரப்பில் அந்நிலை உள்ளது. இனி அரசாங்கம்தான் தன் நிலையை விட்டு இறங்க வேண்டும். ஆனால் அது வெற்றிக் களிப்பில் மூழ்கி இருக்கிறது. அரசியல் தீர்வு பற்றிப் பேச மறுக்கிறது. ஒரே தேசம், ஒரே இனம் என்கிறது. இது மிகவும் ஆபத்தான நிலை. இதற்கு எதிராகவும், கண்ணியமான அரசியல் தீர்வுக்கு ஆதரவாகவும் தான் வெளியிலிருக்கும் எங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும். அப்போதுதான் எங்களுடைய ஆதரவுக்கும், உங்க ளுடைய தயார் நிலைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் ஒரு ஒத்திசைவு ஏற்படும். எல்லோரும் தத்தமது ‘மேக்சிமலிஸ்ட்’ நிலைபாட்டிலிருந்து இறங்கி வரவேண்டும். இறந்தகால அநீதிகளைச் சொல்லி, எதிர்காலப் ‘பொற்காலத்தை’க் காட்டி சமகால மக்களின் வாழ்வை அழித்துவிடக் கூடாது.

அப்துல் வகாப்

போராட்டம் என்பது சக்தியின் மூலமாக கிளர்ந்து வரவேண்டும் என்று சுமதி குறிப்பிட்டிருந்தார். அப்படியனால் எல்.ரி.ரி.ஈ. போராட்டத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

சுமதி

நான் இங்கு பிரச்சினையான விடயங்களைச் சொல்லப் போகிறேனோ தெரியவில்லை. எனக்கு தமிழ் என்பதில் தீவிர நம்பிக்கை இல்லை. இந்த அடையாள அட்டையை செக்பொயின்றில் எடுத்து பார்த்து நீங்கள் தமிழா என்று அதிலிருக்கும் யாரோ கேட்பான். என்ற நிலைமையைப் பொறுத்து ஓம் என்று சொல்வேன் அல்லது பேசாமலிருப்பன். அதற்காக மற்றவர்கள் தங்களுடைய அடையாளங் களை மறுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

நாங்கள் தமிழராக இருக்கிறம், மற்றது ஒரு யுனிவசிட்டியில் படிப்பிக்கும் பொது சிங்கள மாணவனுக்கும் படிப்பிக்கவேணும், நான் போராட்டம் என்று சொன்னது ஆயுதப் போராட்டத் தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதில் ஆயுதப் போராட்டங்கள் வரலாம். ஆயுதப் போராட்டங்களை நான் முற்றிலும் நிராகரிக்கும் ஆளும் இல்லை. நமது சமுதாயத்தில் 30 ஆண்டு கால அனுபவத்திற்குப்பிறகு நான் மார்க்ஸ் சொன்னதற்கு ஒரு மாற்றுக் கருத்து சொல்ல வேண்டும். தமிழ் மக்களது குறுகிய நிலைக்கு கொண்டு வந்தது விடுதலைப்புலிகளது செயற்பாடுகள்.

இந்தப் போராட்டத்தினூடாக பெரும்பான்மை யினர் என்ற வகையிலும் பார்த்தீர்களானால், அவர்களும் ஒடுக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். இறந்த போர்வீரர்களது பிள்ளைகள், மனைவிகள் அவர்களும் ஒடுக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கொம்பன்சேசன் எடுப்பதற்கு இரண்டு மூன்று ஆமிக்காரர்களோடு படுத்துத்தான் எடுக்க வேண்டியிருக்கு. நான் இதைக் கொச்சையாக சொல்ரன். நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் அவர்களும் பலமிழந்துதான் இருக்கிறார்கள். எனவே நீங்கள் வித்தியாசமான முறையில் சிந்திக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

சிராஜ்

போரினுடைய அனுபவங்களை நிறையவும் பார்த்திருக்கிறோம். எல்லோருக்கும் போரின் வடு இருக்கும். இதற்குமுன் பேசிய விடயங்களை விட்டுவிடுவோம். போரின் வடுக்களைப் பற்றி இப்போது பேசாமல் எதிர்காலத்தைப் பற்றியும் எதிர்வரும் பத்தாண்டுகளில் எவ்வாறு செயற்பட வேண்டியுள்ளது என்பது பற்றியும் பேசுவோம்.

நல்ல ஒரு இலங்கை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். முஸ்லிம் தேசப்பிரகடனம் நாங்கள்தான் செய்தோம். ஆனால், அதில் கடந்து செல்லவேண்டிய தடங்கள் நிறைய இருக்கிறது என்று இப்போது புரிகிறது. ஏனென்றால், பெரும்பாலான முஸ்லிம்கள் பல சிங்களக் கிராமங்களிலே தீவு தீவுகளாக வாழ்கிறார்கள் சொந்த அதிகாரங்களே இல்லாமல் வாழ்கிறார்கள். உள்ளூராட்சி சபைகளில் கூட குறைந்த அதிகாரங்களையும் பெற முடியாமல் வாழ்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கிருக்கிறது. மலையக மக்களுக்கிருக்கிறது.

உரையாடல் திசை திருப்புவதனைத்தான் விரும்புகிறேன். தனிமனிதர்களுக்குள்ளே மட்டுமே நாம் பேசுகிறோம். ஏன் சமூகங்களில் செயற்பாடாக இதனை மாற்றக்கூடாது. இதுதான் எங்களது கேள்வி. பேராசிரியர் மார்க்ஸ் நன்றாக அறிந்தவர் இதில் கருத்துச் சொல்லலாம். உலகமயமாதல் சூழலில் எல்லாமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மன வல்லமை இருந்தால் மட்டுமே எதையுமே சாதிக்க முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. ஏன் தமிழ் நண்பர்களை முஸ்லிம்களும், முஸ்லிம் நண்பர்களை தமிழர்களும் பராமரிக்கக் கூடாது. அதுதான் இன்றைய கேள்வியே தவிர இலங்கை அரசாங்கத்தின் குரோதங்களை, புலிகளுடைய குரோதங்களைப் பேசிப் பேசி இருப்பதல்ல, உரையாடலிலே பல விடயங்கள் பேசப்பட இருக்கின்றன.

து.அ. ஜெகநாதன்,- கொழும்பு

நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம். பங்களாதேஷ் எவ்வாறு உருவானது? முஜிபுர் ரஹ்மான் விமானப் படை, கடற்படை எல்லாம் வைத்திருந்தாரா, பங்களாதேஷ் இன்றைக்கு ஒரு சுதந்திர நாடாக இல்லையா, அது எப்படி இந்தியா இராணுவத்தாலே தானே உருவாக்கப்பட்டது. இங்கேயும் போராட் டத்தை நடத்தியவர்கள் அவ்வாறான சூழலை உருவாக்காமல் இந்தியாவை தங்களது எதிரியாக்கிக் கொண்டார்கள் என்பதுதான் பெரிய வேதனை.

மற்றையது. உங்களுக்குத் தெரியும். கம்போடியா வில் பொல்பொட் ஆட்சி செய்தார் அவருடன் கூட இருந்த கும் சென் கருத்து மோதல் ஏற்பட்டு அவருடைய கண்ணையும் இழந்து, மனைவியையும் இழந்து வியட்நாமுக்குப் போய் வியட்நாம் இராணுவத்தைக் கூட்டி வந்து பொல்பொட்டை காட்டுக்கு அனுப்பினார். அவர் சொந்த முயற்சியில் செய்யவில்லை.

இன்றைக்கு நேபாளத்தில் போராட்டத்தை நடத்திய பிரஜண்டா வெற்றி பெற்ற போதும் 3 மாதம் தான் அவரால் பிரைம் மினிஸ்டராக இருக்க முடிந்தது. அவரால் ஏன் இருக்க முடியாது என்றால் இந்தியாவை எதிர்த்து ஒரு அரசு நேபாளத்தில் இருக்க முடியாது என்பதுதான். அப்படியென்றால் சீனப்படை நேபாளத்துக்குள் வந்தால் பிரஜண்டா ஆட்சியமைக் கலாம். அல்லது காஷ்மீர் எப்போது தனி நாடு ஆகும் என்றால் பாகிஸ்தான் காஷ்மீரை விடுவித்து அந்த மக்களிடம் கொடுத்தாலேயழிய மற்றபடி முடியாது. வேண்டுமென்றால் சர்வதேசத் தலையீடு கள், அரசியல் தீர்வு கூடுதல் அதிகாரம் ஏதாவது ஏற்படுத்தப்படலாம். ஆயுதப் போராட்டத்தால் வெல்ல முடியாது. சீக்கியர்களுடைய காலிஸ் தானுக்கும் இதுதான் நடந்தது. பாக்கிஸ்தான் பஞ்சாப்புக்குள் வந்து ஒரு தனிநாட்டை அமைத்துக் கொடுத்திருந்தால் சீக்கியர்கள் ஒரு தனிநாட்டை அடைந்திருப்பார்கள். இன்று ஒரு சீக்கிய இயக்கத் தலைவர்கள் கூட இல்லாதவாறு இந்தியா அவர்களை அழித்துவிட்டது.

இதேபோலத்தான் வடகிழக்கில் டால் டெங்கா, கடைசியாக போன கிழமை கூட நாகாலாந்தில் நாகா தலைவர்கள் கோலண்டிலிருந்து வந்து சிதம்பரம் போன்றவர்களைப் பார்த்துசில சலுகைகளுக்காகவும், அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் கையேந்தும் நிலை வந்துவிட்டது. லால்கரில் மாவோயிஸ்டுகள் போராடுகிறார்கள்.

தெற்காசிய இந்தச் சூழலில் இந்தியாவை இலங்கையில் நாங்கள் பகைத்துக்கொண்டு ஏதாவது சாதிக்க முடியுமா? அல்லது இது நல்லதொரு யுக்தியா ராஜதந்திரமான என்பதுதான் என்னுடைய கேள்வி. உதாரணங்கள் பல சொல்லலாம். அங்கோலாவில் இருந்த ஆட்சியைக் காப்பதற்காக எங்கோ இருந்த கியூபா ஒரு லட்சம் படைகளை அனுப்பியது. அதேபோல் கொரிய யுத்தத்தில் வடகொரியாவை மட்டுமாவது மீட்க முடிந்ததற்குக் காரணம் சீனா வினுடைய ஒரு லட்சம் படைகள் வடகொரியாவில் அமெரிக்க இராணுவத்துடன் மோதிச் செத்தார்கள். மா வோ சேது வுங் உடைய மகன் உட்படச் செத்தார்கள். இப்படி அந்நிய நாட்டினுடைய தலையீடு, அரசியல், இராஜதந்திர, உதவிகள் இல்லாமல் இனிவரும் காலத்தில் சாத்தியமா?

பிர்தவுஷ், மட்டக்களப்பு

பகைமறப்பு மற்றும் மற்றமை குறித்துப் பேசும் பொழுது இனம், சாதி, தேசியம், அரசியல் உரிமைகள் போராட்டம், நிலம், ஆயுதம் என்றெல்லாம்தான் பேசுகிறார்கள். இதெல்லாம் தாண்டி இந்த கலந்துரை யாடலில் ஒரு தொடக்கப் புள்ளியை பார்க்கிறேன். கடந்த 18 மாத கால அனுபவம் ஒன்று எனக்கிருக் கிறது. நான் ஒரு மௌலவி என்ற வகையிலும், இந்தக் கலந்துரையாடலில் நான் கவலைப்படுகிறேன். சிங்களச் சகோதரர்களும் வந்திருந்தால் பிரயோசன மாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
ஒரு சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மௌலவி என்ற வகையில் மதத் தலைவர்கள் ஊடாகச் செய்து வந்த வேலைகள் அனுபவம் எனக்குள்ளது.

மார்க்ஸ் அவர்களுடைய பகை மறப்பு தொடர் பான விரிவுரையும், கருத்துக்களும் முக்கியமானவை. வயதில் சிறியவராக இருந்தாலும் சிராஜ் நினைக்கிற நல்ல இலங்கையை அடைவதற்கான முயற்சிக்குப் பங்காற்றப் போகிறேன் என்பதில் நான் சந்தோசப் படுகிறேன். நீங்கள் எல்லோரும் கூட சந்தோசப்பட வேண்டும். ஏனென்றால், சிங்கள பௌத்த துறவிகள் எந்தளவுக்கு பகைமையை எண்ணக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அன்று ஒரு பகிரங்க சபையில் எங்களது மூத்த தலை முறை விட்ட பிழையை நாங்கள் விடமாட்டோம் என்று சொன்னதை நாங்கள் பார்க்கிறோம். தெகியத்த கண்டய, மாத்தளை, அனுராதபுரம் ஆகிய பிரதேசத் திலும், மட்டக்களப்பில் இந்து சமயத் தலைவர்கள், பிக்குமார், மௌலவிமார் பகைமறப்பு பற்றி கருத்தாடுகிற செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறோம்.
எனவே இந்த சந்திப்பும் இந்தக் கருத்தாடலும் நாடு நல்லவிதமாக நகர்வதற்கு ஆரோக்கியமான செயற்பாடாகக் கருதுகிறேன். ஆகவே இப்படியான இந்த கருத்தாடல்களுக்கு பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நான் கருதுகிறேன்.  அது அவர்களுடைய கருத்துக்களை உள்ளீர்க்கவும், நமது கருத்துக்களை உட்செலுத்தவும் முடியும்.

மர்சூம், சட்டத்தரணி

இலங்கையினுடைய அரசியல் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தான் அடையாளப் படுத்தப் பட்டுள்ள பிரச்சினை அரசியலாக்கப்பட்டுள்ளது தொடர்ச்சியா, வளப்பங்கீடு பாதுகாப்பு போன்ற நாளாந்தப்  பிரச்சினை சார்பான ஒரு மையப் புள்ளியை நோக்கி இலங்கையினுடைய இந்தத் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்கள், பின்னடைந்தே உள்ளன.

அ.மார்க்ஸ்

உலகம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக் கிறது. உலக மாற்றங்களைக் கணக்கிலெடுக்காத பிழையை நாம் செய்ய முடியாது. பழைய உதாரணங்கள் பயனில்லை.

நேபாளத்தில் தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்த மாவோயிஸ்டுகள் என்ன செய்ய முடிந்தது என்று நண்பர் கேட்டார். நீங்கள் சொன்னது உண்மைதான். அவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகித்தது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும். தேர்தலில் மாவோயிஸ்டுகள் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைத் தான் பெற முடிந்தது. மற்ற இரு பங்கு வாக்கு களையும் பிற கட்சிகள் பங்கிட்டுக் கொண்டன.

இன்று மாவோயிஸ்டுகள் ஆட்சியில் இல்லா விட்டாலும் பிரச்சினைகளை வீதிக்குக் கொண்டு வந்துள்ளனர். பெரிய அளவில் மக்களைத் திரட்டிப் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடுகின்றனர். அந்த வாய்ப்பையும் இன்று இங்கே தமிழர்கள் இழந்துள்ள நிலையை ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தமட்டில் எப்படியாவது நேபாள மாவோயிஸ்டுகளை மீண்டும் ஆயுதத்தை எடுப்பதைத்தான் விரும்புகிறது. அதன்மூலம் பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களை ஓரங் கட்டிவிடவும் முடியும். அதற்கு மாவோயிஸ்டுகள் இடம் கொடுக்காததைக் கவனிக்க வேண்டும்.

லால்கர் போராட்டம் பற்றிச் சொன்னார்கள். எந்தப் பெரிய ஆயுத பலமும் இன்றி அங்குள்ள பழங்குடி மக்கள் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் மத்திய-மாநில அரசுகளை உள்ளே அண்டவிடாமல் அங்கே போராட்டம் நடத்தினார்கள். ஆயுதப் போராட்டம் அங்கே ஊடுருவிய பின்னரே அவர்களை ஒடுக்க முடிந்தது.

தமிழ் அடையாளம் தேவையில்லை என சுமதி சொன்னதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த அடையாளத்தையே மறுக்கிற இன்றைய சூழலில் அதை வலியுறுத்துவது தேவை என்றே நான் கருதுகிறேன்.

யோதிலிங்கம்

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முரண்பாடு களை களைகின்றார்கள். அவர்களுக்கு வெளியே இருந்து வருகிற அடக்குமுறைகளும் உண்டு. அதேவகையில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான முரண்பாடும் இருக்கின்றது. அந்த முரண்பாட்டை ஒரு ஆதிக்க முரண்பாடாகக் கொள்ளாமல் இரண்டு தேசியங்களுக் கிடையிலான முரண்பாடாக வரையறுத்து அதனடிப்படையில் நாங்கள் பேசுவது என தீர்மானித்துக் கொள்வது நல்லது என நான் நினைக்கிறேன். முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல. எனவே அவர்களுடைய அடையாளத்தை அங்கீகரித்து அதனை எப்படி அந்தக் கலந்துரையாடலை ஆரம்பத்திலிருந்து தொடங்குவது என்று நாம் சிந்திப்பதே சிறந்தது என நான் நினைக்கிறேன்.

சிங்கள மக்களைப் பொறுத்தமட்டில் இதிலொரு முக்கியமான நெருக்கடியிருக்கிறது. சிங்கள சமூக உருவாக்கம் குறித்து ஆழமாகப் பார்க்க வேண்டும். சிங்கள பௌத்த உருவாக்கம் சமூக அரசியலுக்குள் மாத்திரமல்ல மதம், மொழி, வரலாறு எனப் பல விடயங்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் வந்தது. அதிலிருந்துதான் சிங்கள அரசு உருவாக்கம் வந்தது. ஆகையால் அந்தச் சமூக உருவாக்கம் பலமாக இருப்பதனால் தான் அதில் கை வைப்பதற்கு சிங்களத் தலைவர்கள் எல்லாம் பயந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மையான நிலை. இதனாலேயே எங்களுக்குள்ள சிக்கல். ஏனென்றால் எங்களோடு இருந்த வடசிங்கள நண்பர்களை நாம் இழந்து விட்டோம். வாசுதேவ நாணயக்காரவையும் இழந்துவிட்டோம். போருக்குப் பிறகு தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு இப்பொழுதைய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மற்றையது சிறுபான்மை என்ற சொற்கள் அடிக்கடி பாவிக்கப்பட்டன. அதைக் கேட்கவே சகிக்கவில்லை. தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ சிறுபான்மை கள் அல்ல. அவர்கள் தேசிய இனங்கள்.

அ.மார்க்ஸ்

விரிவாகப் பலரும் கருத்துக்களைப் பேசியிருக் கிறீர்கள். இது நல்லதொரு விவாதத்துக்கான உரையாடலுக்கான தொடக்கப் புள்ளியாக அமையும் என நம்புகிறேன். எல்லோருக்கும் என் நன்றிகள்.

தொகுப்பு – தேவஅதிரன்

Advertisements

Entry filed under: நிகழ்வுப் பதிவுகள்.

வாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன! -ஷோபாசக்தி இனவாதம் அழிவு வாதமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: