சமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்

June 2, 2010 at 5:24 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

1
சமகால ஈழத்து இலக்கியம் என்பது பரந்த தளத்தில் அணுக வேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப் பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம் பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். அத்துடன், இது எதற்கான முடிந்த முடிபுகளோ அல்ல மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற ஈழத்துச் சூழலில், இன்று இலக்கியம் பேசுவது கூட ஒரு வகையில் அபத்தமானதுதான்.

சமகால ஈழத்திலக்கியம் என்பதை 2000ம் ஆண்டுக்குப் பிறகான சில பிரதிகளினூடாக அணுக விரும்புகின்றேன். ஈழத்திலக்கியத்தில், மிக நீண்ட காலமாக புனைவுகளின் பக்கம் தீவிரமாக இயங்கியவர்கள் என, எவரேயையேனும் கண்டு கொள்ளுதல் சற்றுக் கடினமாகவே இருக்கிறது. விமர்சனத்துறையில் ஒரு தொடர்ச்சியும், தொன்மை யும் இருந்ததைப் போல, புனைவுகளின் வழியே நம்மிடையே ஒரு தொடர்ச்சி இருந்ததில்லை. அவ்வாறு இல்லாதது நல்லதா கூடாதா என்பதைப் பிறகொரு தளத்தில் பார்ப்போம். இந்தக் காலப்பகுதியில், ஒரளவு தொடர்ச்சியாக கவிதைத் தளத்தில் தீவிரமாய் இயங்கிவந்த வில்வரத்தினத்தை இழந்திருக்கின்றோம். இன்னொரு புறத்தில் மிகவும் நம்பிக்கை தந்துகொண்டிருந்த எஸ். போஸை மிக இளமவயதில் துப்பாக்கியிற்குப் பலியும் கொடுத் திருக்கின்றோம். ஆகவே ஈழ இலக்கியத்தை வாசிப்புச் செய்யவரும் ஒருவர், புறநிலைக் காரணிகளான, தொடர்ச்சியான போர், இடம் பெயர்தல், சுதந்திரமாக எதையும் எழுத முடியாத சூழல் என்பவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது. இதை விமர்சகர்களுக்கு முக்கியமாய் இந்தியாவில் சொகுசான சூழலில் இருந்து கொண்டு, வருமான வசதிகளுக்காய் கோடம்பாக்கத்தில் புரண்டு கொண்டிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்துவது கடினம்.

ஈழத்திலக்கியம் என்பதே அவற்றின் நிலப்பரப்பு களுக்கும், கலாசார தளங்களுக்கும் ஏற்ப உட்பிரதேசங் களிலேயே வித்தியாசப்படுபவை. உதாரணமாக யாழில் வெளிவரும் படைப்புக்களுக்கு, பிரயோகிக் கும் விமர்சன அலகுகளை மலையகத்தில் முன் வைக்க முடியாது. முற்றிலும் வித்தியாசமான சூழல் மலையகத்தினுடையது. கவிதை எழுதும் மலையகப் பெண்ணொருவர் ஒரு நேர்காணலின் போது, தான் ஒரு படைப்பு எழுதி அனுப்புவது என்றால் கூட 4 மைல் நடந்துவந்தே தபால் பெட்டிக்குள் போட வேண்டியிருக்கின்றது என்பதன், பின்னாலுள்ள புறச்சூழல்களை முன்வைத்தே நாம் மலையகப் படைப்புக்களை அணுக வேண்டியிருக்கின்றது. அதே போன்று வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் களினதும், கிழக்கில் இருக்கும் முஸ்லிம்களினதும் வாழ்வுநிலை என்பதுகூட முற்றுமுழுதிலும் வேறுபடக் கூடியது. இந்த வித்தியாசங்கள் அவர்களின் படைப்புக்களில் ஊடாடுவதை விளங்கிக் கொள்ளாது ஒரு வாசிப்பை நாம் எளிதாகச் செய்துவிட முடியாது. இவ்வாறே முற்றுமுழுதாக வாழ்வு குலைக்கப்பட்டு புதிய நாட்டுச் சூழலில் வாழத் தொடங்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் வேறுவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன.

2
2001ம் ஆண்டு ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ ஒரு புதிய பாய்ச்சலை தமிழ்ச் சூழலில் ஏற்படுத்துகின்றது. கதைக் களத்தில் மட்டுமில்லாது புனைவின் மொழியிலும் அது வித்தியாசத்தைக் கொண்டிருந்தது. அழுது வடிந்து கொண்டிருந்த மொழியில், கதை சொல்லிக் கொண்டிருந்த ஈழத்தமிழர் படைப்புக் களத்தில், இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

மிக உக்கிரமான அரசியலை, அங்கதத்தோடு இணைத்துக் கொண்டதால் – எப்போதுமே அரசியல் பேசப்பிடிக்கின்ற தமிழர்களை – அது வெகு விரைவாக தனக்குள் இழுத்துக் கொண்டது. அதே ஆண்டு அ. முத்துலிங்கத்தின் ‘மகாராஜாவின் புகைவண்டி’ காலச்சுவடு பதிப்பாக வருகின்றது. அதற்கு முன் இங்கொன்றும் அங்கொன்றுமாய் முத்துலிங்கத்தின் கதைகளை வாசித்தவர்களுக்கு -முக்கியமாய்த் தமிழக வாசகர்களுக்கு – இப்படி தங்களை எளிதாகப் புன்னகைக்க வைக்கின்ற ஒரு கதை சொல்லி இருக்கின்றார் என்பதை அறிகின்றார்கள்… ஷோபா சக்தியும், முத்துலிங்கமும் புதினங்களில் வாசகர்களின் கவனத்தைக் கோருகின்ற அதேவேளையில், கவிதைகளில் 2000ல் ஆழியாளின் ‘உரத்துப் பேச’வும், பா. அகிலனின் ‘பதுங்குகுழி நாட்களும்’ கவனத்தைப் பெறுகின்றன. காதல் முறிவின்போது என்னிடம் இருந்து எல்லாவற்றையும் திருப்பிப் பெறுகின்ற நீ, எப்படி எனக்குத் தந்த முத்தங்களையும், விந்துக்களையும் திருப்பிப் பெறுவாய் என்று அறைந்து கேட்கின்ற கேள்விகள் ஆழியாளிடமிருந்து வெளிவருகின்றது, பா. அகிலனோ இழந்து போன காதலை, மஞ்சள் சணல் வயலில் விழுகின்ற சூரியனாய் ஆக்குகின்ற படிமங்களில் எழுதினார்.

ஷோபாசக்தியைப் போல, மிகப் பெரும் பாய்ச்சலை புனைவுத்தளத்தில் நிகழ்த்தக் கூடியவர் என்று, மிகவும் நம்பப்பட்ட சக்கரவர்த்தி ‘யுத்தத்தின் இரண்டாம் பாகத்தோடு’ அவர் ஒருவித உறக்க நிலைக்குப் போனது ஈழத்து இலக்கியப்பரப்பில் ஏமாற்றமே. யுத்தத்தின் இரண்டாம் பாகத்தின் சில கதைகள் உணர்ச்சித் தளத்தில் மட்டும் இருக்கின்றன என்றாலும், அதில் உண்மைகள் நேர்மையாகவும் துணிச்சலாகவும் கூறப்பட்டிருக்கின்றது என்பதால் முக்கியம் வாய்ந்ததாகி விடுகின்றது. மேலும் மட்டக்களப்பு மொழியின் வாசனை கதையெங்கும் மலர்ந்தபடியே இருப்பதுவும் கவனிக்கத்தது.

இதே காலகட்டத்தில் இலக்கிய உலகில் காலம் சற்றுப் பிந்தி நுழைந்தாலும் மிகுந்த சொற் சிக்கனத்தோடும் அழகியலோடும் திருமாவளவன் நுழைகின்றார். பனி வயல் உழவில் முன்னவர் சிலரின் பாதிப்பு இருந்தாலும் சிறந்த கவிதைகள் சிலவற்றையாவது அதில் அடையாளங் காண முடியும். பனிவயல் உழவிற்குப் பிறகு அஃதே இரவு அஃதே பகலில் வேறொரு தளத்தில் கவிதைகளை திருமாவளவன் நகர்த்த முயன்றிருக்கின்றார். ஆனால் அவரது 3வது தொகுப்பான இருள் யாழி இவ்விரு தொகுப்புக்களை விடுத்து முன்னகர வேண்டியதற்குப் பதிலாக சற்றுத் தேங்கிப் போனது ஒருவகையில் ஏமாற்றமே. இதே காலப்பகுதியில் கனடாவிலிருந்து தேவகாந்தனின் ‘கதா காலம்’ காலம் பதிப்பாக வருகின்றது. மகாபாரதம் நமது ஈழத்துச் சூழலிற்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்யப்படுகின்றது. நாம் அறிந்த மகாபாரத பாத்திரங்கள் கதா காலத்தில் வேறு வேறு வடிவங்கள் எடுக்கின்றன. வாசிப்புக் கவனத்தைக் கோரும் இப் புதினம், ஏற்கனவே வெளிவந்த எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தின், பெரும் வெளிச்சத்தில் பின் தங்கிவிட்டதோ, என்கின்ற ஆதங்கம் இப்போதும் எனக்கு உண்டு.

2001ல் ஈழத்தில் ஏற்பட்ட சமாதானக் காலம், வன்னியிலிருந்து நாம் இதுவரை அறியாத கதைகளை எம்முன்னே கொண்டுவரத் தொடங்குகின்றது. ஏற்கனவே அறியப்பட்ட தாமரைச் செல்வியின் ‘அழுவதற்கு நேரமில்லை’ சிறுகதைத் தொகுப்பு வெளிவருகின்றது. அதேபோன்று தனது பிள்ளைகளை ஈழப்போருக்குப் பலிகொடுத்து, தானும் ஒரு போராளியாக இருந்த தமிழ் மகள் என்ற கதை சொல்லியின் ‘இனி வானம் வெளிச்சிரும்’ வருகின்றது. வறுமைக்குள் வாழ்ந்து, திருமணமாகி சில வருடங்களில் கணவனால் கைவிடப்பட்ட உறுதிமிகு ஒரு வன்னிப் பெண்ணின் கதை, மிக அற்புதமாக அதில் பதியப்பட்டிருக்கின்றது. இதுவரை ஆண்களின் குரல்களின் வழியே விழுந்த போராட்டம் குறித்த கதையாடல்களை தமிழ்மகள் வேறொரு விதத்தில் அணுகுகின்றார். இந்நாவலின் ஆண்கள் வியந்தோத்தும் வீரத்தை அதிகம் கொண்டாடாது, இப்போராட்டம் தமக்கு வேறு வழியில்லாது திணிக்கப்பட்டது, தமது இருத்தல் என்பதே இப்போராட்டத்தோடு இணைந்துள்ளதென நினைக்கும், ஒரு பெண்ணின் மனோநிலையில் எழுதப்பட்டிருக்கின்றது.

போர் குறித்தும் போர் நடத்தப்பட்டது குறித்தும் நமக்கு பல்வேறு கேள்விகள் இருக்கின்றபோதும் தாம் உறுதியாய் நம்பிய ஒரு நிலைப்பாட்டுக்காய் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் புதினம் என்ற வகையில் இந்நாவல் முக்கியமானதே. மக்சிம் கார்க்கியின் தாயிற்கு நிகரான எத்தனை ஆயிரமாயிரம் தாய்களை நாம் நமது நிலப்பரப்புக்களில் கண்டிருக்கின்றோம். அவ்வாறான ஒரு தாயின் கதையே இது. மேலும் புலிகளின் அரசியல் துறையில் இருந்த மலைமகள் எழுதிய ‘புதிய கதைகளிலும்’, வெளிச்சம் சஞ்சிகையால் தொகுக்கப்பட்ட ‘வாசல் ஒவ்வொன்றும்’ சிறுகதைத் தொகுப்பிலும் போர்க்கால வன்னிச் சூழல் அங்கே வாழ்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல மலையக பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்ட ‘இசை பிழியப்பட்ட வீணை’யையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் பெயர்களைப் பட்டியலிடுவதை சற்று நிறுத்தி, மீண்டும் தொடர்ச்சியாக எழுதுவது/எழுதாமல் இருப்பதன் புள்ளி குறித்து சற்றுப் பார்ப்போம். பல்வேறு புறக்காரணங்கள் இருந்தாலும், ஈழத்திலக்கியத்தில் நல்ல சில படைப்புக்களை எழுதிய எத்தனையோ பேர் கொண்ட பட்டியல் நம்மிடம் நீண்டதாய் இருக்கிறது. ரஞ்சகுமார் ஒரு அருமையான தொகுப்போடு நிறுத்தி விடவில்லையா ‘மக்கத்துச் சால்வை’ எம். ஹனீபா 40 ஆண்டுகளாக எழுதினாலும் ‘அவளும் ஒரு பாற்கடல்’ என்ற தொகுப்பில் 25 கதைகளை மட்டுந்தானே தொகுக்க முடிந்திருக்கின்றது. ஆனால் வாசிக்கும் நாம் ரஞ்சகுமாரையோ, ஹனீபாவையோ, ஏன் அரசியல் தளத்தில் கோவிந்தனையோ தொடர்ச்சியாக நினைவு கூர்ந்து கொண்டுதானே இருக்கின்றோம். இதைத்தான் ஈழத்தின் தனித்துவ மான ஒரு பண்பு என எடுத்துக் கொள்கின்றேன். எங்களுக்கு – அதாவது வாசகருக்கு – ஒரு படைப்பாளி ஒன்றிரண்டு நல்ல படைப்புக்களைத் தந்தால்கூட அவர் கவனிக்கக்கூடியவர் என்றுதான் எமது ஈழத்து மரபும் வாழ்வும் கற்றுத் தந்திருக்கின்றது. இந்த மரபு இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது என்பதல்ல, சங்க காலக் கவிஞர்களை இப்போதும் நினைவுகூர எங்களுக்கு அவர்களின் ஒன்றிரண்டு பாடல்களே போதுமாயிருக்கிறது அல்லவா
இந்தக் காலகட்டத்தில் இணையம் பல புதிய படைப்பாளிகளை அடையாளங்காட்டுகின்றது. முக்கியமாய் யாழ்ப்பாணத்திலிருந்து முரண்வெளி தளத்தில் ஹரி எழுதத் தொடங்குகின்றார். முரண்வெளி தளத்தில் வெளிவந்த ஆமிரபாலியின் கவிதைகளும், அமௌனனின் ‘வெளிச்சக் கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்’ என்பதும் 2005ற்குப் பிற்பான படைப்புக்களில் கவனத்தைக் கோருபவை. ‘வெளிச்சக் கூடுகள் தேவைப்படுவோர்…’ கதை இராணுவத்தால் மூடப்பட்ட யாழ் நகரின் வாழ்வைப் பதிவு செய்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ சூழலின் நிர்பந்தத்துற்குள் உந்தப்பட்டு இராணுவத்தோடு தற்பால் உறவு கொள்கின்ற சிறுவர்களின் பாத்திரங்கள் இதில் வருகின்றது. இக்கதையில் அநேகமான ஈழத்துச் சிறுகதைகளில் விபரிக்கப் படுகின்ற ‘கொடுமைக்கார’ இராணுவம் என்ற பாத்திரம் இராணுவத்திற்கு கொடுக்கப்படாதது கவனத்தில் கொள்ள வேண்டியது. மிக உக்கிரமான போர்ச்சூழல் நமக்கான இரண்டு தெரிவுகளைக் கொடுக்கின்றது; அதிலொன்று நாம் ‘வீரனாகி’ப் போர்க்களத்திற்குப் போவது. அல்லது இன்னுமொரு வாய்ப்பாக இருக்ககூடிய காமத்தின் உச்சத்திற்குள் சிக்கிக் கொள்வது. மேலும் இணையத்தில் ஈழத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்த நிவேதா, சித்தாந்தன் போன்றோரின் கவிதைகளும் கவனத்தைக் கோருபவையாக இருந்திருக்கின்றன.

2005ற்குப் பின் முத்துலிங்கமும், சோபாசக்தியும் பரவலான கவனத்தைப் பெற்றதால், நாம் அவர்களின் பிற படைப்புக்களைச் சற்று மறந்து பிறரைப் பார்ப்போம். சுமதி ரூபனின் ‘யாதுமாகி’ தொகுப்பு மித்ர பதிப்பகத்தால் வெளிவருகின்றது. அவற்றில் அனேகமானவை வானொலிக்கு எழுதியவை என்றாலும் ஒரு பெண்ணின் அகவுலகம் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. முக்கியமாக ‘வேட்கை’ என்று சுமதி திண்ணையில் எழுதிய கதை கவனிக்கத்தக்கது. திருமணமான ஒரு பெண்ணுக்கும் அவரோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கும் வரும் உறவு குறித்துப் பேசும் கதையது. திருமணம் என்கின்ற மிகக் கட்டுபாடான அரங்கை விட்டு நகர விரும்பு பவர்களால் கூட சிலவேளைகளில் பண்பாட்டை கழற்றியெறிய முடியாது இருக்கின்றது என்பதைச் சுமதி தாலியை முன் வைத்து அதில் கவனப் படுத்தியிருப்பார். இதே காலப்பகுதியில் கனடாவிலிருக்கும் போது அவ்வளவு கவனம் பெறாத தமிழ்நதி தமிழகத்திலிருந்து தனது தடங்களைப் பதிக்கத் தொடங்குகின்றார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்கின்ற கவிதைத் தொகுப்பும், ‘நந்தகுமாரனுக்கு எழுதியது’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவருகின்றன. தமிழ்நதியின் கவிதை மொழியில் ஒரு வசீகரத்தன்மை இருந்தாலும் அவர் முன்வைக்கும் அரசியல் சிலவேளைகளில் அபத்தமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இவர்களைவிட மிகவும் கவனிக்கத்தக்க தொகுப்பை நிருபா ‘சுணைக்கிது’வாய் தந்திருக் கின்றார். சிறுமியிலிருந்து வளர்ந்த பெண் வரை பல பாத்திரங்கள் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சுணைக்கிது கதையில் சிறுமி யருத்தியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குபவர் யாரென்பதை நேரடியாகச் சொல்லாமல் ஒரு வினாவாகத் தொக்கு நிறக் வைத்து அருமையான தொரு கதையாக முடித்திருப்பார். கிட்டத்தட்ட எஸ். ராமகிருஸ்ணன் தனது கதையன்றில் (விசித்திரி என நினைக்கிறேன்) மனநிலை பிறழ்ந்த பெண்ணொருத்தி யோடு உறவு கொண்டது யாரென்பதை கூறாமல் ஒரு கதை எழுதியிருப்பார். அதை ஒரு சிறந்த கதையாக சொல்லித் திரிந்த எவரும் நிருபாவின் சுணைக்கிது கதையைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டது வியப்பாக இருக்கிறது.

இதேவேளை பிரான்சிலிருந்து நீண்ட காலமாய் கவிதைகள் எழுதிவரும் வாசுதேவனின் ‘தொலைவில்’ வெளிவருகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்களை சில இடங்களில் கோரக்கூடிய கவனிக்கத்தக்க பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. மைதிலியின் ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலம் பிந்தி வந்தாலும், ஆழியாளின் உரத்துப் பேச போன்றதைப் போல கவனிக்கத்தக்கதொரு தொகுப்பே. மேலும், மு. புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்களும்’, த. பாலகணேசனின் வர்ணங்கள் அழிந்த வெளியும் இதே காலப் பகுதியில் வெளிவருகின்றன.

3
ஈழத்தில் சமாதானக் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலிருந்தும் வன்னியிலிருந்து புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுத வருகின்றார் கள். அதிக கவனத்தைக் கோருகின்ற இருவராக தீபச்செல்வனையும், த. அகிலனையும் கூறலாம். கிளிநொச்சியின் முற்றுகையை தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர் என்ற வகையில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. இதை சு. வில்வரத்தினத்தின் தீவுகள் ஆக்கிரமிக்கப் படுவதைப் பாடிய ‘காற்று வெளிக்கிராமம்’, யாழ்ப்பாண 95ம் ஆண்டு பெரும் இடம் பெயர்வையும் முற்றுகையையும் முன்வைத்து நிலாந்தன் எழுதிய ‘யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே’ போன்ற தொகுப்புக்களின் நீட்சியில் வைத்துப் பார்க்கலாம். தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பு ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவு என்பதை விட அதற்கப்பால் எவ்விதமான தாக்கத்தையும் தரவில்லை. திருப்பவும் திருப்பவும் ஒரேவிதமான மொழியாடலில் ஒரேவிதமான படிமங்களுடன் தீபச்செல்வன் நிறையக் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பதால் அப்படியான வாசிப்பு மனோநிலை வந்ததோ தெரியாது. எனினும் ஒரு சகோதரரை ஈழப்போருக்குக் பலிகொடுத்தும், பதின்மத் தங்கை கட்டாய புலிகளின் ஆட்சேர்ப்பில் உள்ளாக்கப்பட்டு, இன்று தாயும் தங்கையும் முள்வேலி முகாங்களுக்குள் இருக்கும்போது தீபச்செல்வனை வேறு விதமாய் கவிதை எழுதக் கேட்க எங்களிடமும் எவ்வித அறங்களுமில்லை என்பதையும் அறிவேன். நீண்டதொரு பயணத்திற்கு தீபச்செல்வன் தயாராகின்றார் என்றால் இதே விமர்சனத்தைப் பின்னாட்களில் அவர் கேட்கக் கூடும் என்பதால் இதை இப்போது சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கிறது என்றே நம்புகிறேன். த. அகிலனின் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கின்றது, அதை வாசிக்காதவரை அதுகுறித்து கருத்துச் சொல்ல முடியாது எனினும் புனைவுத் தன்மையில் அகிலன் எழுதிய ‘மரணத்தின் வாசனை’ முக்கியமானதொரு படைப்பு. ஒவ்வொரு கதையும் மரணத்தையே பேசுகின்றது. இவ்வளவு மரணங்களையும் நெருக்கமாகக் கண்ட ஒருவரால் இவ்வளவு நிதானமாகப் பதிவு செய்ய முடிகின்றதே என்ற ஆச்சரியமும், மரணம் சூழப்பட்ட எம் ஈழத் தமிழிழம் குறித்த சோகமும் மரணத்தின் வாசனை வாசிக்கும்போது சூழ்கின்றது. இத்தொகுப்பு வெளிவந்த சில மாதங்களில் அவர் தனது சகோதரரும் போரின் நிமித்தம் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.
ஏன் இவர்களின் படைப்புக்களோடு இவர்களின் புறச்சூழல் குறித்தும் குறிப்பிடுகின்றேன் என்றால், இவர்களைப் போன்ற பல படைப்பாளிகள் பலர் இவ்வாறான இழப்புக்களோடும் துயரங்களோடும் நேரடியாகப் பாதிக்கப்படடவர்கள். தாங்கள் நினைத்த நேரத்திற்கு கும்பமேளாவிற்கும், குமரிமுனைக்கும் போய் வருகின்ற ஜெயமோகன் போன்றவர்களுக்கு எத்தகைய நெருக்கடிகளிலிருந்து ஈழப்படைப்புக்கள் எழுதப்படுகின்றன என்பதை அறிதல் கடினமே.

இறுதியாக அண்மையில் வெளிவந்த மெலிஞ்சி முத்தனின் ‘வேருலகம்’ பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இது ஒரு குறுநாவல் அளவு சிறிதெனினும் பலவித கதைகளை நீட்சித்துக் கொண்டு போகக்கூடிய இடைவெளிகளை வாசகருக்குத் தரக்கூடிய ஒரு முக்கிய படைப்பு. மெலிஞ்சி முத்தனின் கவிதைகள் என்னை அவ்வளவு ஈர்க்காத போதும், மெலிஞ்சியின் ‘வேருலகு’ அண்மையில் புலம்பெயர் சூழலில் வெளிவந்த முக்கிய படைப்பு எனலாம். அவரின் கவிதைகளி லிருந்து பார்க்கும்போது, இக்குறுநாவல் மிகப்பெரும் பாய்ச்சலாகவே இருக்கின்றது.

ஈழத்திலிருந்து அண்மைக்காலமாய் தொடர்ச்சி யாகவும் காத்திரமாகவும் எழுதும் அனாரைத் தவிர்த்து நாமின்று சமகால ஈழக் கவிதைகள் குறித்து பேச முடியாது. மேலும் தொகுப்பாய் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காத போதும் சிறுகதைகளில் தனித்து மிளிரும் திசேராவும், இராகவனும், கவிதைத் தளத்தில் பஹிமா ஜகானையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதேபோன்று மட்டக்களப்பி லிருந்து எழுதும் மலர்ச்செல்வனின் ‘பெரிய எழுத்திலும்’ ஒன்றிரண்டு நல்ல கதைகள் இருக்கின்றன. மஜீத்தின் ‘புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன’, கருணாகரனின் ‘பலியாடு’ என்பவற்றையும் வாசிக்காத போதும் வாசித்த விமர்சனங்களின் அடிப்படையில் அவையும் சமகால ஈழத்திலக்கியத்தில் முக்கியம் வாய்ந்தவை போன்றே தெரிகின்றன. இன்னும் யாழிலிருந்து வெளிவந்த பா. சத்தியமூர்த்தியின் ‘இப்படியாயிற்று நூற்றியராவது முறையும்’, புலத்திலிருந்து வெளிவந்த கலா மோகனின் ‘ஜெயந்தீசன் கதைகள்’ மற்றும் இரவி அருணாசலத்தின் ‘காலமாகி வந்த கதை’யும், வ.ந. கிரிதரனின் ‘அமெரிக்கா’ குறுநாவலும் சமகால வாசிப்பில் உள்ளடக்க வேண்டியவை. பொ. கருணாகரமூர்த்தியின் ‘கூடு கலைதல்’, ‘பெர்லின் இரவுகளும்’ கவனிக்கத்தக்கவை, அவரின் படைப்புக்கள் குறித்து அவரின் நூல் வெளியீட்டு விழாவில் விரிவாகப் பேசியிருப்பதால் அவற்றைப் பற்றி இங்கே பேசுவதைத் தவிர்க்கிறேன். மேலும் தொகுப்புக்களாய் வெளிவராத போதும் மிகவும் வசீகரித்த கதைகளை எழுதிய மைக்கல், பார்த்தீபன், சித்தார்த்த சே குவேரா போன்றவர்களை நாம் இந்த இடத்தில் தவறவிட முடியாது; இவ்வாறான பெயர்களைக் கொண்ட குறிப்பிடத்தக்க நீண்ட பட்டியல் நம்மிடையே இருக்கிறது. அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களையும், ஏற்கனவே நன்கு அறியப்பட்ட சேரன், சோலைக்கிளி, செழியன் போன்றோரின் இக்காலத்தில் வந்த தொகுப்புக்களையும் இங்கே பேசுவதைத் தவிர்க்கின்றேன்.

4
ஈழத்திலக்கியம் (அதாவது ஈழம் மற்றும் புலம் பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் சகாப்தத்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும். இதை இன்னொரு வகையாய் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதமான பாய்ச்சல் இலக்கியம் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற பின்னணியில் வைத்துக் கூட அணுகலாம். இவ்வளவு பெரும் சனத்தொகையும், எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையில் கூட தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒரு காலத்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்பதும் பிறகு சடுதியாக ஒருவிதமான உறைநிலைக்குப் போவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த இடைவெளியை நிரப்ப அடுத்தவர்கள் வர சற்றுக்கூட காலம் நாம் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. தமிழகத்தில் ஒப்பீட்டளவில் எங்களைவிட கணிசமானோர் இலக்கியச் சூழலில் இருப்பதால் இவ்வாறு ஒரு உறைநிலை அவர்களுக்கு ஏற்பட்டாலும், அடுத்தவர்கள் அந்த இடத்தின் வெற்றிடத்தை உணரமுடியாது வந்து நிரப்பி விடுகின்றார்கள்.
மேலும் குறிம்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப் படவில்லை என்கின்ற முணுமுணுப்புக்களை தமிழகத்து ஜாம்பவான்களின் மூச்சில் அடிக்கடி வந்து விழப்பார்க்கின்றோம். மிக அற்புதமான போர்க்கால இலக்கியங்களைத் தந்த ரஷ்யா உட்பட பலநாடுகள் – ஜீஷீst ஷ்ணீக்ஷீ வரை – அதாவது போருக்குப் பின்பான நீண்ட காலம் வரை காத்திருக்க வேண்டியிருக் கின்றது. 1ம், 2ம் உலகப்போர் பற்றியும் ஹிட்லர் பற்றியும் வெளிவந்த அதிகமான பதிவுகள் 21ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்திருக்கின்றன. ஆகவே போருக்குள் 3 தசாப்த காலத்தை தங்களுக்குள் பறிகொடுத்த ஈழத் தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்பது கூட, இவர்களுக்கு இன்னும் உலக இலக்கியங்கள் பரிட்சயமாகவில்லையோ என்ற எண்ணத்தை வரச்செய்கின்றது. அதேபோன்று முற்றுமுழுதாக வேர் பிடுங்கப்பட்ட புலம்பெயர் வாழ்வின் காலப்பகுதி என்பதுகூட வரலாற்றை முன்வைத்துப் பார்க்கும் போது மிகக் குறுகிய காலமே. வேரை ஒழுங்காய்ப் புதிய இடத்தில் பதிக்க முன்னரே வானை முட்டும் மரங்களை எதிர்ப் பார்ப்பதும் அவ்வளவு நியாயமாகாது.

கடந்த 10 வருட காலத்தில் கவிதை, சிறுகதை போன்றவற்றில் கவனிக்கத்தக்க படைப்புக்களை பதிவு செய்த ஈழத்து இலக்கிய உலகம் நாவல் களிலோ விமர்சனம் உள்ளிட்ட அபுனைவுத் தளத்தில் அதிகளவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாவல்கள் என்று பார்க்கும் போது ஷோபா சக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’, தேவகாந்தனின் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘நிலாச் சமுத்திரம்’, நடேசனின் ‘வண்ணாத்திக் குளம்’, ‘உனையே மயல் கொண்டு’, விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’, அ. முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’. ரகுநாதனின் ‘ஒரு பனங்காட்டுக் கிராமத்தின் கதை’, எஸ்.பொ. வின் ‘மாயினி’ போன்றவையே ஒரளவாவது கவனிக்கத்தக்க படைப்புக்களாய் இருக்கின்றன. இதில் கொரில்லா, ம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்றவையே முக்கிய முடையதாகின்றது. வண்ணாத்திக் குளம் சிங்கள/தமிழ் உறவுகளை அதிக ரொமாண்டிசை செய்தது போல இருக்க, ‘உனையே மயல் கொண்டு’ ஒரு ஆணாதிக்கப் பிரதியாகவும் யாழ்ப்பாணியக் கூறுகள் அதிகம் கொண்டதாகவும் தெரிகின்றது. ‘பனங்காட்டுக் கிராமத்தின் கதை’ ஈழத்துப் பஞ்சமர் வாழ்வைச் சொல்ல முற்படும் ஒரு படைப்பு என்றாலும் அதில் சில விடயங்கள் திருப்பச் திருப்பச் சொல்வது ஒருவித அலுப்பை ஏற்படுத்துகின்றது. சிறந்த கதை சொல்லியாக தன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் எஸ்.பொ.  மிக மோசமான தமிழ்த் தேசிய பிரச்சாரக் கதையாக ‘மாயினி’யைத் தந்திருக்கின்றார். அ. முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புக்கள்’ அவை தனித்தளவில் சிறுகதைகளாய் இருக்கின்றதே தவிர ஒரு நாவலுக்கான வெற்றியை அது அடையவே இல்லை. விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ விளிம்பு நிலை மனிதர்களைச் சித்தரிக்கும்போது இருக்க வேண்டிய நுண்ணிய பார்வையைத் தவறவிட்டுவிடுகின்றது.

ஆனால் இவ்வாறான சரிவுகளுக்காய் நாம் நமக்கு விதிகப்பட்ட புறவயமான வாழ்வுச் சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டித் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எமது படைப்புக்கள் தமது தளத்தை உலக அளவிற்கு விசாலிக்கவில்லை என்று யோசிக்கும் போது ஒழுங்கான விமர்சன மரபு தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது முக்கிய காரணமாய்த் தோன்றுகின்றது. மேலும் நமது சக படைப்பாளிகளின் படைப்புக்களை தட்டிக் கொடுக்க வேண்டியதற்கு தட்டிக் கொடுத்தும், தடம்புரள்வதை சரியாக சுட்டிக்காட்டாமையுமே இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். மற்றும் சிலருக்கு – இதைச் சொல்வதால் கோபம் வரக்கூடும் – என்றாலும், நாம் இன்னும் அரசியல், சினிமா தொடக்கும் இலக்கியம் வரை இந்தியா மீதான அடிமை மோகத்திலிருந்து வெளியே வரவில்லை என்பதையும் கூறத்தான் வேண்டியிருக்கிறது.

‘காலம்’ சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை

Advertisements

Entry filed under: கருத்துரை.

அவலத்தின் வணிகம் – காலச்சுவடு கண்ணன் வாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன! -ஷோபாசக்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: