ஈழச் சிக்கலும் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவும் – பாஸ்கர்(தமிழ்நாடு)

March 7, 2010 at 11:15 pm 1 comment

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
ஈழச் சிக்கல் இத்தனை ஆண்டுகள் ஆனபின்னரும் தீர்ந்தபாடில்லை, 30 ஆண்டுகால ஆயுதப் போராட் டத்திற்கு பிறகும் தீரவில்லை, தீராததோடு மிகவும் சிக்கலான நிலையில் இருக்கவும் செய்கிறது, அனுபவமும் படிப்பினைகளும் இருப்பதுதான் கிடைத்த ஒரே பலன். எது சரி, எது தவறு என்பது தெளிவாகிவிட்டது. தவறு என்று சொல்லப்பட்ட விசயங்கள் தடுக்கப்பட முடியாமல் போய் சரியான மாற்று எதையும் மேற் கொண்டு நடை முறைக்கு கொண்டு போக முடியாமல் போயிற்று.
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான விமர்சனங்கள் மார்க்சிய அமைப்புகள், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோரால் வைக்கப்பட்டு அவை சரியென்றே நிருபணமாயின. இதற்கு இவ்வளவு பெரிய இழப்பை, பாதிப்பை, பின்னடைவை விலையாக கட்டாயமாக கொடுக்க வேண்டியதாயிற்று.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் வழியில் வெளிப்பட்ட இராணுவவாதம் இத்தகைய விலைக்கு காரணமாக இருந்தாலும் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவு கருந்தாக்கமும் இந்த இராணுவ வாதத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
பேரினவாத, ஏகாதிபத்திய சுரண்டல் அரசியல் நலனுக்காக விளைந்த இச்சிக்கலை எதிர்கொண்ட தமிழ் மக்கள் ஃ அமைப்புகளின் போராட்டங்கள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஒடுக்கப்பட்டன.  இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், அரசியல் வழியின் அங்கமாக இராணுவ நடவடிக்கைகளைப் பார்க் காமல் இராணுவ நடவடிக்கைகளே அரசியல் நடவடிக்கை என்பதாக வெளிப்பட்ட அரசியல் வழியே இன்றைக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு பிரதான காரணியாகும்.
விடுதலைப் புலிகளுக்கு அரசியல் இல்லையா என அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் கோபப்படலாம்.  புலிகள் பல பத்திரிகைகளை நடத்தினர் செய்தித் தொடர்பாளர்களை வைத்திருந்தனர்  பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று போர் நிறுத்தங்களைச் செய்திருக்கின் றனர் அனைத்திற்கும் மேலாக தனியரசை அமைத்து பல துறைகளை திறம்பட நடத்தினர் என அவர்கள் வாதிடலாம். இவையெல்லாம் விவரம் என்ற வகையில் உண்மைதான்.
விடுதலைப் புலிகள் இவற்றையெல்லாம் தமது அரசியலால் செய்யாமல் இராணுவ ஆற்றலால் மட்டுமே வளர்ந்து இவற்றை செய்ய முடிந்ததாக கருதினர். இவற்றை தவிர்க்க முடியாததாக வேலைப் பிரிவினை களாக மட்டுமே பார்த்தனர். இவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டதில்லை.  இவை புலிகளின் வீரத்தை புகழ்பாடும் தன்மையானதாகவே இருந்தன. இங்குதான் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவு கருத்தாக்கத்தினுடைய பாத்திரத்தின் பங்கைப் பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் இந்தப் புனைவுக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே தொடக்கத்திலிருந்து இறுதி வரை செயற்பட்டனர். அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் மே 17-க்குப் பின்னரும் இந்த அடிப்படையிலேயே பேசுகின்றனர்;  எழுதுகின்றனர்;  செயற்படுகின்றனர். இதனால் இந்த ஆதரவாளர்கள் ஏற்பட்ட கடும் இழப்பை இராணுவ மற்றும் அரசியல் அடிப்படைகளில் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்.  வெறுமனே உயிரிழப்பு என்ற வகையில் மட்டுமே வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்றனர்.தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் மே 16 வரையிலும் விடுதலைப் புலிகளின் பின்னடைவை, இழப்பை பின்வாங்கல் எனவும் போர் உத்தி எனவும் அனுபவம் வாய்ந்த படைத்தலைவர்கள் உயிரோடு இருப்பதால் பெரிய இழப்பு எதுவும் இல்லை எனவும் திட்டமிடப்பட்ட வகையில் பின்வாங்கி சுற்றி வளைத்து எப்படியாவது வலிந்த தாக்குதலின் மூலம் வெற்றி பெற்று விடுவார்கள் என்றே பேசி வந்தனர்.
இதில் எந்த மாறுதலும் இல்லாமல் மே 17க்குப் பின்னரும் பேசி வருகின்றனர். அப்படியானால் மே 17 அன்று என்னதான் நடந்தது? இதைச் சொல்வதில் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவுக் கருத்தாக்கம் தடுக்கிறது.
இந்தக் கருத்தாக்கம் ஈழத்தில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் ஏன் புலம் பெயர் ஈழத் தமிழர் வாழும் நாடு களில் அவர்களிடையேயும் செங்கோல் ஆட்சி செலுத்துகிறது.
ஈழப் போரின் மூன்று கட்டங்களிலும் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த வெற்றிகள் மேலும் இதை உறுதிப்படுத்தின. இந்த வெற்றிகளுக்கு பின்னால் விடுதலைப் புலிகளின் இராணுவ ஆற்றல் மற்றும் அறிவுக்கு முக்கிய பாத்திரம் இருந்தது. ஆனால் இவற் றுக்கு அப்பால் இருந்த காரணிகளின் பாத்திரத்தை அவர்கள் பார்க்கவில்லை.
விடுதலைப் புலிகள் என்ற அகநிலைக் காரணி ஒரு புறம் இருக்க, மறுபுறத்தில் உள்ள புறநிலைக் காரணி கள் அந்த வெற்றிகள் ஈட்டப்பட்டதில் அதற்கேயுரிய பாத்திரத்தை ஆற்றின.
சர்வதேச சூழல் (80களில் முந்நாளைய சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நில விய கெடுபிடிப் போர் முதலானவை), இலங்கை ஆளும் வர்க்கத்திற்கும் ஃ இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு, இலங்கை ஆளும் வர்க்கங் களுக்கு இடையிலான முரண்பாடு, இலங்கை ஆளும் வர்க்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான முரண்பாடு (கடைசி 1980களில் நடந்த ஜே.வி.பி. கிளர்ச்சிகள் இதன் வெளிப்பாடே) ஆகியன அந்த புறநிலைக் காரணிகள் ஆகும்.
தவிர, இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதற்கு போதிய அனுபவம் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம்.
1970 ஃ 1980களில் அமெரிக்காவிற்கும் முந்நாளைய சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் கெடுபிடிப் போர் நிலவியது. பாலஸ்தீன விடுதலை அமைப்பு (Pடுழு) ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (யுNஊ), சாம் நுஜோமா தலைமையிலான நமீபிய விடுதலை இயக் கம் உள்ளிட்ட அமைப்புகள் இதைப் பயன்படுத்தி முந்நாளைய சோவியத் ஒன்றியத்தின் ஆதரவு மற்றும் உத வியை பெற்றுக் கொண்டன.
அதேபோல் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களும் அங்கோலாவில் யுனிட்டா அமைப்பினரும் அமெரிக் காவின் ஆதரவு மற்றும் உதவியைப் பெற்றுக் கொண் டன.
1983 – 1987 வரையிலான காலகட்டத்தில் இந்திய ஆளும் வர்க்கம் விடுதலைப்புலிகள், டெலோ, ஈ.பி. ஆர்.எல்.எப். புளொட் ஆகிய அமைப்புகளுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்து, ஈழ விடுதலைப் போராட்டம் சுயமாக வளர்ந்து விடக்கூடாது எனவும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண் டும் எனவும் இலங்கையில் அப்போது இருந்த ஜெய வர்த்தனே அமெரிக்க சாய்வாக இருந்ததால் அவரை அடக்கி வைக்கவேண்டும் எனவுமே ஈழப் போராளி களுக்கு இத்தகைய உதவியைச் செய்தது.
இலங்கையில் 1987 – 90 காலப் பகுதியில் இந்திய இராணுவம் அமைதி காப்புப்படை என்ற பெயரில் இருந்தபோது அதை வெளியேற்ற வேண்டும் என்பதற் காக அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசாவின் இராணுவ உதவியை விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாறாக, விடுதலைப் புலிகள் தமது சொந்த முயற்சியில் வளர்த்துக் கொண்ட இராணுவ அறிவு மற்றும் ஆற்றல் மட்டும் இல்லாமல் இந்திய அரசாங் கம் மற்றும் இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேம தாசாவின் இராணுவ உதவியையும் பயன்படுத்திக் கொண்டனர்.
இதில் சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கும் முந்நாளைய சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான முரண்பாடு, இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இலங்கை ஆளும் வர்க்கம் ஃ இலங்கை அரசாங்கத்திற்கும் இடை யிலான முரண்பாடு ஆகியவற்றை பயன்படுத்திய அரசி யல் பார்வை வெளிப்படுவதே அல்லாமல் புலிகளின் இராணுவ ஆற்றல் மற்றும் அறிவு மட்டுமே வெளிப் படவில்லை. இங்கு ‘புறநானூற்று வீரம்” என்ற புனை வுக் கருத்தாக்கத்திற்கு அறவே இடம் இல்லை.
இதைச் சொல்லும்போது ஒரு புறத்தில் புலிகளி டம் அரசியல் பார்வை இருக்கிறது அல்லவா எனவும் மறுபுறத்தில் 21ஆம் நூற்றாண்டிலும் முப்படைகளை யும் வைத்திருந்த ஒரே விடுதலை இயக்கம் புலிகள் தானே எனவும் கேள்விகள் எழலாம்.
முதலில் உள்ள கேள்விக்கு பதில் என்னவென்றால், புலிகளிடம் உத்தி, என்ற வகையில்தான் ஆளும் வர்க்க முரண்பாட்டை பயன்படுத்தும் அணுகுமுறை இருந் ததே அல்லாமல் பார்வை என்ற வகையில் அல்ல என் பதே ஆகும்.
பார்வை என்ற அளவிற்கு அது இருந்திருந்தால் ஆளும் வர்க்க முரண்பாட்டை பயன்படுத்தும் விதமாக நான்காம் கட்ட ஈழப் போருக்கு முன்பாகவோ தொடங்கிய பின்போ சீனாவிடமோ பாகிஸ்தானிடமோ சென்றிருப்பர்.
இரண்டாம் கேள்விக்கு பதில் என்னவெனில், தரவு என்ற வகையில் அது உண்மைதான்.  ஆனால் அரசியல் இல்லாததால் அதைக் காப்பாற்றிக் கொள்ளாமல் போய்விட்டது. நேபாள மாவோயிஸ்ட் கட்சியோ முப்படைகள் இல்லாமல் (தரைப் படையை மட்டும் வைத்திருக்கின்றது) அமெரிக்காவும் ஃ இந்தியாவும் எல்லா வகையிலும் தலையிடுவதற்கு தயாராக இருந்த போதும் ஃ இருக்கும்போதும் தனது அரசியல் பார்வை யால் அத்தகைய தலையீடுகளைத் தள்ளிப்போட வைத்தது அல்லது அதன் தீவிரத்தை மட்டுப்படுத்தும் அரசியல் செயலுத்தியை மேற்கொண்டு தனது படை யையும் தலைமையையும் காபபாற்றிக் கொண்டது ஃ காப்பாற்றிக் கொள்கிறது.
விடுதலைப் புலிகள் நான்காம் கட்ட ஈழப் போரில் புறநிலைக் காரணிகள் மாறியதையும் அவை தங்களுக் குப் பாதகமாக இருப்பதையும் ஆழமாக உணரத் தவறி விட்டார்கள்.இந்தியாவிற்கு ஈழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நலன் ஏற்கெனவே இருந்து வருவதுடன் அது வெளிப்படவும் செய்தது.  அது இந்த நான்காம் கட்ட ஈழப் போரில் இலங்கையின் மீதான மேலாதிக்கப் போட்டியில் சீனா இறங்கியதாலும் ராஜபக்சேவுக்கு உதவாவிட்டால் அவர் சீனா அல்லது பாகிஸ்தானின் உதவியை அதிகமாக பெற்று தனது பிடி அவர் மீது தளர்ந்துவீடும் என்ற கவலை இந்தியாவிற்கு இருப்ப தாலும் அவருக்குதவிய இந்த முக்கிய புறக்காரணியை புலிகள் பார்க்கத் தவறிவிட்டனர். மே 16 வரையிலும் இதனுடைய முக்கியத்துவத்தைக் காணத் தவறினர்.
கடந்த 10 ஆண்டுகளாக தனியரசை நடத்தியதில் பலப்பட்ட ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவுக் கருத்தாக்கம் இயங்காவியலை (ஆநவயயீhலளiஉள) அடிப் படையாகக் கொண்டதால் அது நிலைமைகள் எப் போதும் மாறிவருவதை பார்ப்பதைத் தடுத்தது.
தாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் எனவும் அழிக்கப்பட முடியாதவர்கள் எனவும் சாசுவதமாக இருந்ததால் இப்படித்தான் இருக்க முடிந்தது.
மேலும் ஓபாமாவின் வெற்றியையும் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கையும் சாசுவதமானதாகவும் முழுமுதலானதாகவும் அனைத்துந்தழுவியதாகவும் பார்த்தது.
அனைத்திலும் முக்கியமாக எதிரியை நண்பனாக பாவித்தது என்பது இந்தியா மீதான அதீத எதிர்பார்ப் பில் வெளிப்பட்டது.
1983 – 87 காலகட்டம் வரையில் நண்பனாக நடித்த இந்திய ஆளும் வர்க்கத்தின் நிறம் மாறிய பின்னரும் இன்று வரையிலும் அதனை பொதுவாக நண்பனாக வும் துரோகியாகவும் குறிப்பாக வழி தவறிய நண்பனா கவும் வழி தவறிய துரோகியாகவும் கருதி அதை மனம் மாற வைக்கமுடியும் எனவும் எண்ணுகிறது.
இந்திய ஆளும் வர்க்கம்தான் ஈழ மக்கள் – புலி களுக்கு விரோதமான ராஜீவ் ஃ ஜெயவர்த்தனே ஒப் பந்தத்தை ஏற்படுத்தி இந்திய ஆக்கிரமிப்பு படையை அனுப்பி புலிகளை ஒழித்துக் கட்ட முற்பட்டது. ராஜீவ் கொலைக்கு பின்னர் புலிகளின் அமைப்பை இன்று வரையிலும் தடை செய்து வருவதுடன் புலி ஆதரவுச் செயற்பாட்டை தடுத்து வருகிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப் பற்ற முற்பட்டபோது அதைத் தடுத்தது. கருணாவை உடைத்தது. இறுதியாக நான்காம் கட்ட ஈழப் போரின் தொடக்கம் முதற்கொண்டு இன்று வரையிலும் ராஜ பக்சேவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
நண்பனாக நடித்து எதிரியாகிப் போன இந்தி யாவை 20 ஆண்டுகள் ஆகியும் அதைப் புரிந்துகொள்ள தடையாக இருந்து வருவது இயங்காவியல் அணுகு முறையே ஆகும்.
இப்பொழுது. ‘புறநானூற்று வீரம்” என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.சங்க இலக்கியத்தை அதிகமாக மேற்கொள் காட்டி பேசப்படுகின்ற ‘புறநானூற்று வீரம்” என்பது உண்மை யிலேயே அந்த காலத்தில் தமிழ் பேசிய பல்வேறு இனக் குழுக்களிடையே நடந்த சண்டைகளும் மோதல் களுமே ஆகும். முற்கால மூவேந்தர்களிடையே ஏற் பட்ட சண்டைகளுமே ஆகும்.
இந்தச் சண்டைகள் தமிழ் பேசிய மக்களை ஆண்டு சுரண்டுவதற்காகவே நடந்தன. தமிழ் பேசிய இந்த மக்கள் மீது வேற்று இனம் ஃ மொழியினர் படை யெடுத்து வந்து அதை முறியடிப்பதற்காக இந்தச் சண்டைகளோ போர்களோ நடக்கவில்லை. இதற்கு பின் இருந்த பிற்கால சோழர் ஆட்சியும் பிற்கால பாண் டியர் ஆட்சியும் கூட தமிழ் மக்களை சுரண்டுவதற்காக சண்டையிட்டு நிறுவப்பெற்ற ஆட்சிகளே. இதில் பிற்கால சோழ மன்னர்களோ ஈழத்தையும் இன்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கம்போடியா ஆகிய நாடுகளையும் ஆக்கிரமித்து (தமிழ்நாட்டை ஆண்ட தமிழ்ப் பேரரசர் கள் என சிலாகிக்கப்படும் பிற்கால சோழப் பேரரசர்கள் ஈழத்தை ஆக்கிரமித்தனர் என்றே சொல்ல வேண்டும்) ஆண்டு கொழுத்தனர். இந்த ஆட்சிகள் எவையும் தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் செய்யவில்லை. மாறாக சுரண்டவே செய்தன. இதில் பிற்கால சோழப் பேரரசர் களின் ஆட்சியில் தமிழ்நாட்டில் ஃ ஈழத்தில் சாதியம் நன்றாக நிறுவன மயமாகி கோலோச்சியது.
நிறுவனமயமாகி இறுகிப்போன அந்தச் சாதியத் தின் கொடுமையிலிருந்தோ சிந்தனையிலிருந்தோ இன்றும் தமிழ்நாடு மற்றும் ஈழம் விடுபடவேயில்லை.  இத்தகைய பிற்கால சோழப் பேரரசர்களில் ஒருவரான இராஜராஜ சோழனைத்தான் ‘புறநானூற்று வீரம்’ பேசும் பயந்தாங்கொள்ளி கருணாநிதி போற்றிப் புகழ்
பாடுவார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழக அதிகார வர்க்கம் ஃ அரசு எந்திரம் 1000ஆம் ஆண்டு விழாவை நடத்தியது.
ஈழத்தையும் ஆக்கிரமித்து அங்கு சாதிய சமூகத்தை நிலைநாட்டிய இந்தப் பிற்காலச் சோழப் பேரரசர் களின் இலச்சினை புலி ஆகும். அதைத்தான் புலிகள் அமைப்பு தமது அமைப்பின் பெயராக சூடிக் கொண் டது. ஈழ மக்களின் சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கி அதை ஆக்கிரமித்து அங்கு சாதிய நிலவுடை மையை அமைத்த சோழர்களின் இலச்சினையையே புலிகள் அமைப்பு தனது அமைப்பின் பெயராக வைத் துக் கொண்டது வரலாற்று முரணே ஆகும். மேலும் புலிகள் ஈழத்தில் வாழ்ந்து போராடிய மக்களை கதா நாயகர்களாகப் பார்க்காமல் அவர்களை சுரண்டி ஆட்சி நடத்திய எல்லாளன், சங்கிலியன் போன்றவர் களையே கதாநாயகர்களாகவும் குறியீடுகளாகவும் சித்தரித்தனர்.
சங்க இலக்கியம் சித்தரிக்கும் காலப்பகுதியில் நடந்த இனக்குழுச் சண்டைகள் போன்றே இன்றைய ருவாண்டாவில் கடந்த 10 – 15 ஆண்டுகளுக்குமுன் 5 – 10 இலட்சம் பேர் இறக்கின்றவாறு ஹட்டு (outu) என்ற இனக் குழுவிற்கும் டுட்ஸி (Dutsi)) என்ற இனக்குழவிற் கும் சண்டைகள் நடந்தன. இந்தச் சண்டைகளை எப் படி வீரம் என்று சொல்ல முடியாதோ அதுபோன்றே தொடக்ககால தமிழகத்தில் நடந்த இனக்குழு சண்டை களையும் வீரம் என்று சொல்ல முடியாது.
தமிழ் மக்களை ஆண்டு சுரண்டி கொழுக்கவேண் டும் என்பதற்காக நடந்த இனக்குழு மோதல்களையும் பிற்காலச் சோழப் பேரரசர்களின் படையெடுப்புகளை யும் ஆக்கிரமிப்புகளையும் எவ்வாறு தமிழனின் வீரம் என்றோ, புறநானூற்று வீரம் என்றோ கொண்டாட முடியும்? இவ்வாறு கொண்டாடுவோர் எல்லோருமே சுரண்டல் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே இருக்கின்ற னர். கருணாநிதி, வைகோ, தொல். திருமாவளவன், ராம தாஸ் மற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளின் நிர்வாகிகள் இவ்வாறே செயற்படுகின்றனர்.
‘புறநானூற்று வீரம்” என்று சொல்லப்படும் காலப் பகுதியில்தான் பௌத்தமும் சமணமும் இங்கு வந்து உயிர்களின் கொல்லாமையை வலியுறுத்திப் பேசன.
உழவர்களாகவும் கால்நடை மேய்ப்போராகவும் கைவினைஞர்களாகவும் இருந்த தமிழக உழைப்பாளி மக்கள் இதற்கு ஆதரவை அளித்தனர். உழைக்கும் மனித உயிர்களையும் கால்நடைகளையும் இத்தகைய இனக்குழு மோதல்களில் பலி கொடுத்த தமிழக உழைக் கும் மக்கள் அதை தவிர்க்கும் முகமாக இந்த நிலையை மேற்கொண்டனர். மறுபுறத்தில் முற்கால மூவேந்தர் களும் பௌத்த, சமண கருத்தியல்களை வரவேற்றனர்.  ஏற்கனவே சுரண்டல் நலனுக்காக பெற்ற மேலாதிக் கத்தை தக்க வைக்கும் முகமாக போர்கள் இல்லாத சமூகம் தற்காலிகமாகவேனும் பயனைத் தரும் என்ற வகையில் அந்தக் கருத்துகளை ஆதரித்தனர். இந்த வகையில் ‘புறநானூற்று வீரம்”  என்ற வகையிலான மோதல்கள் குறைந்து பேரரசுகள் வகையிலான ஆட்சி வந்தது.
பின்னர் தமிழ் மன்னர்களின் ‘புறநானூற்று வீரம்”  காணாமல் போய் நாயக்கர் ஆட்சியும் மராத்தியர் ஆட் சியும் ஆற்காடு நவாப் ஆட்சியும் வெள்ளைக்காரர் களின் ஆட்சியும் நடந்தன.
வெள்ளைக்காரர்களின் ஆட்சியை எதிர்க்க வக் கற்ற புதுக்கோட்டை தொண்டைமான், இராமநாத புரம் சேதுபதி போன்ற ‘புறநானூற்று வீரம்”  மன்னர் கள் அவர்களோடு சமரசம் செய்து தமிழ் மக்களை சுரண்டி கொழுத்தனர்.  சேதுபதி மன்னருக்கு நான்காம் தமிழ்ச் சங்கம் அமைக்கத் தெரிகிறது. வெள்ளைக் காரர்களை எதிர்க்கத் திராணியில்லை. அதன்பிறகோ கடந்த 60 ஆண்டுகளாக தமிழக மக்கள் விரோத இந் திய அரசாங்கத்தின் நுகத்தடி ஆட்சிதான் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தோன் றிய தி.மு.க. வின் தலைவர்கள் அன்றிலிருந்து இன்று வரை ‘புறநானூற்று  வீரம்”  பேசியே தமிழக மக்களை மழுங்கடித்தனர். அந்தப் பரம்பரையில் தோன்றிய வைகோவும் இதையே சிரமேற்கொண்டு செய்து வரு கிறார். வன்னிய ஷத்திரிய பரம்பரையில் சித்ரா பௌர்ணமி போல உதித்த ராமதாசுவும் திமுகவாக அவதாரமெடுத்துள்ள தொல். திருமாவளவனும் இதற்கு விதிவிலக்கல்ல.  மாவீரன் நெடுமாறனோ ஒரு தமிழனைக் கூட வீரனாக்காமல் இருந்து வருகிறார்.
மேலும் பெரும்பாலான தமிழ் தேசிய அமைப்பு களின் செயற்பாடுகளோ அரங்க கூட்டத்தை தாண்டு வதில்லை. அரங்கத்திற்குள்ளேயே ‘புறநானூற்று  வீரம்” பேசிப் பேசி சுய திருப்தி அடைந்து வருகின்ற னர்.
இந்தப் ‘புறநானூற்று வீரம்” என்ற புனைவுக் கருத் தாக்கத்தில் இன்னொரு அம்சமும் உண்டு. அதாவது உலகிலேயே தமிழினத்தை போல் வேறு எந்த இனமும் வீரமான இனம் இல்லை என்பதே அது. அவ்வாறு உண்மையாக இருக்குமானால் தமிழ்நாட்டிலோ, ஈழத்திலோ கடந்த நூற்றாண்டுகளாக தமிழர்கள் ஏன் வேற்றினத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்?
மனிதகுல வரலாற்றில் எந்த இனமும் வீரத்திற்கு குத்தகை எடுத்துக் கொண்டது கிடையாது. எல்லா இன மக்களும் வீரத்துடன்தான் இருந்து வருகின்றனர்.  தமிழ்நாட்டில் நடந்ததைப் போன்ற இனக்குழு மோதல்கள் எல்லா நாடுகளிலும் நடந்திருக்கின்றன.  ஆனால் இங்கு தான் (ஈழம் ஃ தமிழ்நாடு) வீரம் பற்றிய புனைவுக் கருத்தாக்கம் இந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்தி வருகிறது. இதுதான் தமிழ் மக்களை போராட விடாமல் தடுக்கிறது. தலைவர்கள்/கதா நாயகர்கள் கிடைக்க மாட்டார்களா என ஏங்க வைக்கிறது. ‘புறநானூற்று வீரம்” பேசும் புனைவர்கள் என்ன புனைவை புனைந்தாலும் நம்ப வைக்கிறது. கேவலம் சீமான் போன்றவர்கள் ஈழ விடுதலையை வாங்கித் தர மாட்டார்களா என அவரின் வாய்ச்சவாடால் கூட்டத் திற்கு அணி திரள வைக்கிறது. சீமான் போன்றவர்கள் தமிழின உணர்வு பற்றி பேசுவதற்கு தமிழ் மக்கள் பல ஜென்மங்களுக்கு முன்செய்த பாவச் செயல்தான் கார ணம் எனத் தோன்றுகிறது.
மேலும் இந்தப் புனைவுக் கருத்தாக்கம் உண் மையை உரைக்காது. தான் செய்கின்ற எதையும் நியா யப்படுத்தும். அனைத்தும் வீரச் செயலே என வீராப் பாக பேச வைக்கும். தோல்வியை (அ) பின்னடைவை ஒப்புக் கொள்ளாது.
உண்மையை உணர்ந்தால்தானே, தோல்வியை (அ) பின்னடைவை ஒப்புக்கொண்டால்தானே படிப் பினையை எடுத்துக் கொள்ளமுடியும்.
அவ்வாறு வரும் படிப்பினை இந்த புனைவுக் கருத் தாக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும். அதனால் தான் இந்த புனைவுக் கருத்தாக்கத்தை பேசிப் பேசியே தமிழ் மக்களை மதி மயங்க வைத்து நிரந்தர அடிமைகளாக ஆக்குகின்றனர்.
இந்தப் புனைவுக் கருத்தாக்கத்திலிருந்து விடுபட் டால்தான் தமிழ்நாடு ஃ ஈழ மக்கள் அனைத்து அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை அடையமுடியும்.
மனித குல வரலாற்றில் முன்னெப்போதையும் விட 21ஆம் நூற்றாண்டில்தான் அரசியல் தேவைப்படு கிறது. அரசியலின் மூலமே இந்த நூற்றாண்டை புரிந்து கொள்ளவும் ஆளவும் முடியும். அரசியலுடன் பொரு ளாத அடிப்படையுடன் அமைந்த வீரமும் இருந்தால் தான் இதைச் சாதிக்க முடியும்.
Advertisements

Entry filed under: கட்டுரை.

சித்தாந்தன் கவிதைகள் இந்து சமுத்திரத்தில் வல்லரசுப் பலப்பரீட்சை, இலங்கை உள் நாட்டுப் போரின் பூகோள அரசியல்- -மஹ்டி டாரியஸ் நஸெம்றோயா

1 Comment Add your own

  • 1. jayenthiARUN  |  March 15, 2010 at 8:28 pm

    உங்களது இந்த நீண்ட கட்டுரை புலிகளின் அரசியல் மதிப்பீட்டை குறைத்து புறனானுற்று புனைவு என்னும் கருத்தாக்கத்தின் பின் ஒளிந்து கொண்டதாக சொல்கிறது.”மாவோ” வின் சொற்களில் “அரசியல் என்பது குருதி சிந்தாத போர், போர் என்பது குருதி சிந்துகின்ற அரசியல்” என்பதை மறந்து விட்டு பேசுகின்றீர்கள்.மன்னிக்கவும்,ஏற்று கொல்ல இயலாது.

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


March 2010
M T W T F S S
« Dec   May »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: