Posts filed under ‘கவிதை’
அன்ரன் அன்பழகன் – கவிதை
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
சிதைந்து போயிற்று
கூடு.
களவாடப்பட்டன
கூரைகள்.
ஒன்றின் மேல் ஒன்று
இராதபடி
இடிந்து போயிற்று
கற்கள் -
விதைக்கப்படாமுட்கள் வளர்ந்து
செடியாகி மூடிக்கொண்டது.
சிதைந்து போன கற்குவியல்
மேலிருக்கும்
பைத்தியக்காரனின்
வார்த்தைகள்
கற்றில் கரைகிறது
கடந்து போகும்
மனிதக் காதுகள்
திறக்கவேயில்லை.
வணிக தொலைக்காட்சி
நெடுந்தொடர்களின்
கதாநாயகத் துயரங்களுக்காக
அவர்கள் மனம்
பிழியப்பிழிய அழுகிறது தினமும்
வீதியில் தனக்குத் தானே
பேசியபடி கடந்து போகும்
மனிதனைக் கவனித்ததுண்டா?
கலைந்த கேசம்
மழிக்க வேண்டும் (more…)
திருகோணமலை சந்திரன் – மஞ்சுள வெடிவர்த்தன , தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
சதுர்ஷன்
ராஜனின் இளைய மகன்
தினந்தோறும் மாலையில்
விழிகளால் வானைத் தொட்டு
நிலவையழைப்பான்
சின்னஞ்சிறு கரங்களை அசைத்தவாறு
..நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா..
அதோ அவ்வேளைதான்
கோணேஸ்வரன் தேவாலய உச்சி நோக்கிக்
கைகூப்பியவாறு
திருகோணமலை வானத்துக்கு
நிலவு எழுந்து வரும்
மார்கழி மாதக் குளிர் நாளன்றில்
இரவு மறந்து போய்
நிலவை கைவிட்டுச் சென்றிருந்தது வானில்
பனிப்புகாரில் சூரியன் மூடுண்ட வேளையில்
மல்லிகைகள் கண்கலங்கி
மகரந்தங்களை வழியவிட்டு அழுதன
போகுமிடம் தெரியாமல்
சீனக் குடாவின் உள்ளே
நங்கூரமிட்ட நிலவு
வெண்பனித் துகள்களை ஒவ்வொன்றாய்ச் சேகரித்தது
திருகோணமலையின் சந்தியன்றில்
இரத்தத் துளிகளில் தோய்ந்த
மல்லிகையன்றிலிருந்து சுகந்தம் வீசியது
பட்சிகளின் பூபாளம் கேளாத
திருகோணமலையின்
காலைப் பொழுதொன்றில்
முற்றத்தில் இறங்கிய புதல்வனுக்கு
நிலவின் தனித்துப் போன இரு விழிகள் தெரிந்தது
இளஞ்சூரியனின் கிரணங்களுக்குப் புலப்படாத
மிருதுவான விரல்நுனிகளால் அது
புதல்வனின் தலைமீது சாமரம் வீசியது
அந்த மார்கழி முதல்
பணி முடித்துச் சூரியன் போகும் அந்தியானால்
சின்ன விழியன்று வானைத் தொட்டு
நிலவையழைக்கும்
பிஞ்சுக் கரங்களை அசைத்தவாறு
திருமாவளவன் ஏழு கவிதைகள்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

1. முள்ளிவாய்க்கால்
சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்
அல்லது
தற்கொலை செய்தவனின் மீது சுடப்பட்டிருக்கலாம்
தப்பியோடும் போது பின்னாலிருந்து கொன்றிருக்கலாம்
அன்றேல்
கூட இருந்தவன் சாகடிப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு
சரணடைந்தவன் மீது வன்மம் வெறியாய்க் கொன்டவனொருவன்
கண்ணிமைக்கும் பொழுதுக்குள்
தன் துவக்கின் வில்லை இழுத்திருக்கலாம்
கைதின் பின் முரண்டுபிடித்திருக்கவும்
அவனைச் சித்திரவதை செய்திருக்கவும்
பின் அடித்துத் கொல்லவும் வாய்ப்புண்டு
துப்பாக்கிக்குப் பதிலாக கோடரி அல்லது வேறு கூரிய கருவியால்
கபாலத்தைப் பிளந்திருக்கும் அநாகரிகம் எதிரியிடமும் உண்டு
தப்பியோட
அவன் சாயல் கொண்ட வேறொருவனின் பிணம் கூட
இவனாகச் சித்தரிக்கபட்டிருக்கலாம்
எல்லாவித சாத்தியப்பாடுகளோடும்
திரை விழுகிறது
மேடையில் கட்டியக்காரன் கும்மாளமிடுகிறான்
‘கூத்து முடிந்தது’
இரத்த வெடிலில் கிடந்து தகிக்கிறது கூத்துக்களரி
மகிழ்வா? துயரா? யாருக்கும் தெரியவில்லை
எல்லோர் விழிகளும் நீரால் வழிகிறது
இருள்;
இன்னும் கலையவில்லை


