ஓவியர் ஹுசைன் – இந்தியா – வெளியேயும்… உள்ளேயும்… தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ஜி.ரி.கேதாரநாதன்

June 2, 2010 at 12:03 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

பல வருடங்களாக இந்தியாவுக்கு அப்பால் வெளிநாடுகளில் வாழ்ந்திருக்கிறேன். இந்திய கடவுச் சீட்டைக் கையளித்து வெளிநாடு ஒன்றின் பிரஜையாக மாறியது இதுவே முதல் தடைவ. ஆம், இப்போது கட்டார் நாட்டின் பிரஜையாகி உள்ளேன். 2006ஆம் ஆண்டிலேயே, மூன்று பாரிய திட்டங்களில் ஈடுபடுவதற் கான தீர்மானம் ஒன்றினை எடுத்திருந்தேன். அத்தகையதொரு பின்னணியிலேயே இவ்வாறான தொரு முடிவினை நான் எடுக்க நேர்ந்ததென்பது குறிப்பிடத்தக்கது. மொகஞ்சதாரோவில் இருந்து மன்மோகன்சிங் வரையிலான இந்திய நாகரிக வரலாறு, பபிலோனிய காலப் பகுதி வரையிலான ஏனைய நாகரிகங்களின் வரலாறு, எனக்கு மிகவும் பிடித்த திட்டமாகிய நூறு வருடங்களில் இந்திய சினிமா ஆகிய தொடர்பிலான திட்டங்களே அவை எனலாம்.

இந்தியாவில் இத்திட்டங்களில் ஈடுபடுவதற்கும்  பூர்த்தியாக்குவதற்கும் நான் பல்வேறு தடைகளை, இடையூறுகளை எதிர்கொள்ளவேண்டி நேரிடலாம்.  மேலும் அனுசரணையாளரைத் தேடிக் கொள்வதும் முக்கிய பிரச்சினையாகும். அதற்காகவும் நான் காத்திருந்தேன்.

நாற்பது வயதினனாக இருந்தால், நிச்சயம் நான் போராடி இருப்பேன். எனக்கு இப்போது 94 வயது. நான் எனது திட்டங்களில் முழுமையாக ஈடுபடுவதற்கு விரும்புகிறேன். எவற்றாலும் எனது கவனம் சிதறடிக்கப்படுவதை என்னால் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. எனக்கு சௌகரியங்களும் வசதிகளும் உச்ச அளவில் இருந்தாக வேண்டியது மிக மிக அவசியமாகும். திட்டங்களை முழுமையாகப் பூர்த்தியாக்குவதே எனது பிரதான குறிக்கோளாகும்.  இதற்கு உகந்த சூழ்நிலை எப்போதும் அவசியமாகும். இந்த எல்லைகள் தனியே அரசியல் சார்ந்தவை எனலாம். விசேடமாகக் கூறப்போனால் கட்புலக் கலைகள் எல்லோருக்கும் பொதுவானதொரு மொழியேயாகும். உலகில் எந்த மூலையிலிருந்தும் நீங்கள் செயற்படலாம். இயங்கலாம். ஆனால் படைப்புகளைப் பொறுத்தவரையில், அவற்றுக்கு எங்களது பெருமைக்குரிய 5000 வருடகால செல்வாக்கு மிக்க இந்திய கலாசாரமே ஊற்றுக் கண்ணாக இருக்கமுடியும்.

மக்பூல் பிடா ஹுசைன் (94)
தமக்கு நேர்ந்தமை குறித்து வெளிப்படையாக வேதனையையோ விசனத்தையோ வெளிக்காட்டிக்கொள்ளாத போதிலும்,  நாட்டை விட்டு வெளியேற வேண்டியதான விளிம்பு நிலைக்கு அவர் தள்ளப்பட்டது குறித்து இந்தியக் கலைஞர்கள் பலர் தமது ஆதங்கத்தினையும், கவலையையும், கண்டனத்தினையும் வெளிப்படுத்தியிருந்தனர். ‘புரன்ட் லைன்’ ஆங்கில சஞ்சிகையில் இவை வெளியாகியிருந்தன.

சுபா முக்தல்
சாஸ்திரிய சங்கீதக் கலைஞர்
இவ்வாறு எம்.எஃப். ஹுசைனுக்கு நேர்ந்தமை குறித்து நாம் வெட்கமும் வேதனையும் அடைகிறோம். நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரும், அவர் எங்கே போக வேண்டும் அல்லது எங்கே போகக்கூடாது என்று கூறுவதற்கு எமக்கு எதுவித அருகதையும் கிடையாது. இப்போது இந்திய அரசாங்கம் அவருக்கு முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்போவதாகக் கூறிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு வருடங்களும் அது எங்கே போனது? சகலவித பேதங்களையும் எல்லை வரையறை களையும் இன்னும் முற்சாய்வுகளையும் கடந்ததுதான் கலை. ஆனால் தூரதிரஸ்ட வசமாக நாட்டு நிலைமையால் கலைஞர்கள் ஒன்று கூடி ஒரே நிலைப்பாட்டினை எடுக்கமுடியாத நிலை தோன்றி யுள்ளது. ஏல்லாவற்றுக்கும் மேலாக ஹ§சைன் படைப்புக்கள் மற்றும் தணிக்கை தொடர்பாக கலைஞர்கள் ஒருங்கிணைந்து கலந்தாலோசிப்பதற்கான ஒரு வெளி கூட நாட்டில் இன்று இல்லை. ஹ§சைனுக்கே இவ்வாறு நேர்ந்தால் பிரபல்யம் குறைந்த ஏனைய கலைஞர்களுக்கு என்னவெல்லாம் நேரும்?.

ராம்ரக்மான்
புகைப்படக் கலைஞர்
ஹுசைனுடைய படைப்புக்களை சுட்டு வதற்கு ‘சர்ச்சை’ என்ற பதத்தைப் பயன் படுத்துவதற்கு அவர் தயங்குகிறார். இந்த ஓவியங்களை சர்ச்சைக்குரியனவாக மாற்றியது யார்? வலதுசாரி கடும்போக்காளர்களால் வரையறுக்கப்பட்ட சொல்லாடல் பதங்களில் உரையாடுவதால் பயன் என்ன? ஹ§சைன் போன்றோரும் வேறு கலைஞர்களும் இந்தியாவில் தாக்கப்படும்போது கட்டார் நாட்டில் கருத்துச்சுதந்திர வெளிப்பாடு குறித்து நாம் எப்படி கதைக்கமுடியும். இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு வாக்குறுதி குறித்து எனக்கு சந்தேகமும் அவநம்பிக்கையுமே ஏற்படுகிறது. அவர் அரசியல்வாதியோ ‘கார்ப்பறேற்’ பிரமுகரோ அல்ல. அவர் ஒரு சுதந்திரப்பறவை. தமக்கு உகந்ததல்ல என்ற நிலைமைகளை நன்கு தெரிந்துகொண்ட பின்னரும் அவர் சுயாதீனமாக இயங்க முடியுமா? சகலவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றை கட்டுப்பாடின்றி செயற்பட அனுமதிப்பதுதான் காரணமாகும். ‘பிரஜை’ என்பதற்கான அர்த்தத்தினை அரசியல் யாப்பினை விடுத்து, அவர்களே விளக்கமளிக்கமுற்பட்டமை முற்றிலும் அபத்தமாகும்.

இந்தியா என்னை ஒருபோதும் நிராகரிக்கவில்லை.  நிராகரித்ததாக நான் ஒரு போதும் கூறியதும் இல்லை.  அவர்கள் என்ன செய்தாலும், எனது தரிசனம் அங்கேயே தரித்துள்ளது. பிரஜா உரிமை என்பதன் அர்த்தம் என்ன?. இது ஒரு துண்டுப் பத்திரம் ஆகும்.  என் மீதுள்ள பாசத்தினாலும் அன்பு மிகுதியினாலும் ஒருவர் விருந்துக்கு அழைக்கும்போது அந்த அழைப்பினை மனமுவந்து ஏற்பது தானே இயற்கை? அது தானே நாகரிகமும் பண்பாடும் ஆகும்.  பிடிவாதமான போக்கு எனக்கு என்றும் இருந்த தில்லை. மக்களிடமிருந்து நான் ஒருபோதும் அந்நியப்பட்டு இருந்ததில்லை. எல்லோரையும் நேசிக்கும் பண்பு என்னிடம் சற்று அதீதமாகவே உள்ளது. இதில் கறாராக நான் என்றும் இருந்த தில்லை. இந்திய மக்களுக்கும் எனக்கும் என்றும் நேசமான நெருக்கமானதொரு பிணைப்பு இருந்து வந்துள்ளது. 99 சதவீதத்தினர் என்னை வெகுவாக நேசிக்கின்றனர். ஆனால் வரலாற்றில் படைப்பாக்கங் களுக்கும் அரசியலுக்கும் என்றுமே இணக்கமான தொரு தன்மை இருந்ததில்லை.

கலிலியோவிலிருந்து காளிதாஸன் வரை சகல பெரிய கலைஞர்களும் தொல்லைகளுக்கும் சோதனைகளுக்கும் இலக்காகி வந்துள்ளனர். நெருடா சபலின் உட்பட மேலும் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஏனெனில் எவற்றைப் பொறுத்தவரையிலும் இறுதியில் அரசியல் சாயமே பூசப்பட்டு விடுகின்றது. பிரச்சினை சட்ட அல்லது சமூக பிரச்சினை எனில் தீர்ப்பது கடினமல்ல. நீதிமன்றங்களும் கூட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்ல தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. ஆனால் இது அரசியல். ஒரு சிலரே மூர்க்கமாக முன்நின்று பாதகமான, மிகப் பாதகமான நிலைமைகளை கொந்தளிப்புகளை நாட்டில் உருவாக்கிவிட முடியும். இதற்கு ஒரு எல்லையே கிடையாது.

பௌதீக ரீதியான இந்த இருப்பு என்பது என்ன? அதன் அர்த்தம்தான் என்ன? உண்மையில் ஆத்மார்த்தமானதொரு பிணைப்பு எனக்கு அங்கேயே உள்ளது. தொழில் நுட்பமும் தொடர்பாடலும் பெருகியுள்ள இன்றைய யுகத்தில் உங்கள் வியாபகம் எங்கும் பரந்துள்ளது. படைப்பாற்றலை எதனாலும் முடக்கிவிட முடியாது. சிருஷ்டியாளனுக்கு பூகோள ரீதியிலான எல்லைகள் இருப்பதில்லை. சஞ்சாரம் ஒரு பொருட்டும் அல்ல. சுத்த சுயம்புவான இந்திய ஓவியன் நான். இறுதி மூச்சு வரை இது நிலைக்கும்.  நீடிக்கும். அரசாங்கத்தின் நோக்கத்தை நான் சந்தேகிக்கவில்லை. அவற்றை விபரமாக அலசிப் பார்ப்பதற்கும் எனக்கு நேரமில்லை. கை நிறைய வேலை உள்ளது. மூன்று பாரிய திட்டங்கள்.  அவற்றை நான் முடித்தாக வேண்டும். இந்தியாவில் எனது வேலையைத் தொடர முடியாதென்பது மிகவும் வெளிப்படையான யதார்த்தமானதொரு உண்மையாகும். அதற்கான காரணங்கள் என்னவென்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

நான் ஒரு பாதசாரி ஓவியன். வசதிகள் எங்கு உள்ளனவோ அங்கேயே எனது வேலைகள் தொடரும்.  கடந்த 60 வருடங்களாக இதுவே என் நிலைமை. உலகத்தில் எங்கேயுமே எனக்கென்று ஒரு ஸ்ரூடியோ இல்லை. எனது கித்தான் துணியை (கன்வஸ்) ஹோட்டல் அறைகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் விரித்து எனது வேலையைத் தொடர்வேன். இவ்வாறுதான் எனது ஓவிய வேலைகள் தொடர்ந்து வருகின்றன. இது எனது முறையாகும். நான் பேராற்றலுள்ள ஓவியர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரைப் பெரிதும் மதிக்கிறேன். அவர்களின் முறைகள் வேறு படவும் கூடும்.

இந்திய கடவுச்சீட்டை கையளித்தது தொடர்பில் எனக்கு வேதனையெதுவும் இல்லை. நான் வழமைபோல எனது வேலைகளில் ஈடுபட்டு வருகின்றேன். எத்தகைய பாதிப்பும் எனக்கில்லை.  இதுவரை 10 வீத மனக்கிடக்கைகளுக்கே நான் வடிவம் கொடுத்திருக்கிறேன். மிகுதி 90 வீதம், வெளிப்பாடு காணாது எனக்குள்ளே உறைந்து இருக்கின்றது. இவற்றையெல்லாம் முடிக்கலாம் என நான் நினைக்கவில்லை. சாவின்போது நான் அவற்றையும் எடுத்துச் செல்லவேண்டி இருக்கும். எனது குடும்பம், பிள்ளைகள், நண்பர்கள் எல்லோரும் என்னை நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மாத்திரம் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கூட அவர்கள் நினைத்தார்கள்.  உங்களுக்கு என்னுடன் பணியாற்றிய குறிப்பிட்ட கதாநாயகியைத் தெரியும் என நினைக்கிறேன்.

கீதாகபூர்
கலை வரலாற்றாய்வாளர்
“ஹ§சைன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட  இந்தியாவில், பின்காலனித்துவக் கலைஞரா வார். அவரது வெளிப்படையான முஸ்லிம் அடையாளம் எந்தவிதத்திலும் ஊதிப்பெருப் பிக்கப்படவில்லை. இன்று அறுபது  வருடங் களுக்குப்பின்னரும் கசப்படைந்த தொரு முஸ்லிம் ஆகவோ அல்லது ஒரு தேசியத் தியாகியாகவோ மாற முற்பட ஹ§சைன் மறுத்து வருகிறார். அவர் ஆச்சரியப்படத்தக்க மேன்மைத்துவ குணாம்சத்தை இந்தவகையில் வெளிப் படுத்தியிருக்கிறார். தமது மீட்சிக்காக எவற்றிலும் தஞ்சம் புகுந்துவிடாத நவீனத்துவம் வாய்ந்த கலைஞராகவே அவர் மிளிர்கிறார். ஹ§சைன் விவகாரம் அரசியல் தாற்பரியங் களைப் பொறுத்தவரையில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. சமகால அரசியல் போக்கினைப் பொறுத்தவரையில் எவற்றிற்கும் மிகஇலகுவாகவும் சௌகரியமாகவும் ‘முத்திரை குத்துதல்’ நடந்தேறிவருகிறது. எல்லா வற்றிற்கும் பாதுகாப்பினையே தூக்கிப்பிடிக்கும் அல்லது சாட்டாகக்கூறும் யுகத்தில், இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் இதன் எதிரொலியே மனிதஉரிமை மேம்பாடுகளை வலியுறுத்தும் செயற்பாட்டாளர் ஒருவர் மாவோயிஸ்டாகவும் சிறுபான்மை உரிமை களுக்காக குரல்கொடுக்கும் ஒருவர் பயங்கர வாதியாகவும் முத்திரை குத்தப்பட்டு அன்னியப்படுத்தப்படும் இத்தகைய ஆரோக்கிய மற்ற சகலபோக்குகளும் இறுதியில் ஜனநாயக சமூகத்தின் முக்கிய  குணாம்சங்களில் ஒன்றான கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு சாவுமணி அடித்துவிடும் பேராபத்தினையே தோற்றுவித்து விடுவது துர்ப்பாக்கியமானதொரு நிலையேயாகும்.


95 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் எனக்கு அந்திமக்காலம் என்றும், எல்லோரையும் போல வீடு போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாக மேலோங்கி இருக்கும் எனவும் நீங்கள் கூறி இருந்தீர்கள். இருப்புக் குறித்த உங்களது அதீத அழுத்தம் தொடர்பில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  எனக்கு 20 வயதல்ல. அப்படி எனில் தான் எனக்கு வீடு வேண்டும். அந்தக் கட்டத்தை நான் எப்போதோ தாண்டி விட்டேன். எல்லாவற்றையும் நீக்கிக்கொண்டு  விடுபடவேண்டியதானதொரு கால கட்டம் நெருங்கி வருகிறது. நான் இதற்காக முயற்சி செய்கிறேன்.  ஆனால் அந்தப் பக்குவ நிலையினை நான் இன்னும் எய்தவில்லை.  ஞானிகளுக்கே அவ்வாறு வாய்க்கும்.
இன்னும் போராடிக்கொண்டிருக்கின்ற வயதல்ல என்னுடையது. 40 வயதில் அந்தக் கட்டத்தை நான் கடந்துவிட்டேன். 40 வயதில் ஓர் அரசனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அது சாத்தியமாகாது போகுமானால் நான் எனது போராட்டத்தைக் கைவிடமாட்டேன். நிச்சயமாகவே நான் அவளைக் கடத்தி விடுவேன். ஆனால் அந்தக் கட்டத்தை நான் இப்போது கடந்துவிட்டேன். நான் சிருஷ்டித்த கலைப்படைப்புகள் என்றும் சாசுவதமானவை. இந்த ஏழு – எட்டு வருட வாழ்க்கை இது என்ன? இந்திய மக்களோ அல்லது இந்திய அரசாங்கமோ என்னை வஞ்சித்ததாக நான் ஒருபோதும் நினைக்கவில்லை.  அவ்வாறு நான் ஒருபோதும் கூறியதுமில்லை.  அவ்வாறு கூறப்போவதும் இல்லை. சிலருக்கு, சிறிய தொகையினருக்கு நவீன ஓவியத்தின் மொழி புரியவில்லை. எப்போதும் கலை காலத்திற்கு முந்தியது. நாளை அவர்களுக்குத் தெளிவு ஏற்படும்.

சியாம்பெனகல்
திரைப்பட நெறியாளர்
இன்றைய காலகட்டங்களில் வெகு சௌகரிய மாக பயமுறுத்தல் அரசியலும் அடையாள அரசியலும் ஒரேதளத்தில் தமக்குரிய சந்திப்புப் புள்ளியினை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிக் கோளை தமக்குரிய இலக்குகளை அடைவதற்கு எப்போதும் எத்தகைய தயக்கமும் இன்றி வன்முறைகளிலேயே அவை இறங்குகின்றன. இவை நன்குதிட்டமிடப்பட்டு வளர்க்கப்பட்டதொரு மனப்பாங்காகும். வலதுசாரி அமைப்புகள் மாத்திரமின்றி இவ்வாறானதொரு நிலமை ஏற்பட்டு விட்டமைக்கு சகலரும் பொறுப்பினை ஏற்க வேண்டும். புனேயிலுள்ள பண்டார்கார் கீழைத்தேச ஆராய்ச்சிநிறுவனம் 2004 இல் தேசியகாங்கிரஸ் கட்சியின் கலாசார அணி காவல்படைபிரிவினரான சம்காஜியினால் அடாவாடித்தனமாக சல்லடை போடப்பட்டு தாக்கப்பட்டது. அதேபோன்று, சாருகானுக்கு நேர்ந்ததும் அபத்தமானதாகும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நாடு என்ற வகையில், எதிப்பினை அல்லது ஆட்சேபனையினை தெரிவிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. எங்கள் எல்லோருக் கும் எமது ஆட்சேபனையினை தெரிவிக்க எமக்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால் உயிர்வாழ உனக்கு உரிமையில்லை என்றுகூற முற்பட்டிருப்பது மிகவும் பாரதூரமானதாகும்.

விவன் சுந்தரம்
ஓவியர், சிற்பி, காண்பியற்கலைஞர்
கட்புலபடிமங்கள் பல்வேறு புரிதல்களை உள்ளார்ந்த அர்த்தங்களை தம்மகத்தே பொதிந் துள்ளன. அவற்றில் பல அர்த்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் தமக்கு ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவற்றிற்கு விளக்கம் கொடுக்க முற்படுபவை வலதுசாரிக் குழுக்களே தவிர, தனிப்பட்டவர்கள் அல்ல. தான்தோன்றித்தனமான முறையில் எச்சரிக்கைக் காவலர்களாக சில மதவாத சக்திகள் முற்பட்டிருப்பது முற்போக்கு சிந்தனைத் தடங்களிலிருந்து இந்தியாவை தடம்புரளச் செய்யும் பேராபத்துமிக்க நடவடிக்கையாகும். அடிப்படை வாதிகளுக்கெதிராக இடையறாத கடும் நடவடிக்கை களை எடுப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும். அரசியல் தலைமை பற்றுறுதியுடன் இதற்காக இயங்க வேண்டும்.

அகில்சிவால்
ஹ§சைனின் வழக்கறிஞர்
பதினைந்துவருடகாலமாக ஹ§சைனுக் கெதிராக இழைக்கப்பட்டுவரும் தொந்தரவு தொல்லைகளை இந்தியஅரசாங்கம் வெறுமனே மௌனமானதொரு பார்வையாளராக பார்த்துக் கொண்டிருக்கின்றது. இது விசனிக்கத்தக்கது. ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டுடன் கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவற்றையும் அரசாங்கம் எடுக்க முன்வராதது துர்ப்பாக்கிய மானது. கடும் போக்காளர்களது வெறிக் கூச்சல்களுக்கு அரசாங்கம் பணிந்துவிடக் கூடாது.
மகேஸ்குமார்
புரொன்ட்லைன் வாசகர்

ஒரு உண்மைக்கலைஞர், சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டவர். இதற்கு தகுந்த உதாரணம் எம்.எஃப்.ஹ§சைன் ஆவார். அவர் எளிமையான வாழ்க்கையை தனது கொள்கை களுக்காக எத்தகைய சமரசங்களுமின்றி வாழ்ந்துவருகிறார். அவர் எந்தவொரு நாட்டிலும் பொக்கிஸமாகப் பேணப்பட வேண்டியவர். மதம் என்ற பெயரில் தம்மை காவலர்களாக பிரகடனம் செய்துகொண்ட நாசகார சக்திகளினால் இந்தியாவிற்கு வெளியே வாழ அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது மிகத் துரதிஷ்டமான நிலையாகும்.

நான் இந்திய அரசாங்கம் குறித்து ஏற்கனவே கூறிவிட்டேன். அவர்கள் தங்கள் வழியில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். எப்போதும் போல எனது வேலை தொடர்கிறது. எவற்றாலும் நான் ஸ்தம்பித்துவிடவில்லை. நாளை நான் திரும்பிப் போகலாம். பாரிசிலோ, லண்டனிலோ, நியூயோர்க் கிலோ அல்லது கட்டாரிலோ நான் எனது ஓவிய சிருஷ்டிகளில் ஈடுபட்டாலும் நான் என்றும் முற்று முழுதாக ஒரு இந்திய ஓவியனாகவே இருக்கின்றேன். நான் ஒரு சுதந்திரப் பிரஜை. குற்றச்செயல் எதுவும் நான் புரியவில்லை.  ஒருவரையும் கொலை புரிய வில்லை ஒருவரிடமும் பணம் கையாடியதில்லை. இந்தியாவில் ஓவியப் படைப்பு முயற்சிகளுக்குப் பாரதூரமான தடையில்லை. இது ஒரு அதிர்ஷ்ட மாகும். ஒரு தடவை வரோடாவில் தாக்குதல் ஒன்று நடந்தது. என்னைப் பொறுத்தவரையில் எனக்கு நேர்ந்தது சிறிய அளவினதுதான். நாங்கள் ஒரு சுதந்திர நாடாகவே இருந்து வருகிறோம்.

கடந்த சில வருடங்களில் பெரியளவிலான பாரதூரமான பிரச்சினைகள் எவற்றையும் நான் இந்தியாவில் எதிர்கொள்ளவில்லை. எனக்கு எதிராக சில வழக்குகள் இருந்தன. அவற்றை எனது சட்டத்தரணிகள் கவனித்துக் கொள்கிறார்கள். நான் தப்பியோடவில்லை. 30,000 – 40,000த்திற்கு மேற்பட்ட எனது படைப்புக்கள் இந்தியா பூராவும் உள்ளன.  அவைதான் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. நிஜமானவை. அவற்றையே நேசிக்கும் எனது நாட்டிற்குக் கொடுத்துள்ளேன்.  அவற்றை வேறு எந்த நாட்டிற்கும் கொடுக்க வில்லை.

Advertisements

Entry filed under: நுண்கலை.

பெண்ணியா – கவிதை யாரோ போட்டு முடித்த தானாகக் கிடைத்த இரவுச்சட்டை – துவாரகன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: