Posts filed under ‘நுண்கலை’
ஓவியர் ஹுசைன் – இந்தியா – வெளியேயும்… உள்ளேயும்… தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ஜி.ரி.கேதாரநாதன்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

பல வருடங்களாக இந்தியாவுக்கு அப்பால் வெளிநாடுகளில் வாழ்ந்திருக்கிறேன். இந்திய கடவுச் சீட்டைக் கையளித்து வெளிநாடு ஒன்றின் பிரஜையாக மாறியது இதுவே முதல் தடைவ. ஆம், இப்போது கட்டார் நாட்டின் பிரஜையாகி உள்ளேன். 2006ஆம் ஆண்டிலேயே, மூன்று பாரிய திட்டங்களில் ஈடுபடுவதற் கான தீர்மானம் ஒன்றினை எடுத்திருந்தேன். அத்தகையதொரு பின்னணியிலேயே இவ்வாறான தொரு முடிவினை நான் எடுக்க நேர்ந்ததென்பது குறிப்பிடத்தக்கது. மொகஞ்சதாரோவில் இருந்து மன்மோகன்சிங் வரையிலான இந்திய நாகரிக வரலாறு, பபிலோனிய காலப் பகுதி வரையிலான ஏனைய நாகரிகங்களின் வரலாறு, எனக்கு மிகவும் பிடித்த திட்டமாகிய நூறு வருடங்களில் இந்திய சினிமா ஆகிய தொடர்பிலான திட்டங்களே அவை எனலாம்.
இந்தியாவில் இத்திட்டங்களில் ஈடுபடுவதற்கும் பூர்த்தியாக்குவதற்கும் நான் பல்வேறு தடைகளை, இடையூறுகளை எதிர்கொள்ளவேண்டி நேரிடலாம். மேலும் அனுசரணையாளரைத் தேடிக் கொள்வதும் முக்கிய பிரச்சினையாகும். அதற்காகவும் நான் காத்திருந்தேன்.
நாற்பது வயதினனாக இருந்தால், நிச்சயம் நான் போராடி இருப்பேன். எனக்கு இப்போது 94 வயது. நான் எனது திட்டங்களில் முழுமையாக ஈடுபடுவதற்கு விரும்புகிறேன். எவற்றாலும் எனது கவனம் சிதறடிக்கப்படுவதை என்னால் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. எனக்கு சௌகரியங்களும் வசதிகளும் உச்ச அளவில் இருந்தாக வேண்டியது மிக மிக அவசியமாகும். திட்டங்களை முழுமையாகப் பூர்த்தியாக்குவதே எனது பிரதான குறிக்கோளாகும். இதற்கு உகந்த சூழ்நிலை எப்போதும் அவசியமாகும். இந்த எல்லைகள் தனியே அரசியல் சார்ந்தவை எனலாம். விசேடமாகக் கூறப்போனால் கட்புலக் கலைகள் எல்லோருக்கும் பொதுவானதொரு மொழியேயாகும். உலகில் எந்த மூலையிலிருந்தும் நீங்கள் செயற்படலாம். இயங்கலாம். ஆனால் படைப்புகளைப் பொறுத்தவரையில், அவற்றுக்கு எங்களது பெருமைக்குரிய 5000 வருடகால செல்வாக்கு மிக்க இந்திய கலாசாரமே ஊற்றுக் கண்ணாக இருக்கமுடியும்.
(more…)
வாஸ்லி கன்டநிஸ்க்கி – நுண்கலை
எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

தனது 30 ஆவது வயதில் ரஷ்ஷியாவிலுள்ள ‘Tartu’ பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வித் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மொஸ்கோவில் நடைபெற்ற பிரெஞ்சுநாட்டு மனப்பதிவு ஓவியர்களின் ஓவியக்காட்சியும் ‘றோயல் அரங்கில்’ நடைபெற்ற இசை நிகழ்ச்சியும் ஓவியம் கற்க வேண்டுமென்ற ஆழ்மனவிருப்பை இவரில் ஏற்படுத்திய இரண்டு முக்கிய நிகழ்வுகள் எனக்கூறலாம். இந்த விருப்பம் காரணமாகப் பேராசிரியர் பதவியை விடுத்து ஓவியம் கற்பதற்காக ஜேர்மன் தேசத்துக்குப் பயணமானார். ஈர்ப்பு அற்றதொரு வறட்சியான பாடப் புலத்துக்குள்ளிருந்து விடுதலைபெற்றதாகச் சட்டத்துறையையக் கைவிட்டமை பற்றி அவர் குறிப்பிடுகின்றார்.
சட்டத்துறையை அவர் கைவிட்டமை உலகத்துக்குக் கிடைத்த ஓர் அதிஷ்டம் என்றே கூற வேண்டும். மொஸ்கோவில் 1866 டிசம்பர் 04இல் பிறந்த இவ்வோவியரின் தந்தையார் தேயிலை வியாபாரத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். தாயார் மிக்க அழகும் புத்திக்கூர்மையுடையவராகவும் இருந்தார். இருவரின் திருமண வாழ்வும் அதிக காலம் நீடிக்கவில்லை யென்பதுடன் கன்ட நிஸ்க்கி தனதுபெரிய தாயாருடன் வசிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. நுண்ணுணர்வு மிக்க சிறுவனாக இருந்தபோது தனது பெரிய தாயாரிடம் கேட்ட ரஷ்ஷிய, ஜேர்மன் மொழிகளில் எழுதப்பட்ட சிறுவர்களுக்கான மந்திர தந்திரக் கற்பனைக்கதைகள் அவர் வளர்ந்து முதிர்ச்சியடைந்தபோதும் அவரின் அழகியல் சார்ந்த கற்பனைகளுக்கு உற்பத்தி ஊற்றுக்களாக இருந்தன. (more…)


