Posts filed under ‘எதிர்வினை’
அவலத்தின் வணிகம் – காலச்சுவடு கண்ணன்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

‘எதுவரை’ (பிப்ரவரி-மார்ச் 2010) இதழில் பூதந்தேவனாரின் குறிப்பு கண்டேன்.
தமிழ் வெகுஜன ஊடகங்களிலும் வணிகப் பதிப்பகங் களிலும் அவை கையாளும் பிற எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, ஈழத்தின் பேரவலமும் விற்பனைச் சரக்காக மாறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இதைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதில் எங்களுக்கும் தயக்கம் இல்லை. இதுபற்றி காலச்சுவடில் வெளிவந்த பதிவு இது:
பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புலி ஆதரவு நிலை என்பது ஒரு வியாபார உத்தி. பிரபாகரனின் மரணத்தைச் சிங்கள அரசாங்கம் அறிவித்த பிறகு வந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை தனது மரணம் குறித்த செய்தியைப் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருப்பதுபோல ஒரு புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டது. அந்தப் பத்திரிகை ‘பிளாக்’கில் விற்பனை செய்யப்பட்டது; மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினார்கள். சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் என்னுடன் கலந்துகொண்ட தமிழ்ப் பத்திரிகை யாளர் ஒருவர் பிரபாகரனின் படத்தை அட்டையில் போட்டால் அந்த இதழ் குறைந்தபட்சம் 50,000 பிரதிகள் கூடுதலாக விற்பனையாவதாக அந்த அரங்கில் சொன்னார். அப்போது போர் முடிந்திருக்கவில்லை. பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இன்றைய சூழலில் பிரபாகரனுக்கே அதிகம் பொருந்தும்.
(ஊடகங்களின் இருண்ட காலம், கவிதா, இதழ் 117, செப்டம்பர், 09)
(more…)


