பேராசிரியர். சுச்சரித கம்லத் – தமிழில்: ஃபஹீமா ஜஹான்

June 2, 2010 at 1:07 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010


இலங்கையின் அறிவுசார் காலாசாரத்தினுள்ளே முக்கியத்துவமுடைய பாத்திரமொன்றை வகிக்கும் ஆளுமை. பல்கலைக்கழக ஆசான்களில் ஒருவராக இருந்து அவர் பல்கலைக்கழகக் கல்வித் துறையில் சிறந்த சேவையைச் செய்தார். சிங்களம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழித்துறைகளிலும் சிறப்புத் தேர்ச்சிபெற்ற புத்திஜீவி ஒருவரான இவர் கீழைத்தேய மேலைத்தேய தத்துவங்கள் மற்றும் அழகியல் துறையிலும் ஆற்றல்மிக்கவர். விவாதமுறைப்படி உண்மையை ஆராயும் மெய்யியல் சிந்தனைகளின் ஊடாகத் தனது திறனாய்வுகளைப் புகுத்தி பொதுவுடமைவாத திறனாய்வாளர் ஒருவராக 80களில் பேராசிரியர் கம்லத் அவர்கள் பிரசித்தி பெற்றிருந்த தோடு இயங்குகின்ற ஒருவராவும் திகழ்ந்தார்.

சிறந்த இலக்கியப் படைப்புக்களையும் மொழிபெயர்ப்புக்களையும் வெளியிட்டு அவர் இருவழிகளில் செய்த இலக்கியச் சேவை விரிந்த பரப்பில் நோக்கப் படுகிறது. தற்கால இலக்கியம்  மற்றும் திறனாய்வுத்துறை செல்நெறிகள் பல்கலைக் கழகங்கல் சார்ந்த விமரிசனங்களுடன் கூடிய அவருடைய கருத்துக்கள்

தற்கால சிங்கள இலக்கியங்களின் செல்நெறி

இலக்கியம் என்பது சமூகத்தில் உள்ள அறிவார்ந்த உரையாடல் ஒன்றாகும். ஆனாலும் இன்று இந்தக் கலையானது முறைசார் கல்வியற்ற, மரபு ரீதியான மொழி அறிவு அற்ற, மேற்கின் மொழி அறிவில் பயிற்சியற்ற வெற்று மனிதர்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது. கடந்த காலங்களில் எமது சிங்கள இலக்கியம் பெருமளவு சிதைவடைந்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணமாக அமைவது மேல்குடி வர்க்கத்தினரின் ஆதிக்க மனோபாவங் கொண்ட செயற்பாடுகளேயாகும். அவர்கள் திட்டமிட்டுச் செய்த செயல் தான் இந் நாட்டில் காணப்பட்ட கல்வி முறையைச் சீர்குலைத்தது. ஆங்கிலக் கல்வியை நாசமறுத்தது.

இன்று இலக்கியக் கலையும் திறனாய்வும் இருண்ட பாதாளமொன்றினுள் வீழ்ந்துள்ளது. இலக்கியம் என்ற பெயரில் இன்று வெளிவந்து கொண்டிருப்பவை சிந்தனைத் தொடர்பற்ற நீளுரைகள் ஆகும். புளித்துப்போன மொழியில் எழுதப்படும் இந்த நூல்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் அரச விருதுகள் எனப் பல்வேறு பெயர்களிலான விருதுகளின் மேல் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்குள் படைப்புத்துறையில் ஈடுபட்டுள்ள அனேகர் தனித்த தீவொன்றில் அநாதரவாகவிடப்பட்ட அகதிகளைப் போன்றுள்ளனர்.

தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் அனேக இலக்கியப் படைப்புகளில் சிறந்த சிங்கள இலக்கியங்களின் விதிமுறைகள் மற்றும் மொழி ரீதியான உள்ளார்ந்த படிமங்கள் தென்படுவதில்லை. புராதன காலத்திலிருந்து தொடர்ந்துவரும் சிறந்த இலக்கியத்திலிருந்து விலகிய தீவாந்திர இலக்கிய மொன்றுதான் இன்று காணப்படுகிறது. இன்று இலக்கியத் திறனாய்வொன்று இல்லை. திறனாய் வாளர்கள் எனக்கூறப் படுபவர்கள்கூட தரம் குறைந்த இலக்கியப் படைப்புகளை மிகைபடுத்திக் கூறி அவற்றை உச்சத்துக்குக் கொண்டு சென்று பிதற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எந்தவொரு திறனாய்வு தொடர்பாகவும் முறையான விதிமுறை யன்றோ தர்க்க ரீதியான வெளிப்பாடொன்றோ புலப்படுவதில்லை. முறையான தளமொன்று இன்றி நூல்களுடன் இருளுக்குள் தட்டுத்தடுமாறிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் இலங்கையின் இலக்கியத் துறையே இன்று குளறுபடியாகிக் கொண்டுள்ளது.

இப்போது இலங்கையில் இலக்கியத் திறனாய் வாளர்கள் இல்லை. இன்றிருப்பது திறனாய்வுக் கோமாளிகள். இந்தத் திறனாய்வுகளினூடாகத் தென்படுவது அவர்களுக்கு எந்தவொரு நுண்ணறிவு சார்ந்த பணியைச் செய்வதற்குமான அறிவோ பயிற்சியோ இல்லயென்பதே. அள்ளுண்டு வரும் புதிய கொள்கைகளுக்கு அடிமைப்படுவது பயங்கரமானது. அக்காலத்தில் எனது திறனாய்வுக் கோட்பாடுகள் யாவும் மாக்ஸியம் சார்ந்தே காணப்பட்டது. ஏதாவதொரு கலை வடிவத்தி லிருந்தும் மனிதன் எதிர்கொள்ளும் இலக்கை ஆய்ந்தறிந்து ஏதோவொரு ஒளிக்கீற்றை வாசகனுக்குப் பெற்றுக் கொடுக்கவே நான் எப்பொழுதும் முயற்சி செய்தேன். அவ்வாறே மனிதன் மிகவும் வெற்றி கரமான மனப்பாங்குடன் வாழ்வதற்கு மேற் கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைவதற்கு ஏதுவாகும் காரணிகள் எவை  என்பதும் எனது திறனாய்வுக் கோட்பாடுகளில் காணப்பட்ட அடிப்படை விடயங்கள் எனக் கூற முடியும்.

அக்காலத்தில் மார்டின் விக்கிரமசிங்ஹ, பேராசியர் எதிரிவீர சரத்சந்திர, குணதாச அமரசேகர  போன்ற எழுத்தாளர்கள் பண்டைய சிறந்த மொழிக்கலையை திறம்படக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதனால் அவர்களது பெரும்பாலான படைப்புகள் தனித்துவமான எண்ணங்களாலும் கொள்கைகளாலும் நிரம்பிக் காணப்பட்டது. ஆனாலும் தற்கால பரம்பரையில் பெரும் பாலானவர்கள் அத்தகைய  ஆழ்ந்த தனித்துவங் கொண்ட கருத்துக்களை முன்வைப்பவர்கள் அல்லர். அழுக்கடைந்த மொழியினால் எழுதும், உரையாடும் அவர்களில் பெரும்பாலானோர்களிடத்தே அத்தகைய ஆற்றல்கள் இல்லை. போலியான  கற்பனாவாதங் களை இரு கரம் நீட்டித் தழுவிக் கொள்வதற்கு நாங்கள் அவசரப்படத்தேவையில்லை.

குணதாச அமரசேகர பற்றிக் கூற வேண்டும்  தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த இயக்கியவாதியருவர். அது தொடர்பான மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அவ்வாறே எமக்கிருக்கும் சிறந்த கவிஞரும் அவரே. ஆனாலும் அவரது அண்மைக்கால படைப்புகள் தொடர்பாகத் திருப்தியடைய முடியாது. அதனூடாகப் புலப்படுவது அவரது படைப்பாற்றலின் வறுமை நிலைதான். அமரசேகரவின் அண்மைக்காலப் படைப்புகள் வெற்றியளிக்காமைக்குக் காரணம் அவரது கிராமிய கற்பனைகளே. அவர் எப்பொழுதும் கிராமத்து இளைஞனுக்குச் சுயாதீனமான கடமைகள் உண்டென்று தவறாக விளங்கிக் கொண்டார். மத்திய தர வர்க்கத்தின் செயல்கள் எப்பொழுதும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு வால் பிடிப்பதாகும்.

கிராமிய இளைஞர்களின் சொல் செயல்களை எமக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் காணக் கூடியதாக இருந்தது. 71 இன் கிளர்ச்சி, 88, 89 பயங்கரவாதம், மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஊடாக நன்றாக விளங்கியது. இன்று அமர சேகரவின் படைப்பு களினூடாகத் தென்படுவதும் திசைதிருப்ப மொன்றாகும். ஆனாலும் இதனூடாக அமரசேகர எனப்படும் சிறந்த இலக்கியவாதியின் வரலாற்று செயற்பாடுகளைப் புறக்கணித்துவிட முடியாது. எனது சிந்தனையின் படி அவரது இலக்கியப் பங்களிப்புகள் இன்னும் சரியான மதிப்பீடொன்றுக்கு உட்பட வில்லை.

இன்று இந்த நாட்டில் கலை இலக்கியத்தையும் விடவும் திரைப்படக் கலைத்துறையில் குறிப்பிடத் தக்களவு பயனுண்டாக்கத்தக்க வளர்ச்சி அடைந்து வருதைக் காணக் கூடியதாக உள்ளது. ப்ரசன்ன விதானகே, அஷோக ஹந்தகம போன்ற இளம் திரைப்படக் கலைஞர்கள் நவீன கலையை மிகவும் ஆழ்ந்து உள்வாங்கி உயர்ந்த திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். அவர்கள் எப்பொழுதும் சமூகத்தை நவீனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு உந்துதல் பெற்றுள்ளனர். இது நல்ல போக்கொன்றாகும். உதாரணத்திற்கு ப்ரசன்ன விதானகே நெறியாள்கையில் வெளிவந்த ‘ஆகாச குசும்’ திரைப்படமானது சிறந்த பிரயத்தன மொன்றாகும். ஆனாலும் அது தொடர்பாக எழுதப்பட்ட ஆழமான திறனாய்வொன்றை இன்னும் காண முடியவில்லை. இது தவிர ஓவியக் கலைத்துறையில் நவீன கலை வெளிப்பாடுகளால் ஊட்டம் பெற்ற மாற்றுக் கலைவடிவங்கள் ஓரிரண்டு காணக்கிடைக்கின்றன. நவீன கலையையும் வெயியீடுகளையும் சமூகமயப்படுத்தச் சென்ற அனேகமானோரை நோக்கி எப்பொழுதும் ஏச்சுப் பேச்சுக்களும் கல்லடிகளும் பொல்லடிகளும் வந்து விழத்தொடங்கின. நவீன கலை வடிவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சமூகமும் நவீனமடைய வேண்டும்
உண்மையான இலக்கியவாதி என்பவனும் இலக்கியம் என்பதுவும் மானுட வர்க்கத்தில் வளங்களோடும் கருத்துப் பறிமாற்றங்களுடனும் மலர்ச்சியுடனும் வாழ்வதற்காக வகுப்புவாத சமூகத்திற்கும் இயற்கைக்கும் எதிராக எப்பொழுதும் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவனாவான். அவன் மொழியூடாக இந்த வேதனைமிக்க போராட்டத்தை எல்லாத் தரப்பினூடாகவும் மீள் உருவாக்கம் செய்கிறான். அவ்வாறே இந்தப் போராட்டத்தினுள் மனிதர்கள் புதிய அனுபவங்களையும் புதிய பரிமாணங்களையும் புதிய ஆற்றல்களையும் பெற்றுக் கொள்வதைக் காண முடியும். இவை அனைத்தும் இலக்கியப் படைப்பினுள் உள்ளடங்குகின்றன. இதனால் அதனுடன் கூட்டிணைவை மேற்கொள்ளும்  சுவைஞர்களின் அனுபவத் தளத்தின் எல்லைகள் விரிவடைவதற்கும் ஆரம்பிக்கின்றன.

இங்கு மனிதர்கள் தமக்குச் சார்பான வெற்றிகளால்  உற்சாகமும் சார்பான தோல்விகளால் மனத்துயரும் அடைகின்றனர். வகுப்புவாத எதிரிமீது பகைமை கொள்ளுதல், நண்பனிடத்தே கருணை காட்டல், பிரமாண்டமான தடைகளின் எதிரே அச்சமடைதல், வகுப்புவாத எதிரியின் சில நடவடிக்கைகளை சந்தேகத்துடன் பார்த்தல் போன்ற அனைத்து விடயங்களும் இலக்கியத்தினுள் தங்குதடையின்றி வருவதும் நடைபெறுகிறது. அதனால் அதனுடன் தொடர்பு கொள்கின்ற சுவைஞர், இரசிகர், வாசகர் எனும் தரப்பினர்களின் சிந்தனைத் தளங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படவும் கூடும். இதன்படி இலக்கியத்துடன் தொடர்புகொள்கின்ற ஒருவனின் உலகில், உலகமக்களின் வாழ்வுப் போராட்டங் களையும் வாழ்வையும் மெய்ப்பாட்டு ரீதியாகத் தொட்டுணர்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இலக்கியவாதியின் வாழ்க்கையானது முழுமை யானதும் ஆழமானதுமான ஒன்றாக மாறுவதினூடாக அவனது இலக்கியப் பாத்திரமும் மேம்பாட்டை நோக்கி நகரும். ஆனாலும் தற்கால இலக்கியவாதி மேற்கூறப்பட்ட அனைத்தையும் பறிகொடுத்த ஒருவனாவான்.
இலங்கை பல்கலைக்கழகங்கள்

தாய்மொழிக் கல்வி காரணமாக ஆங்கிலம் மாத்திரம் அல்ல சிங்களம் கூட இழக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கையின் கல்வித்துறையானது முழுமையாகவே சிதைந்து போய்க் காணப் படுகின்றது. அநேகமான பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் மானுடவியல் பீடங்கள் தொடர்பாகக் கதைக்கக் கூட எதுவுமற்ற நிலையில் உள்ளன. இந்த நாட்டின் பல்கலைகழகங்களில் உள்ள பெரும்பாலான பேராசிரியர்கள் சிங்கள மொழியைச் சரியாகக் கற்பிப்பதில்லை. இது உண்மைக்குப் புறம்பான தென்று எவரேனும் ஆட்சேபனை தெரிவிப்பார் களேயானால் அவருடன் நான் உரையாடவும் தயாராகவுள்ளேன். இன்று கல்வியானது தடையின்றிச் செல்வதற்குப் பிரதானமான காரணம் தாய்மொழிக் கல்வியாகும்.

பேராசிரியர் சரத்சந்திர போன்ற சிறந்த கல்விமான்கள் பதவி உயர்வுகளை நோக்காகக் கொண்டு நுண்ணாய்வுகளை மேற்கொள்ளவில்லை. நாடகக் கலைஞர், விமர்சகர் மற்றும் இயக்கியவாதி ஒருவராகவும் பிரகாசிக்கின்ற ஆசிரியர் ஒருவராகவும் தான் பெற்றுக் கொண்ட அறிவைப் பங்கிட்டுக் கொடுப்பதற்குப் பேராசியர் சரத்சந்திரர் பெரும் முயற்சிளை மேற்கொண்டார். இதனால் பல்கலைக் கழகத்தினுள்ளும் அதற்குப் புறத்தேயான சமூகத் திலும் உயர்ந்த மதிப்பீடு கொண்ட பரம்பரை யன்று உருவாகியது. ஆனாலும் இன்று பல்கலைக்கழகக் கலாநிதிகளும் பேராசிரியர்களும் காணப்படுவது நாட்டின் பொதுத்தேர்தல் ஒன்று வரும் வேளையில் ஒரு கட்சிக்கு ஆதரவாகக் கையப்பமிடுவதற்கும் பிரத்தியேக வகுப்பு வியாபார நிலையங்களைத் திறப்பதற்குமேயாகும்.

இன்று பல்கலைக் கழகங்களில் புத்திஜீவிகள் இல்லை. இதனால் புதிய கொள்கைகள் தொடர்பாக விவாதங்கள் நிகழ்த்துவதற்கும் அறிவார்ந்த விமர்சனங்களை முன்வைப்பதற்கும் அவர்களுக்கு முடியாதிருப்பது வியப்பானதல்ல. இலங்கையில் புத்திஜீவிகளுக்கிடையிலான பிரிவைப் பற்றிக் கதைப்பதைவிடவும் புத்திஜீவிகள் என்ற குழு வொன்று காணப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து பார்த்தல் அவசியமாகும். புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவும் ஒவ்வொரு வரிடத் தேயும் விலைபோய்க் கொண்டிருக்கின்றனர். புத்திஜீவிகள் எனப்படுவோர் யார் என்பதை நாம் முதலில் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

புத்திஜீவியருவர் எப்பொழுதும் நடைமுறை யிலுள்ள கோட்பாட்டுப் பிரவாகங்களுக்கு  எதிராக எழுந்து நிற்கக் கூடிய ஒருவர். அவர் சம்பிரதாயங் களை மாற்றமுறச் செய்பவர். ஆனாலும் இலங்கை யில் எவ்விடத்திலும் அத்தகைய புத்திஜீவிகளைக் காண்பதற்கில்லை. உலகளவில் அதி புத்திஜீவிகள் வாழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலாவர்கள் கொள்கை விரோதிகளாகச் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

ஆனாலும் பல்கலைக்கழகத்துக்குப் புறம்பாக எழுச்சியடைந்த சுய கற்றலில் ஈடுபடும் இளம் இயக்கங்களும் குழுக்களும் கடந்த காலத்தில் பாழடைந்த வீடுகளில் பாத்திரங்களை போட்டு டைத்துக் கொண்டிருந்தனர். இப்போது அவர்களும் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்

நன்றி: பூந்தி இணையதளம்
சஷி ப்ரபாத் ரணசிங்ஹ

Advertisements

Entry filed under: அயல்.

யாரோ போட்டு முடித்த தானாகக் கிடைத்த இரவுச்சட்டை – துவாரகன் பொதுத் தேர்தலுக்குப் பின் இலங்கையின் அரசியல் -ஒமர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: