யாரோ போட்டு முடித்த தானாகக் கிடைத்த இரவுச்சட்டை – துவாரகன்
June 2, 2010 at 12:27 pm Leave a comment
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
ஒரு நாள்
என் வீடு இருந்தது.
வயல்வெளிக்கு நடுவே
ஆலமர விருட்சம் போல்
அரைக்காற்சட்டையோடு
அண்ணா
டிரக்டர் எடுத்து வயல் உழச்செல்வான்
அப்பா
விதைநெல் விசிற சின்னமாமாவைக் கூட்டிப் போவார்
மாலை பட்டி திரும்பும் மாடுகளை அடைக்கவும்
குளத்தில் வரால் மீன் பிடிக்கவும்
சின்னத்தம்பி என்னுடன் வருவான்.
தங்கையும் நானும் கதை பயில
தேக்கமரமும் மலைவேம்பும்
எம்மை ஊஞ்சலில் தாங்கிய நாட்கள்.
மாலையானதும்
மாடுகள் அசைபோடுவது போல்
உறவுகள் சுற்றியிருந்து
அன்பை அசைபோடுவோம்.
அம்மாவும் பெரியக்காவும்
சுவையாகச் செய்த சாப்பாடு.
செய்திக்குப் பின்
அப்பா என்னிடம் தரும் றேடியாவில்
வழிந்து வரும் பாட்டு.
காதில் கேட்கும் எருமைகளின் மேய்ச்சல்த்தூரம்
எல்லாவற்றோடும் நானும் தூங்கிப் போவேன்.
இப்போ
இரண்டு காவலரனுக்கு நடுவில்
மழை வெள்ளம் தரைதட்ட
தொண்டு நிறுவனம் தந்த
படங்கு காற்றில் அடிக்க
எங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட புது நிலத்தில்
அம்மாவின் காய்ந்த விழிகளோடு
நானும் காத்திருக்கிறேன்.
யாரோ போட்டு முடித்து
முகாமொன்றில்
தானமாகக் கிடைத்த
ஒரு இரவுச் சட்டை
என்னை மூடிக்கிடக்கிறது.
24.12.2009, 11:22 *கவிதைத் தலைப்பு அ. முத்துலிங்கத்தினுடையது.
Entry filed under: கவிதை.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed