அகதிகள் பலவிதம் – கலையரசன்

June 2, 2010 at 3:46 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அகதிகள் பற்றிய ஆவணங்கள், இலக்கியங்கள், தமிழில் வேண்டிய அளவு இருக்கின்றன. ஐரோப்பாவில் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஈழத்தமிழர் மட்டும் புலம் பெயரவில்லை. கொழும்பு தமிழர்கள், மலையகத் தமிழர்கள்,   முஸ்லிம்கள், இவர்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டை சேர்ந்த இந்தியத் தமிழரும் புலம்பெயர்ந்துள்ளனர்! இதைவிட “இனப்பிரச்சினையில் மேலாதிக்கம் பெற்ற” சிங்கள இனத்தை சேர்ந்த அகதிகள் குறித்தும் பேசப்படுவதில்லை. எமது தமிழ் இலக்கியங்கள் புறக்கணித்த சமூகங்களைப் பற்றி இந்தப் பாகம் விவரிக்கின்றது.

முதலில் கொழும்பு அல்லது மலையகத் தமிழ் அகதிகள். ஒப்பீட்டளவில் மிகச் சிறிய தொகையினரே அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர். அதிலும் கொழும்பை சேர்ந்த (வட-கிழக்கு பூர்வீகமற்ற) தமிழர்களே எண்ணிக்கையில் அதிகம். மலையகப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஒன்றில் வசதியற்றவர்கள், அல்லது ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் நடைமுறை அறியாதவர்கள். அதற்கு மாறாக உலகமயமாக்கப் பட்ட கொழும்பில் வாழ்பவர்கள் எப்படி வெளிநாடு செல்லலாம் என்ற வழிவகை தெரிந்தவர்கள். என்னோடு அகதி முகாமில் சில கொழும்புத் தமிழர்களும் தங்கியிருந்தனர். அவர்கள் இராணுவ ஒடுக்குமுறையை ஊடகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்திருந்தனர். கொழும்பு மாநகரில் இடம்பெறும் தேடுதல் வேட்டைகளின் போதும் இவர்கள் தொந்தரவுக்கு உள்ளாவதில்லை. ஈழப்போர் தீவிரமடைந்த பிற்காலத்தில் இந்த நிலமை மாறியது. சில கொழும்புத் தமிழரும் புலி உறுப்பினர்களுக்கு மறைவிடம் வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டதால், பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத் தமிழர்கள் வசதியான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும், அதற்கு மாறாக இந்திய பூர்வீகத்தை கொண்ட தமிழர்கள் உழைக்கும் வர்க்கமாகவும் காணப் பட்டனர். இனக்கலவரங்களில் சிங்கள இனவெறியர் களின் இலக்கு, வசதிபடைத்த தமிழரின் சொத்துகளை சூறையாடுவதாக இருந்தது. குறிப்பாக “குட்டி யாழ்ப்பாணம்” என அழைக்கப்பட்ட வெள்ளவத்தை பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டது. வறுமை தாண்டவமாடும் சேரிகளை சேர்ந்த சிங்கள குண்டர்களே கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டனர். இதற்காக வாக்காளர் பட்டியலைக் கூட கையில் வைத்திருந்தனர். இருப்பினும் வீதியில் காணப் படுபவர்கள் தமிழராக அடையாளம் காணப்படும் பட்சத்தில் கொல்லப்பட்டனர். இதில் அனைத்து தமிழர்களும் பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டனர்.
கொழும்பு கலவரங்கள் ஏற்படுத்திய மாறாத வடுக்கள் காரணமாக வட இலங்கைத் தமிழர்கள், பாரம்பரிய பிரதேசமான யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தனர். வசதியானவர்கள் வெளிநாடு களுக்கும் புலம் பெயர்ந்தனர்.

உழைக்கும் வர்க்கமான இந்திய வம்சாவழித் தமிழர் முன்னால் ஒரேயரு தெரிவு மட்டுமே இருந்தது. சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு பணிந்து போவது. பல பெற்றோர் தமது பிள்ளைகளை சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு அனுப்பினர். வீட்டில் தமிழும், வெளியில் சிங்களமும் பேசினர். ஒரு சிலர் முற்றுமுழுதாக சிங்களமயமாகினர். இதற்கு பொருளாதார காரணங்கள் முக்கியமாக இருந்திருக் கலாம். சிங்கள மொழிப்புலமை தொழில் வாய்ப்புகளை இலகுவாக்கும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது.

கொழும்புத் தமிழரின் அரசியல் பின்னணி, தஞ்சம் கோரிய நாடுகளிலும் எதிரொலித்தது. ஐரோப்பிய நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரும் போது சொல்லப்பட்ட காரணங்கள் வலுவாக அமைந்திருக்கவில்லை. அப்படியே இருப்பினும், கோரிக்கையை பரிசீலித்த அமைச்சு அதிகாரிகள் கொழும்புத் தமிழருக்கு பிரச்சினை இல்லை என்று தீர்ப்பு சொன்னார்கள். இந்த தீர்ப்பு பின்னர் யுத்தப் பிரதேசங்களில் இருந்து வந்த தமிழருக்கும் வழங்கப்பட்டது. வட-கிழக்கு பிரதேசங்களில் மட்டுமே யுத்தம் நடப்பதாகவும், அமைதியாக இருக்கும் கொழும்பு நகரில் வசிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது. பிற்காலத்தில் கொழும்பு நகரில் அடுத்தடுத்து இடம்பெற்ற தாக்குதல்களும், பெருவாரியான கைதுகளும் சர்வதேச ஊடக கவனத்தைப் பெற்றன. அகதி ஆதரவு வக்கீல்களின் சலிக்காத நீதிமன்ற வழக்குகளின் விளைவாக கொழும்பு நகரும் தமிழருக்கு பாதுகாப்பற்ற பிரதேசமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் பல கொழும்புத் தமிழருக்கும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் வழங்கப்பட்டது.

ஐரோப்பாவில் இலங்கை அகதிகள் அனைவரும் இன வேறுபாடு இன்றி, இலங்கையராக கருதப் பட்டனர். இலங்கை அகதிகள் சமூகத்தினுள் இருந்த சில உள்ளக பிரிவுகள் யாவும் புறக்கணிக்கப்பட்டன. முக்கியமாக ஒரே ‘ரூமில்’ தங்கவைக்கப்பட்ட சிங்கள-தமிழ் அகதிகள் இடையே பகை முரண் பாடுகள் காணப்பட்டன. ஒரே மொழி பேசும் தமிழர்களும் ஒன்றாக இருக்க தயங்கினர். குறிப்பாக யாழ் மையவாத கண்ணோட்டம் கொண்ட அகதிகள் குழு, முஸ்லிம்களுடனும், கொழும்புத் தமிழருடனும் முரண்பட்டனர். சிங்கள மொழிப் புலமை கொண்ட கொழும்புத் தமிழர்கள், சிங்கள அகதிகளுடன் அந்நியோனியமாக பழகியதை சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். சுமுகமான உறவைப் பேண விரும்பிய கொழும்புத் தமிழர்கள், இரு தரப்பினரையும் நண்பர்களாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது இரண்டுங்கெட்டான் நிலை காரணமாக, ஆரம்பத்தில் ஈழ கருத்தியலுடன் தம்மை அடையாளப்படுத்தவில்லை.

முப்பது வருட ஈழப்போர் பல சமூக மாற்றங்களை உருவாக்கியது. ஒரு காலத்தில் வட இலங்கைத் தமிழர்களின் கோரிக்கையாக இருந்த “தமிழீழம்”, பின்னர் உலகத் தமிழரை வசீகரித்தது. கொழும்புத் தமிழரும் அதன் பயன்களை உணரத் தொடங்கினர். புலிகளின் போராட்டத்திற்கு நேரடியான பங்களிப்பு செலுத்தாவிடினும், ஆதரவு வழங்கினர். இதற்கு உந்து விசையாக அமைந்த சமூகவியல் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். புற உலகில் அன்றாடம் சிங்கள பேரினவாதத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருந் தவர்கள். அயலில் இருந்து தொந்தரவு கொடுக்கும் சிங்கள பேரினவாத சக்தியை பயமுறுத்த, வாய்ப்பு கிடைத்ததையிட்டு உள்ளூர மகிழ்ச்சியுற்றனர். இந்திய வம்சாவழி கொழும்புத் தமிழர்கள் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் குடும்ப வசதியை உயர்த்திக் கொண்டனர். நான் முன்பொரு முறை குறிப்பிட்டது போல, மத்திய தர வர்க்க சிந்தனை கைவரப் பெற்றவர்கள் யு.என்.பி.யை ஆதரித்தனர். யு.என்.பி. ஆட்சியில் இருந்த காலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று சென்று, தம்மை வளர்த்துக் கொண்ட சமூகம் அது. மேலும் யு.என்.பி. கட்சிக்குள்ளும் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு சாதகமாக கருதப்பட்டது. வெளிநாடுகளில் இந்த அரசியல் பின்னணி கொண்ட கொழும்புத் தமிழர்கள், புலிகளுக்கு அல்லது ஈழ தேசியத்திற்கு ஆதரவான கொள்கைகளை கொண்டிருந்தனர். சிலர் மாவீரர் தினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டிருக் கிறார்கள்.

தமிழை தாய்மொழியாக கொண்ட இலங்கை முஸ்லிம்களின் நிலை வேறுபடுத்தி பார்க்கப்பட வேண்டும். முஸ்லிம் அகதிகள் விஷயத்திலும் அது எதிரொலித்தது. ஈழப்போராட்டம் ஆரம்பமாகி, தொண்ணூறுகளின் பின்னர் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் முன்னெப்போதும் இல்லாதவாறு கூர்மையடைந்திருந்தது. கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்களில் சிறு பொறி தட்டினாலும் கலவரம் பரவும் அபாயம் இருந்தது. வன்னியையும், யாழ்ப்பாணத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றியிருந்தனர். இத்தகைய பின்னணியில், வட-கிழக்கு மாகாணங் களை சேர்ந்த முஸ்லிம்களும் ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரினார்கள்.

அகதி முகாம்களில் இருந்த முஸ்லிம் இளைஞர் கள் தமிழீழப் போராட்டத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு காணப்பட்டனர். தமிழீழம் தமக் கானதல்ல என்ற உணர்வே மேலோங்கியிருந்தது. அந்த அரசியல் நிலைப்பாடு, சில தீவிர தமிழ் தேசியவாதிகளுடன் கசப்பான கருத்துப் பரிமாற்றத் திற்கு காரணமாக அமைந்திருந்தது. இருப்பினும் பெரும்பாலான தமிழ் அகதிகளுடன் சுமுகமான உறவு நிலவியது. வட மாகாணத் தமிழ் அகதிகள் பலருக்கு அன்று எத்தகைய அரசியல் நிலைப்பாடும் இருக்கவில்லை. எப்பாடு பட்டேனும் ஒரு பிள்ளையை வெளிநாடு அனுப்பி விட்ட குடும்பங் களில் இருந்து வந்தவர்கள். புலிகள் அறிமுகப் படுத்திய ‘பாஸ்’ கெடுபிடிக்குள்ளாக வெளியேறியவர் கள். வவுனியாவில் இருந்து ஓட்டம் பிடித்தவர்கள் ஐரோப்பா வந்த பிறகு தான் திரும்பிப் பார்த்தார்கள். அன்றைய காலகட்டத்தில் எந்தவொரு அரசியல் அமைப்பும் அகதிகளை அரசியல்மயப் படுத்தியிருக்க வில்லை. இந்த நிலைமை பின்னர் மாறியது வேறு விஷயம்.

முகாம்களில் இருந்து வெளியேறி, தொழில் வாய்ப்பு பெற்று, தனியாக வீடுகளில் வாழ்ந்தவர்கள் மத்தியில் தான் அரசியல் வேறுபாடுகள் தோன்ற லாயின. அகதி முகாம்களில் வாழும் போது பல்வேறு பட்ட சமூகங்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பக்கத்து கட்டிலில் படுத்திருக்கும் நபர் வேற்று இனத்தவராக  இருந்தாலும் சகித்துக் கொள்ள வேண்டும். ஆனால் தனியாக வீடுகளில் வசிப்பவர் களின் நிலைமை வேறு. தனது நண்பர்களை தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கைவரப் பெற்றவர்கள். இவர்கள் மத்தியில் மெல்ல மெல்ல யாழ் மையவாத கண்ணோட்டம் துளிர் விடலாயிற்று. விரல்விட்டு எண்ணக் கூடிய தொகையில் இருந்த முஸ்லிம்கள், குறிப்பிட்ட சில தமிழ் சகோதரர்களையே நண்பர்களாக கொண்டிருக்க முடிந்தது. எனக்குத் தெரிந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, முஸ்லிம் இளைஞனை வீட்டில் வைத்திருந்த “குற்றத்திற்காக” பரிகசிக்கப்பட்டது. எண்ணிக்கையில் பெருந்தொகை யான யாழ் மையவாதிகள், தலித் அகதிகளையும் இனங்கண்டு ஒதுக்கி வைத்தனர்.

அனேகமாக முகாம்களில் வாழ்ந்து கொண்டிருந்த வர்கள் மற்றவரை என்ன சாதி என்று விசாரிப்ப தில்லை. முகாம்களில் நடைமுறையில் சமத்துவம் நிலவியது. எண்ணிக்கையில் குறைந்தோராக இருந்த தமிழ் அகதிகளிடையே சாதி பார்த்து பிரித்து வைத்தால், உதவிகளை இழக்க நேரிடும் என்ற அச்சம் காணப்பட்டது. இங்கே ஒரு சிறப்பம்சமான முடிதிருத்துதலைக் குறிப்பிட வேண்டும். ஊரில் இருந்ததற்கு மாறாக, புகலிடத்தில் அனைத்து சாதிகளை சேர்ந்த இளைஞர்களும் முடி திருத்தக் கற்றுக் கொண்டனர். பொழுதுபோக்காக கற்றுக் கொண்ட இளைஞர்கள் தமது திறமையைக் காட்டினார்கள். ஐரோப்பாவில் சலூனுக்கு போய் முடி திருத்தினால் நிறைய செலவாகும் என்பதாலேயே இந்த ஏற்பாடு.

புகலிடத்தில் சாதி பார்ப்பது மறைவாக இருந்து வந்தது. பொதுவாக உயர்த்தப்பட்ட சாதியினர் தம்மை தனிமைப் படுத்திக் கொள்வதன் மூலம் “சாதித் தூய்மையை” பாதுகாத்தனர். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பெருவாரியான தமிழர்கள் நெருக்கமாக வசித்த நாடுகளில் சாதி பகிரங்கமாக உரிமை கோரிக் கொண்டிருந்தது. அதே நேரம் நெதர்லாந்து போன்ற நாடுகளில் எண்ணிக்கையில் குறைவாகவும், எட்டுத் திக்கும் பரவி வாழ்ந்த காரணங்களால் பகிரங்கமாக சாதி பார்ப்பதை தவிர்த்தனர். எங்காவது ஒரு கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்கள் வசித்தால், ஒருவர் உதவி மற்றவருக்கு தேவை என்ற சுயநலமே இதற்கு காரணம். புலம்பெயர்ந்த தமிழரின் பிள்ளைகள் கலப்புத் திருமணம் செய்யத் துணியும் பொது மட்டுமே பிரச்சினைகள் தோன்றுகின்றன.

புலம் பெயர்ந்த சிங்கள அகதிகளுடனான உறவு குறித்து தனியாக எழுதப்பட வேண்டும். தொண்ணூறுகளில் இலங்கையில் இருந்து மூன்று வகையான சிங்கள அகதிகள் வருகை தந்தனர்.
1.    வெளிநாடு சென்று பொருளீட்ட கிளம்பிய சாமானியர்கள்.
2.    ஜே.வி.பி.யின் தோற்றுப்போன கிளர்ச்சியிலிருந்து தப்பி ஓடி வந்த அகதிகள்.
3.    இராணுவ சேவையில் இருந்து விட்டு விலகி ஓடி வந்தவர்கள்.

இதிலே முதலாவது வகையினரைப் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. அரசியலில் ஆர்வமற்ற பொருளீட்டுவதை மட்டுமே குறிக் கோளாக கொண்ட தமிழரைப் போலவே அவர்களது குணங்களும் அமைந்திருந்தன. ஜே.வி.பி. உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் தமிழருடன் நட்புணர்வுடன் பழகினர். அவர்களைப் பொறுத்த வரை: “இலங்கை இனப் பிரச்சினைக்கு சுயநல அரசியல்வாதிகளே காரணம். எல்லா வளமும் நிறைந்த தாயக மண்ணை நாசமாக்குகிறார்கள்”. இந்த அரசியல் அடிப்படையில் தமிழ் அகதிகளும் அவர்களுடன் நெருங்கிய நட்பை பேன முடிந்தது. ஆனால் சிங்களவர்கள் அனைவரையும் எதிரிகளாக கருதும் தமிழினவாதிகள் மட்டுமே சேராமல் ஒதுங்கி நின்றனர். இவர்களின் எதிர் பிம்பம் தான் இராணுவத்தில் இருந்து ஓடி வந்த சிங்கள அகதிகள்.

சிங்கள பேரினவாதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட இராணுவத்தில் இருந்தவர்களின் குணங்களும் அதை பிரதிபலித்தன. அவர்கள் தமிழர்கள் எல்லோரையும் எதிரிகளாக கண்டு ஒதுங்கி நின்றனர். எப்போதும் சிடு சிடு என்று மூஞ்சியை வைத்திருப்பார்கள். தமிழரைக் கண்டால் முறைத்துக் கொண்டு போவார்கள். ஒரு தடவை சுவிட்சர்லாந்தில், சிங்களவர்களை பார்த்திராத யாழ்ப்பாண நண்பர் ஒருவரை தொலை தூர கிராமத்தில் இருந்த சிறிய முகாமுக்கு மாற்றினார்கள். அவரது “ரூம் மேட்” ஒரு இராணுவத்தை விட்டு வந்த சிங்கள அகதி.
அந்த தமிழ் நண்பர் அடுத்த நாளே நகரத்தில் இருந்த பெரிய முகாமுக்கு திரும்பி வந்து விட்டார். “ஒரே அறையில் ஒரு சிங்களவனுடன் என்னை தனியாக விட்டு விட்டீர்களே, இது நியாயமா?” என்று மாற்றல் தந்த முகாம் அதிகாரிகளிடம் புலம்பினார். எனினும் அதிகாரிகள் அவரின் புலம்பலை அசட்டை செய்தனர். மாற்றலை வாபஸ் வாங்க முடியாது எனக் கூறிவிட்டனர். சில வாரங்களுக்கு பின்னர் அந்த தமிழ் நண்பரை நகரத்தில் பார்த்தேன். அப்போது அவரும் அவரது “ரூம் மேட்”டான சிங்கள அகதியும் நண்பர்களாகி விட்ட செய்தியை தெரிவித்தார். முன்னாள் புலிப் போராளியும், முன்னாள் இராணுவ வீரனும், புலம்பெயர்ந்த நாட்டில் ஆருயிர் நண்பர்களாக பழகும் “அதிசயங்களையும்” கண்டிருக்கிறேன். இன அடையாளம் கடந்த வர்க்க ஒற்றுமை அவர்களை இணைக்கும் பாலமாக இருக்கலாம்.

இராணுவத்தில் இருந்து ஓடி வந்த அனைவரும் சிங்கள இனவாதிகளல்ல. ஒரு சிலர் தாம் சகோதரர்களாக கருதும் தமிழ் மக்களை கொலை செய்ய மனமின்றி இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தனது சக படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல் வெறுத்துப் போய் ஓடியிருக்கிறார்கள். அப்படியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் அரசியல் தஞ்சம் கோரும்பட்சத்தில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டனர். எப்படியோ இந்த செய்திகள் சிங்களப் பகுதிகளையும் எட்டிவிட்டது. பொருளீட்ட வந்த சாதாரண சிங்களவர்களும் இராணுவ சேவையில் இருந்து ஓடிய காரணத்தை காட்டி “அகதிக் காட்” எடுத்து விட்டனர். தமிழ் அகதிகள் தரப்பிலும் இது போன்ற கதைகள் உள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தப்பி ஓடி வந்த பலரின் அரசியல் தஞ்சம் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு ஓடி வந்தவர்களில் சிலர், புகலிடத்தில் புலிகள் அமைப்பின் தீவிர விசுவாசிகளாக காட்டிக் கொண்டனர். பலருக்கு அது ஒரு பிழைப்புவாதம்.

புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் பலர் ஏழ்மை காரணமாக வெளிநாடு சென்று வாழ்வை வளப் படுத்த விரும்பியவர்கள். நாட்டுப்புற கிராமங்களில் இருந்து வந்தவர்கள். இலங்கையில் வெகுஜன ஊடகங்கள் தெரிவிக்கும் தலைப்புச் செய்திகள் மட்டுமே அவர்கள் அறிந்த அரசியல். அமைதி தவழும் பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு யுத்தத்தின் கோர முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பணிப்பெண்களாக கிரீஸ் வந்து பின்னர் அகதித் தஞ்சம் கோரிய சிங்களப் பெண் ஒருவரை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. தஞ்சம் நிராகரிக்கப் பட்ட பின்னர், அப்போது தான் மேன் முறையீடு செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நாடு திரும்ப முடியாத பிரச்சினை என்ன என்று எழுதித் தருமாறு கேட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்த மனுவை வாசித்த போது திடுக்கிட்டேன். “இலங்கையில் தான் ஒரு வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும், அது கட்டி முடியும் வரை கிரீசில் தங்கி வேலை செய்ய அனுமதிக்குமாறும்” கேட்டு எழுதியிருந்தார். அவரது அப்பாவித்தனத்தை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. தஞ்சம் கோரும் அகதி எப்படியான காரணங்களை கூற வேண்டும் என்று விளக்கிய பின்னர், இதற்குள் இவ்வளவு விஷயம் உள்ளதா என வியப்புற்றார். அந்த அபலைப் பெண்ணைப் போல, பலர் அப்பாவித்தனமாக அகதித் தஞ்சம் கோருவதை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

அப்பாவித்தனமாக அகதித் தஞ்சம் கோருவதில் தமிழர்களும் சளைத்தவர்கள் அல்ல. நெதர்லாந்தில் அகதி முகாமில் வாழ்ந்த சமயம், சக தமிழ் அகதிகள் வக்கீலுடன் தொடர்பு கொள்ள உதவியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் எந்த லட்சணத்தில் தஞ்சம் கோரி இருக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வரும். புலிகளின் முகாம்களில் சமைத்துக் கொடுத்தது, அவர்களுக்கு பதுங்குகுழி வெட்டிக் கொடுத்தது, இப்படித் தான் கதை விட்டிருக்கிறார்கள். சிலர் வெளிநாடு சென்றால் நன்றாக வாழலாம் என்று நினைத்து வந்ததாக உண்மையை சொல்லியிருக் கிறார்கள். இவர்களது தஞ்ச மனுக்கள் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டிருக்கும், அப்படித் தானே நினைக்கிறீர்கள்? எப்போதும் அப்படி நடக்க வேண்டிய அவசியமல்லை.

எந்தக் காரணமும் இன்றி தஞ்சம் கோரிய பெரும்பான்மை அகதிகள் நிராகரிக்கப்பட்டது உண்மை தான். இருப்பினும் சில அப்பாவிகள் அகதியாக அங்கீகரிக்கப்பட்டனர். பல நாடுகளைச் சேர்ந்த “அரசியல் அறிவிலிகள்” இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டிருப்பதை கண்கூடாகக் கண்டிருக் கிறேன். அதற்குக் காரணம், “இந்த தேசம் முட்டாள்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது. அவர்கள் ஒரு போதும் தஞ்சம் புகுந்த நாட்டிற்கு எதிராக திரும்ப மாட்டார்கள்.” என்பதேயாகும்.

Advertisements

Entry filed under: கட்டுரை.

கம்யூனிஸ்ட்- ஜிஃப்ரி ஹஸன் அஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி’: ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. – செ.யோகராசா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: