வாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன! -ஷோபாசக்தி

June 2, 2010 at 6:29 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக் குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்து டன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை நடத்துவதிலும் சளைக்காமல் தானே இருக்கிறீர்கள். இதுவும் உங்களுக்கு அலுப்பை, மனத் தளர்வை ஏற்படுத்தவில்லையா?

நான் அளவுக்கு அதிகமாகக் கருத்துப் போர்களில் ‘மினக்கெடுகிறேன்’ என்றொரு விமர்சனம் நீண்ட காலமாகவே உள்ளதுதான். என்னுடைய அரசியல் இலக்கிய நிலைப்பாடுகள், மதிப்பீடுகள் காலத்திற் குக் காலம் மாறி வந்தவைதான். ஆனால் நான் ஒரு நிலைப்பாட்டில் இருக்கும்போது அந்த நிலைப் பாட்டை முழுமையாக நம்பும்போது அந்த அரசியல் அல்லது இலக்கிய நிலைப்பாட்டிற்காக ஓயாமல் போரிடுவதுதான் நேர்மையான செயல் என்று நான் கருதுகிறேன். இதில் அலுப்பென்றும் சலிப்பென்றும் எதுவுமில்லை.

சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இருப்பது போலவே இலக்கியத்தளமும் வர்க்கங்களாலும் சாதியாலும் பால்நிலையாலும் மேல் கீழாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பாஸிசத்தின் அடிவருடிகளும் இந்துத்துவ வெறியர்களும் சாதியப் பற்றாளர்களும் குறுந் தேசியவாதிகளும் இலக்கியத் தளத்தினுள் தீவிரமாக இயங்கும்போது நாம் அவர்களைத் தீவிரமாக எதிர்த்து விரட்டியடித்தேயாக வேண்டும். இதிலென்ன சலிப்புள்ளது. உண்மையில் இதுவொரு உற்சாகமான வேலை.

தவிரவும் இலக்கியத்தளத்திலோ அரசியல் வெளிகளிலோ நான் வரித்துள்ள கருத்துகள் மிக மிகச் சிறுபான்மையினரின் கருத்துகளாகவே இருக்கும் போது எனக்கு இன்னும் பொறுப்பும் வேலையும் அதிகமிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களிலும் நான் ஒருவனே ட்ரொஸ்கியவாதி. நான் புலம்பெயர் சிறுபத்திரிகை களில் எழுதத் தொடங்கிய காலத்தில் ட்ரொஸ்கியம் சார்ந்தே எனது கருத்துப் போர்கள் நிகழ்ந்தன. அம்மா மற்றும் எக்ஸில் இதழ்களைத் தளமாகக்கொண்டு நாங்கள் மிகச் சிலர் தலித்தியம், பின்நவீனத்தும், விளிம்புநிலை அரசியல் குறித்த உரையாடல்களை, விவாதங்களைப் புகலிடத்தில் ஆரம்பித்தபோதும் சுற்றி நின்ற கொடும்பகையை எதிர்கொள்ள ஓயாமல் கருத்துப்போர் நடத்த வேண்டியிருந்தது.

ஈழப் போராட்டத்து அரசியல் என்று வரும்போது நான் புலிகளையும் இலங்கை அரசையும் கடுமையாக எதிர்த்து எழுதுபவன். நம்மிடையே இரண்டில் ஒரு பக்கமும் சாயாத இலக்கியவாதிகள் மிகச் சொற்ப மானவர்களே. இந்த நிலையில் புலிகள் ஆதரவு எழுத்தாளர்களையும் அரசு ஆதரவு எழுத்தாளர் களையும் கடுமையாக எதிர்த்து, புலிகளாலும் அரசாலும் கொல்லப்பட்ட மக்களின் இரத்தத்தின் பேராலும் கண்ணீரின் பேராலும் எழுதாமலிருக்கும் ஒருவன் நானுமொரு எழுத்தாளன் என என்ன மயிருக்கு சொல்லிக்கொள்ள வேண்டும். புலிகளின் ஆதரவாளர்களையும் அரசு ஆதரவாளர்களையும் எதிர்த்து எழுதுவதில் அலுப்போ சலிப்போ ஈவிரக்கமோ காட்டவே கூடாது.

என்மீதான அரசியல் விமர்சனங்களிற்கு அப்பால் அவை அவதூறுகள் என்ற நிலையை அடையும்போது அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லைத்தான். ஆனால் அந்த அவதூறுகளின் துணையால் எனது அரசியல் நிலைப்பாடுகள் மீது சேறடிக்கும்போது அந்த அவதூறுகளிற்கும் உடனுக்குடன் பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. வேறு என்னத்தைச் செய்ய!
விவாதங்களிலும் தடாலடிப் பதில் போரிலும் இறங்கி உங்கள் படைப்புத்திறனை, அதன் விளைச்சலை சுருக்கிக் கொள்கிறீர்களே?

படைப்புத்திறன் என்ன ஒரு கோப்பை நீரா தீர்ந்துபோய்விட? இறைக்கிற கிணறுதான் சுரக்கும். நேரம் ஒரு பிரச்சினைதான், எனினும் நேரத்தைச் சாட்டுச்சொல்லி பிற்போக்குவாதிகளின் கருத்துகளை மௌனமாகச் சகித்துக்கொண்டிருப்பதைவிட மேலும் ஒரு மணிநேரம் கண்விழித்திருந்து அவர்களிற்கு எதிர்வினையாற்றவே நான் விரும்புகிறேன்.

ஆயுதப் போராட்ட அரசியலின் கசப்புகள் அதன் விளைவுகள் மட்டும்தான் உங்கள் இலக்கியமும் அரசியலும் என்று சொல்லலாமா?

யுத்தம் மட்டும்தானே வாழ்க்கையாயிருந்தது. வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும், யுத்தம் என்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன. எனக்கு ஏழு வயதாயிருந்தபோது பிரபாகரனால் துரையப்பா பொன்னாலையில் கொல்லப்பட்டார். எனக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தபோது பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். இடைப்பட்ட காலமென்பது யுத்தமும் யுத்தம் சார்ந்த வாழ்வும் தானே. பிரான்ஸ§க்கு ஓடிவந்துவிட்டாலும் மனமும் செயலும் தாய்நிலத்தை மையப்படுத்தித்தானே யிருந்தன. பிரான்சுக்கு வந்த இந்தப் பதினேழு வருடங்களில் தேடியது அந்நியன் என்ற புறக்கணிப் பையும் கடனையும் நோயையும் தவிர வேறெதுவு மில்லை. ஒரு தீவிர, சுறுசுறுப்பான அரசியல் பிராணியான எனக்கு பிரஞ்சு அரசியலிலோ பிரஞ்சு இலக்கியத்திலோ பிரஞ்சுக் கலாசாரத்திலோ ஒட்டவே முடியாமல் போய்விட்டது. இன்றுவரை தடக்குப் படாமல் எனக்குப் பிரஞ்சுமொழி பேசவராது. நான் யுத்தத்தின் குழந்தை. என்னைப் போன்றவர்களிற்கு எங்களின் மரணம்வரை யுத்தத்தின் வடுக்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.

ஆயுதப் போராட்டம் வெறுமனே கசப்புகளை மட்டும்தான் எனக்குக் கொடுத்தது என்றும் சொல்லமாட்டேன். நூற்றாண்டுகளாய் அரசியல் உணர்வின்மையாலும் அடிமைக் கருத்தியலிலும் உழன்றுகொண்டிருந்த ஈழத் தமிழ்ச் சமூகத்தை ஆயுதப் போராட்டம் விழித்தெழச் செய்தது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த சமூகத்தையும் அது சிங்களப் பேரினவாத அரசுகளிற்கு எதிரான அரசியல் கூட்டு மனநிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. சமூகத்தின் அடித்தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த மனிதர்களும் பெண்களும் அரசியல் வெளிக்கு வந்தார்கள். ஆயுதப் போராட்டம் ஈழ மக்களின் பிரச்சினையை சர்வதேச அளவில் பரப்புரை செய்வதற்கு காரணியாயிருந்தது. ஈழப் போராட்டம் கசப்பான பக்கங்களை மட்டுமல்ல இத்தகைய அருமையான பக்கங்களையும் கொண்டதுதான்.

என்னுடைய அரசியலும் இலக்கியமும் ஈழப் போராட்டத்தை மையப்படுத்தித் தொடங்கியது எனினும் கடந்த இருபது வருடப் புலம்பெயர்ந்த வாழ்வு பல்வேறு வகையான அரசியல் போக்கு களையும் இலக்கியப் போக்குகளையும் பயிலும் வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது. யாரும் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ நான் என்னை ஒரு மார்க்ஸியவாதியாகவே அடையாளப் படுத்துவேன். என் இன்றைய அரசியலும் இலக்கியமும் மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டது.

மார்க்ஸியம் என்றால் எவ்வகைப்பட்ட மார்க்ஸியம்? மார்க்ஸியத்துக்குள்ளும் பல்வேறு போக்குகள் உள்ளனவே?

மார்க்ஸியம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான அறம், ஒரு குறியீடு. மரபு மார்க்ஸியத்தின் போதாமைகள், இன்றைய உலகச் சூழலில் மார்க்ஸியம் எதிர்கொள்ளும் கேள்விகள், மார்க்ஸிய அமைப்புகளின் இறுகிய அதிகார வடிவங்கள் இவை குறித்தெல்லாம் ஏராளமான கேள்விகளையும் உரையாடல்களையும் மார்க்ஸியர் களே நடத்தியிருக்கிறார்கள். இந்த உரையாடல்கள் தொடருகின்றன. மார்க்ஸியத்தின் அடிப்படையில் புதிய பார்வைகளும் விமர்சனங்களும் கோட்பாடு களும் உருவாக்கப்படுகின்றன. இது இடையறாது நடக்கும் ஒரு அரசியற் செயற்பாடு. இந்தச் செயற்பாடுதான் எனக்கான மார்க்ஸியம்.

உங்களுடைய கதைப் பிரதிகள் பல்வேறு காலகட்டங்களையும் முக்கியமான சம்பவங் களையும் ஆவணப்படுத்தும் பங்களிப்பை வழங்குகிறது. ஆனால் இதில் உண்மைச் சம்பவங்கள் எவை, புனைவு எவை என்கிற குழப்பமும் வரலாற்றுத் தடுமாற்றமும் வாசகனுக்கு ஏற்படுகிறதே? இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

உங்கள் கேள்வியில் ஒரு குற்றம் சாட்டும் தொனியை நான் அடையாளம் காண்கிறேன். எது வரலாறு, எது புனைவு என வாசிப்பவருக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்துமளவிற்குப் புனைவை நம்பகமான மொழியில் நான் எழுதுகிறேன் என்பதற்காக முறைப்படி நீங்கள் என்னைப் பாராட்டியிருக்க வேண்டும். கிடக்கட்டும் விடுங்கள்.
வரலாற்று நிகழ்வுகளின், பாத்திரங்களின் பின்னணியில் ஒரு புனைவை உருவாக்குவது மிக வழமையான ஒன்றுதான். எடுத்துக்காட்டுகளிற்கு வேறெங்கும் போகத் தேவையில்லை, ஈழப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘லங்காராணி’, ‘புதியதோர் உலகம்’ நாவல்கள் அவ்வகைப்பட்டவையே.
வரலாற்றுத் தடுமாற்றம் ஒரு தேர்ந்த வாசகருக்கு ஏற்பட வாய்ப்பேயில்லை. மார்க்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை அவர் பாவெலின் கதையாகவே படிக்கிறார். சோவியத் புரட்சி குறித்த துல்லியமான வரலாறு அவருக்குத் தேவைப்பட்டால் அவர் ‘ஜோன் ரீடு-ன் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ நூலைப் படிக்க வேண்டியதுதான்.

வரலாற்று இலக்கியப் பிரதியை முழுமையான வரலாற்று ஆவணமாக வரையறுக்கத் தேவையில்லை. அப்படி வரையறுத்தால் ராமர் பாலம் போலவும் ராம ஜென்மபூமி போலவும் வேண்டாத இழவுகள்தான் பிரச்சினைகளாகக் கிளம்பும். வரலாற்றை அடிப்படை யாகக் கொண்ட இலக்கியப் புனைவுப் பிரதிகள் வரலாற்று ஆவணங்கள், வாய்மொழிக் கதைகள், தகவல்கள் போன்றவற்றொடு புனைவையும் கலந்தே எழுதப்படுகின்றன. இதற்குத் தமிழின் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக ப.சிங்காரத்தின் ‘புயலில் ஒரு தோணி’யையும் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலையும் நான் சொல்வேன்.

வரலாற்றுச் சம்பவங்களை நான் திரித்திருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால் அதைக் குறித்து விவாதிக்கலாம். அதைவிடுத்து வரலாற்றையும் புனைவையும் கலந்து எழுதுகிறீர்களே எனக் கேட்டால் அதை இலக்கியம் அனுமதிக்கும் என்று மட்டுமே சொல்லலாம்.

தமிழ்ச்சூழலின் எதிர்ப்பிலக்கிய எழுத்தில் முக்கியமானவர் நீங்கள், இந்த எதிர்ப்பிலக்கியம் அல்லது மாற்று இலக்கியத்தின் அடைவுகளாக இன்று நீங்கள் காண்பது எதனை?

நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் சிறுபத்திரிகைகள் சார்ந்த இலக்கியப் பரப்பு மிகச் சிறிது. தமிழ்த் தேசியம், சாதியப் பிரச்சினைகள், இஸ்லாமியர்களின் மற்றும் பால்நிலையால் கீழாக்கி வைக்கப்பட்டவர் களின் பிரச்சினைகள், கலாசார அடிப்படைவாதம் போன்றவை குறித்துச் சிறுபத்திரிகைத் தளத்திலும் அறிவுத்தளத்திலும் ஒரு மாற்றுப் பார்வையை உருவாக்க முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறோம்.

அடைவுகள் என்று குறிப்பிட்டுச் சொல்ல இதுவரை ஏதுமில்லை. அவ்வளவு சுலபமாக எல்லா ஆதிக்க சக்திகளும் நமக்கு வழிவிட்டுவிட மாட்டார்கள்.

எதிர்ப்பிலக்கியம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் உணரமுடியும். அதுவும் இலங்கைத் தமிழ்ச் சூழல் சார்ந்த எதிர்பிலக்கியவாதிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகள், மன அழுத்தங்கள் இதனை நீங்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறீர்கள்?

எழுத்தின் வழிதான் எதிர்கொள்கிறேன். ஓயாமல் செயற்படுவதால் மட்டுமே இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியும். பாஸிசத்தை எதிர்கொள்வதற் கான ஒரேவழி அதன் கண்களை விடாமல் உற்றுப் பார்ப்பதுதான் என்பார் தருண் தேஜ்பால்.

விடுதலைப்புலிகளையும் அரசாங்கத்தையும், தொடராக விமர்சித்தே வந்திருக்கிறீர்கள், விடுதலைப்புலிகளின் இராணுவ அரசியல் தோல்வியையும், அரசாங்கத்தின் இராணுவ, அரசியல் வெற்றியையும், கடந்த ஒரு வருடத்துக் குள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

விடுதலைப் புலிகளின் தோல்வி எதிர்பார்க்கப் பட்ட ஒன்றுதான். அவர்கள் எப்போது மக்கள்மீது அதிகாரப்போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார் களோ அப்போதிலிருந்தே அவர்களின் அரசியல் தோல்வி தொடங்கிவிட்டது. இலங்கை அரசின் புலிகளின் மீதான இராணுவ வெற்றி என்பது சர்வதேச வல்லாதிக்கவாதிகளின் இராணுவ, நிதி மற்றும் திட்டமிடல் உதவியுடன் சாத்தியமாகிய ஒன்று.
அநேகமாக இனிப் புலிகள் குறித்துப் பேசுவதற்கு எதுவுமே இல்லை என்றுதான் கருதுகிறேன். புலித்தலைமை இயக்கத்தின் அனைத்து அதிகாரங் களையும் செயற்பாடுகளையும் மையத்திலேயே குவித்து வைத்திருந்ததால் தலைமையின் அழிவோடு அந்த இயக்கமும் முற்றாகச் செயலிழந்துபோனது. புலிகள் இயக்கம் இனிக் கட்டியெழுப்பப்பட முடியாத ஒன்று. ஆயுதப் போராட்டம் இனி ஈழத்தில் சாத்தியமே கிடையாது என்பதை அரசின் இராணுவப் பலத்திலிருந்து அல்லாமல் ஈழத் தமிழ் மக்களின் பட்டுக் களைத்துப்போன மனநிலையிலிருந்து சொல்கிறேன்.

இப்போதைய பிரச்சினை மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசுதான். மகிந்த ஒட்டுமொத்த இலங்கைத் தீவு முழுவதும் தனது எல்லையற்ற அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். சட்டம், நீதி எல்லாமே அவரினதும் அவரின் குடும்பத் தினரினதும் சட்டைப் பைக்குள்தான் கிடக்கின்றன. சிங்கள இராணுவ உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையே இந்த அரசு நீதிக்குப் புறம்பாகச் சிறையிலடைத்தும் கொலை செய்தும் வரும்போது சிறுபான்மை இனங்களின் நிலையை என்னவென்று சொல்வது.

அண்மைய பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய சக்திகள் பலகூறாக தேர்தலை எதிர்கொண்டன, இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்து…?

உண்மையில் அவை ஆயுதக் கலாசாரத்திற்கு எதிரான வாக்குகளே என்று கருதுகிறேன். பொதுப் புத்தியை நாடிபிடித்து அறிவதில் பழம்தின்று கொட்டைபோட்ட தமிழரசுக் கட்சியின் மூத்த தலைகள் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிற்குள் அனுப்பிவைக்கப்பட்ட பத்மினி, கஜேந்திரன் போன்றவர்களைப் புத்திசாலித்தனமாகக் கழற்றி விட்டு  சமூக மதிப்புப் பெற்ற வெள்ளை வேட்டிக் கனவான்களான சரவணபவன் போன்றவர்களை உள்வாங்கிக்கொண்டார்கள். கடும் தேசியவாதம் பேசிய சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கடுமையாகத் தோல்வியைத் தழுவ மிதவாதம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை அதிகளவில் பெற்றுக் கொண்டுள்ளது.

இருபத்தைந்து வருடங்களிற்கு முன்னால் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட அதே திருட்டுக் கும்பல் மறுபடியும் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றிருப்பதே தமிழ் மக்களின் அரசியல் வீழ்ச்சிக்கான அடையாளம். ஆனால் தேர்தலில் போட்டியிட்ட மற்றவர்கள் எல்லோரும் இவர்களை விட மோசமானவர்கள் என்பதுதான் தீவின் ஒட்டுமொத்த அறம் சார்ந்த அரசியல் வீழ்ச்சிக்கான அடையாளம்.

இலங்கையின் ஆளும்வர்க்கம், பிராந்திய, உலகளவிலான அதிகாரவர்க்கத்திற்கு முழு நாட்டினையும், நாட்டு மக்களின் இறைமை யையும் தாரைவார்த்து வருவது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பொதுச் சொத்துக்கள் பன்னாட்டு நிறுவனங் களிற்கு விற்றுத்தள்ளப்படுவதாலும் உலக வங்கி யிடமும் சர்வதேச நாணய நிறுவனத்திடமும் மேற்கு நாடுகளிடமும் அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கை அரசு வகை தொகையில்லாமல் கடன்களை வாங்குவதாலும் இலங்கையின் மீது வல்லாதிக்கவாதிகளின் பிடி இறுகிக்கொண்டே வருகிறது. இவற்றைச் செய்து கொடுப்பதால் இலங்கை அரசின் அதிகார வர்க்கமும் நாட்டின் மிகச்சில செல்வந்தக் குடும்பங்களும் ஊழல் பணத்தாலும் ஒப்பந்தக் கூலிகளாலும் கொழுத்துப் போய்க் கிடக்கிறார்கள்.

இது தவிர்க்க முடியாது என்று வாதிடுபவர்களும் உள்ளனர், இன்றைய சர்வதேச அரசியல் சூழல், மறு காலனியாக்கம், உலகமயமாக்கம் போன்ற விடயங்கள், இலங்கையில் எந்தளவிலான தாக்கத்தையும் அனுகூலத்தையும் பிரதிகூலத் தையும் விளைவிக்கும்?

தவிர்க்க முடியாது என்றால் அதை எதிர்ப்பே இல்லாமல் ஏற்றுக்கொண்டு நாம் அழிந்துபோவதா? உலகமயமாக்கலால் எந்த மூன்றாம் உலக நாட்டு மக்களிற்கும் நன்மை கிடையாது. அது அபிவிருத்தி என மத்தியதர வர்க்கம் மயங்கலாம். தரகு முதலாளிய வர்க்கம் எரிகிற வீட்டில் பிடுங்கலாம். ஆனால் நாட்டின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களிற்கு உலகமயமாக்கம் என்பது பேரழிவே.
இலங்கையின் பொதுத் துறைகளை வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவு கூலியில் தொழிலாளர்களை வதைத்தெடுக்கின்றனர். நாட்டின் சுதந்திர வர்த்த வலயங்களில் தொழிலாளர்களிற்கு எதுவித தொழிற்சங்க உரிமைகளும் கிடையாது. இலங்கைக்குக் கடனை வழங்கும் உலக வங்கி போன்ற நிறுவனங்களும் வல்லாதிக்க நாடுகளும் இலங்கையில் பொதுமக்களிற்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த அரசுக்கு உத்தரவிடுகிறார்கள். மானிய வெட்டினால் உணவுப்பொருட்களின் விலைகள் எகிறிப்போகின்றன.

மருத்துவம், கல்வி, வீடு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏழைகளிற்குத் தூரமாக்கப்படுகின்றன.
இலங்கையின் அரசியல் ஒரு தடத்திலும் இந்தத் தாராளமயமாக்கல் இன்னொரு தடத்திலும் செல்வதில்லை. அவை ஒன்றையன்று ஆழமாகப் பாதிக்கின்றன. இன்றைய இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் என்பது தாராளமயமாக்கலுக்கு எதிரான போராட்டம்தான். இன்றைய தாராளமய மாக்கலுக்கு எதிரான போராட்டம் என்பது இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம்தான்.

இந்தப் பின்னணியில் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம்? சிறுபான்மை இன அரசியல்?

யுத்தத்தால் வாழ்வை இழந்து நிற்கும் மக்களிற்கு மீளவும் வாழ்வை அமைத்துக் கொடுப்பதே இன்றைக்குத் தேவையான அரசியல் என்று சொல்லப்படுகிறது. அந்த மக்களிற்கு மீள் வாழ்வை அளிப்பது மிக முக்கியமான ஒன்றுதான். ஆனால் அத்துடன் தமிழர்களுடைய அரசியல் நின்றுவிட வேண்டும் என்று இலங்கை அரசு மட்டுமல்ல மற்றைய அரசியல் கட்சிகளும் விரும்புவதுதான் கொடுமை. நாட்டுடைய அபிவிருத்தியை முன்னிறுத்தி எப்போது பார்த்தாலும் சனாதிபதி பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அபிவிருத்தி என்று சொல்வதெல்லாம் பொதுத் துறைகளை பன்னாட்டு நிறுவனங்களிற்கு விற்பதும் தாளமுடியாத கடன் சுமைக்குள் இலங்கையை அமிழ்த்தி விடுவதும்தான் என முந்தைய பதிலில் உங்களிற்குச் சொல்லி யிருக்கிறேன்.

இந்த மீள்வாழ்வு, அபிவிருத்தி போன்ற போர்வைக்குள் சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினையை மூடி மறைத்துவிட அரசு முயற்சிக் கிறது. அரசு ஆதரவுச் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும் இந்த விடயத்தில் அரசுக்கு ஒத்துழைக்கிறார்கள். உண்மையில் இன்று மிகுந்த பலத்தோடு இருக்கும் மகிந்தவின் அரசை எதிர் கொள்வதற்குச் சிறுபான்மையினரிடம் ஒரு அரசியல் சக்தியோ தலைமையோ கிடையாது.

இனப்பிரச்சினைக்கான தீர்வாக எதைத்தான் கருதுகிறீர்கள்?

தீர்வென்றெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஏதும் கிடையாது. இங்கே பிரச்சினைதான் இருக்கிறது. நாட்டின் இறைமை குறித்தோ, சிறுபான்மை இனங்களிற்கு நீதியான தீர்வு கிடைக்க ஒரு நேர்மையான அரசியல் வேலைத் திட்டத்தை உருவாக்குவது குறித்தோ எந்த அரசியல் கட்சிக்கும் அக்கறை கிடையாது. அதிகாரத்துக்கும் பொதுச் சொத்துகளைக் கொள்ளையடிப்பதற்குமான நெடிய அரசியல் சூதாட்டத்தையே அரசியல் கட்சிகள் நடத்திக்கொண்டிருக்கின்றன. சிறுபான்மையினரின் கட்சிகள், ஜே.வி.பி, பொதுவுடமைக் கட்சிகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். எவையும் யோக்கியம் கிடையாது. கடந்த வருடம் வன்னியில் இலங்கை அரசு மாபெரும் இனப் படுகொலையை பொதுமக்கள்மீது கட்டவிழ்த்து விட்டபோது எந்த அரசியல் கட்சி மக்களுக்காகப் பேசியது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே யுத்த நிறுத்தத்தைக் கேட்டது.

கூட்டமைப்புக்கு மக்கள்மீது அக்கறையிருப்பின் மக்களை விடுவிக்குமாறு புலிகளிடமும் கேட்டிருக் கும். இன்றைக்கு நியாயம் பேசும் சம்பந்தனோ மாவை சேனாதிராசாவோ அன்று புலிகளிடம் மக்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைக்க வில்லையே. அன்றும் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தானே, அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்திலோ வெளியில் மக்களைத் திரட்டியோ எதுவித போராட்டத்தையும் நடத்த வில்லையே. ஆகக் குறைந்தது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கூடத் துறக்கவில்லையே. இவர்கள் இம்முறையும் நாடாளுமன்றத்திற்குச் சென்று எதையும் சாதிக்கப்போவதில்லை. தமிழ் மக்களிற்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப் பதற்கு இவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் கிடையாது.

முன்பு ஆயுத இயக்கங்களாயிருந்து இன்றைக்கு அரசியல் கட்சிகளாக மாறியிருக்கும் அமைப்பு களிடமும் சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எந்த அரசியல் வேலைத் திட்டமும் கிடையாது. அகதிகளுக்கு நிவாரணம், மீள்குடியேற்றம் என்பதற்கு அப்பால் அவை அரசியல்ரீதியாக முன்னே செல்லத்தயாரில்லை. மறுபடியும் சொல்கிறேன் நிவாரணமும் மீள் குடியேற்றமும் அவசியமானவைதான். ஆனால் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகளும் மிக முக்கியமானவையே. நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதுதான் அரசியல் கட்சிகளுடைய வேலையென்றால் தமிழர்களுக்கு கட்சிகளே வேண்டியதில்லை. செஞ்சிலுவைச் சங்கமே தமிழர்களிற்குப் போதுமானது. இதில் இன்னொரு நன்மையுமுண்டு. செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளை வானில் ஆட்களைக் கடத்துவதில்லை. ஆட்களைக் கடத்தி வைத்துக்கொண்டு பணயத்தொகை கேட்பதுமில்லை, பணயத்தொகை கிடைக்கா விட்டால் கொல்வதுமில்லை.

இன்றைய நிலையில் எந்தவகையான அரசியல் வேலைத் திட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

ஓர் இடதுவகைப்பட்ட எதிர்ப்பு அரசியல் இயக்கம் நமக்கு இன்று மிக அவசியமானது. அதை எங்கிருந்து தொடங்குவது என்பதெல்லாம் கடும் சிக்கலான பிரச்சினையே. மாற்று அரசியல் செயற்பாடுகளை கொடும்கரம் கொண்டு அடக்கத் தயங்காத சர்வ அதிகாரமும் பெற்ற மகிந்த ராஜபக்சவின் அரசை எதிர்ப்பதும் அதற்கு எதிராக மக்கள்திரளை அணிதிரட்டுவதும் மிகக் கடினமான பணிகளே. இலங்கை அரசை விமர்சிப்பவர்களும் பத்திரிகையாளர்களும் இன்றும் நாட்டைவிட்டு தப்பியோடிக்கொண்டிருக்கையில் மாற்று அரசியல் முன்னெடுப்பு என்பது இப்போதைக்கு நடைமுறைச் சாத்தியமில்லாதது போன்று தோற்றமளிக்கலாம். அப்படியானால் எதுதான் சாத்தியம் என்ற கேள்வியிருக்கிறதல்லவா! மகிந்த ராஜபக்சவின் அரசோடு அணைந்துபோய் அரசியல் செய்வதுதான் புத்தியான காரியம் என்று சில தமிழ் அறிவாளர்கள் சொல்கிறார்கள். அரசோடு அணைந்துபோய் எதைச் சாதித்துவிட முடியும். வீதிகளைத் திருத்துவதும் கூடாரங்கள் அமைக்க தகரங்கள் பெற்றுக் கொடுப்பதுமா அரசியல் செயற்பாடுகள். இவையா ராஜபக்ச அரசின் தமிழ் மக்களுக்கான தீர்வுகள். தாங்கள் யுத்தத்தில் அழித்தவற்றை மக்களின் வரிப்பணத்தில் தங்கிநிற்கும் அரசாங்கம் மறுபடியும் செப்பனிடுவது மிகச் சாதாரணமான செயல். இதை அரசின் சாதனையாகவும் கருணையாகவும் கொண்டாடுபவர்களை என்ன சொல்வது!

சோசலிஸப் புரட்சி போன்ற கனவுகள் குறித்தெல்லாம் நான் பேசவில்லை. சனநாயகமே அற்ற பயங்கரவாத அரசை எதிர்த்து இடது அரசியலைக் கட்டியமைப்பது குறித்தே நான் பேசுகிறேன். இது சாத்தியமில்லாமல் கூட இருக்கலாம். ஆனால் இனவாத அரசின் கால்களை நக்குவதும், அபிவிருத்தி, புனரமைப்பு என்ற பெயர்களில் சிறுபான்மை இனங்களின் உரிமை கோரிய அரசியலை கருணை கோரிய அரசியலாய் சிதைப்பதும்தான் இலங்கையில் சாத்தியமென்றால் நான் சாத்தியமற்றதையே தேர்ந்தெடுக்க விரும்பு கிறேன். சாத்தியமாகும் தீமையைவிட சாத்தியமாகாத நன்மை எப்போதுமே சிறந்தது.

சாதிய அரசியலை முன்னிறுத்துவதும், சாதி யழிப்பு அரசியலுக்கு குரல் கொடுப்பதும் வெவ்வேறானவை, இந்த வேறுபட்ட அரசியல் போக்கை, சாதியம் தொடர்பான நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஈழத்தைப் பொறுத்தவரை ஆதிக்க சாதியினர் எப்போதுமே எல்லாவற்றிலும் சாதியை முன்னிறுத்தி யே செயற்படுகிறார்கள். வெளிப்படையான சாதிச் சங்கங்கள் அவர்களிடம் இல்லாவிட்டாலும் அரசியல், பொருளியல், கல்வி, மதம் என அனைத்து சமூக நிறுவனங்களும் அவர்கள் வசமே உள்ளது. அங்கே ஒவ்வொரு நிறுவனங்களும் மறைமுகமான ஆதிக்க சாதியச் சங்கங்களே. புகலிடத்தில் கூட இந்துக்கோயில்களும் பெரும்பாலான ஊர்ச் சங்கங்களும் பழையமாணவர் சங்கங்களும் மறை முகமான ஆதிக்கசாதிச் சங்கங்களே.

ஆனால் அதே ஆதிக்க சாதியினர்; சாதி யழிப்பை முன்னிறுத்தும் தலித்துகள் அமைப் பானால் தலித்துகளின் அமைப்புகள் மீது சாதிச் சங்கங்கள் என்ற முத்திரையைக் குத்துகிறார்கள். ஆதிக்கசாதியினர் சாதியத்தைப் பாதுகாக்க அமைப்பாகிறார்கள். தலித்துகள் சாதியத்தை ஒழிக்க அமைப்பாகிறார்கள். இன்றைய சிறுபான்மைத் தமிழர் மகாசபையோ, தலித் சமூக மேம்பாட்டு முன்னணியோ சாதிச் சங்கங்கள் இல்லை. அவை ஒரு தனித்த சாதிக்கான அமைப்புகள் இல்லை. அவை தீண்டாமைக்கு உட்பட்ட அனைத்து சாதிகளையும் இணைத்துச் செல்வதற்கான அமைப்புகளே.

வெள்ளாளர்கள், பார்ப்பனர்கள் போன்ற ஆதிக்க சாதி அறிவுஜீவிகள் இப்போது தங்களைத் தலித் அமைப்புகள் புறக்கணிப்பதாக மூக்குச் சிந்த ஆரம்பித்திருக்கிறார்கள். சாதியழிப்பில் தங்களுக் கும் அக்கறையிருக்கிறதென்றும் அதைத் தலித்துகள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். அவ்வாறான அக்கறையுள்ளவர் களிற்கு தலித்துகளிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. ஏனெனில் தலித்துகள் சாதி இழிவு நீங்கவேண்டும் என்ற உணர்மையுடனே இருக்கிறார்கள். இந்த ஆதிக்கசாதியினர் தங்கள் சொந்தச் சாதியினரிடத்தில் சாதியத்திற்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்யட்டும். அதைச் செய்து முடிக்கவே அவர்களிற்கு ஆயுள் போதாது. தங்கள் சொந்தச் சாதியினரிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படும் சாதியச் சங்கங்களை அவர்கள் ஒழிக்க முயற்சி செய்யட்டும். அதன்பின்பு தலித்துகள் வைத்திருப்பது சாதியச் சங்கமா அல்லது சாதியழிப்புச் சங்கமா போன்ற விவாதங்களில் அவர்கள் ஈடுபடலாம்.

எழுத்திற்கான அங்கீகாரம், அங்கீகார மறுப்பு பற்றிய மனச்சிக்கல்கள் தமிழ் எழுத்துலகில் தொடர்ந்தும் நிலவி வருகிறது, ஒரு படைப்பாளன் என்ற வகையில் இந்த விடயத்தில் உங்கள் அனுபவம்தான் என்ன?

எழுத்தை அங்கீரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டே அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதால்தானே வருகிறது. என்னைப்பொறுத்தவரை அங்கீகாரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு பயிரும் பண்ண முடியாது என்றுதான் கருதுகிறேன். என்னுடைய எழுத்துகள் நிராகரிப்புகளையே அதிகம் பெற்றிருக் கின்றன. துரோகி, அரசாங்கக் கைக்கூலி என்று எத்தனை பட்டங்கள் என்மீது சுமத்தப்பட்டன. மறுபுறத்தில் ‘கொரில்லா’ வெளியானபோது அது புலிகள் ஆதரவு நாவல் என்று கற்சுறா, எம்.ஆர். ஸ்டாலின் போன்றவர்கள் விமர்சித்தார்கள். அய்ந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத பிரதியது என்று எழுதினார் கற்சுறா. ஊடகப் பலத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் என்னுடைய எழுத்துகளை துரோகி என்ற ஒரு சொல்லினால் நிராகரித்துச் சென்றனர். இதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. இலக்கியத்தின் நோக்கம் அங்கீகாரத்தைக் கோருவதாக இருக்கக்கூடாது.

அங்கீகாரத்தை நோக்கி எழுத ஆரம்பித்தால் அங்கேயே சமரசம் தொடங்கி விடும். அதன்பின்பு அங்கே இருப்பது இலக்கிய மல்ல. அங்கேயிருப்பது அங்கீகாரம் கோரிய வெறும் விண்ணப்பம் மட்டுமே. நான் எனது நூல்களுக்கு முன்னுரை கூடப் பெறுவதில்லை. எனக்கு அந்த அங்கீகாரம்கூட வேண்டியதில்லை. இதையெல்லாம் நான் எதோ படைப்புத் திமிரினால் பேசுவதாக நீங்கள் தயவு செய்து கருதக் கூடாது.
நான் இலக்கியத்தை உச்சமான அழகியலோடு எழுகிறனோ இல்லையோ நான் உண்மையை எழுதுகிறேன். அதை மட்டுமே எழுதுகிறேன். என்னுடைய அரசியல் கருத்துகளைப் பரப்புரை செய்யும் ஆனால் அளவில் சற்றுப் பெரிதான துண்டுப் பிரசுரங்களாகவே நான் எனது கதைகளைக் கருதுகிறேன். அந்த அரசியற் கருத்துகள் பெருமளவில் நிராகரிப்பை பெறக்கூடியவை என்று தெரிந்தே நான் எழுதுகிறேன். அதனால் அங்கீகாரம் ஒரு பிரச்சினையே கிடையாது. கிடைத்தால் மகிழ்ச்சி, அவ்வளவுதான். அதற்காக இந்தியாவில் அங்கீகரிக் கிறார்களில்லை, இங்கிலாந்தில் அங்கீகரிக்கிறார் களில்லை என்று ஒரு படைப்பாளி புலம்பிக் கொண்டா இருப்பது. என்னயிது அழுகுணித்தனம்! படைப்பாளி என்றால் ஒரு கட்ஸ் வேண்டாமா!

புலம்பெயர் இலக்கியச் சூழல் எப்படியிருக்கிறது?

புலம்பெயர் இலக்கியத்தின் மையம் என முன்னர் பிரான்ஸைச் சொன்னார்கள். அப்படியரு மையம் இருந்திருந்தால் அது இப்போது கனடாவுக்கு நகர்ந்திருக்கிறது என்று கருதுகிறேன். டி.சே.தமிழன், பிரதீபா, அருண்மொழிவர்மன், மெலிஞ்சிமுத்தன்  என்று வாசிப்பிலும் எழுத்திலும் தீவிர ஈடுபாடுடைய இளைய தலைமுறையன்று அங்கிருக்கிறது. அ.முத்துலிங்கம், செழியன், செல்வம் அருளானந்தம், சேரன், சுமதி ரூபன், சக்கரவர்த்தி, ஜெயகரன், தேவகாந்தன், திருமாவளவன் போன்றவர்களும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

புகலிட இலக்கியம் தேக்க நிலையை அடைந் திருக்கிறது என்று சொல்பவர்களுமுண்டு. எனக்கு அந்தக் கருத்தில் உடன்பாடு கிடையாது. முற்போக்கு இலக்கியம், தூய இலக்கியம் என்ற இரு வகைகளைத்தான் நீண்டநாட்களாகப் புகலிடத்தில் எழுதிக்கொண்டிருந்தார்கள். இப்போது பெருங்கதை யாடல்களின் வன்முறையைப் புரிந்துகொண்டு விளிம்புநிலைகளை முன்னிறுத்திய பிரதிகள் உருவாகி வருகின்றன என்றே கருதுகிறேன். தமிழ்த் தேசியக் கருத்தியலும் புலிகள் மீதான அச்சமும் புகலிட இலக்கியத்தை ஆட்டிப்படைத்த காலத்தில் அரசியல் சரியும் துணிவுமே எழுதுவதற்கான முன்நிபந்தனை யாகப் புகலிட இலக்கியத்திற்கு இருந்தது. இலக்கிய அழகியலின் மதிப்பீடுகளின்படி நமது பிரதிகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் ஓர் கொடூரமான அடக்குமுறை நிலவிய காலத்தில் அதை சமரசமின்றி எதிர்த்து நின்றது என்ற பெருமை புகலிட இலக்கியத்திற்கு உண்டு. இப்போது அந்த அடக்கு முறையும் அற்றுப்போன சூழலில் புகலிட இலக்கியம் மேலும் தழைத்துவரும் என்றே எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் சினிமா விமர்சனங்களும் எழுதியிருக் கிறீர்கள். தீவிரமான எம்.ஜி.ஆர் இரசிகராகவுமிருக்கிறீர்கள். அண்மையில் தமிழ் சினிமாவில் பணியாற்ற தமிழகத்திற்கும் சென்றிருந்தீர்கள், தமிழ்ச் சினிமா குறித்த உங்களின் பார்வை குறித்துச் சொல்லுங்கள்?

எனக்குத் திரைப்படக்கலை குறித்த கோட்பாடு களோ காட்சி ஊடக நுட்பங்களோ தெரியாது. சர்வதேசச் சினிமாக்கள் குறித்துப் போதிய பரிச்சயமும் எனக்குக் கிடையாது. நான் எழுதிய திரைப்பட விமர்சனங்கள் திரைப்படக்கலையை மையப்படுத்தியவையல்ல. அந்தத் திரைப்படங்கள் திரைப்படத்திற்குப் புறம்பாக உருவாக்கிய அரசியல் உரையாடல்களை மையப்படுத்தியே நான் அந்த விமர்சனங்களை எழுதினேன். எனினும் இப்போது சரமாரியாக இலக்கிய இதழ்களிலும் இணையங் களிலும் எழுதப்படும் சினிமா விமர்சனங்களைப் படிக்கையில் மேத்தாவின் வரிகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “நாடு இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் நாங்களே மறுபடியும் நாடாளலாம் என்று நினைக்கிறோம்” எனச் ‘செருப்பு’ச் சொன்னதாக அந்தக் கவிதை இருக்கும். நான் கூட ‘அங்காடித் தெரு’ சி.டி.க்குச் சொல்லிவிட்டிருக்கிறேன். கிடைத்ததும் விமர்சனம் எழுதிவிட வேண்டியதுதான்.

பொதுவாக இலக்கியத்தில் ஒருவரை இன்னொரு வர் எழுத்தால் காலிபண்ணிவிடுவது என்பது நடவாத ஒன்று. ஆனால் அதை நடத்திக்காட்டியவர் சாரு நிவேதிதா. முன்பு தமிழ் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து மோசமான திரைப்பட விமர்சனங்களை எழுதிவந்த பேராசிரியர் அ.ராமசாமியை அதைவிட மோசமான திரைப்பட விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் காலிபண்ணியவர் சாரு நிவேதிதாவே. குரு, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களுக்கு சாரு நிவேதிதா எழுதிய விமர்சனக் கட்டுரைகளைப் படிக்கும் ஒருவர் தமிழ்த் திரைப்படங்களை விட அவைகுறித்த விமர்சனக் கட்டுரைகள் படுகேவல மாயிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

எனக்கும் சினிமாவிற்குமான தொடர்பு நிரம்பவும் உணர்வுபூர்வமானது. மிகவும் பின்தங்கிய ஒரு தீவில் வளர்ந்தவன் நான். எங்கள் கிராமத்தில் எழுபதுகளில் நாங்கள் எல்லோரும் கொஞ்சம் ‘அடிமைப்பெண்’ எம்.ஜி.ஆர். போலத்தான் அங்கே வளர்ந்து கொண்டிருந்தோம். கடவுள், சாதியம், வறுமை, பெண்கள் கணவன்மார்களால் வதைக்கப்படுவது எல்லாமே இயற்கையானவை, மாற்றமுடியாதவை என்ற மனநிலைதான் எங்களுக்கிருந்தது. இதை மறுத்துப் பேச அங்கே யாருமில்லை. பத்திரிகைகள் படிக்கும் வழக்கமெல்லாம் அங்கே கிடையாது. கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கால்கள் இந்த 2010வரை எனது கிராமத்தை மிதித்ததேயில்லை.

சாதி ஒழிக்கப்பட வேண்டியது, பணக்காரன் ஏழையைச் சுரண்டக்கூடாது, தாயை மதிப்புச் செய்ய வேண்டும் என்று எனக்கு எம்.ஜி.ஆரின் படங்களே முதன் முதல் சொல்ல நான் கேட்டேன். கடவுள் இறந்துவிட்டார் என நீட்ஷே சொன்னாராம். ஆனால் எனக்கு அதை முதலில் கலைஞர் கருணாநிதிதான் சொன்னார். கிராமத்தின் திருமண வீடுகளில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிக் குழாய்களின் வழியே வந்த கலைஞரின் திரைப்பட வசனங்களே கடவுள் இல்லையென்று எனக்கு முதலில் அறிவித்தன. ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘ரத்தக் கண்ணீர்’ போன்ற படங்களின் வசனங்களைச் சுருக்கி ஒருமணிநேர ஒலிநாடாவில் பதிவுசெய்து ஒலிபரப்புவார்கள். அதை ஒலிச் சித்திரம் என்போம். மேலே சொன்ன ஒலிச் சித்திரங்களுடன் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’, ‘திருவிளையாடல்’, ‘வசந்தமாளிகை’ போன்ற படங்களின் வசனங்கள் எனக்கு அப்போது தலைகீழ் பாடம். எம்.ஜி.ஆரின் தனிப்பாடல்கள் எல்லாமே கரைந்தபாடம். எந்தப் படமென்றாலும் ரசித்துப் பார்த்தேன். எந்தப் பாடலென்றாலும் மனமுருகிக் கேட்டேன். இன்றுவரை அந்தப் பழக்கம் என்னில் தொடர்கிறது. இப்போது ரசித்துப் பார்க்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் சகித்துக்கொண்டு பார்க்கிறேன். ஏதாவது ஒரு படத்தை பார்க்கத் தவறிவிட்டால் மனது பதற்றமாகிவிடுகிறது. அந்தப் படத்தில் ஏதாவது ஒரு நல்ல அம்சமிருந்து நான் தவறவிட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமது.

வெறுமனே படங்கள் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வதுமில்லை. திரைப்பட நடிகர்கள், பாடகர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் குறித்த விபரங்களையும் எனது மூளை எப்படியோ துல்லியமாகத் திரட்டி வைத்துக்கொள்கிறது. படிக்கும் ஒரு கவிதையோ அரசியல் கட்டுரையோ அடுத்துச் சில நாட்களிலேயே மறந்துபோகையில் இந்த விபரங்கள் மட்டும் என் மண்டையிலேயே அழியாமல் தங்கிவிடுகின்றன. இளமையில் கல்வி சிலையில் எழுத்தென்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் திராவிட இயக்கத்தினர் திரைப்படத்துறையில் இயங்கிய காலத்தையே நான் உச்சமான காலம் எனச் சொல்வேன். திராவிட இயக்கத்தினரின் சினிமாவும் இலக்கியமும் ஒரு வரலாற்றுக் கறை என்று சொல்பவர்களோடு எனக்கு உடன்பாடு கிடையாது. அவை வரலாற்றின் கொடை என்றே நான் சொல்வேன். தந்தை பெரியார் போல “சினிமாவை ஒழித்தால்தான் நாடு உருப்படும்” என்பவர்கள் சினிமாவைத் திட்டும்போது சேர்த்து திராவிட இயக்கத்தினரின் சினிமாவையும் திட்டினால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்றைய வணிகச் சினிமாக்களைப் பாராட்டி விமர்சனங்கள் எழுதுபவர் களிற்கும் அந்தச் சினிமாக்களில் பங்கெடுப்பவர் களுக்கும் திராவிட இயக்கத்தினரின் சினிமாவைக் குற்றஞ் சொல்ல எந்த அருகதையும் கிடையாது.

திராவிட இயக்கத்தினருக்குப் பிறகு இயக்குனர் பாரதிராஜாவின் பங்களிப்பே முதன்மையானது. ‘பதினாறு வயதினிலே’ படத்தில் தமிழ் வாழ்வையும் பண்பாட்டுக் கூறுகளையும் நெருங்கிவந்தவர் ‘கிழக்கே போகும் ரயில்’-ல் கதைநாயகனாக ஒரு முடிதிருத்தும் தொழிலாளியை சித்திரித்து சாதிய ஒடுக்குமுறையை மையப்படுத்தி அன்றைக்கான திரை அழகியலோடு படத்தை உருவாக்கியிருந்தார். ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கருத்தம்மா’ என்று சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி அவர் படங்களை உருவாக்கியிருக்கிறார். அவரை இன்னும் தாண்ட முடியாமல் தமிழ்ச் சினிமா சடமாகக் கிடக்கிறது என்பதுதான் என் மதிப்பீடு.

நீங்கள் விடாக் குடிகாரன் என்றும், உங்கள் எழுத்து ஆளுமையை பெண்களின் உடல் மீதான கவர்ச்சி வலையாக கொண்டிருக்கிறீர்கள் என்றும் குற்றச்சாட்டுகளும் கருத்துக்களும் உலாவு கின்றனவே?

இதெல்லாம் ஒரு கருத்தா பௌஸர்? குடிப்பது என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா? எனக்கும்தான் குடிக்காதாவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஆனால் அதை நான் குற்றச்சாட்டாகச் சொல்ல முடியுமா? இதெல்லாம் அவரவர் தனிப் பட்ட விருப்பங்கள். நான் குடித்துவிட்டு மற்றவர் களைத் தொந்தரவு செய்யாதவரை மற்றவர்களிற்கு என் குடிப்பழக்கத்தை விமர்சிக்க எந்த உரிமையும் கிடையாது. போதையில் உணர்வுகள் மிகையாகத் தூண்டப்படுவது உண்மையே. போதையால் கோபம், வெறுப்புப் போன்ற உணர்வுகள் மட்டுமல்ல அன்பு, நட்பு, காதல் போன்ற நல்லுணர்வுகளும் மிகையாகத் தூண்டப்படுகின்றன. நாம் எந்தப் பக்கத்தில் என்பதுதான் கேள்வி. நான் எல்லோருடைய மகிழ்ச்சியையும் கருதிக் குடிப்பவன்.

“ஒருவன் மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விரும்புகிறானோ அதைப் போன்றே அவனும் மற்றவர்களிடம் நடந்துகொள்வது தான் ஒழுக்கமாகும்” என்பார் தந்தை பெரியார். இதை தவிர்த்து காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடு களும் கலாசாரத் தளைகளும் கிடையாது. எனது எழுத்து ஆளுமையைப் பெண்கள் மீதான கவர்ச்சி வலையாகக் கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம் கருத்தோ விமர்சனமோ கிடையாது. அவை அருவருக்கத்தக்க இன்னும் சொன்னால் பெண்களை வெறும் பண்டங்களாய் மதிப்பிடும் கொழுப்பெடுத்த பேச்சுக்கள்.

இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது. இலக்கிய விமரிசனம் இருவரது உறவைக் கண்காணிக்கும் நாட்டாமைத்தனத்திற்குச் சரிந்திருப் பது கேவலம்.

இனி வேறு தளத்திற்கு செல்வோம். நீங்கள் இந்துத் துவத்தை எதிர்த்து எழுதுவதைப் போன்று இஸ்லாமிய அடைப்படைவாதத்தை எதிர்த்து எழுதுவதில்லை என்றொரு விமர்சனம் கிளம்பி யிருக்கிறதே?

ஈழத்தைப் பொறுத்தளவிலோ அல்லது நான் வாழும் பிரான்ஸிலோ இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற பிரச்சினை தூலமாகக் கிடையாது. இந்த இரு இடங்களிலும் இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. அடிப்படைவாதம் என்பது எந்த மதத்திட மிருந்து வந்தாலும் அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும் எதிர்க்க வேண்டியதுமாகும். நமது சூழலைப்பொறுத்தவரை சாதியத்தின் அடிவேராக இருக்கும் இந்துமதத்தை எதிர்ப்பதற்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன். அதேபோல நான் பிறந்த கத்தோலிக்க மதமும் சாதியால் முழுவதுமாக உள்வாங்கப்பட்ட மதமாகவே உள்ளது. ஈழத்தைப் பொறுத்தளவில் இந்து மதத்திற்கும் கத்தோலிக்க மதத்திற்கும் வேறுபாடுகள் ஏதுமில்லை. இரண்டுமே சாதியத்தைக் காப்பாற்றும் அதிகார நிறுவனங்களே.

ஒரு மார்க்ஸியவாதியாக நான் கடவுள் நம்பிக்கை யற்றவன் என்ற போதிலும் சாதியத்தை ஏற்றுக் கொள்ளாத மார்க்கங்கள் என்றவகையில் எனக்கு பவுத்தத்தின்மீதும் இஸ்லாம்மீதும் ஈடுபாடிருக்கிறது.
அண்மையில் பிரான்ஸில் பர்தா அணிவதைத் தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டதே?

இஸ்லாமிய சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இன்றைய மனித விழுமியங்களிற்கு ஒவ்வாதவை. முகத்திரை இடுவதையெல்லாம் கலாசாரம் அல்லது தனித்த இனக்குழு வழக்கங்கள் என்றெல்லாம் சொல்லி நியாயப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில ஆபிரிக்க இனக்குழுக்களிடம் பெண்களை பாலியல்ரீதியாக அடக்கிவைக்க பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸ் பகுதியைத் துண்டித்துவிடும் வழக்கமிருக்கிறது. பிரான்ஸில் குடியேறி வாழும் அந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூட அதைச் செய்துகொள்கிறார்கள். பிரஞ்சு அரசாங்கம் அந்த வழக்கத்தைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. பிரஞ்சு அரசாங்கம் வரலாற்றுரீதியாகவே ஆபிரிக்க – இஸ்லாமிய விரோத அரசுதான். இதற்காக அவர்கள் இயற்றிய கிளிட்டோரிஸ் துண்டிப்புத் தடைச் சட்டம் தவறென்று சொல்ல முடியுமா? அவ்வகையான துண்டிப்பு ஆபிரிக்க இனக்குழுக்களின் கலாசாரம் என்று சொல்லி நாம் நியாயப்படுத்த முடியுமா? அவ்வாறு பார்த்தால் சாதிப்பாகுபாடு, குழந்தை மணம், தேவதாசி முறை என்பவையைல்லாம் கலாசாரமும் மரபும்தானே. ஒரு இனக்குழுவின் அல்லது மதக்குழுவின் கலாசாரத்திலோ மரபிலோ அந்நியர்கள் தலையீடு செய்யக் கூடாது எனச்சொல்லி அவற்றைக் கேட்டுக்கேள்வியில்லாமல் விட்டு வைக்கலாமா?

பிரான்ஸில் வாழும் பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்ககளில் முக்காடு அணிபவர்கள் ஒரு விழுக்காடுக்கும் குறைவாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன். அவ்வாறானால் முகத்திரை அணியாத பெரும்பான்மையினர் மார்க்க விரோதி களா? மரபு, கலாசாரம் எல்லாமே ஆண்களால் கற்பிக்கப்பட்டவை. ஆண்களால் சட்டமாக்கப் பட்டவை. மரபும் கலாசாரமும் ஆண்களால் பெண்கள்மீது சுமத்தப்பட்டவையே தவிர பெண்களின் கருத்தொருமிப்புடன் ஏற்படுத்தப் பட்டவையல்ல. ஒரு சமூகத்தில் உள்ள உள் ஒடுக்குமுறைகள் மீது உள்ளிருந்தே போராட்டம் நடத்தப்படுவதுதான் மிகச் சரியாக இருக்கும். அதற்காக வெளியிலிருந்து வைக்கப்படும் விமர்சனங் கள் எப்போதுமே சரியற்றவை என ஆகிவிடாது.

பாரிஸ் வாழ்க்கை உங்கள் எழுத்தின் இன்னொரு தளமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. கலைத் துறையை சேர்ந்த உங்களுக்கு இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது? நெருக்கடியாக இந்த வாழ்க்கையை உணர்கிறீர்களா? இதற்கிடையில் எழுத வாசிக்க எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?

நான் பிள்ளை குட்டி, வீடு வாசல் எனப் பொறுப்புகளற்ற மனிதன். எனது தேவைகளும் மிகக் குறைவானவை. அவ்வப்போது வேலைக்குச் செல்வது, வேலைக்குச் செல்லாதபோது வேலை யிழப்புக் காப்பீட்டுப் பணத்தில் வாழ்வது என்று குத்துமதிப்பாக வாழ்கிறேன். அதனால் வாசிக்கவும் எழுதவும் பயணங்கள் செய்யவும் எனக்கு நேரங்கள் கிடைக்கின்றன.

யுத்தத்தின் முடிவுக்குப்பின் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குச் சென்று வருகிறார்கள். நீங்கள் இலங்கைக்கு செல்லாததற்கு விசேட காரணங்கள் உண்டா?

நான் அரசியல் அகதிக்கான கடவுச் சீட்டையே வைத்திருக்கிறேன். அந்தக் கடவுச் சீட்டுடன் நான் சட்டப்படி இலங்கைக்குள் நுழைய முடியாது. வேறுவழிகளில் இலங்கைக்கு போக முயற்சிக்கலாம் தான். ஆனால் எனது பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் எனக்கு இருக்கின்றன. யுத்தம்தான் முடிந்திருக்கிறது. ஆனால் கடத்தல்களும் கொலைகளும் இன்னமும் நடந்தபடியேதான் உள்ளன. ராஜபக்ச அரசாங்கம் புலிகளின் பயங்கரவாதத்தைத்தான் முடித்து வைத்திருக்கிறது. ஆனால் அரசின் பயங்கரவாதமும் அரசோடு இணைந்து செயற்படும் தமிழ் ஆயுத இயக்கங்களின் பயங்கரவாதமும் இன்னமும் அங்கே இருக்கின்றன. வயதாகிறதல்லவா! இளமையிலிருந்த துணிவும் சாகசங்களின் மீதான விருப்பும் வரவர எனக்குக் குறைந்துகொண்டே வருகின்றன.

-பௌசர்.

Advertisements

Entry filed under: நேர்காணல்.

சமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள் பகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: