அஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி’: ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. – செ.யோகராசா

June 2, 2010 at 3:54 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் தொடக்கம் ஈழத்து தமிழ் நாவல் செல்நெறி கிழக்கில் அம்பாறை மாவட்ட முஸ்லீம் எழுத்தாளர்களிடமிருந்து அதிக ஊட்டச்சத்தினைப் பெற்று வளர்ந்து வருகின்றது என்று கூறத்தோன்றுகிறது. பின் நவீனத்துவ பாணியிலான இரண்டொரு நாவலின் முகிழ்ப்பு ஒரு புறத்திலும் யதார்த்தப் பாங்கிலான நாவலின் முகிழ்ப்பு இன்னொரு புறத்திலுமாக இது வெளிப்பட்டு வருகின்றது. பிற்கூறப்பட்ட வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இவ்வேளை நச்சு வளையம் (எஸ்.நஸீறுதீன், 2004) வாக்குமூலம் (அப்துல் ரஸாக், 2002) நட்டுமை (கீரன், ஆர்.எம். நௌசாத் 2007) என்பனவே நினைவிற்கு வருகின்றன. இவ்வரிசையில் அஸீஸ் எம். பாய்ஸ் அண்மையில் எழுதிய வயலான் குருவியும் இப்போது இணைந்து கொள்கிறது.’

வயலான் குருவி வரவின் சிறப்பம்சங்களு ளன்று அரசியல் நாவல் என்று நோக்குகின்ற போது அது பெறுகின்ற முக்கியத்துவம், ஏலவே நச்சு வளையம் விரிந்த தளத்தில் ஈழத்தின் தேசிய இனங்களின் பிரச்சினைகள் பற்றி முதன் முதலாகப் பேசியிருப்பினும் சிங்களப் பேரினவாதம் முஸ்லிம் சமூகத்தை நசுக்குவது பற்றிப் பேசுவதற்கு அந்நாவலில் கொடுக்கப்பட்ட அழுத்தம் போதாது. மாறாக இந்நாவல் அதனை உரத்துப் பேச முற்படுகிறது. இன்றைய அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பொனன்குடிப் (தீகவாபிப்) பிரச்சினைபற்றி அதன் ஆரம்பம் தொடக்கம் அண்மைக்காலம் வரை கவனஞ்செலுத்துகிறது!. இவ்விதத்தில் அதாவது சிங்களப் பேரினவாதத்தால் முஸ்லிம் மக்கள் நசுக்கப் படுவது
பற்றி ஆழமாகப் பேசும்முதன் நாவல் என்ற பெருமை வயலான் குருவிக்குள்ளது!.

எழுபதுகளிலிருந்து ஈழத்தில் பிரதேச நாவல்கள் பெருமளவு வந்து கொண்டிருக்கின்றன. எழுபதுகளில் கனவு ஈழத்தின் பல பிரதேசங்களும் எண்பதுகளின் தொடக்கம் தென்னிலங்கையும் தொண்ணூறுகள் தொடக்கம் வன்னியும் அண்மையிலிருந்து மன்னாரம் பிரதேசமும் இவ்விதத்தில் எமது கவனிப்பைபக் கோரியுள்ளன. இவ்வாறே அம்பாறைப் பிரதேசமும் – அது எழுபதுகளில் ஆரம்பித்தாலும் இப்போது ஈழத்து நாவல்களில் முனைப்படைய தொடங்கி யுள்ளது. (உ-ம் முற்குறிப்பிட்ட நாவல்களோடு வெள்ளாவியும்) இவ்விதத்தில், இந்நாவல் பொன்னன் குடிப் பிரதேச மக்களது ஏறத்தாழ ஐம்பதாண்டு கால வாழ்க்கையை பொதுவாகக் கோடுகளாகவும் தேவையான இடங்களில் கோலங்களாகவும் வரைந்து செல்கிறது. அவ்வப்போது அளவோடும் அழகோடும்  இந்நாவலில் வெளிப்படும் மண்வாசனை ஈழத்து வாசகர்களுக்கு புதியது.

நீண்ட கால வரலாற்றினை கூற முற்படும் எழுத்தாளர்களுள் சிலரே அவற்றை தலைமுறை வேறுபாடுகளுடன் கூற முற்படுவர். அவ்வாறு கூற முற்படுவது கடினமான காரியமாகும். இவ்விதத்தில் கில்லையாற்றங்கரை (இராஜேஸ்வரி பால சுப்பிரமணியம்), ஒரு கிராமத்துக் கனவு (ஷம்ஸ்) இவ்வேளை நினைவுக்கு வருகின்றன. இப்போது வயலான் குருவியும் இரு தலைமுறைகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது; தலைமுறை வேறுபாடுகள் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தப்படுகின்றன.

அரசியல் சார்பு பிரதேச மணம், தலைமுறை வேறுபாடு ஆகியவற்றினூடே அழகான – றேமான்ரிசப் பாங்கு அற்ற யதார்த்தம் பரவியுள்ள காதலின் கதையன்றும் நாவலின் இன்னொரு அடிச்சுவடாக அமைத்து இந்நாவலை வாசகர் ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுகின்றது. இந்நாவல் வாசகர்கள் மறக்க முடியாத விதத்தில் தக்குவா – இளையதம்பிக்காக்கா காதல் சித்திரமாகி நிரந்தரமான பதிவாகிவிட்டது என்று கூறுவதிலும் தவறில்லை!.

தக்குவா – இளையதம்பிக்காக்கா ஆகிய பாத்திரங்கள் மட்டுமன்றிபொதுவாக அனைத்துப் பாத்திரங்களிலுமே உயிர்த்துடிப்புடன் – இரத்தமும் தசையும் பெற்று நடமாடுவது குறிப்பிடத்தக்கது. ஆசிரியரது எழுத்தாற்றல் சிறப்பே அதற்கான காரணமாகிறது எனலாம்.

யதார்த்த நாவலொன்றில் யாதார்த்த உருவாக்க மென்பது மேற்குறித்தவாறு பாத்திர உருவாக்கத்தில் மட்டுமன்றி குறிப்பிட்ட மக்களது நம்பிக்கைகள் பேச்சு மொழிப் பிரயோகங்களைக் கையாளுகின்ற முறைமையிலும் தங்கியுள்ளது என்பது நாமறிந்ததே இவ்விதத்தில் “புதுசா வயசுக்கு வந்தபுள்ள மஹரிபட்ட நேரம் வெளியில் அதுவும் கொளத்தடி யில் நிண்டா பேய் பார்வையாகும்”; என்று சொல்லப்படுவதும் ஆக்காட்டி கத்தினால் தீங்கு விளையும்; காகம் கத்தினால் வீட்டுக்கு யாரும் வரப்போகிறார்கள் என்ற நம்பிக்கைகளும் இந்நாவலில் இடம்பெறுவதும் வீச்சான அன்றாடப் பேச்சு மொழியோடு ஈட்டியளவு சூரியன் முதலான மொழிப்பிரயோகங்கள் ஆங்காங்கு இடம்பெறுவதும் மனங்கொள்ளத்தக்கனவாகும்.

அப்துல் ரஸாக் முதலான அண்மைக்கால இளந் தலைமுறை எழுத்தாளர் சிலரிடமே கவித்துவப் பாங்கான மொழிநடையோடு எழுதும் ஆற்றல் கைகூடியுள்ளது. இந்நாவலாசிரியரிடமும் அவ் வாற்றல் நிரம்பவும் உண்டு அத்தகைய நடைச்சிறப்பு சூழல் நிகழ்ச்சி விபரிப்புகளில் திறம்பட வெளிப் படுகிறது. அதனால் அவ்விபரிப்புகள் பலவும் அழகான சித்திரங்களாக – நல்ல சினிமாவில் வரும் சிறந்த ‘சொட்ஸ்’களாக அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக இந்நாவலில் ஆரம்பம் அமைகிறது.

அது பின்வருமாறு:
‘மெல்லிய தென்றலின் பாடலுக்கு தலையசைக் கும் முருங்கை மர இலைகளினூடாக பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருந்தது. வெண்மேகங்கள் புகையாய் கலைந்து கூட்டம் கூட்டமாய் நிலவைக் கடந்து செல்லும் எழில் காண மனம் பூரித்துப் போகும்.

ஆனால் குடிசை முற்றத்தில் போடப்பட்டிருந்த சாக்குக் கட்டிலில் மல்லாந்து வானத்தைப் பார்த்துக் கிடந்த இளையதம்பி காக்காவுக்கு நிலவு பற்றியெரிந்து புகை பரவிக் கொண்டிருப்பதாய்த்தான் தோன்றியது.

குடிசைக்கு அருகில் நின்ற பனை மரத்தில் சில்லூறொன்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் நரிகள் கூட்டத்தின் கூக்குரல், கோணப் புளிய மரத்தில் ஆந்தை ஒன்றி பரிதாப அலறல், கிழங்கு இறங்கிய மயறு மரங்களை உறுமிக் கொண்டே கிளறும் பன்றிகளின் சத்தம் இவை எதுவுமே அவர் காதுகளில் அடையவில்லை.

எங்கோ ஒரு தூரத்துப்பாலை வெளியில் – கொதிக்கும் வெயிலில் மல்லாக்கப் படுக்க வைத்து நெஞ்சில் பாறாங்கல்லை ஏற்றி வைத்து யாரோ துன்புறுத்துவதாய் உணர்ந்து கிடக்கும் இளையதம்பி காக்காவின் அந்த மன வேதனைக்குரிய அந்த யாரோ யாரென்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.”

நாவலின் ஆரம்பம் போல் முடிவும் கனகச்சித மான விதத்தில் அமைகின்றது.

‘இளையதம்பி காக்காவின் வேளாண்மை வயல் கதிர் எறிந்து பால் பருவமாய் கிடந்தது. வழமை போல் ஒரு பேரிரைச்சலுடன் வாலான் குருவிக் கூட்டமொன்று அவரின் விறைத்துக்கிடந்த உடம்புக்கு மேலாக எச்சமிட்டுப் பறந்தது. எப்படியும் நம்மை விரட்டுவதற்கு இளையதம்பி காக்கா வருவார் என்ற நம்பிக்கையில்” பழமையும் புதுமையுமான உவமைகள் ஆங்காங்கே அநாயாசமாக வெளிப்படுகின்றன.

ஈழத்தின் வேறு சில நாவல்கள் சிறந்த குறியீட்டுப் பால் கரன தலைப்புகளில் வெளிவந்திருப்பது போன்று (உ-ம் நிலக்கிளி, காட்டாறு, நச்சு வளையம்) இந்நாவலின் தலைப்பும் அமைந்திருப்பது பற்றியும் அதன் பொருத்தப்பாடு பற்றியும் அதிகம் விபரிக்க வேண்டியதில்லை.! (மேற்குறிப்பிட்ட பகுதியில் வரும் வயலான் குருவியும் ஒரு விதத்தில் குறியீடாகவுள்ளது.)

ஒன்றிற்கு மேற்பட்ட விடயங்களுக்கு அழுத்தம் கொடுத்து அனைத்தையும் ஒன்றாய் வைத்துள்ள இந்நாவல் அவை ஒவ்வான்றையும் பற்றி விரிவாக விளக்கியிருக்கலாமே என்று வாசகர் சிலர் கருதுதல் கூடும், விளைவாக தலைமுறைகள் (நீல பத்மநாதன்) போன்ற நாவலொன்று ஈழத்தில் வெளிவந்திருக்கு மென்று அத்தகையோர் நினைப்பினும் தவறில்லை.

ஆயினும் பிரக்ஞையோடு அளவாக பல விடயங்கள் பற்றி பேசுவது கூட ஒரு எழுத்தாளனின் ஆளுமையைக் காட்டுமென்றே கருத வேண்டும். நன்கு பிரசித்தமான எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது. (வைக்கம் முகமது பஷீர்) நாவல் பற்றி அறிந்துள்ள தீவிர வாசகர்களுக்கு இது பற்றி அதிகம் கூறத் தேவையில்லை. புகலிட நாவலான (கே.எஸ். துரையின்) சுயவரமும், சமகால அரசியல் வடமாராட்சிப் பிரதேச கிராமிய மணம், புகலிட (டென்மார்க்) தமிழரது வாழ்வு ஆகியவற்றை அளவாக வெளிப்படுத்தியிருப்பதும் இவ்வேளை நினைவிற்கு வருகிறது.

இந்நாவல் பற்றிய குறைபாடுகள் எதுவும் கூற வேண்டுமாயின் மொழி நடை சார்ந்த வழுவொன்று பற்றிக் குறிப்பிடலாம். வசன அமைப்பு உருவாக்கத்தில் இலக்கண வழு ஆங்காங்கே தலை நீட்டுகிறது. இத்தகைய வழுஇன்றைய தலைமுறை யினர் பலராலும் எழுத்தாளர், பட்டதாரி, மாணவர், ஆசிரியர் உட்பட கையாளப் படுகிறதெனினும் அது காரணமாக அவ்வழு தொடரப்பட வேண்டு மென்பதில்லை!.

இவ் எழுத்தாளரது எதிர்கால எழுத்துலகம் நிச்சயமாக பிரகாசமானது. ஒரு தடவை பரிசிலும், பாராட்டும் பெற்றவுடன் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ளுகிற ஈழத்து எழுத்தாளர் தடத்தில் இவ் எழுத்தாளர் செல்லாது விடும் வரை அத்தகைய எதிர்பார்ப்பிற்கு இடமில்லை.

Advertisements

Entry filed under: நூல் மதிப்புரைகள்.

அகதிகள் பலவிதம் – கலையரசன் ஆளுமை – த.இராமலிங்கம் – கருணாகரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: