கம்யூனிஸ்ட்- ஜிஃப்ரி ஹஸன்

June 2, 2010 at 3:30 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உந்தப்பட்டு எனது ஊரிலிருந்து தொலைவிலிருந்த பல்கலைக்கழகமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைப் போன்று சிங்களமோ, ஆங்கிலமோ தெரியாத அநேகமான தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் பொதுவாக நாட்டின் வடக்குப்புறத்திலும்-கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்தனர். எங்களது இந்தப் பல்கலைக் கழகமும் காட்டுப்புறத்தில்தான் அமைந்திருந்தது.

தனிச் சிங்கள ஊரான கும்பல்கமவில் உருப்படியாக அமைந்திருந்தது அது மட்டும்தான். மலைகளால் சூழப்பட்ட, ஏற்றமும் இறக்கமுமான நிலத்தில் நேராகவும், சாய்வாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. பிரமாண்டமான நவீன மாடிக் கட்டடங்களோ குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளோ நவீன விடுதி வசதிகளோ குறைந்தபட்சம் சமதரை யான பாதைகளோ அங்கில்லை. நாட்டிலுள்ள ஆகவும் ஏழ்மையான பல்கலைக்கழகம் இதுவாகத் தானிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மாத்திரத்தில் எல்லோருக் குள்ளும் வந்துவிடும்.

பல்கலைக்கழகம், மலைகள்-மலைகளில் வளரும் மரங்கள், புற்கள், நீர் வீழ்ச்சிகள், நீர் நிலைகள் ‘படிப்பறிவில்லாத மக்கள்’ ஆகிய வற்றால் சூழப் பட்டுக்கிடந்தது.

புதிதாக வரும் மாணவர்களை சும்மாவே பயமுறுத்தும் சூழல் அங்கு நிலவிக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை வேறு. சுற்றிலும் தென்பட்ட புதர்கள் காடுகளிலிருந்து விஷஜந்துகள் தொடங்கி-ஊர்வன வரைக்கும் வீதிக்கும் வளாகத்துக்குமென சுதந்திரமாக உலாவி விட்டுப் போயின. சிலவேளைகளில் விரிவுரை மண்டபங்களுக்குள்ளும் அவை சுதந்திர மாக ஊடுறுவின. ஆனால் அவற்றின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை. இதனால் அவை சுதந்திரமாக உலாவ விடப் பட்டிருந்தன. ‘உயிர்களைக் கொல்லக்கூடாது என்ற பௌத்த அறம்’ அங்கு ‘நூற்றுக்கு நூறு வீதம்’ பின்பற்றப் பட்டுக்கொண்டிருப்பதை நாங்கள் உணரமுடியுமாக இருந்தது.
விரிவுரையாளர்கள் விரிவுரைகளை ஆங்கிலத் திலும் சிங்களத்திலுமாக மாறி மாறி விளாசிக் கொண்டிருந்தனர். எங்களில் சிலர் எந்த இழவும் புரியாமலிருந்தோம். எங்களைப் பார்த்து விரிவுரையாளர்கள் பேசும் போது மட்டும் எல்லாம் புரிந்து விட்டதைப்போல சும்மா தலையாட்டும் உத்தியைக் கையாண்டு வந்தோம். சில விடயங்களை தமிழும் சிங்களமும் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால் ஒரு சிறு ‘கெப்’புக்குள் தெரிந்து கொள்ளும் நடவடிக்கைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் மேற்கொண்டு வந்தோம்.

விரிவுரையாளர்கள் ஏதேனும் ஜோக் அடித்து மாணவர்கள் சிரிக்கும்போது நாங்களும் சும்மா சிரித்தோம். எங்களது சிரிப்பு சிங்கள மாணவர்களின் சிரிப்பை விடவும் பலமாக இருக்க வேண்டும் என்பது நாங்கள் கடைப்பிடிக்கும் உத்திகளில் ஒன்றாகவிருந்தது.

எங்களில் பலர் நாட்டின் வடக்குப்புறத்திலும் கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்ததால் சுத்தச் சிங்களத்தில் அறுவைச் சிகிச்சை செய்யும் விரிவுரையாளர்களுக்குச் சற்றுத் தலைமறைவாக இருக்கும் பொருட்டு பின் வரிசையில் உட்காரத் தலைப்பட்டிருந்தோம். பின் வரிசையிலேயே எல்லா மாணவர்களும் உட்கார விரும்புவதால் பின்னுக்கு இடம் பிடிக்க வழமையைவிட நேரத்தோடு போக வேண்டியிருந்தது. இதனால் விரிவுரைகளுக்கு சற்று நேரத்தோடயே போவது என்று சங்கம் கூடி முடிவு செய்திருந்தது.

சாதாரண பேச்சுச் சிங்களம் வேறு விரிவுரையாளர் களின் தூய இலக்கியச் செழுமை பொங்கும் சிங்களம் வேறு என்பதை மெல்ல மெல்ல உணரத் தலைப் பட்டிருந்தோம். விடுதியில் மாணவர்கள் பேசும் சிங்களத்தை விளங்கிக் கொள்ளுமளவுக்கு எங்களால் விரிவுரையாளர்களின் சிங்களத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு வேளை நாங்கள் விளங்காமலிருக் கத்தான் அப்படிப் பேசுகிறார்களா? என்றொரு கேள்வியை சங்கத்தாள் ஒருவன் திடீரென்று எழுப்பினான்.

இந்த இடத்தில் திருமகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். திருமகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரிப்பகுதியிலிருந்து வந்திருந்தாள். நாட்டின் வடக்குப் புறத்திலிருந்து வந்திருந்தபடியால் அவளுக்கும் சிங்களமோ ஆங்கிலமோ தெரிந்திருக்க வில்லை. அவளை நான் முதன் முதலாக பார்த்தபோது வரிசையில் எனக்குப் பின்னால் நின்றிருந்தாள். ஆனால் அவள் என்னைப்போல் ‘ரெக்கிங்கு’க்கு பயப்படுபவள்போல் காணப்படவில்லை. அவள் ஒரு தமிழ் பெட்டை என்பதை அவளது நெற்றியில் இலங்கிய பொட்டின் துணைகொண்டு அறிந்தேன். நான் அவளைத்திரும்பிப் பார்த்து இலேசாகாப் புன்னகைத்தேன்.

அதைக் கண்டுவிட்ட சிரேஷ்ட மாணவ னொருவன் உளரினான். ‘அடே… உனக்கு ஐட்டம் கேக்குதோ… நாயே… செத்தாய்டா மவனே நீ…’ தமிழில் உருக்கிய அந்தக் குரல் நிலத்தில் விழுந்து என் கால்வழியாக ஊடுறுவி உச்சந் தலையில் அடித்தது. அச்சத்தில் உறைந்த எனது விழிகள் மீண்டும் அநாதரவாக திருமகளைப் பார்த்தது. ஆனால் அவள் இலேசாகப் புன்னகைத்தாள்.

அன்று விரிவுரை மண்டபத்தில் அவளுடன் எனக்கு அளவளாவக் கிடைத்தது. அவள் மிகுந்த தைரியமாக இருந்தாள். அவளுக்குள் ஒரு தீவிர தமிழ்த் தேசியவாத உணர்வு கனன்று கொண்டிருந் ததை உணர்ந்தேன். அவள் ஒரு இயக்கப்பெட்டை யாகத்தான் இருக்கவேண்டும் என்பதை அவளின் கதைப்போக்கிலிருந்து என்னால் அறிய முடியுமாக இருந்தது. சிங்களவர்கள் மீது அதிக கோபம் கொண்டிருந்தாள். நான் ஒரு முஸ்லிம் என்பதை அவளிடம் முன்னரே சொல்லி இருந்தேன். மிகுந்த மன உளைச்லுக்கு அவள் ஆளாகி இருப்பதைப்போல் காணப்பட்டாள். ஆனால் அவள் எதையும் சொல்லி விட்டு லேசாகச் சிரிக்கும் இயல்புடையவளாக இருந்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோபம் இருந்தது. ஒரு வெறி இருந்தது. ஒரு இறுக்கம் தெரிந்தது.

நீண்ட நாட்களாகப் பழகிய ஒருவன் போல் நான் அவளுக்கு ஆகியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் என்னிடம் சொல்லித் தொலைத்தாள். கேட்டுக் கொண்டிருக்கும் எனக்குப் பயம் வந்தது. ஆனால் அவள் பயப்படவில்லை. இங்கு தமிழில் அவளுக்கு முதன் முதலில் பேசக்கிடைத்த மனிதன் நானாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவளுக்கு என்னுடன் இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

மறுநாள் திருவை நான் கண்டபோது கெண்டினில் சாப்பாட்டுப் பார்சலுடன் நின்று கொண்டிருந்தாள்.

‘எனக்கென்ரா செரியான விசராக் கிடக்குடா… யார்லாச்சும் பாயனும் போல கிடக்குடா…’

திருவுக்கு முன்னரை விட கோபம் கூடி இருந்தது. அவள் என்னதான் கோபத்தில் இருந்தாலும் எதையும் பேசிவிட்டு லேசாகச்சிரிக்கும் இயல்புடையவளா யிருந்தாள். இப்போதும் அதே சிரிப்புடன் என்னைக் கடந்து சென்றாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோப மிருந்தது. ஒரு வெறி இருந்தது.

சரியாக மூன்று மாதங்களுக்குப் பின் தமிழ் மாணவர்களிடத்தில் திரு ஒரு புரட்சிகரப் பெண்ணாக அறிமுகமாகிக் கொண்டிருந்தாள். இப்ப நாடிருக்கிற நிலமைக்கும் நாம இருக்கிற நிலமைக்கும் இங்கு புரட்சிகள் எதுவும் சரிப்பட்டு வராது என்பதை திருவுக்கு அவசரமாக உணர்த்த வேண்டிய துரதிஸ்ட நிலமைக்கு சங்கத்தார் தள்ளப்பட்டனர். எனவே அவசரமாக சங்கம் கூடி திரு பற்றித் தீர்மானம் நிறைவேற்றியது. ‘ராஜா ஸ்ரோரில்’ குந்தி இருந்து திரு பற்றி சங்கம் ஆறரை மணித்தியாலங்கள் அமைதியாக  ஆராய்ச்சி செய்தது. திரு அடிக்கடி யார்லயும் பாயும் அபாயகரமான ஆசையை வெளிப்படுத்தி வந்தமை சிங்கள-தமிழ் உறவை மோசமாகப் பாதிக்கக்கூடும் என்ற அரசியல் சூத்திரமொன்றை சங்கம் சுட்டிக்காட்டியது. இப்போது நாடிருக்கிற நிலமைக்கும் நாம இருக்கிற நிலமைக்கும் திருமகள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்று அவளை எச்சரிப்பதாக சங்கம் ஆறரை
மணித்தியாலங்களுக்குப் பின் தீர்மானம் நிறைவேற்றியது.

“என்ன இருந்தாலும் திருவுக்கு சிங்கள ஆக்கள்ல கோபம் அதிகம்”
யாரோ ஒரு சங்கத்தாள் முணுமுணுத்துக் கொண்டு மறைந்தான்.

அரசியல் விஞ்ஞான கனிஷ்ட விரிவுரையாரான திரு. ஹேமக்கொடி சேர் பற்றியும் கொஞ்சம் இங்கு சொல்ல வேண்டியுள்ளது. ஏனைய விரிவுரையாளர் களிலிருந்து சற்று வேறுபட்டவராக அவர் சங்கத்தாரின் கண்களுக்குத் தென்பட்டார். அவர் சம அளவில் சிங்களத்திலும் சிங்களத்தில் தான் என்ன பேசினேன் என்பதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துச் சொல்பவராகவும் இருந்தபடியால் சங்கத்தாரை இதுவரைக்கும் சங்கடப்படுத்திக் கொண்டிருந்த மொழிப் பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வொன்றை திரு ஹேமக்கொடி வழங்கினார். காலப்போக்கில் எங்களது சங்கத்தின் ஆஸ்தான குருவாகவும் அவர் யோசிக்கப்பட்டார்.
இப்படியான விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி சேருக்கு என்ன ‘கார்ட்’ நேம் வைப்பது என்பதில் சங்கத்துக்குள் பல்வேறு சர்ச்சைகளும் கருத்து வேறுபாடுகளும் கிளம்பின. ஓவ்வொரு விரிவுரை யாளருக்கும் சங்கத்தால் ஒவ்வொரு ‘கார்ட்’நேம் வழங்கப்பட்டிருந்தது. சங்கத்தார் வீதியில், விடுதியில், சந்தில், பொந்தில் எல்லாம் கூடும்போது விரிவுரையாளர்களை தூயவார்த்தையில் தொடங்கி தூசன வார்த்தைகள் வரையாக வார்த்தைகளால் ஏலமிடுவதை எப்போதும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இவ்வாறான நடவடிக்கைகளின் போது விரிவுரையாளர்களின் சொந்தப் பெயரைப் பாவிப்பதில் பல்வேறு பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பது சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இவ்வாறு பெயர் சூட்டி அழைக்கும் நடைமுறை எங்களுக்கு முன் சங்கத்தில் மண்டை வேலைசெய்த மாணாக்கார் குழாமொன்றி னால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பயனை எதிர்கால சந்ததியினரும் ஆண்டாண்டுகாலமாக அனுபவிக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்வது சங்கத்தாரின் தார்மீகக் கடமைகளில் ஒன்றாக விருந்தது. புதியதலைமுறை இப்போது இச்சிக்கலுக்கு ஆளாகி இருந்தது. எல்லா விரிவுரையாளர்களுக்கும் பெயர் சூட்டியாயிற்று. ஆனால் ஹேமக்கொடி சேருக்குத்தான் இன்னும் பெயர் வாய்ப்பதாக இல்லை. அவர் தினமும் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு வருவதாலேயே இந்த சிக்கல் சங்கத்தாருக்கு ஏற்பட்டிருந்தது. சுமார் மூன்று மணிநேரக் கலந்துரையாடலுக்குப்பின் திரு. ஹேமக்கொடி அவர்களின் எல்லாவிதமான அரசியல் கருத்துக்கள் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு தற்காலிக பெயரொன்றை சூட்டுவதற்கு சங்கம் முன்வந்தது.

“கம்யூனிஸ்ட்”

“கம்யூனிஸ்ட்! கம்யூனிஸ்ட்!! கம்யூனிஸ்ட்!!!”

சங்கம் ஒரே கணத்தில் விரிவுரையாளர் திரு ஹேமக்கொடியின் புனை பெயரை உச்சரித்து புளகாங்கிதம் அடைந்தது.

விரிவுரையாளர் திரு ஹேமக்கொடிக்கு ‘கம்யூனிஸ்ட்’ என்று கார்ட் நேம் வைக்க சங்கத்தார் முன் வந்தமைக்கு மேலும் பல சமூக-அரசியல்-பண்பாட்டுக் காரணிகள் இருந்தன. விரிவுரையாளர் திரு ஹேமக்கொடியை அவரது விரிவுரைகளிலிருந்து அவர் எந்த அரசியல் முகாமைச் சேர்ந்தவர்-எந்தக் கட்சியில் ஈடுபாடுடையவர் என்ற அரசியல் வகைப்பாடுகளை  செய்வது கடைசி வரைக்கும் கடினமான பணியாகவே இருந்தது. அவர் ஒரு கம்யூனிஸ்டா, லிபரல்வாதியா, ஜேவிபியா அல்லது இனவாதியா என்ற தெளிவான தீர்மானத்துக்கு வர முடியாதபடி தாப்புக்காட்டிக் கொண்டிருந்தார்.

அவர் விரிவுரைகளுக்கு வரும்போது சில நாட்களில் கம்யூனிஸ்ட் முகமூடி அணிந்திருந்தார். சில நாட்களில் லிபரல் முகமூடி அணிந்திருந்தார். சில நாட்களில் யிக்ஷிறி முகமூடி அணிந்திருந்தார். சில நாட்களில் இனவாத முகமூடி அணிந்திருந்தார். அத்துடன் தனது முதலாவது விரிவுரையிலேயே தன்னை கடவுள் நம்பிக்கையற்றவர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாது அவர் மாணவர்களை சிங்களம்-தமிழ்-முஸ்லிம் என்ற இனக் கண்கொண்டு நோக்காதவராய் இருந்ததும் அவரை கம்யுனிஸ்ட் என்று அழைப்பதற்கு வலுச் சேர்த்தது.

எதையும் தான் வெளிப்படையாகப் பேசுபவன் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைபவர் போன்றும் சில நாட்களில் விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி செயற்பட்டதை சங்கம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது. இது போன்ற நிலமைகளால்தான் திரு. ஹேமக்கொடிக்கு சங்கத்தார் அந்தப்பெயரைச் சூட்டி தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டி இருந்தது.

என்னதான் தீவிர அரசியல் நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தாலும் அவரது சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கேற்ப மாணவர்களுக்குப் புள்ளி வழங்கும் விரிவுரையாளர் மனோநிலையுடையவ ராகவே அவரும் இருந்தார்.

விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி தனது விரிவுரைகளை Good morning, Good Afternoon, Good evening இவற்றில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து தொடங்குபவராகவே இருந்தார். அவர் மிகவும் ‘பிஸி’யாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே முகமன் எதுவும் கூறாமல் விரிவுரையாற்றத் தொடங்குபவராக இருந்தார். ஆனால் அவர் எத்தகைய சந்தர்ப்பங்களிலும் இப்படிச் சொல்லத் தவறுவதில்லை.

‘Number of LTTE’s members are studying here but we don’t care that..’

திரு. ஹேமக்கொடி இப்படிச் சொல்லும் ஒவ்வொரு கணத்திலும் நான் திருவைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திருமகளுக்கு அவர் சொல்லுவது புரிந்ததோ புரியவில்லையோ ஆனால் அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். சற்று நேரத்திலெல்லாம் அவர் மீது பாய்ந்து விடுவதைப் போல் அவள் காணப்படுவாள். என்னைப் பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்ப்பாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோபம் இருந்தது. ஒரு வெறி இருந்தது. ஒரு இறுக்கம் தெரிந்தது.
‘என்ன இருந்தாலும் திருவுக்கு  சிங்கள ஆக்கள்ல கோபம் அதிகம்’ யாரோ ஒரு சங்கத்தாள் போகும் போது முணுமுணுத்துக்கொண்டு மறைந்தான்.

அன்று ஹேமக்கொடி சேர் ‘பிணக்குகளின் வேர்கள்’ பற்றி விரிவுரையாற்றத் தொடங்கினார். முழுக்க முழுக்க ‘செலபசு’க்கு வெளியிலேயே நின்ற அன்றைய அவரது விரிவுரையில், ‘சிறுபான்மை யினரின் பிரச்சினை..’ எனத் தொடங்கியவர் ‘டக்’கென்று பிரேக் போட்டு நிறுத்தினார். இலங்கையில் தற்போது சிறுபான்மை என்றொரு இனமில்லை என்பது அவருக்கு ஞாபகம் வந்திருக்க வேண்டும்.

இப்போது வேறொரு கோணத்திலிருந்து விரிவுரையாற்றத் தொடங்கினார். ‘இந்தப் பிணக்குகளுக்கான உண்மையான தீர்வு இன சௌஜன்யத்தைக் கட்டியெழுப்புவதுதான். இனங் களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்த நாம் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். சிங்கள-தமிழ் சமூகங்களுக்கிடையில் திருமண உறவுகளையும் ஏற்படுத்துவது பற்றி நாம் யோசிக்க வேண்டும்..’

விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி ‘செலபசுக்கு’ வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். பெரும் பான்மையின மாணவர்கள் அவரது கருத்தை வன்மையாகக் கண்டிப்பது போல் அவரை வெறுப்புடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். ஒரு தமிழ் பொடியனை காதலிக்கும் சிங்கள மாணவி ஒருத்தி மட்டும் ஹேமக்கொடி சேரின் கருத்தில் ஆர்வமாக இருப்பதுபோல் இருந்தாள். ஆனால் மற்றவர்கள் அதை சங்கடத்துடன் எதிர்கொண்டிருப் பதை திரு. ஹேமக்கொடி அறிந்துகொண்டார். அங்கு ஒரு இறுக்கமான சூழல் நிலவத் தொடங்கி இருந்தது.

அப்போது எல்லார்  முகங்களிலும் இழையோடிய இறுக்கத்தை திரு. ஹேமக்கொடி தளர்த்த விரும்பினார். இப்போது திடீரென்று அவர் ‘செலபசுக்குள்’ பிரவேசித்தார். இந்த ‘செமஸ்டரு’க்கு எப்படி கேள்விகள் வரலாம் என்பதில் தொடங்கி விடை எவ்வாறு எழுதப்படலாம் என்பது வரை ஹேமக்கொடி ‘செலபசுக்குள்’ நின்று ஒரு பிடிபிடித்து விட்டு எல்லா மாணவர்களையும் ஏககணத்தில் உற்றுப்பார்த்தார். பெரும்பாலும் முன்பு குடி கொண்டிருந்த அந்த இறுக்கமான நிலை சற்றுத் தளர்ந்திருந்ததை ஓரக்கண்களால் நோட்டமிட்டார். அதன் பிறகு வந்த நாட்களில் விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி செலபசுக்குள் நிற்பதை ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் ஒரு தடவை உறுதிப் படுத்திக் கொண்டார். நான் திருமகளை உற்றுப் பார்த்தேன். லேசாகச்சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோபம் இருந்தது. ஒரு வெறி இருந்தது. ஒரு இறுக்கம் தெரிந்தது.

எனினும் திருவுக்கு சிங்கள ஆக்களிலிருந்த கோபம் இன்னும் குறையவில்லை என்று சங்கம் அடிக்கடி குசுகுசுத்தது. ஆனால் அவளுக்கு ஆட்களில் பாயும் ஆசை மட்டும் கொஞ்சம் அடங்கி இருப்பதாக சங்கம் கருதியது.

‘எனக்கென்ரா சரியான விசராக்கிடக்குடா’ திரு மகள் தினமும் இந்த வர்த்தைகளை யாருக்காக உச்சரிக்கிறாள். அவள் யாருக்காகவோ எதற்காகவோ உச்சரிக்கிறாள்.
ஆனால் அவள் இப்போது எதையும் பேசிவிட்டு லேசாகச் சிரிக்கும் இயல்புடையவளாயிருந்தாள்.

திடீரென்று ஒரு நாள் திரு கேட்டாள் “ஹேமக் கொடி சேருக்கு  எத்தின வயசிருக்கும்”

“ஒரு முப்பத்தஞ்சி”

“எனக்கு இருபத்திமூணு” என்று விட்டு திரு சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு குழைவு இருந்தது. ஒரு கனவு இருந்தது. ஒரு வெட்கம் தெரிந்தது.
திரு ஏன் அப்படிச் சிரித்தாள். திரு மெல்ல மெல்ல மாறி வருகிறாளா? அல்லது ஹேமக்கொடியை போட்டுத் தள்ளப்போகிறாளா? இருபத்து மூன்று முப்பத்தைந்தின் கதையை முடிக்கப்போகிறதா?

திரு. ஹேமக்கொடி அன்று விரிவுரைகளுக்குச் சமுகமளித்திருக்கவில்லை. மாணவர்கள் ஏதோ ஒரு கிசுகிசுவை குசுகுசுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. திருவின் இருக்கையும் அன்று காலியாகக் கிடந்தது. முதன் முதலாக இன்று திருவும் ஹேமக்கொடியும் ஒன்றாக லீவெடுத்திருக்கிறார்கள். இனியும் வரக்கூடும் என்ற நம்பிக்கையற்று மாணவர்கள் கலையத் தொடங்கி இருந்தனர். நான் எவரும் இல்லாத விரிவுரை மண்டபத்தில் காரணமற்றுத் தனிமையில் இருந்தேன். திரு இன்று வந்திருந்தால் கொஞ்ச நேரம் பேசி இருந்திருக்கலாம். இன்று ஹேமக்கொடி சேர் வரமாட்டார் என்று தெரிந்துதான் வராமல் விட்டாளா?

வகுப்பறையை விட்டும் நான் வெளியேறி மலைப்பாங்கான வீதியில் ஏறத்தொடங்கிய போது இருட்டிக் கொண்டு வந்தது.

யாரோ ஒரு சங்கத்தாள் வேகமாக நடந்து வந்தவன் எனக்கருகில் திடீர் பிரேக் போட்டு நிறுத்தினான்.

“ஹேமக்கொடி சேர் ஒரு தமிழ்பெட்டையை கலியாணம் கட்டிட்டாராம்”

பல்கலைக்கழகத்தைச் சூழ்ந்த மலைகளிலும், காடுகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும், கட்டடங்களிலும் நிர்வாகத்திலும், மாணவர்களிலும் முட்டிமோதிப் பறந்து கொண்டிருந்தது செய்தி.

“பார்த்தியா, என்ன இருந்தாலும் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட்தான்”

“என்ன இருந்தாலும் திருவுக்கு சிங்கள ஆக்கள்ல மோகம் அதிகம்”

யாரோ ஒரு சங்கத்தாள் முணுமுணுத்துக் கொண்டு மறைந்தான்.

Advertisements

Entry filed under: சிறுகதை.

அன்ரன் அன்பழகன் – கவிதை அகதிகள் பலவிதம் – கலையரசன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: