அவலத்தின் வணிகம் – காலச்சுவடு கண்ணன்

June 2, 2010 at 5:16 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

‘எதுவரை’ (பிப்ரவரி-மார்ச் 2010) இதழில் பூதந்தேவனாரின் குறிப்பு கண்டேன்.

தமிழ் வெகுஜன ஊடகங்களிலும் வணிகப் பதிப்பகங் களிலும் அவை கையாளும் பிற எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, ஈழத்தின் பேரவலமும் விற்பனைச் சரக்காக மாறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இதைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதில் எங்களுக்கும் தயக்கம் இல்லை. இதுபற்றி காலச்சுவடில் வெளிவந்த பதிவு இது:

பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புலி ஆதரவு நிலை என்பது ஒரு வியாபார உத்தி. பிரபாகரனின் மரணத்தைச் சிங்கள அரசாங்கம் அறிவித்த பிறகு வந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை தனது மரணம் குறித்த செய்தியைப் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருப்பதுபோல ஒரு புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டது. அந்தப் பத்திரிகை ‘பிளாக்’கில் விற்பனை செய்யப்பட்டது; மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினார்கள். சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் என்னுடன் கலந்துகொண்ட தமிழ்ப் பத்திரிகை யாளர் ஒருவர் பிரபாகரனின் படத்தை அட்டையில் போட்டால் அந்த இதழ் குறைந்தபட்சம் 50,000 பிரதிகள் கூடுதலாக விற்பனையாவதாக அந்த அரங்கில் சொன்னார். அப்போது போர் முடிந்திருக்கவில்லை. பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இன்றைய சூழலில் பிரபாகரனுக்கே அதிகம் பொருந்தும்.

(ஊடகங்களின் இருண்ட காலம்,  கவிதா, இதழ் 117, செப்டம்பர், 09)

அதே நேரத்தில் தமிழகத்தில் பல தளங்களில் ஈழப்பிரச்சனை ஆத்மார்த்தமாக அணுகப்படுகிறது என்பதும் உண்மை. பூதந்தேவனாரின் தார்பூசும் வேகத்தில் இந்த வேறுபாடுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன.

சென்னைப் புத்தகச் சந்தையில் ஈழப் பிரச்சனை விற்பனைச் சரக்கானது, இன்றைய உலகளாவிய வணிகச் சூழலில் தவிர்க்க முடியாதது – விமர்சனத்திற்கு உரியது என்றாலும்கூட. மேலும் தமிழக ஊடகங்களில் வணிக மாக்குதல் என்பது ஈழம் சார்ந்து மட்டுமே ஏற்படுவது அல்ல. பாரதத் திருநாடு, தமிழணங்கு, கண்ணகியின் கற்பு, ஐயன் திருவள்ளுவர், தெல்காப்பிய உரை, நித்தியானந்தா லீலைகள், வீரப்பனார் வதை படலம், நாவரசு கொலை, உ.ரா. வரதராஜன் தற்கொலை, காஞ்சிபுரம் சுப்ரமணி (ஜெயேந்திர சரஸ்வதி) கைதும் வழக்கும், கற்பும் குஷ்புவும் என இங்கு வியாபாரச் சரக்கானவற்றில் சார்புகள் இல்லை. இன்று ஈழத்தில் ஒரு வலுவான பதிப்புச் சூழல் இருந்திருந்தால் அங்கும் அவலம் வியாபாரச் சரக்காக மாறியிருக்கும். இலங்கைத் தமிழ்/சிங்கள/ஆங்கில ஊடகங்களின் போர்க்கால விற்பனை கொடிகட்டிப் பரந்தமையும் அமைதிக் காலத்தில் சோர்வு கண்டமையும் உலக ரகசியமல்ல.

ஈழப் பிரச்சனை சார்ந்து தமிழகத்தில் நடக்கும் வணிகம் சென்னை மொழியில் சொன்னால் வெறும் ‘ஜுஜுபி’. வசூல் வேட்டை, ஆயுதக் கொள்முதல், ஆயுதக் கடத்தல், ஆள் கடத்தல், போதைப்பொருட் கடத்தல், அத்தியாவசியப் பண்டங்களின் கடத்தல், கொலை தொழில், கொள்ளை, புலி ஆதரவு நல்கைகள், புலி எதிர்ப்பு நல்கைகள், ஆள் காட்டும் பணி என ஈழத் தமிழர்களின் அவலத்தை இலங்கையிலும் அயலிலும் வணிகமாக்கிய ஈழத்தமிழர்கள் இல்லையா? இதனால் இவர்களையும் இப்பிரச்சனையில் ஆத்மார்த்த மாகச் செயல்பட்டு வரும் ஈழத் தமிழர்களையும் ஒரே வீச்சில் தார்பூசினால் அது தகுமா?

பிரபாகரனும் போராட்டமும் இங்கு விற்பனைச் சரக்கே அன்றி ஈழத்து இலக்கியம் சந்தைப் பொருளல்ல. ஈழத்து நூல்களின் தமிழக வாசிப்புத் தளம் பற்றியும் பிற தமிழ் நூல்களின் விற்பனையில் ஈழத்து/புலம் பெயர் வாசகர்களின் விகிதாசாரம் பற்றியும் அடிப்படையற்ற மிகையான கற்பனைகள் ஈழத் தமிழ்ச் சூழலில் நிலவுகின்றன. ஈழத்துப் படைப்புகள் இங்கு எத்தனை பிரதிகள் அச்சடிக்கப் படுகின்றன, எத்தனை ஆண்டுகளில் விற்பனை ஆகின்றன, எத்தனைப் பதிப்புகள் வெளிவருகின்றன என்ற எளிய கணக்கு இந்தக் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

2003இல் அமைதிக் காலத்தில் யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் ஒரு சந்திப்பில் இந்தக் கற்பனையை முதலில் எதிர்கொண்டேன். ஒரு பெரியவர் தமிழக பதிப்புச் சூழலே ஏதோ இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த வாசகர்களை ‘சுரண்டி’ நடப்பது போல இறுமாப்புடன் பேசினார். கூட்டத்தில் இப்பார்வைக்கு குறிப்பிட்ட ஆதரவு இருப்பதும் தெரிந்தது. தமிழகச் சூழல் அறிந்த அ. யேசுராசா இடையிட்டு தெளிவு படுத்தியும் இந்தக் கற்பனையைத் தகர்க்க முடியவில்லை. தமிழ் வெளியீடுகளின் விற்பனையில் ஈழத்து/புலம் பெயர்ந்தோர் வாசகப் பங்களிப்பு 10 சதவீதம்கூட இருக்காது என்ற சாதாரண உண்மையை நான் குறிப்பிட்டது கற்பனைவாதிகளுக்கு ரசிக்கவில்லை. சந்திப்பின்போது யேசுராசா ‘அதிசயமாக இங்கு ஏ.ஜே. வந்திருக்கிறார்’ என்றார். சந்திப்பு முடிந்ததும் அவரைத் தேடினேன். காணவில்லை. பின்னர் அவர் வீட்டிற்கே சென்றேன். நல்ல வெயில். எனக்கு அவர் பியர் சாந்தியளித்தபோது விசாரித்தேன். மேற்படி அபத்தத்தைத் தாங்க மாட்டாமல் கூட்டத்திலிருந்து பாதியில் வெளிநடப்பு செய்துவிட்டேன் என்றார்.

காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமியின் தமிழகம் – அயல் தமிழ் உறவுக்கான பங்களிப்பு முக்கியமானது. ஈழத்து எழுத்தாளர்களுடன் உறவு, ஈழத்து இலக்கியம் பற்றிய மதிப்பீடு, மலேசிய-சிங்கப்பூர்-புலம் பெயர் தமிழர் நோக்கிய பயணங்கள், உரையாடல்கள், கறாரான விமர்சனம் என இயங்கியவர் அவர்.

துவக்கம் முதலே ஈழத்து எழுத்தாளர்களுடன் விரிவான உறவைப் பேணிய இதழ் காலச்சுவடு. ‘தமிழ் இனி 2000’ வழி உலகத் தமிழ் அடையாளம் உறுதிப்பட காலச்சுவடு பங்களித்தது. 2006இல் நடத்திய ‘பாரதி 125, பு.பி. 100, சு.ரா. 75’ அமர்வுகளிலும் இலங்கை, தெற்காசிய தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு உண்டு. இன்றும் ஈழத்து எழுத்துடனும் அரசியலுடனும் வலுவான உறவைப் பேணி வரும் இதழ் காலச்சுவடு. (இதன் முக்கியமான ‘வணிக’ பின்விளைவு காலச்சுவடு இதழ்களை இலங்கைக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலைதான்.) சிங்கப்பூர் இலக்கியத்திற்காகத் தனிச் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. (அத்தகைய ஒரு மலேசிய இலக்கியத்திற்கான இதழை வெளியிடும் அறிவிப்புகளைச் செய்தும் போதிய ஒத்துழைப்பு இல்லாமையால் அதை முன்னெடுக்க முடியவில்லை.) சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இதழிலும் நூல்களாகவும் வெளியிட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்காக ஏங்கியபடி மலேசியத் தமிழர் பிரச்சனையைப் புறக்கணிக்கும் தமிழ் தேசியவாதிகளின் நிலைபாடு பலமுறை காலச்சுவடில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக – அயல் தமிழ் இலக்கிய உறவை வலுப்படுத்தும் நோக்கோடு பல முறை நான் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா என பயணித்துள்ளேன். (தமிழ் இனி 2000 தொகுதி சிங்கப்பூரிலும் மலேசியாவிலுமே வெளியிடப்பட்டது). இந்தப் பயணங்கள் எதுவுமே தமிழ் நண்பர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. அங்கு வசூல் வேட்டை, சந்தா சேகரிப்பு, பிரதிகள் சேகரிப்பு என எதிலும் ஆர்வம் காட்டியது இல்லை. நட்பும் தொடர்பும் புரிதலும் உரையாடலுமே நோக்கமாக இருந்தன.

தமிழகத்தில் இலக்கிய ஆய்வுகளில் தமிழ் இலக்கியம் என்பது தமிழக இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் பிழை நடப்பதுண்டு. ஆனால் காலச்சுவடு இவ்விஷயத்தில் கவனமாகவே இருந்து வருகிறது. தமிழ் இனி 2000 தொகுதி இதற்கு தக்க சான்று.

காலச்சுவடு இதழ் 119இல் வெளிவந்த ‘புதிய கவிதை 50’ இதழின் சட்டகம் எழுத்து இதழின் 50ஆவது ஆண்டும், தமிழ் புதுக்கவிதைக்கு வித்திட்ட க.நா.சு.வின் ‘கலையின் பிறப்பு’ கட்டுரையின் 50ஆவது ஆண்டும் ஆகும். இவற்றின் தாக்கம் ஈழத்திலும் உண்டு என்ற போதிலும் புதிய கவிதைக்கான இந்தச் சட்டகம் இலங்கை நவீன கவிதைக்கு இறுக்கமாகப் பொருந்தக் கூடியது அல்ல என்பதே எங்கள் புரிதல். இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் இவ்விதழில் ஈழத்துக் கவிதை போக்குகளை உள்ளடக்கவில்லை. (ஈழத்திலோ புலம்பெயர் சூழலிலோ எந்த ஊடகமும் ‘எழுத்து’ இதழின் 50ஆம் ஆண்டைக் கவனப்படுத்தியதாகத் தெரிய வில்லை.) எத்தனை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் காலச்சுவடு வெளி யிட்டுள்ளது! இதுபற்றிய விழிப்புணர்வு இன்றி காலச்சுவடை குற்றஞ்சாட்டுவது விமர்சனத்தின் வெளிப்பாடு அல்ல. பூதந்தேவனார் பார்வையில் 20 ஆண்டுப் பங்களிப்பு புலப்பட வில்லை போலும். கற்பனையான இன்மை மட்டுமே தெரிந்திருக்கிறது. காலச்சுவடு 121ஆம் இதழில் (ஜனவரி 2010) ‘புத்தாயிரத்தின் இலக்கியம்’ என்ற சிறப்பிதழில் சுகுமாரன் தமது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“ஈழக் கவிதைகளைக் குறிப்பிடாமல் தற்காலத் தமிழ்க் கவிதையின் சித்திரம் முழுமையடையாது. கடந்த மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்துக் கவிதைகள் தமிழகக் கவிதை களையும் தமிழகக் கவிதைகள் ஈழத்துக் கவிதைகளையும் பாதித்துவந்திருக்கின்றன. இரண்டு நிலைகளில் இந்தப் பாதிப்பு செயலாற்றியிருக்கிறது. ஒன்று: அரசியல் சார்ந்து. மற்றது: பெண்மொழி சார்ந்து. ஈழத்துக் கவிதைகளின் செல்வாக்கில்லா மலிருக்குமானால் தற்காலக் கவிதையியலில் அரசியல் விவாதத்துக்கான தருணங்கள் இல்லாமலிருந்திருக்கும். நவீனத் தமிழ்க் கவிதை அரசியலைத் தீண்டத்தகாததாகவும் அரசியலை மையப்படுத்தி எழுதப்படும் கவிதைகளைப் பிரச்சாரக் கவிதைகள் என்றும் ஒதுக்கியேவைத்திருந்தன.

அவசரநிலைக் காலம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட சீரிய கவிதை ஒன்றே ஒன்று மட்டுந்தான் என்பது இந்த இலக்கிய விலக்கைப் புரியவைக்கும். போருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தாம் தமிழ்க் கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப்படுத்தின. பெண் நிலையில் வாழ்வை எதிர்கொள்ளும் பார்வைக்கும் ஈழத்துக் கவிதைகளிடம் கடன்பட்டிருக்கிறோம். சொல்லாத சேதிகள் என்னும் தொகுப்பு தமிழ்க் கவிதையியலில் உருவாக்கிய அதிர்வுகளின் பின் விளைவுகள் காத்திரமானவை.

இந்த பாதிப்புகளின் ஸ்தூல அடையாளங்களைத் தற்காலக் கவிதையில் எளிதில் காணலாம். ஈழத் தமிழின் சொல் வழக்குகள் பலவும் எந்தத் தடையுமின்றித் தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதையும் மறுபக்கத்தில் தமிழ்க் கவிதைச் சொற்கள் ஈழக் கவிதையில் புகுந்திருப் பதையும் உணரலாம்.”

“தமிழ் இலக்கியப் பெருவெளியில் எப்போதுமே விமர்சன மேலாண்மையும் புலமைக்கான கிரீடங்களும் தமிழக ஜாம்பவான்களிடமே இருக்கிறது” என்கிறார் பூதந்தேவனார். மார்க்சிய இலக்கியப் பார்வை தமிழ் இலக்கியத்தில் கோலோச்சியபோது கைலாசபதி, சிவத்தம்பி, எம்.ஏ. நுஃமான் என ‘விமர்சன மேலாண்மையும் புலமைக்கான கிரீடங்களும்’ ஈழத்திலும் இருந்தமையை அவர் மறந்தது ஏன்? உலகத் தமிழ் அடையாளத்தை உருவாக்கும் பெரும் பணியில் பரஸ்பர விமர்சனங்களும் விவாதங்களும் வரவேற்கப்பட வேண்டியவை. ஆசூயைகள் தவிர்க்கப்படவேண்டியவை.

Advertisements

Entry filed under: எதிர்வினை.

ஒகோனி மக்களின் போராட்டம் – சொகரி எகின்னே சமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: