Archive for March, 2010

ஒரு வினாடி உணர்வை எழுத எத்தனை பக்கங்கள் அப்படியும் முழுமை கிட்டுவதில்லை- சாந்தன்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
கட்டடப் பொறியியல் மற்றும் கணனி போன்ற துறைகளில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் இலக்கிய ஈடுபாடு கொண்டது எவ்வாறு?
இலக்கிய ஈடுபாடுதான் முதலில் வந்தது. சிறு வய திலிருந்து வாசிப்பு நாட்டம் அதன் அடுத்த கட்டமாய் எழுதும் முனைப்பு. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதிவிட்டுப் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த 66 புரட்டாதியில் என் முதற் கதை ‘கலைச்செல்வி”யில் பிரசுரமானது. மொறட்டுவை தொழில் நுட்பவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது முதலா வது சிறுகதைத் தொகுதி ‘பார்வை” வெளியாயிற்று, 1970இல் தொழில் நுட்பவியல் கல்லூரிக் கால கட்டம் கலை இலக்கியச்செயற்பாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்ததென நினைக்கிறேன்.
கலை இலக்கியச்செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி அரசியல் ஈடுபாடுகளுக்கும் ஏற்றதாக அமைந்தது. அது தமிழ் மாணவர் பேரவை இயங்கிக் கொண்டிருந்த காலம். மொறட்டுவை தொழில் நுட்பவியல் கல்லூரி நாட்களில் தான் ‘எழில்” சஞ்சிகையும் வெளியாயிற்று. நான், மாவை நித்தியானந்தன் உட்பட சில மாணவ நண்பர்கள் இணைந்து அதனை வெளியிட்டோம். கலை இலக்கியம், சமூகம் பற்றிய பிரக்ஞையுடன் ஐந்தோ ஆறோ இதழ்கள் வந்தன.
கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம்?
அடுத்த கட்டம். எழிலில் இணந்திருந்த நான், நித்தி போன்றோரும், கொழும்பில் அவ் வேளையில் பணியாற்றிக்கொண்டிருந்த சண்முகன், யேசுராசா முதலிய பலரும் சேர்ந்து செயற்பட்ட அமைப்பு அது. எழுபதுகளின் தொடக்கத்தில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் தீவிரமாக இயங்கிற்று, மாதாந்த சந்திப்புகள்,நூல் வெளியீடுகள், விமர்சனங்கள்  என.
கொழும்பிலும், திருகோணமலையிலும் பணியாற்றிய காலங்கள் உங்களது எழுத்தாக்க முயற்சிகளில் எந்தளவிற்குத் தாக்கம் செலுத்தின?
மேற்குறிப்பிட்ட கழகச்செயற்பாடுகளுக்கப் பால், பரந்தளவிலான பரிச்சயங்கள் கொழும்பில் கிட்டின. பொது நிகழ்வுகள், படக்காட்சிகள், கண்காட்சிகள், இவற்றோடு, பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் சென்ரர், சோவி யத் நட்புறவுக் கழகம் இவற்றின் நூல கங்களும் செயற்பாட்டு முயற்சிகளுக்கு வாய்ப் பாக அமைந்தன.
திருகோணமலை வாழ்வு ஓராண்டே யெனினும், ஒருவிதத்தில் அது ஒரு திருப்பு முனையுமாயிற்று. ‘இலங் கையன்” என்று மட்டும் எண்ணிக்கொண்டிருந்தவ னைத் ‘தமிழன்” என்றும் உணர்த்தியது அது. ‘அந்நியமான உண்மைகள்” அப்போது வெளியான கதைதான். யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடந்த காலமும் அது தான்.
(more…)
Advertisements

March 7, 2010 at 4:44 pm Leave a comment

ஃபஹீமா ஜஹான் கவிதைகள் – எம். ஏ. நுஃமான்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
ஃபஹீமா ஜஹான் 1990களின் பிற்பகுதியில் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை மாணவி. கலாசாலை ஆண்டுமலருக்காக என் னிடமிருந்து ஒரு பேட்டி எடுக்கவேண்டும் என அவர் விரும்பினார். என் மனைவி மூலம் தொடர்புகொண்டு பேட்டிக்கான வினாக்களை எழுதி அனுப்பியிருந்தார். அந்த வினாக்களைப் படித்தபோது அவர் ஒரு சராசரி ஆசிரியை அல்ல, நன்கு விபரம் தெரிந்தவர்தான் என்று நினைத் தேன். அவரை நேரில் சந்திக்காமலே தபால் மூலம் நிகழ்ந்த அந்தப் பேட்டி கலாசாலைச் சஞ்சிகையான கலையமுதத்தில் வெளிவந்தது.
அப்போது அவர் கவிதைகளும் எழுதுபவர் என்று எனக்குத் தெரியாது. பின்னர் பத்திரிகைகளில் அவ்வப் போது வெளிவந்த அவரது சில கவிதைகளைப் படித்த போது அவர் மேலெழுந்துவரக்கூடிய கவிஞர் என்பது உறுதிப்பட்டது. மிக அண்மையில்தான் ஒரு கடல் நீரூற்றி என்ற அவரது முதலாவது தொகுப்புப் படிக்கக் கிடைத்தது. அதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் ஃபஹீமாவின் கவியாளுமை பற்றிய ஒரு மன நிறைவைத் தந்தன.
சமீபத்தில் வெளியான தனது இரண்டாவது தொகுப்பான ‘அபராதி” க்கு ஒரு முன்னுரை தருமாறு அவர் கேட்டபோது மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். ஆயினும் பதிப்பகத்தாரின் அவசரம் காரணமாகவும், எனது அவ காசமின்மை காரணமாகவும் எனது முன் னுரை இல்லாமலே அபராதி வெளிவர நேர்த்தது. (more…)

March 7, 2010 at 3:53 pm Leave a comment

தர்மினி கவிதைகள்.

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
வெறும்வானம்
கொப்புகளிற் பனி படர்த்தி
வெறுங்குச்சிகளை மரங்கள்
கிளை விரித்து நிற்க,
மூடிய சன்னல்கள், கதவுகள்
உறைந்த பனித்துகள்களாகிக் கூரைகள்.
விறைத்து
இறுகி
நிலமெல்லாம் வெறுமை.
கண்கள் உயர்த்த
மாவு பூசிய வானம்
நிறங்களை விழுங்கித் தொங்கியது.
ஒற்றைப் பறவையில்லை
காற்றிற் கிளம்பியலையும்
கடதாசி, சருகில்லை
வீதி ஒன்றைக் கீறிச் செல்லும்
விமானங் கூட வானிலில்லை.
பாதி திறந்த
ஒற்றைச் சன்னலினூடே
விரக்தியில் வரைந்த ஓவியனின் காட்சியொன்றாய்
அப்பனியுறைவு கொழுவப்பட்டிருந்தது.
வெறுமை படர்ந்து வந்து
என் தோள் போர்த்தி(த்)
தனித்திருக்கும் குளிர் பொழுதை
பாலைவனமொன்றில் பயணிப்பதாய்ச் சொல்லி
என் சன்னலின் ஓவியத்தை
மறுவளமாய்த் திருப்பியது.
நானொரு நாள்
உப்பளத்தில் நின்றதையது
நினைவுறுத்துவதையும் சொல்லி(ச்)
சன்னலை மூடினேன்.

March 7, 2010 at 3:48 pm 1 comment

தீபச்செல்வன் – கவிதைகள்

01. அப்பத்தின் கதை பற்றிய இரண்டாவது உரையாடல்
எப்பொழுதும் அந்த முதல் உரையாடலை
நீ ஞாபகப்படுத்தியபடியிருப்பாய்.
சிகரட் குறைத்துண்டுகள் ஒதுங்கி குவிந்திருக்கும்
அந்தச் பாதிச்சுவரில்
அமர்ந்துகொண்டு மீளவும் மீளவும்
நாம் பேசியிருக்கிறோம்.
ஓவ்வொரு இரவும் கடைசியில் நம்மை
தனித்து பேச வைத்திருக்கிறது.
அப்பங்களை தூக்கிச் செல்லும்
உனது காலையும்
அதற்கான மாவை இடித்துக்கொண்டிருக்கும்
மாலை நேரத்தையும் நாம் இழந்துபோயிருக்கிறோம்.
போரினால் நாம் வாழ்வை இழந்து போயிருக்கிறோம்.
சிகரட் புகைக்கும் தேனீர்க்கடையின்
அருகிலிருக்கிற ஓடையில்
வரிசையாய் படிந்துபோயிருக்கிறது சாம்பல்.
அசாத்தியமாக வளர்ச்சி பெற்ற நமது நகரத்தில்
பியரை அருந்தியபடி நாம் அலைந்திருக்கிறோம்.
சாரயக் கடைகளில்
மதுக்கிண்ணங்களை தூக்கி வைத்திருத்தபடி
இருவரும் அப்பங்களை விற்கும் அனுபவங்களை
பகிர்ந்திருக்கும்பொழுது
நமது நகரம் வசீகரமான வெளிச்சத்தில்
ஒளிர்ந்தபடியிருந்தது.
நமது நகரத்திற்காக நாம் உழைத்திருக்கிறோம்.
அதை மிகவும் நேசித்திருக்கிறோம்.
கடைகளின் பின்புறமாக குந்தியிருந்து
உரையாடிக்கொண்டிருந்த பொழுது
விமானங்களுக்கு அஞ்சி பதுங்கியிருந்தபொழுது
நீ எனக்குப் பக்கத்திலிருந்தாய்.
நண்பனே சிகரட்டிற்காய் அடிபடுகிறவர்களாகத்தான்
எப்பொழுதுமே இருந்திருக்கிறோம்.
எல்லாவற்றையும் போலவே இப்பொழுது
நீ அப்பங்களை கூவி விற்பதற்கான
நமது நகரமும் இல்லை.
உனது அப்பங்களும் இல்லை.
சிகரட்டுக்களும் இல்லை.
மாவை இடித்துக்கொண்டிருக்கிற
மாலை நேரமும் இல்லை.
ஆனால் நீ நெருக்கத்தின் பெரிய உரையாடலாய்
முடியாத சிகரட்டாய்
எனக்குள் புகைந்து கொண்டிருக்கிறாய்.
அந்தப் பாதிச்சுவரின் சிதைவில்
சிகரட் துண்டுகள் என்னவாகியிருக்கின்றன?
போர் எல்லாவற்றையும் அழித்து விட்டது.
உன்னை இழந்திருக்க கூடாது.
உன்னுடன் நாம் எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம்.
கைவிடப்பட்ட உனது சடலத்தை
யாரோ கண்டு வந்ததாக சொல்லுகிறபோது
உனது அப்பம் பற்றிய
இரண்டாவது உரையாடல் தனித்துத் தொடங்கி
முடிவற்று நீளுகிறது.
எங்கு தவறிப் போயிருக்கிறாய்?
தகர்ந்து போயிருக்கிற நகரத்திற்கு நான் திரும்பப்போவதில்லை
யாரேனும் அங்கு அப்பங்களை கூவிக்கொண்டிருப்பார்களா?
அப்பங்களை வாங்க யார்தான் காத்துக்கொண்டிருப்பார்கள்?
மூட்டத் தொடங்கும் ஒவ்வொரு சிகரட்டும்
உனக்காக புகைந்துகொண்டிருக்கிறது.
உனக்காக மது நிறைக்கப்பட்ட கிண்ணம்
எப்பொழுதும் எனக்கு முன்னாலிருக்கிறது.
——————-
08.09.2009 (கிளிநொச்சி நகரத்தின் நண்பர்களில் மிகவும் பிரியமான எனது நண்பன் ஸ்ரீ கஜானாந். இறுதிப் போரில் சிக்குண்டு இறந்து போயிருப்பதாகவும் அவனின் சடலத்தை கண்டு வந்தாகவும் கூறுகிறார்கள். தடுப்பு முகாங்கள் எங்கும் தேடிய பொழுது கிடைக்கப்பெறவில்லை)
02. இரத்தம் வடிகிற உரையாடலுக்காய் மூடப்பட்டிருந்த பக்கம்
01
எல்லாக் கதவுகளையும் இழுத்து சாத்தும்
மிக ரகசியமான அழைப்பை
ஏதேனும் ஒரு குறிப்பில் எழுதி வைத்திருக்க நினைத்தபோதும்
தாமதமாக செல்கிற ஒரு குறுந்தகவலில்தான்
சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது.
மிக ரகசியமாகவே
முகத்தில் வழிந்துகொண்டிருந்த குருதியை
துடைத்துக்கொள்ளுகிறேன்.
மிகவும் தடித்த படங்குகளால் எல்லாவற்றையும்
மூடிக்கொண்டபடி
எனக்கு எதிராக நிகழும் எந்த நடவடிக்கைகளையும்
வெளியில் காட்டாதிருக்கிறேன்.
மூன்று மணிநேரமாக வலைப்பதிவு மூடப்பட்டிருந்தது.
மீளவும் இறுக்கமான சொற்களை தேடினேன்.
நமது ஆதி வீட்டில்
வரையப்பட்டிருந்த சித்திரங்களும்
பொறிக்கப்பட்டிருந்த பெரு எழுத்துக்களும்
மிகவும் சாந்தமானவை என்றே
அவர்களிடம் கூறியிருக்கிறேன்.
வந்த எல்லா தொலைபேசி அழைப்புக்களையும்
திருப்பி விட்டுக்கொண்டிருந்தேன்.
இந்தக் கவிதைகள் வாயிலாக இனி ஒன்றையும்
உங்களுக்கு சொல்லப்போவதில்லை.
அந்த இரத்தம் படர்ந்த கம்பளத்தில் நடத்திய
உரையாடலை
சொற்களில் வடிந்து காய்ந்துபோன இரத்தத்தை
எதையும் பகிரவும் எண்ணமில்லை.
விளக்கமளிக்கப்படவேண்டிய
பக்கம் வெளித்துக்கிடக்கிறது.
02
நானும் எனது தோழனும் சிரித்துக்கொண்டேயிருந்தோம்.
எல்லா விதமான பயங்கரமான
சொற்களின் பொழுதும்
கண்களையும் முகத்தில் படர்ந்த  தோல்வியையும்
வேலிகளுக்கு கீழாக முட்கம்பிகளின் ஊடாக
அடுத்த காணிக்குள் எறிந்துகொண்டிருந்தோம்.
அவர்கள் எங்களை
மிக வேகமாக விழுங்கிக்கொண்டிருந்தார்கள்.
யாரும் எங்களை மிரட்டவில்லை
என்பதை நாங்களாகவே வெளியிட்டிருக்கிறோம்.
துவக்கு முகத்தை குத்தி கிழிப்பது
கீறிக்கொண்டு உரையாடுவது இரத்தம் உறிஞ்சி செல்வது
முழு அச்சங்களும் நிறைந்த சொற்கள்
உரையாடலின் பிறகு
இந்த மோட்டார் சைக்கிளின் பின்னால்
எதுவரை வடிந்துகொண்டிருக்கப்போகிறது.
எனக்கெதிரான நடவடிக்கைகள் மிகுந்த இனிமையானவை
என்பதை அன்றை பின்மாலைப்பொழுதில்
இந்த பக்கத்தில்  விரிவாக எழுதியிருந்தேன்.
நானும் எனது நண்பனும்
மூடப்பட்டிருந்த வலைப்பக்கம் குறித்து ஒன்றையும்
சொல்லப்போவதில்லை.
எதற்காகவும்
காலம் மிக அழகாக தரப்பட்டிருக்கிறதாக
நாம் சொல்லியிருக்கிறோம் என்று
அவர்கள் அன்றைய இரத்தம் வடிகிற உரையாடல்
குறித்து பேசுகிறார்கள்.
25.11.2009

March 7, 2010 at 3:39 pm Leave a comment

ABBAS KIAROSTAMI- அப்பாஸ் ஹெரொஸ்ரமி-தமிழில் – ஜி.ரி.கேதாரநாதன்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
அப்பாஸ் ஹெரொஸ்ரமி சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு மேதையாவார். அவர் யதார்த்தங்களை முற்றிலும் புதிய பார்வைக் கோணத்தில் அணுகுகிறார். சிறுசிறு, விடயங்கள் மற்றும் சம்பவங்கள் போன்றவற்றின் அடியாழங்களை அவர் தரிசிக்கிறார். அவற்றின் சலனங்களை நன்கு புரிந்து கொண்டு மறுசிருஷ்டியில் இறங்கும் அவருக்கு அது அதி அற்புதமாக சித்திக்கின்றது. இதற்குள் ஒரு அழகியல் அவர் வசப்பட்டுவிடுகிறது. கட்டுப்பாடான தணிக்கை முறைகளில் இருந்து தமது கலைப்படைப்புக்கு பங்கம் நேர்ந்து விடாது முன்கூட்டியே பார்த்துக் கொள்வதில் அவர் மிகுந்த சாமர்த்தியசாலி. சினிமா, இறுதியில் நெறியாளரின் ஊடகம்தான் என்பது அவரை பொறுத்தவரையில் முற்றிலும் மெய்மையானதொரு கூற்றே என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அப்பாஸ் ஹெரொஸ்ரமி 1990இல் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த வேளையிலேயே வட ஈரானை பூகம்பம் தாக்கியது. அவர் அப்போது தனது மகனுடன் ஈரானின் தலை நகரில் இருந்து தாக்குதலுக்கு இலக்கான பிராந்தியத் திற்கு காரிலே பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது உன்னதமான படைப்புக்களில் where is the friend’s home திரைப்படத்திற்கு அப்பிராந்தியமே களமாகவிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. சிறு வர்களது மன உலகின் மீது தங்குதடையின்றி ஆழமான பார்வை யைச் செலுத்திய திரைப்படம் அதுவாகும்.
(more…)

March 7, 2010 at 3:35 pm Leave a comment

தாமரைச்செல்வி – கருணாகரண்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
1970களின் பிற்பகுதி. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகமாக வாசிக்கப்பட்ட காலம் அது. இதற்கான வாய்ப்பை வீரகேசரி உருவாக்கியிருந்தது. அப்போது ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வீரகேசரி, மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படையில்  வெளி யிட்டு வந்தது. அதில் பல புதிய எழுத்தாளர்களும் அறி முகமானார்கள். அப்பொழுதுதான் தாமரைச்செல்வி யின் ‘சுமைகள்” என்ற நாவலையும் வாசித்தேன். அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு வயது இருபது அல் லது இருபத்தொன்றாக இருக்கலாம். அந்த நாவல் அதி கம் என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு காரணங்களிருந் தன. ஒன்று, நாவலில் இடம்பெறும் களத்தின் அறி முகம். அடுத்தது, எழுதிய தாமரைச்செல்வி எங்கள் ஊருக்கு அண்மையில் இருந்தார் என்பது.
இதற்குப் பின்னர் தாமரைச்செல்வியின் எழுத்து களில் ஒரு கூடுதல் அவதானிப்பு. அவர் அநேகமாக விவசாயிகளின் பிரச்சினைகளை, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளையே எழுதினார். நாங்களும் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் எங்களின் பிரச்சினைகள், எங்களுடைய கதைகளாகவே இருந்தன அவருடைய கதைகள். இதனால், எங்களின் குடும்பத்தில் தாமரைச் செல்வியின் எழுத்துகளுக்கு உச்ச வரவேற்பு. அவரு டைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வரும்போது இந்த வரவேற்பின் உற்சாகத்தை எங்களின் வீட்டில் காண லாம்.

March 7, 2010 at 3:09 pm Leave a comment

கடவுளாலும் கைவிடப்பட்டவனுக்கான பிரார்த்தனை-யாதுமானவன்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்
உன் பாவங்கள் எல்லாம் நீக்கப்படுவதாக
நானும் உனக்காய்ப் பிரார்த்திக்கிறேன்
இனியேனும் அமைதி கொள்
மௌனம் பாவங்கள் செய்யாதிருக்கக் காக்கட்டும்
குருதிச் சுவையறிந்த மகனே
உதட்டோரக் குருதியை துடைத்துக் கொள்
எல்லோரும் உன்பால் அச்சம் கொள்கிறார்கள்
அவர்கள் மீதொரு புன்னகை வீசு
நரபலி எடுப்பதனைக் குறைந்த பட்சம்
தவிர்த்துக் கொள்
ஒவ்வொருவர் குருதியும்
சுவை பார்த்தவன் நீ
வேட்டைநாய் அடங்காது
நானறிவேன்
உன் பந்தியில் ஏன்
பாலகர்களைப் பரிமாறுகின்றாய்
அவர்களின் குருதியில் தோய்ந்த
தங்கவாளை எடுத்து
வெற்றியின் சின்னமாய்
பறைசாற்றுவதற்கு இத்தனை பிராயத்தனம்
மௌனம் கொள் மகனே
எல்லோர் பாவங்களும் உன்னையே சுற்றுவதாக
குடுகுடுப்பைக்காரர்கள் சொல்லித் திரிகிறார்கள்
எல்லோர் சிலுவைகளையும்
நீ சுமப்பதாகச் சொல்லியபடி
உன் சிலுவைகளையும் முட்கிரிடத்தையும்
எல்லோர் மீதிலும் சுமத்திவிட்டுள்ளாய்
உனது சிலுவைகளையும் முட்கிரிடத்தையும்
மீளவும் பெற்றுக் கொள்
அவரவர் சிலுவைகளை
அவரவர் சுமப்பதே நல்லது
அமைதி கொள் மகனே
உனக்கான நான்கு ஆணிகளையும் வாங்கிக் கொள்
மாதாக்கள் எல்லோரும்
புன்னகைக்கும் ஒரு காலத்தை
பரிசளிக்கப்போகும்
உனது கல்லறை தயாராக உள்ளது
நீ உயிர்த்தெழாமல் இருக்க
இறைவன் ஆசிர்வதிப்பாராக ஆமென்.
19.12.2008

March 7, 2010 at 3:07 pm Leave a comment

Older Posts Newer Posts


March 2010
M T W T F S S
« Dec   May »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts