ஆளுமை – த.இராமலிங்கம் – கருணாகரன்

June 2, 2010 at 3:59 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

அ.செ.முவையும் தா. இராமலிங்கத்தையும் நினைக்கும் போது ஏனோ தெரியாது, எனக்கு நகுலனும் பிரமிளும் ஞாபகத்துக்கு வருவார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்பாளுமை, படைப்புலகம் என்பன வேறுவேறானவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை. ஆனால் இந்த நான்குபேரும் ஏதோ ஒருவகையில் உள்ளார்ந்த விதமாக ஒன்றுபட்டிருப்பதைப் போலவே உணர்கிறேன். அந்த ஒன்று படுதல் என்ன என்று இதுவரையில் துலக்கமாகத் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று மெல்லிய இழையாக இவர்களுக்கிடையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏதோ ஒரு விசயம் அல்லது ஏதோவொரு அம்சம் என்னவென்று என்றேனும் நிச்சயம் கண்டுணரலாம். உணர்தளத்திலிருந்து அது துலக்கமாக மேற்கிளம்பி வரக்கூடும்.

இதுவரையில் எனக்குப்பட்டது இவர்களிடம் குவிந்திருக்கும்  தனிமைதான் இந்த நான்குபேரையும் அப்படி ஒன்றாக நினைக்கத் தோன்றுகிறது எனலாம். ஆனாலும் இதை நான் மங்கலாகவே கண்டுள்ளேன். இந்தத் தனிமையை இவர்களின் படைப்புகளின் வழியே துலக்கமாகக் காணமுடியவில்லை. பதிலாக இவர்களின் வாழ்க்கையில்தான் அதைப் பார்க்க முடியும்.

வாழ்க்கையில் இருந்த இந்தத் தனிமை இவர்களிடம் அந்தப் பிரக்ஞையுடன் உணரப் பட்டிருந்தால் அது எப்படியும் இவர்களின் படைப்புகளில் வெளிப்பட்டிருக்குமே என்று ஒரு நண்பர் கேட்டார். இதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களின் எழுத்துகளில் உள்ளோட்டமாகப் படிந்திருக்கும் பிரபஞ்சப் பிரக்ஞையும் ஆன்மீக தரிசனங்களும் சொல்வதென்ன? தனிமையின் புள்ளியிலிருந்து வேர்விடும் தரிசனம்தானே இது.

பிரமிள் வேகமும் தீவிரமும் உடையவர். அந்த வேகத்தையும் தீவிரத்தையும் இன்னொரு நிலையில் கொண்டவர் நகுலன். ஆனால் அந்த அளவுக்கு அ.செ.முவும் தா.இராமலிங்கமும் வேகமும் தீவிரமும் கொண்டவர்களல்ல. அ.செ.மு முழுக்க முழுக்க வெளிப்டையாகவே சமூகத்தை விமர்சிக்கும் எழுத்தின் நாயகர். பிரகடனங்களில்லாத எழுத்துலம் அவருடைய பலம். கிண்டலும் அங்கதமும் அவருடைய சிறப்பு. பிரமிளும் நகுலனும் பரிசோதனைகள், படைப்புலகத்தின் பல்வேறு சாத்தியப்பாடுகளை, வடிவங்களை எல்லாம் தங்கள் படைப்பு வாழ்க்கையில் கொண்டவர்கள். தமிழ்ப் படைப்புலகில் இந்த இரண்டு பேரும் சாதனைகள் என்ற அளவில் தங்களை நிலை நிறுத்தியவர்கள். அ.செ.மு அந்த அளவுக்குச் செல்லவில்லை. ஆனாலும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு தன்னை நிறுவியவர்.

தா. இராமலிங்கம் கவிஞர். இராமலிங்கத்தின் சிறப்பு பேச்சோசையை, நடைமுறை வாழ்க்கையை, புழங்கு மொழியை தன்னுடைய கவிதை இயக்கத்தில் கொண்டு வந்தவர். ஈழத்துக் கவிதைகளில் இந்தப் பண்புகளை மஹாகவியும் தா. இராமலிங்கமும் மிகச் செழிப்பாக, பிரக்ஞை நிலைப்பட்டுக் கொண்டு வந்தவர்கள். இதை 1950 களில் இவர்கள் இருவரும் ஆரம்பித்து வைத்தார்கள். மஹாகவி மரபான வெளிப்பாட்டு வடிவத்தில் புதுமைகளை நிகழ்த்த முனைந்தவர். அதில் குறிப்பிடக் கூடிய எல்லைவரை சென்றவர். ஆனால், தா.இராமலிங்கம் புதிய வெளிப்பாட்டு முறைமையில் மிகச் சாதரணமாகவே தன் கவிதைகளை, தன்னுடைய படைப்புலகத்தை உருவாக்க முனைந்தவர். தா. இராமலிங்கம் அதிகம் எழுதவில்லை. படைப்புலகத்தில் தொடர்ந்து இயங்கவும் இல்லை. தீவிரமாகப் படைப்புலகத்தை அவர் அணுகவும் இல்லை. ஆனால் அவர் ஈழத்துக் கவிதையுலகத்தில் நிராகரிக்க முடியாத படைப்பாளி. புதிய கவிதைகளின் முன்னோடி. ஈழத்தில் முதன்முதலில் புதுக்கவிதை நூலினை 1960 களில் வெளியிட்டு ஊக்கநிலையை ஏற்படுத்தினார் அவர். அப்போது ஈழத்தில் நிலவிய இலக்கியப் போக்கையும் விமர்சன இயக்கங்களையும் மேவி எழுந்தார் தா. இராமலிங்கம்.

தா. இராமலிங்கத்தை முதன்முதலில் சரியாக இனங்கண்டவர் மு. தளையசிங்கம். இராமலிங்கத் தின் முதலாவது கவிதை நூலான ‘புதுமெய்க் கவிதைகளு’க்கு கவிஞர் இ. முருகையன் முன்னுரை எழுதியிருந்தபோதும் தா. இராமலிங்கத்தின் கவிதைகளை ஏற்பதற்கோ, புதிய கவிதை இயக்கத்தை அங்கீகரிப்பதற்கோ முருகையனிடம் தயக்கங்களிருந்தன. ஆனால், மு. தளையசிங்கம் தா. இராமலிங்கத்தையும் அவருடைய புதிய கவிதை இயக்கத்தையும்  சரியாக இனங்கண்டு கொண்டார். அதை அவர் பேருவகையுடன்  முன்னிலைப் படுத்தினார். இதை நாம் தா. இராமலிங்கத்தின் இரண்டாவது கவிதை நூலான காணிக்கையில் (1965) காணலாம். இந்த நுலீலில் எஸ். பொவும் முன்னீடும் உண்டு. ஆனால், காணிக்கை கவிதைத் தொகுதிக்கு மு. தளையசிங்கம் எழுதியிருக்கும் முன்னுரை முக்கியமானது. அது புதிய கவிதை இயக்கத்தைக் குறித்த விரிவான ஒரு ஆய்வுரையே.

அப்போது பேராசியர் க. கைலாசபதியும் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் ஈழத்து விமர்சன உலகில் மிகப் பெரிய ஆதிக்கத்தைக் கொண்டிருந் தனர். ஆனால், தா. இராமலிங்கம் இவர்கள் இருவரிடமும் தன்னுடைய நூல்களுக்கான முன்னுரையினை வாங்கவில்லை. பதிலாக இவர்களிடமிருந்து விலகியிருந்த மு. தளைய சிங்கத்திடமும் எஸ்.பொ. விடமும்தான் முன்னுரை களை வாங்கியிருக்கிறார். அவர் தன்னுடைய இலக்கிய வழியை, அதன் செல்நெறியை மு. தளைய சிங்கத்திடம்தான் கண்டிருக்கிறார். பின்னாளில் மு. தளையசிங்கத்தின் மெய்யுள் வழியில்தான் அதிக நம்பிக்கையோடு தா. இராமலிங்கம் நெருக்கமாக நின்றார். இதற்கு அவரிடம் உள்ளோட்டமாக இருந்த ஆன்மீக ஈடுபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தா. இராமலிங்கத்தின் கவிதைகள் சமூக அக்கறையுடையவை. போலி ஆசாரங்களின் மீதும் பொய்யான நம்பிக்கைகளின் மீதும் ஆழமான விமர்சனங்களை முன்வைப்பவை.

யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் மீதும் சிங்களப் பேரினவாதத்தின் மீதும் பேரினவாதச் சிந்தனையில் மையங் கொண்டிருக்கும் இலங்கை அரச இயந்திரத்தின் மீதும் தா. இராமலிங்கம் கடுமையான எதிர் வினைகளை ஆற்றியிருக்கிறார். அவர் இயங்கிய கால எல்லையில் நிலவிய அனைத்துவகையான சமூக நீதியின்மைகளுக் கெதிராகவும் அவர் குரல் எழுப்பியிருக்கிறார். இதை மு.தளையசிங்கமே மிகவும் தெளிவாகத் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் – ‘தா. இராம லிங்கத்தின் கவிதைகளிலே முழுக்க முழுக்க அவரிடமிருக்கும் தன் காலம், சூழல் பற்றிய உணர்வும் அந்த உணர்வு பிறப்பிக்கும் திருப்தி யின்மையும் அந்தத் திருப்தியின்மெ கோரும் மாற்றமும்தான் முத்திரை பதித்து நிற்கின்றன’ என்று.

யாழ்ப்பாணத்தில் நிலவும் போலியான ஆசாரங்கள் பலவும்தான் யாழ்ப்பாணத்தின் முகமாக இருக்கிறது. அதேவேளை எந்தச் சமூகங்களுக்கும் இருக்கும் தனிச்சிறப்பும் யாழ்ப்பாணத்துக்கும் உண்டு. உதாரணமாக வரண்ட பூமியான யாழ்ப் பாணத்தை தங்களுடைய உழைப்பால் வளப்படுத்தி, அந்த வளத்தை வைத்து வாழ்கின்ற இயல்பையும் சிறப்பையும் மஹாகவி எழுதியிருக்கிறார். நிலாந்தன் எழுதியிருக்கிறார். இதைப் போல பலரும் யாழ்ப்பாணத்தின் சிறப்புகளை தங்கள் படைப்புகளில் பதிவுகளாக்கியிருக்கிறார்கள். அதைப்போல எல்லோரும் இந்தச் சமூகத்தின் குறைபாடுகளை விமர்சனத்துக்கும் உள்ளாக்கியிருக்கின்றனர். இது ஒரு சுவாரஷ்யமான விசயம். கடந்த அறுபது எழுபது ஆண்டுகால எழுத்துகளைத் தொகுத்துப் பார்த்தால் யாழ்ப்பாணச் சமூகத்தின் அத்தனை போக்குகளையும் இனங்காண முடியும். இந்தக் காலப்பகுதியில் நிலவிய சாதியப் பிரச்சினைகள், அதற்கெதிரான போராட்டங்கள், தமிழ் மக்களின் இனவுணர்வு, அதன் விளைவான அரசியல், அதன் தொடர்ச்சியான போராட்டங்கள், தமிழ்ச் சமூகத்தின் அத்தனை குறைபாடுகளுடனும் சிறப்புகளுடனும் முன்னெடுக் கப்பட்ட ஆயுதப் போராட்டம், அந்த ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் சிறப்பும் ஜனநாயக மறுப்பும் எனச் சகலதையும் நாம் இந்தக் கால எழுத்துகளில் பார்க்க முடியும்.

ஆனால், இராமலிங்கம் இந்தக் காலப்பகுதியில் தான் இயங்கிய காலப்பகுதியின் நிழ்வுகளையும் போக்களையும் அதற்காதரவான/எதிரான நிலைப் பாடுகளையும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சாதியத்துக்கெதிரான அவருடைய பதிவுகள் முக்கியமானவை.
‘…வேளாளர் குடிப்பிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும் …..’
‘இன்பம் நுகர்ந்தேன்
என்
ஆசார முட்டையிலும்… ஆசார முட்டையிலும்
கறுப்பு மயிர் கண்டேன்…’
(ஆசைக்குச் சாதியில்லை)
‘ஐயோ வாடி வீடே
நீ வதை கூடமானாயே…’
என்றும்
சாவிளைச்சல் சாவிளைச்சல்
சரித்திரம் காணாத சாவிளைச்சல்…’
எனவும்
‘கோழி குழறகுதே
மரநாய்தான் மரநாய்தான் …’
(நெஞ்சு பதறுகுது)

என்றும் அரச பயங்கரவாதத்தின் விளைவான எண்பதுகளின் நிலைமைகளை இராமலிங்கம் எழுதினார். இராமலிங்கம் இப்படி எழுதியவை பின்னாளில் தமிழ் அரசியலில் நிகழ்ந்தேறிய துரதிர்ஸ்டம் வேறு. அப்போதும் அவருடைய கவிதைகள் நினைவில் வந்தன.

யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பகுதியில் கல்வயல் என்ற இடத்தில் பிறந்தவர் தா. இராமலிங்கம். இந்தக்கிராமத்தில்தான் ஈழத்தின் இன்னொரு முக்கிய கவிஞரான இ. முருகையன், அவருடைய தம்பியாரான இ. சிவானந்தன், கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி ஆகியோரும் பிறந்தனர். இவர்கள் எல்லோரும் பேச்சோசையைத் தங்கள் கவிதைகளில் மையமாகக் கொண்டிருந்தவர்கள். பின்னர் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும் ஒரு மையமாக இந்தப் பண்பைக் கொண்டியங்கியவர்கள். அதேவேளை இவர்கள் அனைவரும் அமைதி, தீவிரம் என்ற நிலைகளில் அதிக ஒற்றுமையையும் கொண்டிருந்தனர். கல்வயல் வே. குமாரசாமி கொஞ்சம் உணர்ச்சிவசப்படும் ஆள் என்றாலும் மற்றவர்களிடம் இருந்த நெருக்கத்தைப் பேணும் இயல்பைக் கொண்டிருந்தனர் எல்லோரும்.

பிரமிள் எழுதத் தொடங்கிய காலப்பகதியில்தான் தா. இராமலிங்கமும் எழுதத் தொடங்கினார். அதுவும் புதுக்கவிதை இயக்கத்தில். ஆனால் இவர் தமிழகத்தில் அதிக கவனத்தை பெறவில்லை. தமிழகத்தில் படிப்பை முடித்துக் கொண்டு தா. இராமலிங்கம் ஈழத்துக்குப் பதுக்கவிதை இயக்கத்தைப் பற்றிய கனவுகளோடு திரும்புகிறார். அந்தக் கனவுகளோடு பிரமிள் ஈழத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்கிறார். இந்த இருவருக்கும் உள்ள சில நெருக்கமான ஒற்றுமைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவன. பிரமிள் தமிழகத்தில் கவிதை இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டார். அவரால் அதில் உச்சங்களைத் தொடமுடிந்தது. ஆனால் தா. இராமலிங்கம் இடையில் நின்று கொண்டார்.

தா. இராமலிங்கம் 1950களில் எழுதத் தொடங்கினாலும் தொடர்ந்து படைப்பியக்கத்தில் அவர் ஈடுபட்டதில்லை. இடையிடையே அவருக்கு உறங்கு காலங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக அவருடைய மகன்களில் ஒருவர் அகாலமரணமானதை அடுத்து அவர் குறிப்பிட்ட காலம் எழுதவேயில்லை. அப்போது மிகுந்த அழுத்தத்துக்கும் உள்ளாகி யிருந்தார். தா.இராமலிங்கத்தை நான் சந்தித்ததும் இந்தக் காலப்பகுதியில்தான். அது எண்பதுகளின் இறுதிப்பகுதி. அலையிலும் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுதியிலும் தா.இராமலிங்கத்தை அடையாளம் கண்டிருந்தேன். அதன் பின்னரே அவருடைய புதுமெய்க் கவிதைகளையும் காணிக்கை யையும் நண்பர் யேசுராசா தந்திருந்தார். யேசுராசாதான் தா.இராமலிங்கத்தையும் அறிமுகப்படுத்தினார். ஆனால், இந்த விவரங்களும் தா. இராமலிங்கத்தின் கவிதைகளும் அவரை எப்படியும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டின. அந்தக் காலப்பகுதியில் நான் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருந்தது. எண்பதுகளின் தொடக்ககால அரசியல் போக்கில் ஈடுபட்டதன் விளைவாக எண்பதுகளின் இறுதிப்பகுதியிலும் அப்படியரு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். தா. இராம லிங்கத்தை நான் சந்தித்தபோது அவர் பெரும்பாலும் மௌனநிலையிலேயே இருந்தார்.

மௌனத்தையே தன் பொழுதில் பெரும்பாலும் அவர் கடைப் பிடித்தார். தியானமும்  மௌனமும் தான் அவருடைய பொழுதுகள் என்றிருந்தன அப்போது. அபூர்வமாக எப்போதாவது பேசுவார். ஆனாலும் நான் அவரிடம் இடையிடையே போய்வந்து கொண்டிருந்தேன். அவர் சிலபோத ஆர்வத்தோடு கதைப்பார். பல சமயங்களிலும் எதுவும் பேசாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார். சாந்தமான அந்த முகத்தில் ஒரு போதும் நான் எந்த வன்மத்தையும் சினத்தையும் கண்டதில்லை. மெல்லிய புன்னகை மலர்ந்திருக்கும். கேலி, கிண்டல், அதிர்ந்த பேச்சு, பிறரைப்பற்றிய விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் என்று எதையும் அவருடைய எந்த உரையாடலிலும் நான் கண்டதில்லை.

ஏன், தன்னுடைய எழுத்துகளைப் பற்றியும் அவர் அதிகம் பேசியதில்லை. ஆனால் தியானத்தை, மௌனத்தில் இருக்கும் ஆனந்தத்தை, தன் மனதில் இருக்கின்ற விடுதலைத் தாகத்தை, பிரபஞ்சம் பற்றிய தன்னுடைய வியப்பை, அதை நோக்கிய தனது பயணத்தை, அந்தப் பயணத்தின் தரிசனங்களை எல்லாம் அவர் ஆர்வத்தோடு சொல்வார். அப்போது அவருடைய கண்களில் மகிழ்ச்சி பொங்கும். முகம் பரவசமாகி மலரும். எனக்கும் அவருக்கும் இடையிலான உறவு மலர்ந்திருந்த காலப்பகுதியில் அவர் பெரும்பாலும் இலக்கியத்தை விட்டு, எழுத்துகளை விட்டு தியானத்திலேயே அதிக கவனத்தைக் கொண்டிருந்தார். அதனால் அவருடைய பேச்சுகள் தியானத்தைப் பற்றியும் மௌனத்தைப் பற்றியுமே அதிகமும் இருந்தன. எப்போதாவது இருந்தாற்போல இலக்கியத்தைப் பற்றிப் பேசுவார். ஆனால் தான்  எழுதிவைத்திருந்த கவிதைகளைக் காட்டுவார். இது அபூர்வ நிகழ்ச்சி. என்றாலும் அந்தக் கவிதைகளை அவர் முறைப்படி சேகரித்து வைத்திருந்தமை சற்று மகிழ்ச்சியாகவே இருந்தது.

ஒருவர் எதில் அதிக கவத்தைக் குவித்திருக் கிறாரோ அதைப்பற்றியே அவருடைய கவனமும் ஈடுபாடும் இருக்கும். தா. இராமலிங்கத்துக்கு இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டையும் விட தியானத்தில் இருந்த ஈடுபாடும் சுகமும் அலாதி யானது. அவருடைய அந்த ஈடுபாட்டைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியாது அவருடைய குடும்பத்தினரும் அவருக்கேற்றமாதிரி நடந்து கொண்டனர். ஒரு பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்த ஒருவர் சாதாரணமாக இப்படியான வாழ்வில் ஈடுபடுவதென்பது சாத்தியக் குறைவானது. அதுவும் யாழ்ப்பாணவாழ்க்கையில் இந்த மாதிரி  ஆட்கள் இருப்பது மிகக் கடினமும் குறைவும். இந்த நிலையில் தா. இராமலிங்கம் எனக்கு மிகப் பிடித்தவரானார். இன்னும் தன்மீது ஆர்வத்தைக் குவித்தார். அவரை நான் அடிக்கடி சந்தித்தேன். நட்பு மலர்ந்தது. நெருக்கம் கூடியது. இப்போது நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவரும் மெல்ல மெல்ல பல விசயங்களைப் பற்றியும் கதைக்கத் தொடங்கினார். இலக்கியத்தை, தன்னுடைய இலக்கிய ஈடுபாடு ஏற்பட்டவிதத்தை, பின்னர் தான் புதிய கவிதைகள் எழுதத் தலைப்பட்டதை, முதல் தொகுதிகள் வெளியிடும் போத எதிர் கொண்ட சூழலை என்று பலதையும் சொன்னார். மௌனம் பேச்சாக மாறியது. ஆனால் இது முழு இயல்போடு வளர்ச்சியடைந்தது என்று சொல்ல மாட்டேன். முன்னர் இருந்ததையும் விட சற்று மாறுதலான ஒரு நிலையில் அவர் இயங்கினார். இந்தக் காலப்பகுதியில் அவர் தன்னுடைய தியானத்தின் வழியான தரிசகங்களை எழுதினார். வெளிப்பார்வைக்கு மேலொட்டம் போலத் தெரியும் ஆழமான பல விசயங்களை எல்லாம் அவர் எழுதினார். அப்படி எழுதிய கவிதைகளை, உரை நடைக்குறிப்புகளை அவர் சிலவேளை எனக்குக் காட்டுவார். ஆனால் அவை பற்றி எந்த விளக்கத்தையும் அவர் சொல்வதில்லை. என்னுடைய அபிப்பிராயத்தை எதிர்பார்த்ததும் இல்லை. ‘ஏதோ எழுதியிருக்கிறேன். வேண்டு மானால் பார்த்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றிய அபிப்பிராயங்கள் எல்லாம் உங்களைப் பொறுத்தது. என்னுடைய மனநிலையும் அதன் பயணமும் செல்லம் திசையைப் பாருங்கள்’ என்ற மாதிரி அவருடைய எழுத்துகள் இருந்தன. அவர் அப்படித்தான் நினைக்க வைத்தார்.

மு. தளையசிங்கத்தின் மீது அதிக ஆர்வமும் மதிப்பும் கொண்டிருந்தார் தா. இராமலிங்கம். கவலைக்குரிய சங்கதி என்னவென்றால், தளைய சிங்கம் ஏற்கனவே, இளவயதில் இறந்தமையே. ஒரு வகையில் தா. இராமலிங்கத்தை இந்த மரணமும் பாதித்திருக்கிறது என்பது என் கணிப்பு. அவருடைய மகனுடைய இழப்புக்காக மட்டும் அவருடைய மனம் இப்படிப் பாதிப்படையவில்லை. அது ஏற்கனவே மு. தளையசிங்கத்தின் இழப்பினால் அதிர்வுக்குள்ளாக்கி யிருக்கிறது. பின்னர் மகனின் இழப்பு அதை மேலும் தாக்கிய போது அவர் இறப்புக்குறித்து, வாழ்க்கை குறித்து விசாரணைகள் செய்யத் தொடங்கினார். அந்த விசாரணைகளின் வழியே அவர் சில கவிதைகளை எழுதியும் வைத்திருந்தார். அந்தக் கவிதைகளை வெளியிடவேண்டுமென அவர் மெல்லிய விருப்பத் தையும் கொண்டிருந்தார்.

இராமலிங்கத்தின் இந்தத் தியானம் சாதாரண வாழ்க்கை குறித்த மீள் மதிப்பீட்டுக்குள்ளாக்கியது. அவர் பின்னர் ஏற்பட்ட சரிவுகளை / சமூக நிகழ்வுகளை அதிக அக்கறையோடு பார்க்கவில்லை. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு. எதுவும் அவற்றின் சுற்றுப் பயணத்தில்தான் பயணிக்கும். அதைத் தாண்டிச் செல்ல முடியாது என்பார் அவர். பிரபஞ்ச இயக்கத்தைப் பாருங்கள். அது சுற்றொழுங்கில் நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி எதுவுமேயில்லை என்பது அவருடைய நிலைப்பாடு. ‘கை மீறிச் செல்லும் விசயங்களுக்காக நம்மால் துக்கப்படத்தான் முடியும். அதற்குமேல் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்’ என்றார் எங்களுடைய போராட்டத்தின் போக்கு களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள். அவர் அந்த உரையாடலில் ஆர்வமே காட்டவில்லை. அது ஒரு பயனற்ற விசயம் என்பது அவருடைய எண்ணம். இந்த நிகழ்ச்சிப் போக்குகள் எங்கே செல்லும், அதன் விளைவுகள் எப்படி அமையும் என அவருக்கு ஏற்கனவே தெரியும். அவர் ஒரு மெல்லிய புன்னகையும் எந்தப் பதற்றமும் இல்லாமல் அதை எதிர் கொண்டார்.

வாழ்க்கை பற்றிய புரிதல்கள் வேறுவிதமாக ஏற்படத்தொடங்கியதை அடுத்து அவருடைய மன இயக்கத்தின் திசையும் நிலையும் மாறிவிட்டன. அதனால் அவர் பொதுவான இலக்கியப் போக்கிலிருந்து விடுபட்டுவிட்டார். அல்லது அவரைப் பொதுவான இலக்கிய உலகம் விட்டுவிட்டது. யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பகுதில் அவர் இருந்தபோதும் அவரை அதிகமான எழுத்தாளர்கள் சந்திப்பதில்லை. அவருடன் யாரும் தொடர்பு கொள்வதுமில்லை. அவரும் கலந்துரை யாடல்கள், வெளியீட்டு விழாக்கள், இலக்கிய அரங்குகள், இலக்கியச் சந்திப்புகள் என்று எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த, இருக்கின்ற பலருக்கு தா. இராமலிங்கத்தை நேரில் தெரியாது. ஆனால் அவரைப் பற்றி எல்லோரும் நிறைய அறிந்திருக்கிறார்கள்.

ஏற்கனவே கூட தா. இராமலிங்கத்துடன் மு. தளையசிங்கம், எஸ்.பொ, அ. யேசுராசா, மு.பொ, சு. வில்வரெத்தினம் போன்ற மிகச் சிலருக்குத்தான் அறிமுகமும் பரிச்சயமும் இருந்தது. ஏறக்குறைய தா. இராமலிங்கம் மெய்யுள் பண்ணையைச் சேர்ந்தவராக இருந்ததால் அவருக்கு இயல்பாக இந்தத் தரப்பைத் தவிர பிறருடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதில் ஆதவையே ஆர்வமோ இல்லாமல் இருந்திருக்கக் கூடும். மு. தளையசிங்கத்தின் மறைவு இந்த ஆர்வத்தை மேலும் குறைத்திருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.
தா. இராமலிங்கத்துடன் என்னுடைய உறவு நீடித்ததன் பயனாக சில காரியங்களை என்னால் செய்ய முடிந்தது. வெளிச்சம் சஞ்சிகையில் நான் பணி யாற்றிய போது தா.இராமலிங்கத்தின் கவிதைகள் சிலவற்றை அதில் பிரசுரிக்கக் கூடியதாக இருந்தது. அவர் ஏற்கனவே எழுதி பிரசுரமாகாதிருந்த கவிதைகளை இதில் பயன்படுத்தினேன். அந்தக் கவிதைகளில் இருந்த விசயங்கள் காலப் பொருத்தம், சூழல் பொருத்தம் என்பவற்றுக்கு ஏற்ற மாதிரி யிருந்தது இந்த வாய்ப்பைத்தந்தன. அதே வேளை இராமலிங்கத்தை ஓரு நேர்காணலும் செய்திருந்தேன். அந்த நேர்காணலில் அவர் பல விசயங்களைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அது சிறிய நேர்காணல்தான் என்றாலும் பலருடைய கவனத்தையும் பெற்றது.

இதற்குப் பின்னர் தா. இராமலிங்கத்தைப் பற்றிய ஆர்வம் மீண்டும் ஈழத்து இலக்கிய உலகத்தில் இளைய தலைமுறையிடத்தில் அதிகமாகியது. அவருடைய கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டன. அவருடைய கவிதைகள் மீள் பிரசுரத்துக்குள்ளாகின. ஆனால் எப்போதும் அவருடைய கவிதைகளை முன்னிலைப்படுத்தி வந்தவர் அ. யேசுராசா. அவருடைய ‘கவிதை’ இதழில் ‘காணிக்கை’ நூலுக்கு மு. தளையசிங்கம் எழுதியிருந்த முன்னுரை மீளப் பிரசுரித்தார் யேசுராசா. தா. இராமலிங்கத்தின் கவிதைகளின் சிறப்பையும் அவை முன்மொழிந்த வெளிப்பாட்டு முறைமை களையும் பேச்சோசையையும் புழங்கு மொழியையும் இராமலிங்கம் பயன்படுத்திய விதத்தையும் அவர் பலருக்கும் விளக்கினார். இது இராமலிங்கத்தின் மீதான ஆர்வத்தைப் பலரிடமும் குவித்தன. ஆனாலும் எவரும் நேரில் தா. இராமலிங்கத்தைச் சந்திக்கவில்லை. இது ஒரு பெருங்குறைபாடே. ஒரு விதிவிலக்காக அவரை நண்பர் தா. விஷ்ணு தன்னுடைய நினைவுள் மீள்தல் என்ற கவிதை நூலின் வெளியீட்டுக்கு தா. இராமலிங்கத்தை அழைத் திருந்தார். அவர் அதில் உரையாற்றினார். அதுதான் அவர் இறுதியாக நிகழ்த்திய இலக்கிய உரை என்று நினைக்கிறேன்.

இந்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கவிதைகளை ‘புதுமெய்க் கவிதைகள்’, ‘காணிக்கை’ ஆகிய தொகுதிகளுக்குப் பின்னர் எழுதி நூலுருப் பெறாத கவிதைகளை ஒரு நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அதற்காக அவரிடமிருந்த அந்தச் சேகரிப்பிலிருந்து ஒரு பிரதியை எடுத்தும் கொண்டேன். அதில் மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலிருந்த கவிதைகள் உட்படப் பல நல்ல கவிதைகள் இருந்தன. அவற்றை இரண்டு தொகுதிகளாக்கலாம் என்று திட்டமிட்டோம். ஒரு தொகுதி அரசியல் சமூகம் சார்ந்த கவிதைகள். அடுத்த தொகுதி தா. இராமலிங்கத்தின் மெஞ்ஞானக் கவிதைகள். முதல் தொகுதிக் கவிதைகளை தொகுப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாண இடப் பெயர்வு வந்தது. அந்த இடப்பெயர்வோடு நிலைமைகள் மாறின. ஆனால் அவருடைய கவிதைப் பிரதியை வன்னிக்குக் கவனமாகக் கொண்டு போய்ச் சேர்த்தேன் என்ற போதும் தா.இராமலிங்கத்தைப் பற்றிய தொடர்புகள் இல்லாமற் போய்விட்டது. எனினும் அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அவருடைய இரண்டு புதல்வர்கள் வன்னியில் இருந்தார்கள். இரண்டு பேரும் மருத்துவர்கள். அதில் ஒருவர் பின்னாளில் வன்னியை விட்டுப் போய்விட்டார். அடுத்தவர் வன்னியின் இறுதிப் போர் வரையில் வன்னியிலேயே இருந்தார்.

2002இல் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது மீண்டும் நான் தா. இராமலிங்கத்தைச் சந்தித்தேன். முன்னரை விடவும் மெலிந்து போயிருந்தார. முதுமை தெரிந்தது. அதே அமைதி. அதே தியானம். இன்னும் கொஞ்சக் கவிதைகளை- தன்னுடைய தியான தரிசனங்களை எழுதியிருந்தார். படிக்கத் தந்தார். அப்போதுதான் அவருடைய கவிதைகளை நூலாக்கும் முயற்சியில் கல்வயல்  வே. குமாரசாமி ஈடுபட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வேண்டுமானால் என்னிட மிருக்கும் கவிதைகளையும் நூலாக்கலாம் என்று அவருக்குச் சொன்னேன். தேவையில்லை. அதே கவிதைகள்தான் இப்பொது நூலாக்கப்படுகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவையே அதைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்றார் கல்வயல் வே. குமாரசாமி.

நாட்கள் கடந்தன. தொகுதியை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தோம். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. தொகுதி வரவில்லை. பின்னர் சண்டை தொடங்கிவிட்டது. தகவல் எதுவும் இல்லை. அவருடைய மகன் கதிர் ஒருநாள் சொன்னார் சொன்னார் ‘அப்பா மல்லாவியில் இருக்கிறார்’ என்று. போர் மீளவும் ஆரம்பிப்பதற்கு முன்னர் கதிருடன் வந்து அவர் தங்கியிருக்கிறார். கதிர் மல்லாவி மருத்துவமனையில் மருத்துவராக  வேலை செய்தார். அதனால் அங்கே தா. இராமலிங்கமும் இருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபின்னர் நானும் நிலாந்தனும் தா. இராமலிங்கத்திடம் போவதாகத் திட்டமிட்டிருந்தோம். நாட்கள் கழிந்தன. ஆனால் அது கைகூடவில்லை. அதற்கிடையில் சண்டை வலுத்து இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

போர்க்கள நிலைமை எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டிருந்தது. அப்போதுதான் கேள்விப்பட்டேன் தா. இராமலிங்கம் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்று. அவர் கிளிநொச்சிக்கு  இடம்பெயர்ந்து வந்திருந்தார். ஆனால் நினைவு மறதி அவரைப் பீடித்திருந்தது. நன்றாகத் தளர்ந்து போயிருந்தார். அங்கே வந்து சில நாட்களிலேயே எதிர்பாராத விதமாக அவர் அங்கே மரணமடைந்தார். போர்க்களப் பதற்றம், இடப்பெயர்வு நிலைமைகளில் அவருடைய இறுதி நிகழ்வு நடந்தது.

தா. இராமலிங்கத்தின் மறைவை அடுத்து அவருடைய 31 ஆவது நாள் நினைவையட்டி அவருடைய கவிதைகளை ஒரு நூலாக்கலாம் என்று அந்த நெருக்கடி நிலையிலும் மகன் கதிரும் அவருடைய நண்பர்கள் சிலரும் திட்டமிட்டு அந்த வேலைகளை என்னிடம் ஒப்படைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் பணிகளை இன்னொரு நண்பர் செய்திருந்தார். இறுதிவடிவத்தை நான் பார்வை யிடுவதாக இருந்தது. அந்தத் தொகுதிக்கான முன்னுரையை என்னை எழுதும்படி கேட்டிருந் தார்கள். மிகவும் நெருக்கடியான நிலையில் இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஆயினும் நான் அதற்கான முன்னுரையை எழுதிமுடித்தேன். புத்தக வேலைகளை முடிக்க வேண்டியது இனி அச்சகத்தின் பொறுப்பு. ஆனால் நிலைமை வரவர மோசமாகிக் கொண்டிருந்தது.
அந்த நிலையில் புத்;தகத்தை அச்சிட்டு முடிக்கலாம் என்று தோன்றவில்லை. அதனால் அதை அந்த நிலையில் ஒத்தி வைத்துக் கொள்வதாகவும் பின்னர் நிலைமையின் போக்கைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளலாம் என்று தீரமானித்தோம். நிலைமை மாறவேயில்லை. அது தீவிரமாகிக் கொண்டேயிருந்தது இறுதிவரை. தருமபுரம், விசுவமடு, வள்ளிபுனம், தேவிபுரம் வரையில் அவருடைய அந்தக் கவிதைத் தொகுதிக் கான முன்னுரையைக் காவிக் கொண்டேயிருந்தேன். ஆனால் இறுதியில் தொலைந்து போன என்னுடைய ஆறாயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், நான் எழுதிய குறிப்புகள் எல்லாவற்றோடும் அந்த முன்னுரையும் தொலைந்து போயிற்று. மிஞ்சி யிருப்பது இந்த இழப்புகளைப் பற்றிய கவலைகள் தான்.

Advertisements

Entry filed under: ஆளுமை.

அஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி’: ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. – செ.யோகராசா ஒகோனி மக்களின் போராட்டம் – சொகரி எகின்னே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: